அந்தமான் கைதி/24
இடம் : திவான்பகதூர் மாளிகை
காலம் : இரவு
பாத்திரங்கள்: திவான்பகதூர், லீலா.
[அழுது கொண்டிருந்த லீலா கண்களைத் துடைத்துக் கொண்டு தலை முடியை அலங்கோலம் செய்து கொண்டு கண்ணாடிக்கு முன் நின்று பைத்தியம் போலச் சிரிக்கிறாள்.]
லீலா : (தனக்குள்) ஆமாம். இதுதான் நல்ல யோசனை! வேஷம் நன்றாகவேயிருக்கிறது. ஆனால் யுக்தி பலிக்க வேண்டும். லீலா! உன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு உன் கையில்தான் இருக்கிறது. இதுதான் கடைசிக் கண்டம். இதில் நீ தோல்வி அடைந்தாயோ, அவ்வளவுதான்! உன் எதிர்கால மனக்கோட்டை யாவும் இடிந்து தகர்ந்துவிடும், ஜாக்கிரதை (சிறிது மெளனம்) வெட்கக்கேடுதான். என்ன செய்வது? நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டும்? (யாரோ வருகிற சப்தம் கேட்கிறது) அதோ அந்தக் கிழட்டுச் சனியன்தான் வருகிறது போலிருக்கிறது, வரட்டும்.
- (ஓடிப்போய்த் தலையணைமேல் முகத்தைவைத்துத் தலைவிரிகோலமாய்க் கிடக்கிறாள்.)
பொன் : (திவான்பகதூர் ஆடம்பரமான ஆடை ஆபரணங்ளுடன் பிரவேசிக்கிறார்) ஆஹா, இன்று தான் நான் ஜென்மம் எடுத்ததின் பயனை அடையப்போகிறேன். இன்று தான் நான் திவான்பகதூர். அடே நடராஜா. அன்று என்னடா சொன்னாய்? இந்த உடலில் உயிர் இருக்கும் வரை நீர் லீலாவை மணப்பது முடியாது! (பேரொலிச் சிரிப்பு) முடியாதென்பது யாருக்கடா? உன்னைப்போன்ற கையாலாகாத, விதியில்லாத, கதியில்லாத பிச்சைக்கார நாய்களுக்கல்லவா? எனக்கா? (மறுபடியும் சிரிப்பு) என் இன்பக் கிளி எனக்காகக் காத்திருப்பாள். மதுரத் தேனைப் பருகிக் காம சுகானுபவக் களிபேருவகையடைய இதோ போகிறேன். (மூக்குக் கண்ணாடி, ஆடை அணிகள் எல்லாம் சரி செய்துகொண்டு அடிமேல் அடி வைத்து ராஜ நடை நடந்து, லீலாவை நெருங்கி, அவள் அலங்கோலமாகப் படுத்திருப்பதைக் கண்டு, திடுக்கிட்டு ஓடி அருகில் அமர்ந்து) லீலா! லீலா! இதோ பார்! என்னைப் பாரேன்! ஏன் இப்படிப் படுத்திருக்கிறாய்? இங்கு யாராவது உன்னை எதுவும் சொன்னார்களா? அல்லது...... உடம்புக்கு ஏதாவது (மெள்ளத் தொட்டுப் புரட்ட எத்தனித்தபடி) இப்படித் திரும்பி என்னைப் பாரேன்! நான் கூப்பிடுவது உனக்குத் தெரியவில்லை?
- (லீலா, பற்களை நற நறவென்று கடித்துக்கொண்டு கண்களை மிரள மிரள விழித்துப் பயங்கரமான சப்தத்துடன் கழுத்தைப் பிடித்து நெரிக்கப் போகிறாள். திவான் பகதூர் இதைக் கண்டு பயப்படுகிறார்.)
லீலா : டேய்...... ஊம்.....என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய்? நான் இருக்கும் இடத்தில் இன்
னொரு பெண் வந்து இருக்க நான் விடுவேனா? ஊம். அவ்வளவு தைரியமா உனக்கு? டேய்...
(பெரிய சப்தத்துடன் பேய் போல் ஆடுகிறாள்).
பொன் : (நடுக்கத்துடன்) ஐயய்யோ!...... பேயா பிடித்திருக்கிறது!
லீலா : டேய்...... நீ இந்தப் பெண்ணைத் தொட்டால் உன்னை மாறு கால் மாறு கை வாங்கிவிடுவேன் தெரியுமா?
பொன் : (நடுங்கிக்கொண்டே) இல்லை, இல்லை, இல்லை சத்தியமாகத் தொடவே மாட்டேன். தாயே! நீதான் காப்பாற்றவேண்டும்.
(சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுகிறார்.)
லீலா : சரி, போ வெளியே, உம் சீக்கிரம் போ.
பொன் : போகிறேன், போகிறேன். போகிறேன்!(எழுந்து ஓடி ஒரு ஒரமாய் நின்று) தாயே! நான் போகிறேன்; நீ யாரென்று சொன்னால்......
லீலா : நானா? என்னையா கேட்கிறாய்? உம்... டேய்... என்னைத் தெரியவில்லையா உனக்கு?...உம் நான் தான் பூவோடும் மஞ்சளோடும் இந்த வீட்டிலேயே தெய்வமாயிருந்து இது வரையிலும் உன்னைக் காப்பாத்திக் கொண்டு வரும் பூவாடைக்காரி மங்களம். நீ வெளியிலே செய்யும் அக்கிரமங்களெல்லாம் போதாதென்று வீட்டிலுமா ஆரம்பித்து விட்டாய்! அது நான் இருக்கும் வரை முடியாது. என் உடம்பெல்லாம் எரிகிறது. உம். போ. போ. வெளியே!
பொன் : (லீலா நெருங்குகிறாள்) இதோ போகிறேன். போகிறேன், போய் விட்டேன். (ஓடி விடுகிறார்)
லீலா : (உடனே அறைக் கதவைத் தாளிட்டுக்கொண்டு, படுக்கையில் அயர்ந்து உட்கார்ந்து) அப்பாடி......! சனியன் தொலைந்தது; தப்பினோம் இந்தக் கண்டத்திலிருந்து, யோசனை வெற்றிதான். இதுதான் என் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள நல்ல வழி! இன்னும் என்னென்ன அதிசயங்கள் நடைபெற வேண்டுமோ? என்னென்ன வேஷம் போட வேண்டிய திருக்குமோ? இருக்கட்டும் பார்ப்போம். (படுக்கையில் சாய்கிறாள்)