10

யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போய்விட்டு வந்த மூன்றாம் நாளோ நான்காம் நாளோ, வகுப்பில் லெக்சரர் வருவதற்கு முன்பாக எல்லாப் பெண்களும் ஒரு பெண் புதிதாக கட்டிக் கொண்டு வந்திருந்த மிகமிக அழகான பாம்பே வாயில் புடைவையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சிடையே ஒரு தோழி,

"இந்த மாதிரிப்புடவை நம்ம 'சுமதிக்குப் பிரமாதமா மேட்ச்' ஆகும். இதை அவள் கட்டிண்டா அப்சரஸ் மாதிரி இருப்பா” என்ற சுமதியைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள். அப்போது அருகே அமர்ந்திருந்த மேரி, "எக்ஸாக்ட்லி" என்ற வியந்தாள். உடனே மற்றொருத்தி குத்தலாகக் கேட்டாள்:

"இதுக்கென்னடி அர்த்தம்? சுமதிக்குத்தான் இந்த ஸாரி மேட்ச் ஆகும்னா இவளுக்கு மேட்ச் ஆகலேங்கறிங்களா?”.

நல்லவேளை! இதற்குள்ளாக லெக்சரர் அம்மாள் வகுப்புக்குள் நுழைந்து விடவே இந்தச் சர்ச்சை ஒய்ந்துவிட்டது.

மறுநாள் காலை வகுப்புக்களும், கல்லூரியும் தொடங்குவதற்கு ஓர் அரை மணி நேரம் முன்னதாகவே மேரி, சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். அவள் கையில் ஒரு பெரிய காகிதப் பொட்டலம் இருந்தது. அறைக்குள் நுழைந்த மேரி சுமதிக்கு முன்னாலேயே அதைப் பிரித்துக் காட்டினாள். முதல் நாள் வகுப்பில் யாரோ ஒருத்தி கட்டிக் கொண்டு வந்திருந்த அதே பாம்பே வாயில் புடவை மேரியின் கையில் இருந்தது.

"எடுத்துக்கொள்! உனக்காகத்தான் நேற்று மாலையே பிராட்வேயில் ஷோரூமுக்கே தேடிப் போய் இதை வாங்கிக் கொண்டு வந்தேன் சுமதி!”

-நல்ல வேளையாக அறையில் உடன் வசிக்கும் விமலா அப்போது வெளியே போயிருந்தாள்.

"என்னைக் கேட்காமல் என் சம்மதமில்லாமல் நீ இதை எப்படி எனக்கு வாங்கிக் கொண்டு வரலாம் மேரி?"

"இது உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்து வாங்கி வந்தேன். நீ மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன் சுமதி.”

"மறுத்துவிட்டால் என்னடி செய்வே?”

"உன் பிரியமுள்ள சிநேகிதியை நீ அப்படி எல்லாம் சோதனை செய்யமாட்டாய் என்று எனக்குத் தெரியும் சுமதி!' “ஸாரி ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனால் நீ என்னை மேலே மேலே கடனாளியாக்கறே மேரீ?”

"சும்மா வாயை மூடு ! கடனாவது, ஒண்ணாவது ? கிஃப்ட் எல்லாம் கடன் ஆகாது. நான் இதை இங்கே கொண்டாரப்பவே கிஃப்ட்னுதானே சொன்னேன்”.

சுமதி மேரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அந்தப் புடவையையும் அன்றே கட்டிக் கொண்டுதான் வகுப்புக்குப் போனாள். எல்லாரும் அவளைப் பாராட்டினார்கள். அந்தப் புடவையில் அவள் பிரமாதமாகத் தெரிவதாய்க் கொண்டாடினர்.

மேரி தனக்கு அதை வாங்கிக் கொடுத்ததாகச் சுமதியும் யாரிடமும் சொல்லவில்லை. சுமதிக்குத் தான் இதை வாங்கி அளித்ததாக மேரியும் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை.

நாலைந்து நாட்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை காலையில் சுமதிக்கு ஃபோன் வந்தது. அபூர்வமாகத் தனக்கு ஃபோன் செய்வது யார் என்ற திகைப்புடன் போய் ஃபோனை எடுத்தாள் சுமதி. எதிர்ப்புறம் மேரி தான் பேசினாள்.

'சுமதி நீ அதிர்ஷ்டக்காரி! ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு. அன்னிக்கு நீ சந்திச்ச புரொட்யூஸர்ஸிலே ஒருத்தர் இன்னிக்குக் காலை 10 மணிக்கு உன்னை மேக்-அப் டெஸ்ட்டுக்கே வரச் சொல்றாரு. தரணி ஸ்டுடியோவில் 3ஆம் நம்பர் ஃப்ளோருக்கு வரணும். அங்கே அதே புரொட்யூஸ்ரோட வேறொரு படம் தயாராயிக்கிட்டிருக்கு. வரயா, இல்லையா? வரதும் வராததும் உன் இஷ்டம். நான் ஒண்ணும் உன்னை வற்புறுத்த மாட்டேன்.”

"நான்தான் அன்னிக்குப் பாதியிலேயே ஒடி வந்துட்டேனே ? அங்கே யாரிட்டவும் நான் சரியாப் பேசக்கூட இல்லே-அவங்க யாரும் என்னைக் கவனிச்சுப் பார்த்திருக்கக்கூட முடியாதேடீ ?” "அதெல்லாம் நீயா நினைக்கிறே சுமதி அவங்க எல்லாரும் உன்னை நல்லாக் கவனிச்சுப் பார்த்திருக்காங்க. இன்னிக்கு வரச் சொல்லிக் கூப்பிடறாரே, இவரு ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான் ஒரு கேள்வியோ விசாரணையோ, இல்லாமே நேரே மேக்-அப் டெஸ்ட்'டுக்கே உன்னை வரச் சொல்றாரு”.

'மேக்-அப் டெஸ்ட்டுன்னா எப்படி வரணும் ? என்னென்ன செய்வாங்க...'

"ஒண்ணும் கடிச்சு முழுங்கிடமாட்டாங்க. சும்மா பயப்படாமே வாடி சுமதி!”

"நீ அன்னிக்கு வாங்கிக் குடுத்தியே அந்த வாயில் ஸாரியைக் கட்டிண்டு வரட்டுமா மேரி ?

“நைஸ் ஐடியா! அதையே கட்டிக்கிட்டு வா சுமதி! அவசியம்னா இங்கே வந்ததும் இவங்க வேறே மேக்-அப் போட்டுக் காமிராவுக்கு முன்னே நிறுத்திப் பாப்பாங்க.. கரெக்ட்டாப் பத்து மணிக்கு வந்துடு. முன்னாடி வந்தால் தப்பில்லே ஆனா லேட்டா மட்டும் வராதே...”

இந்த அழைப்பு சுமதிக்கு உள்ளுறப் பெருமகிழ்ச்சியைத்தான் அளித்திருந்தது. அன்று விடுமுறை நாளாகையினால் பாட சம்பந்தமாக ஏதோ படிப்பதற்காக யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று அறைத் தோழி விமலா சொல்லிக் கொண்டிருந்தாள். அவளோடு சேர்ந்து யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போகவேண்டும் என்ற அனுமதி கேட்டால் வார்டன் உடனே வெளியே போக அனுமதித்து விடுவாள். விடுதியிலிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு வந்ததும் விமலாவிடம் சொல்லி விட்டுத் தரணி ஸ்டுடியோவுக்கு ஒரு டாக்சியில் பறக்க வேண்டும் என்று திட்டமிட்டு முடிவு செய்துகொண்டாள் சுமதி. விமலாவிடம் ஸ்டுடியோவில் மேக்-அப் டெஸ்டுக்குப் போவதாகச் சொல்லாமல் வேறெதாவது பொய் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் நினைத் துக் கொண்டாள். நினைத்தபடியே செய்வதில் எந்தத் தடையும் இல்லை. வாரம் தவறாமல் லீவு நாட்களில் சுமதியும், விமலாவும் புத்தகங்கள் படிக்க யூனிவர்ஸிடி லைப்ரரிக் குப் போவது பற்றிய மகிழ்ச்சியுடன் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தாள். அனுமதி பெற்று விடுதி காம்பவுண்டுக்கு வெளியே வந்தவுடன் முதல் வேலையாக, "அடி விமலா! நீ தப்பாக நினைத்துக் கொள்ளாதே. தி.நகரில் எங்க உறவுக்காரங்க வீட்டுக்கு ஒரு முக்கிய வேலையா நான் போயாகனும், நீ பன்னிரண்டரை மணிவரை லைப்ரரியிலேயே இரு. நான் தி.நகரிலிருந்து நேரே அங்கேயே வந்து விடுகிறேன். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து திரும்பி வந்துடலாம். ஒருவேளை பன்னிரண்டரை மணிக்குள்ளே நான் அங்கே திரும்பி வரலேன்னா நீ எனக்காக வெயிட் பண்ணவேண்டாம்” என்றாள்.

விமலா அதற்குச் சம்மதித்தாள். அவளைப் பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு அருகிலிருந்த டாக்ஸி ஸ்டாண்டிற்கு விரைந்தாள் சுமதி. ஒன்பதே முக்கால் மணிக்கே மேரி ஸ்டுடியோவில் வந்து காத்துக் கொண்டிருப்பதாகச் சுமதியிடம் டெலிஃபோனில் சொல்லியிருந்தாள். டாக்ஸி ஸ்டாண்டில் அவளுக்கு இன்னோர் ஆச்சரியம் காத்திருந்தது. அன்றொரு நாள் மேரியையும் அவளையும் சினிமாத் தியேட்டருக்குச் சவாரி கொண்டு போய் விட்ட அதே டாக்ஸி டிரைவர் வண்டியோடு இருந்தான். அவன் சுமதியைப் பார்த்ததும், "என்னம்மா? செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டே மீட்டரை போட்டது அவளுக்குப் பிடிக்க வில்லை.
'இல்லை! கோடம்பாக்கம் தரணி ஸ்டுடியோவுக்குப் போ. அவசரம்! ஏம்ப்பா எப்ப வண்டியிலே ஏறினாலும் செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கான்னு கேட்டா என்ன அர்த்தம் ?” "தப்பா நினைச்சுக்காதீங்கம்மா! அந்தச் சட்டைக் காரிச்சிப் பொண்ணோட சிநேகிதிங்கள்ளாம் அங்கே தான் அடிக்கடி போவாங்க. அதான் கேட்டேன்."

டாக்ஸி விரைந்தது. தரணி ஸ்டுடியோ வாசலில் கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்திவிட்டான். யாரைப் பார்க்க வேண்டும் என்று அவன் விசாரித்தபோது சுமதி ஒரு கணம் தயங்கியபின் மேரி தன்னிடம் ஃபோனில் சொல்லியிருந்த அந்தத் தயாரிப்பாளரின் பெயரைச் சொன்னாள். சுமதியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு டாக்ஸியை உள்ளே செல்ல அனுமதித்தான் கூர்க்கா. உட்புறம் ஸ்டுடியோ பகுதிகளுக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் 'டாக்ஸிகள் இங்கேயே நின்றுவிட வேண்டும். அதற்கு அப்பால் செல்லக்கூடாது' என்று பெரிதாக ஒரு போர்டு இருந்தது. அந்த இடத்திலேயே டாக்ஸியை நிறுத்திவிட்டு மீட்டரில் வாடகை கணக்குப் பார்த்துப் பணம் கொடுத்து அனுப்பினாள் சுமதி.

தோட்டப் பகுதியைக் கடந்து உள்ளே சென்ற சுமதிக்குப் பெரிய பெரிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுகளாக வரிசையாய் இருந்த ஃப்ளோர்களைக் கண்டுபிடிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. மூன்றாவது ஃப்ளோர் முகப்பில் காலை ஒன்பதேமுக்கால் மணியிலிருந்தே சுமதிக்காகக் காத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லிய மேரியைத்தான் அங்கே காணவில்லை. சிறிது நேரம் மேரியை எதிர்பார்த்து மூன்றாவது ஃப்ளோர் முகப்பிலேயே நின்று கொண்டிருந்தாள் சுமதி. மேரி தட்டுப்படாமற்போகவே, உட்புறமிருந்து காபி பிளாஸ்க்குடன் வெளியே வந்த ஒரு காக்கி அரை டிராயர் அணிந்த பையனிடம் தான் தேடி வந்திருந்த தயாரிப்பாளரின் பெயரைச் சொல்லி விசாரித்தாள் சுமதி.

"உள்ளாற ஷுட்டிங் நடக்குதுங்க... நீங்க இங்கேயே இருங்க. நான் அவர் கையிலே சொல்றேன்" என்று சொல்லி விட்டுச் சுமதி உட்காருவதற்காக ஒரு மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டுவிட்டுப் போனான் பையன்.

அவளை அவன் உட்காரச் செய்து விட்டுப்போன இடம் அந்த மூன்றாவது ஃப்ளோரின் மேக்-அப் அனெக்ஸுக்கு முகப்பாக இருந்தது. ரோஸ் நிறம் கன்றிய பவுடர்ப்பூச்சு முகமும் கீறினாற்போன்ற கரும்புருவமும் மேக்கப் உடையலங்காரமுமாக யார்.யாரோ வந்தார்கள், போனார்கள்.

உள்ளே ஏதோ குரூப் டான்ஸ் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ கும்பலாக ஒரு பத்துப் பன்னிரண்டு துணை நடிகைகள் படிப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த ஃப்ளோரிலிருந்து சிரிப்பும் கும்மாளமுமாக மேக்-அப் அனெக்ஸ்-க்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிறிது பின்தங்கி நடந்து வந்த உடற்கட்டுள்ள ஒரு பெண்ணின் தோளில் கை போட்டபடி இரட்டை நாடி சரீரமுள்ள ஒரு குட்டை மனிதர் தென்பட்டார். அந்த மனிதர்தான் மேரி சொல்லிய புரொட்யூலராக இருக்க வேண்டும் என்று சுமதி புரிந்து கொண்டாள்.

சுமதி அன்று ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்குப் போயிருந்த போது இந்த மனிதரைச் சுட்டிக் காட்டி மேரி அறிமுகப்படுத்தியிருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதற்குள் அந்த மனிதரே சுமதியைப் பார்த்து விட்டு, “ஹலோ. நீ எப்பம்மா வந்தே? மேரி ஃபோன் பண்ணிச் சொல்லிச்சு. அதாலே,வரமுடியலியாம். நீ மேக்-அப் டெஸ்ட்டுக்கு வருவேன்னு சொல்லிச்சு. ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. இந்த ஃப்ளோர்ல படிப்பிடிப்பு முடிஞ்சிடும். ஆளுங்கள்ளாம் போயிடுவாங்க. காமிராமேனிட்டச் சொல்லி வச்சிருக்கேன். உள்ளே கூட்டம் குறைஞ்சதும் உனக்கு மேக்-அப் போடச் சொல்றேன்” என்று உற்சாகமாகச் சொன்னார். அவர் நின்று கொண்டிருந்த பிரதேசத்தைச் சுற்றி அவர் உடலிலிருந்து விலையுயர்ந்த வாசனைகள் கமகமவென்று கிளர்ந்து கொண்டிருந்தன.

"எனக்கு ஒண்ணும் அவசரமில்லே! மெல்ல ஆகட்டும்" என்றாள் சுமதி.

"அது சரியம்மா! அன்னிக்கு ஏன் கிளப்பிலே எங்களை எல்லாம் பார்த்ததும் ஏதோ பேயையோ, பிசாசையோ பார்த்துட்ட மாதிரிப் பயந்துக்கிட்டு ஒடினே?”

இதற்குச் சுமதி பதில் சொல்லவில்லை. நாணித்தலை குனிந்தபடியே சும்மா இருந்துவிட்டாள்.

"சரி! உன் மனசைச் சங்கடப்படுத்தறதா இருந்தா நான் அதைப்பத்திக் கேட்கலே. அதை மறந்துடலாம். இப்போ என்ன குடிக்கிறே? காபியா, போர்ன்விடாவா, இல்லே கூலா ஏதாவது?”

இதற்கும் அவள் உடனே பதில் சொல்லவில்லை. ஆனால் அவராகவே கையைத் தட்டி, 'டேய் யார்ரா புரொடக்க்ஷன் பாய்! ரெண்டு கோகோ கோலா வாங்கிட்டு வா, சொல்றேன். ஜல்தி போ... ஜில்னு இருக்கணும்" என்று ஆர்டர் போட்டார்.

சுமதி முதலில் பார்த்த அந்தக் காக்கி அரை டிராயர்ப் பையன் ஓடி வந்தான்.

"தோ வந்துட்டேன் சார்” என்று ஓடினான் அவன். சிறிது நேரத்தில் எக்ஸ்ட்ராக்கள் ஒரு வேனில் அடைத்துக் கொண்டு கிளம்பினார்கள். பெரிய நடிகர் நடிகைகள் காரில் கிளம்பினார்கள். நீ வாம்மா; போகலாம்” என்று சுமதியை மேக்-அப் அனெக்ஸுக்குள் அழைத்துச் சென்றார் தயாரிப்பாளர். அனெக்ஸ் அறை ஏ.சி. செய்யப்பட்டிருந்தது. உள்ளே மேக்-அப் மேனும், அவனுடைய உதவியாளனும் மட்டுமே இருந்தார்கள்.

தயாரிப்பாளர் கொஞ்சம் தாராளமாகவே உரிமை கொண்டாடி, "இதோ இந்தச் சேருக்கு வாம்மா! இது தான் ரொம்ப ராசியான சேர். இப்பப் பிரமாதமா ஜொலிக்கிறாளே குமுதகுமாரி, அவ முத முதலா இந்த நாற்காலிலே உட்கார்ந்துதான் மேக்-அப் போட்டுகிட்டா. தெரியுமா?” என்று சுமதியின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார். அவருடைய கையை எடுத்து உதறினால் எங்கே கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி போய் விடுமோ என்ற பயத்தில் சுமதி அப்போது அதைச் சகித்துக் கொண்டாள்.

"இந்தாப்பா!... புருவத்தைக் கத்திரிச்சுப்பிடாதே. இவ காலேஜிலே படிக்கிற பொண்ணு. இப்போதைக்குச் சும்மா 'அய் பிராமினன்ஸ்' வர்ற மாதிரி ஏதாச்சும் அட் ஜஸ்ட் பண்ணிக்க” என்ற சுமதிக்காக அவரே அக்கறை எடுத்துக் கொண்டு மேக்-அப் மேனை எச்சரித்தார்.

மேக்-அப் மேன் தன் தலையை-முகத்தை-மோவாயை-தோள் பட்டையை எல்லாம் தாராளமாகத் தொட்டபோது கூடச் சுமதிக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கூச்சங்களை அவளே உதற முயன்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டாள். தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டாள். வேற்று ஆடவர் தொடக் கூசும் மனத்தையும் உடலையும் வைத்துக் கொண்டு சினிமாவில் சோபிக்க முடியாது என்பது சுமதிக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது.

மேக்-அப் முடிந்ததும் அவரே அவளை உள்ளே ஃப்ளோருக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் செல்லும் போதும் தோளைத் தழுவினாற் போல் நெருங்கியே நடந்து வந்தார் அவர்.

உள்ளே ஃப்ளோரில் காமிராமேன், உதவிக் காமிராமேன் இரண்டு மூன்று லைட்பாய்ஸ் எல்லோரும் இருந்தனர். இவர்கள் அங்கே நுழையவும் புரொடக்ஷன் பாயும் இரண்டு கோகோ கோலா பாட்டில்களோடு கூடிய டிரேயுடன் உள்ளே வந்தான்.

சுமதியைத் தாராளமாகத் தொட்டு முகத்தைத் திருப்பி இடுப்பை சரிசெய்து, கைகளை ஒழுங்கு பண்ணிக் காமிராவுக்கு முன் நிற்க வைத்தார் தயாரிப்பாளர். அப்புறம் காமிராமேனும், தன் பங்குக்கு என்னென்ன விதமாகத் தொட முடியுமோ அத்தனை விதமாகவும் தொட்டாயிற்று.

"ஓ.கே. ரெடி.." என்று கூறியபடி ஒரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து உறிஞ்சிக் கொண்டே சிறிது ஒதுங்கி நின்றார், தயாரிப்பாளர்.

சுமதி சிரித்த முகமாக இருக்க முயன்றாள். விளக்குகள் பளிச்சிட்டன. அணைந்தன. மறுபடியும் பளிச்சிட்டன. நடுவே, "இந்தாம்மா! ரொம்பக் களைப்பா இருக்கும்! குடி’ என்று மற்றொரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினார் தயாரிப்பாளர்.

"இப்ப வேண்டாம்! முடிஞ்சதும் எடுத்துக்கறேன்' என்று கூறியபடி அவர் நீட்டிய பாட்டிலை எடுத்து மறுபடி டிரேயிலேயே வைத்தாள் சுமதி. முகபாவங்களை மாற்றச் சொல்லி இரண்டு மூன்று முறை படங்களைப் பிடித்தபின் "உனக்கு நல்ல காமிரா ஃபேஸ் இருக்கும்மா” என்றார் தயாரிப்பாளர். காமிராமேன் ஒன்றுமே சொல்லவில்லை. அவளும், தயாரிப்பாளரும் ஃப்ளோருக்குள்ளிருந்து வெளியேறு முன்பாகத் திடீரென்று மேரியும் அங்கே வந்து சேர்ந்தாள். "ஹாய் சுமதி: பிரமாதம்” என்றாள் மேரி. சுமதியும் அவளை நோக்கி, "தாங்க்ஸ் மேரி: உன் காம்ப்ளிமெண்ட்ஸைவிட வேறென்ன பெரிசு ?” என்று சிறிது தாராளமாகவே அப்போது அவளைப் பாராட்டி வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/10&oldid=1146890" இலிருந்து மீள்விக்கப்பட்டது