காட்சி 23.


இடம் : பாலு வீடு (ஒரு தனி அறை)

காலம் : மாலை

[திரைக்குப்பின் மேளவாத்தியம் ஒலிக்கிறது.]

பாலு : (பாலு லீலாவின் படம் ஒன்றைக் கையில் வைத் துக்கொண்டு வருத்தத்துடன்) லீலா லீலா நீயா என்னை இப்படி மோசம் செய்ய வேண்டும்? நீ இப்படி நடந்து கொள்வாயென்று நான் கனவிலும் நினைத்ததில்லையே. ஒரு நாள் பார்க்காவிட்டால் உயிரையே விட்டுவிடுவேனென்று என்னிடத்தில் சொன்ன லீலா தானே நீ? இப்போது என்னைப் பார்த்து எத்தனை நாளாயிற்று? நீ இறந்தா போய் விட்டாய்? இல்லையே வேறொரு கணவனோடு வாழ்க்கை நடத்துகிறாய். பிடித்ததுதான் பிடித்தாயே, ஒரு வாலிபனாகப் பார்த்துப் பிடித்திருக்கக் கூடாதா? கிழவனானாலும் பணம் இருந்தால் போதுமென்ற எண்ணமா? இப்பொழுது தெரிகிறது! நீ ஆடிய காதல் நாடகங்களும் காதல் பேச்சுக்களும் என்னை மயக்கத்தான் என்று. காதலாம் காதல்! எல்லாம் பொய்; வெறும் வெளிப்பகட்டு; படத்தை விரித்தாடும் விஷப்பாம்பு போன்ற உன்னை நம்பினேன். உன் பேச்சில் மயங்கினேன்; நல்ல பாடம் கற்பித்தாய்! இனிமேலென்ன? நீ ஒரு திவான் பகதூரின் மனைவி! இனி என்னைப்பற்றி உனக்கென்ன கவலை? உலகம் பணத்தில் இருக்கிறது. பணமுள்ளவன் விரும்பிய பொருளையெல்லாம் அடைய முடியுமென்று கேட்டது உண்டு; ஆனால் காதலும் விற்கக்கூடியது. மார்க்கட்டில் அதற்குக்கூட விலை உண்டு என்பதை இன்றுதான் உன்னிடத்திலிருந்து தெரிந்துகொண்டேன். லீலா நீ என்னை வஞ்சித்தாய். போகட்டும், நீயாவது சுகபோகத்தில் அந்த இளங் காதலனோடு இன்புற்று இரு, இரு, இரு கெட்டுப்போன உலகம்.

(தலையிலடித்துக் கொள்ளுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/23&oldid=1073513" இலிருந்து மீள்விக்கப்பட்டது