24

திருவல்லிக்கேணி டாக்டரம்மாள் வீட்டிலிருந்து திரும்பும்போது சுமதியும் மேரியும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கோபித்துக் கொண்டவர்கள் நிர்ப்பந்தமாக ஒருவருக்கருகே மற்றவர் உட்கார நேர்ந்தது போல் அவர்கள் அப்போது உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எதுவும் பேசவில்லை என்றாலும், அவளும் உள்ளூரக் கவலையிலாழ்ந்திருப்பதை அவள் முகமே காட்டியது. சுமதியோ கண்களில் நீர் வடிய வீற்றிருந்தாள். நடுவே ஒரே ஒருமுறை மட்டும் மேரி சுமதியின் தோளில் தட்டி "வேண்டாம் அழாதே! எல்லாம் சரிப்படுத்திக்கலாம்” என்று ஆறுதலாகச் சொன்னாள். சுமதி கோபத்தோடு அப்போது மேரியின் கையைத் தன் தோளிலிருந்து நீக்கி வெடுக்கென்று உதறினாள்.

வீடு வந்ததும் இறங்கி ஓடிப்போய்த் தன் அறைக்குள் நுழைந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள் சுமதி. மேரி எவ்வளவோ தட்டிப் பார்த்தும் சுமதி கதவைத் திறக்கவில்லை.

மேரிக்குச் சந்தேகமும் பயமும் ஏற்பட்டுவிட்டன. இம்மாதிரி மனநிலையில் பெண்கள் என்னென்ன பயித்தியக்காரத் தனங்களைச் செய்வார்கள் என்று சிந்தித்துப் பதறினாள் மேரி. அறைக்குள் தூக்கு மாட்டிக் கொள்வாளோ, மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துக் கொள்வாளோ, தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக என்றெல்லாம் எண்ணி மேரி மனம் பதைத்தாள். சுமதியை எப்படிக் கதவு திறக்கச் செய்வது என்று மேரிக்குப் புரியவில்லை. சுமதியோ வெறுப்பும் பிடிவாதமுமாக உள்ளே இருந்தாள். “இன்னும் ரெண்டு நிமிஷத்திலேயே நீ கதவைத் திறக்கலேன்னா நான் போலீசுக்கோ ஃபயர் சர்வீசுக்கோ ஃபோன் பண்ண வேண்டியிருக்கும். வேறே வழி இல்லை" என்று. வெளிப்புறமிருந்தே சாவித் துவாரத்தின் அருகே வாயை வைத்து இரைந்து கத்தினாள் மேரி. உடனே பயந்து போய்ச் சுமதி கதவைத் திறந்துவிட்டாள். உள்ளே துழைந்து மேரியிடம், "பாவி! கடைசியிலே என்னை வயி றும் பிள்ளையுமா நடுத்தெருவிலே நிறுத்தியாச்சு உனக்கு இப்போ திருப்திதானே? போதுமோ இல்லியோ?” என்று கூப்பாடு போட்டுத் தலையிலும் வயிற்றிலுமாக மாறிமாறி அடித்துக்கொள்ளத் தொடங்கினாள் சுமதி.

மேரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேணாம்! சொன்னாக் கேளு சுமதி கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி வம்பு பண்ணாதே. வீணா நீயே உன் பேரைக் கெடுத்துக்கப்போறே. இதைச் சரிப்படுத்த எப்பிடியும் நான் ஹெல்ப் பண்றேன். என்னை நம்பு” என்றாள் மேரி. 

"உன்னை நம்பி நம்பித் தானேடீ இந்தக் கதிக்கு வந்தேன்" என்று பதிலுக்குக் கூப்பாடு போட்டாள் சுமதி. அப்போது மாடிப்படியருகே யாரோ மடமடவென்று படியில் உருளுகிற ஓசையும் வேலைக்காரப் பையனின் கூப்பாடும் கேட்டன. சுமதியின் கவனமும், மேரியின் கவனமும் திசை திரும்பின.

சுமதியும், மேரியும் அறையிலிருந்து வெளியேறி வந்து பார்த்தால் கன்னையா மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்திருந்தார். “உள்ளே நீங்க ரெண்டுபேரும் சத்தம் போட்டுக்கிறதைக் கேட்டு மாடியிலேருந்து ஓடி வந்தாரு. வேஷ்டி தடுக்கிப் படியிலே விழுந்துட்டாரு” என்றான் வேலைக்காரப் பையன். சுமதியும் மேரியும் அருகில் நெருங்கிப் பார்த்தபோது சும்மா வேஷ்டி தடுக்கி மட்டும் அவர் விழவில்லை. நன்றாகக் குடித்திருந்தார் என்றும் தெரிந்தது. மாடியிலிருந்த தெலுங்குக் காரிகளின் சகவாசத்தில் சில நாட்களாக அவர் மூழ்கியிருந்ததில் சுமதிக்கு அவர்மேலே ஒரு வெறுப்பு. ஆனாலும் இப்படிச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

கீழே விழுந்த கன்னையாவுக்கு முழங்கால் பட்டை பிசகிவிட்டது. எழுந்திருக்க முடியவில்லை. உடனே மேரி பையனைக் கூப்பிட்டு, "காரை எடுக்கச் சொல்லுப்பா, உடனே டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போயாகணும்!” என்றாள். பையன் டிரைவரிடம் காரை எடுக்கச் சொல்லி அவசரப் படுத்தினான். எழுந்திருக்க முடியாமல் தரை யில் வேஷ்டி அவிழ விழுந்து கிடந்த கன்னையாவின் இடுப்பில் வேஷ்டியை இறுக்கிக் கட்டிவிட்டுப் 'பெல்ட்'டும் போட்ட பின் மேரி ஒரு பக்கமும், சுமதி ஒருபக்கமும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் ஏற்றினார்கள். காரின் முன் ஷீட்டைக் கழற்றி இன்னும் சிறிது முன்னுக்கு நகர்த்திய பின்னர் பின் பக்கத்து இருக்கையில் இடவசதியை அதிகமாக்கிக் கொண்டுதான் கன்னையாவைக் காரில் கிடத்துவதற்கு முடிந்தது. வலது முழங்காலில் சிறிது 'ஃபிராக்சர்'. இருக்குமோ என்று தோன்றியது.

அந்தக் காலை நிமிர்த்தவே முடியவில்லை. "கீழே சத்தம் கேட்டால்தான் என்ன? நீங்க ஏன் இப்பிடிப் பதறிப் போய்த் தலைகால் புரியாமலே படியிலே இறங்கறீங்க? அதுவும் இந்த மாதிரி நிலைமையிலே ஒவ்வொரு படியும் ரெண்டு படியாகக் கண்ணுக்குத் தெரியுமே?’ என்று மேரி அவரைக் கடிந்து கொண்டாள்.

'நம்ம கையிலே என்ன இருக்கு ? அது நடக்க வேண்டிய நேரத்துக்கு நடந்துதானே தீரும்? நாம் தடுத்து நிறுத்தினா மட்டும் விதி நின்னுடுமா?’ என்று கஷ்டகால வேதாந்தம் பேசினார் கன்னையா.

மாம்பலத்திலேயே ஒரு பிரபலமான பிரைவேட் நர்விங்ஹோமில் சேர்ந்து கன்னையா சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. படுக்கையில் படுக்க வைத்து எலும்பு பிசகிய காலை ஊஞ்சல் மாதிரி கட்டித் தொங்க விட்டுவிட்டார்கள். பதினைந்து நாள்வரை படுக்கையை விட்டு அசையக்கூடாது என்று டாக்டர் கடுமையாக உத்தரவு போட்டுவிட்டார்.

தந்தி மூலம் அறிவிக்கப்பட்டுச் சேலத்திலிருந்து கன்னையாவின் மனைவி மக்கள் புறப்பட்டு வந்தார்கள். வீட்டில் அவர்களும் வந்து தங்கவே சுமதிக்கு அங்கே தொடர்ந்து இருக்கப் பிடிக்கவில்லை. கன்னையாவின் குடும்பத்தினர் வந்து தங்கியபின் மேரி அங்கு வருவதைக் குறைத்துக் கொண்டுவிட்டாள். மாடியிலிருந்த குச்சுப் புடிப் பெண்கள் ஒருவாரம் ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவதாகச் சென்றவர்கள் திரும்பியே வரவில்லை. சில வேளைகளில் வெறிச்சோடிக் கிடக்கும் அந்தப் பெரிய வீட்டில் சுமதி மட்டுமே தனியாக இருக்க நேர்ந் தது. அந்த மாதிரித் தனியான நேரங்களில் கார்களிலும், டாக்ஸிகளிலும், ஸ்கூட்டரிலுமாகத் தேடி வந்த ஆண் களையும், அவர்கள் கேட்ட கேள்விகளையும் வைத்துச் சுமதி ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். நாட்டியப் பள்ளிக்கூடம், குச்சுப்புடி கலாசாலை என்ற 

பெயர்களை வைத்துக் கொண்டு கன்னையா நடத்தியவை எல்லாம் விபச்சார விடுதிகளே என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தன்னுடைய இந்த விடுதிகளுக்கு அழகிய பெண்களை இழுப்பதற்கும் கவர்வதற்கும் ஒரு வியாஜ்யம்தான் சினிமாத் தயாரிப்பே ஒழிய உண்மையில் அவர் சினிமாத் தயாரிப்பாளர் இல்லை என்பது போலவும் புரிந்தது. முன்பே இலைமறை காயாகத் தெரிந்திருந்த இந்த விவரம் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல் சுமதிக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. கன்னையா ஆஸ்பத்திரியில் போய்ப் படுத்தபின் சுமதிக்குப் பணமுடை பயங்கரமாக ஆரம்பமாயிற்று.

கணக்கிலுள்ள பத்து ரூபாய் மீதத்தில் மினிமம் டெபாஸிட்டாக இருக்க வேண்டிய ஐந்து ரூபாயை விட்டு விட்டு மீதி ஐந்து ரூபாயை எடுத்துச் செலவழிக்க வேண்டிய அளவு அவள் கை வறண்டது. கார் எல்லாம் கன்னையா குடும்பத்தினரின் உபயோகத்துக்குப் போய் விட்டதனால் அவள் வெளியே போகவர டாக்ஸி தேட வேண்டியிருந்தது மேரிக்கு ஃபோன் செய்தால் அவள்' வேளாங்கண்ணி' போயிருப்பதாகவும், திரும்பி வரப் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவித்தார்கள்.

பெரும்பாலும் மாலை வேளைகளில் கன்னையாவின் குடும்பத்தினர் அவரைச் சந்திக்க மருத்துவமனை போய் விடுவார்கள். வீட்டில் சுமதி மட்டுமே இருப்பாள். பணக் கஷ்டம் அதிகமானபின் மாலை வேளைகளில் தேடிவருகிற இரண்டொரு பணக்கார ஆண்களைச் சிரித்துப் பேசி உள்ளே அழைத்து அவர்களுடைய உடற் பசியைப் பூர்த்தி செய்து பணம் சம்பாதிக்க முனையும் அளவுக்குச் சுமதிக்குக் கட்டாயமான நிலைமைகள் ஏற்பட்டன. கன்னையா முன்பு நடத்தியதை இப்போது அரை-குறைத் துணிச்சலுடன் அவளே நடத்தத் தொடங்கினாள். நடுநடுவே அவளுக்கும் கன்னையாவின் குடும்பத்தினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. ஒருநாள் காலை சுமதி ஏ.சி. ரூமில் ஏதோ படிப்பதற்காக வாரப் பத்திரிகைகள் எடுக்கப் போனபோது, அவள் காது கேட்கும்படியாகவே வேலைக்காரப் பையனிடம் சொல்லுவது போல்,

"இதென்னப்பாது? வீடா, சத்திரமா? கண்ட கண்ட ஆளுங்கள்ளாம் திறந்த வீட்டிலே நாய் நொழையற மாதிரி நொழைஞ்சுடறாங்க. கேள்வி முறையே இல்லியா?" என்று கன்னையாவின் மனைவி கூப்பாடு போட்டாள். வேலைக்காரப் பையன் இதற்குப் பதில் சொல்லவில்லை. சுமதி உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டாள். சிறிது நேரம் கழித்து வேலைக்காரப் பையனே சுமதி குடியிருந்த பகுதிக்கு அவளைத் தேடி வந்தான். ஆறுதலாகச் சுமதியிடம் பேசிப் பார்த்தான்.

"இந்தப் பொம்பிளை கூப்பாடு போடறதை நீங்க ஒண்ணும் மனசிலே வச்சிக்காதீங்கம்மா. ஐயா உங்களைக் கைவிட மாட்டாரு. நேத்துக்கூட எங்கிட்ட உங்களைப் பத்தி விசாரிச்சாரு 'எங்கேடா சுமதியைக் காணோமே'ன்னு அன்பாகக் கேட்டாரு” என்று அவன் கூறியதால் சுமதிக்கு எந்த நிம்மதியும் புதிதாக ஏற்பட்டுவிடவில்லை. கவலைகளே அதிகமாயின. 'தன் வாழ்க்கை அழுகிக் குழம்பி விட்டதோ?' என்ற சுமதி மறுகிய இந்த நாட்களில் ஒரு தினத்தன்று தாயின் கடைசிக் கடிதத்தைப் பெட்டியிலிருந்து மறுபடி எடுத்துப் படித்தாள். அவளுக்கு முன்பு கசந்த அதிலிருந்து இன்று ஏதோ சிறிது ஆறுதல் கிடைத்தாற் போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/24&oldid=1147405" இலிருந்து மீள்விக்கப்பட்டது