காட்சி 18.

இடம் : தோட்டம்

காலம் : இரவு

பாத்திரங்கள் : பாலு, லீலா.

[பாலு பரபரப்புடன் சுற்றிப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான்.]

பாலு : இதென்ன நாடகம்? எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே! இவன் சொன்னதெல்லாம் உண்மைதானா? அல்லது என் மனப்பிரேமையா? பத்திரிகை அடித்தாகிவிட்டது. நாளைக்குக் கல்யாணம், இவ்வளவும் லீலாவின் சம்மதமில்லாமலா நடந்திருக்கும்? (சற்று யோசித்து) ஏன் இருக்காது? இருக்கும்! இருக்கும்! பெண்களின் குணமே மதில் மேல் பூனை தானே? அப்படி அவள் சம்மதமில்லாமல் இந்தக் கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாயிருந்தால் இன்று மாலை இங்கு வந்து அவசியம் சந்திப்பதாகச் சொல்லிப்போன அவள், ஏன் இதுவரை என்னைச் சந்திக்காமல் இருக்க வேண்டும்? அடி சண்டாளி! துரோகி என்னென்ன காதல் கதைகளெல்லாம் பேசி என்னை ஏமாற்றி வந்தாய்! "என் உடலிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டாலொழிய என்னை உங்களிடத்திலிருந்து யாராலும் பிரிக்க முடியாது' என்றுகூடச் சொன்னயே, அதெல்லாம் என்னை மயக்கத்தானே? (நீண்ட பெரு மூச்சுவிட்டு எழுந்து நாற்புறமும் பார்த்து) ஒருக்கால் நெடு நாட்களாகவே எங்கள் நட்பில் பொறாமை கொண்ட அயோக்யனான ஜம்புவின் கபட நாடகமாய் இருக்குமோ? இருக்கலாம். பல நாள் என்னுடன் சேர்ந்து பழகிய பரிசுத்த உள்ளமுடைய லீலாவா இப்படிச் செய்வாள்? ஒருக்காலும் அப்படியிருக்க முடியாது. இதில் ஏதோ சூது நடந்திருக்கத்தான் வேண்டும். (மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து அமருகிறான்; சுற்றிலுங் கவனித்துக் கடியாரத்தைப் பார்த்து) மணியும் ஒன்பதுக்குமேல் ஆகி விட்டதே! இனிமேலா அவள் வரப்போகிறாள்? இத்தனை நாளாக, அதிலும் இந்த ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட அவள் என்னைச் சந்திக்காமலும் இந்தக் காரியத்தைத் தெரியப்படுத்தாமலும் இருப்பதிலிருந்தே அவள் என்னைக் கண்டிப்பாய் நிராகரித்து விட்டாள் என்பது தெரிகிறதல்லவா? ஆம் அவள் என்னே வஞ்சித்து விட்டாள். சந்தேகமே இல்லை. இருக்கட்டும் எங்கள் வாழ்க்கையில் முடிவு என்ன என்பதைத் தீர்மானிக்க இடையில் இருப்பது, ஒரே ஒரு இரவுதானே? அதையும் பார்த்துவிடுகிறேன்.

(சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி கடிதத்தை எழுதிக் கேணி உருளை உத்திரச் சாரளத்தில் வைத்துவிட்டுப் போகிறான்.)

(லீலா வருகிறாள்.)

லீலா : (சற்று நேரத்தில் பதைபதைப்போடு திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பயத்துடன் பாலு-பாலு என்று அழைத்துக்கொண்டே வந்து) எங்கே? காணவில்லையே! ஒருக்கால் வந்து பார்த்து விட்டுப் போயிருப்பாரோ? ஆமாம் அப்படித்தான் இருக்கும் எதற்கும் வழக்கமாய்க் கடிதம் எழுதிவைக்கும் இடத்தைப் பார்ப்போம். (பாலு வைத்துப்போன கடிதத்தை எடுத்து நடுக்கத்துடன் படிக்கிறாள்.)

உண்மையை உணர்ந்தேன். உன் இஷ்டப் படி செய் எல்லாம் பணத்தில்தான் இருக்கிறது. என்பதை இப்போது உன்னால் தெரிந்து

கொண்டேன். நான் ஏழை. நீ என்னை மறந்தது இயற்கையே. நான் இதற்குத் தடையாக இருப்பேன் என்று எண்ணாதே. யாவும் விதியின் திரு விளையாடல், இக்கடிதம் உன் கைக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என் கடமையை நான் செய்துவிட்டேன். என்னை மறந்துவிடு. ஆனால்! உன்னால் நான் வஞ்சிக்கப் பட்டேன் என்பது மட்டும் ஞாபக மிருக்கட்டும்! வருகிறேன்.

வந்தனம்,

பாலு


(கடிதத்தைப்படித்து பிரமித்து நின்றுவிடுகிறாள். கண்ணீர் பெருகுகிறது. பீறிட்டு வரும் அழுகையையும் ஆத்திரத்தையும் துணியை வாயில் வைத்து அடக்கிக்கொண்டு சோர்ந்து வீழ்ந்து மெள்ளத் தடுமாறிக் கொண்டே எழுந்து)

என் அன்பே! இந்த உலகில் என்னை நேசிக்கும் உள்ளம் படைத்தவர் இருவர். ஒருவர் என் அண்ணன், மற்றொருவர், நீங்கள். அவர் அயல்நாடு சென்று விட்டார். நம்பிப் பயனில்லை. நம்பியிருந்த தாங்களும் உண்மையறியாமல் என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இனி எனக்குப் புகலிடம் எதுவுமில்லை. விடிந்தால் வேறொரு கிழட்டு மிருகத்திற்கு இறையாக்கப்படுவேன். வேண்டாம் வேண்டாம். அதை விட எனக்கு இனியது சாவு! முன்பு எங்கள் காதலை வரவேற்றதும் வளர்த்ததும் இந்தக் கிணறுதான். இப்போது என் சாதலை வரவேற்பதும் இந்தக் கிணறு தான். ஆமாம் ஆமாம். இந்த உலகில் எனக்குப் புகலிடம் வேறு எங்குமே இல்லை. இந்தக் கிணறுதான். (பைத்தியம் போல் அலறிக்கொண்டு கேணியில் விழப்போகிறாள்; இடி முழக் கம் போன்ற கம்பீரமான குரல் ஒன்று கேட்கிறது. திகைத்து நிற்கிறாள். பின்வரும் பாடல் அவள் சோக வேகத்தையும் தடுத்து நிறுத்துகிறது.)

(தோட்டத்திற்கு வெளியே சாது ஒருவர் பாடிக் கொண்டு போகிறார்)

(சாதுவின் பாட்டு)

(கஜல்)

அகிலங்கள் அனைத்தும் அதனுள் ஆழ்ந்திடும் பொருள் அனைத்தும் ஆக்கவும் அழிக்கவும் வல்லான் நம்மை ஆண்டவன் ஒருவன் அல்லால்.

(பாட்டு)

(ஆடும் சிதம்பரமாம்)

மாண்டார் மீண்டதுண்டோ இந்த வையகத்தே உழல் பொய்யுடல் நீத்தே-(மா)

(கஜல்)

ஜீவன் ஒவ்வொன்றும் மகா தேவனின் அம்ஸமே ஆகும் ஜீவனுக் கின்னல் செய்வோர் யாவரும் பாவியே ஆகும்.

(பாட்டு)

(க்யாக்கருனாத்தே)

உடலழிந்தாலும் உயிர்தான் செய்வினைக்கு உரியதாகும் அதனால் மனமே மடமையினால் துன்பக் கடலிடை வீழ்ந்தே மடிந்துபோகும் முன்னமே உணர்மனமே-
(பாட்டைக் கேட்ட லீலா கிணற்றை விட்டுத் திரும்பி, தனக்குள்)

லீலா : ஆம், ஆம் நான் ஏன் இறக்கவேண்டும்? இது என்ன மதியீனம்! கோழைத்தனம் அல்லவா இது? மன உறுதியோடு நான் மறுத்தால்? ஆம்! என் உயிர் பாலுவை விட்டு நான் பிரியேன். பார்ப்போம் திவான்பகதூரின் திருமணத்தை.

(போகிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/18&oldid=1073505" இலிருந்து மீள்விக்கப்பட்டது