அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/009
மாதரசி சிறை புகுந்தார்!
இல்லறத்தில் பிரம்மச்சாரிய விரதம் மேற்கொண்ட காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சட்ட மறுப்பு அறப்போர் இயக்கம் துவக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்.
இந்த சத்தியாக்கிரகப் போரிலே பெண்கள் அணியை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்த அவர், அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டிய மகளிர்கள் எப்படியெப்படி அறப்போரைச் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
இந்த மகளிர் அணிக்கு தனது மனைவி கஸ்தூரிபாய் தலைமை ஏற்று அறப்போர் ஆற்றுவார் என்பதைக் கூடியிருந்த பெண்மணிகளிடம் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அறப்போர் புரிவதால் பெண்களை இந்த ஆட்சி கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதைகளையும் கொடுமைகளையும் செய்யக்கூடும். அதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்றார்.
சத்தியாக்கிரகம் செய்து சிறைத்தண்டனை கிடைத்து நீதிமன்றத்தின் முன்பு பெண்களை நிறுத்தவேண்டிய நிலை வந்தால், நீதிபதி உங்களை விசாரணை செய்யும்போது, தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் உரிமைகளைப் பெறுவதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம் என்றும், இந்த ஆட்சியிலே இந்தியர்களை இழிவுபடுத்தும் நிறவெறியை எதிர்த்தே இந்த அறப்போராட்டத்தை நடத்தினோம் என்றும், ஆங்கிலேயர் ஆட்சியின் நிறவெறிச் சட்டங்களை எதிர்த்தே போராட்டம் புரிகிறோம் என்றும், அந்தக் கொடுமையான சட்டங்களை இந்த ஆட்சி திரும்பப் பெறும்வரை பெண்களாகிய நாங்கள் ஓயாமல் சத்தியாக் கிரகத்தைச் செய்து கொண்டே இருப்போம் என்றும் நீதிபதி விசாரணையின்போது கூறவேண்டும் என்பதனைப் போராட்டத்திற்குப் போகும் பெண்களிடம் காந்தியடிகள் விளக்கினார்.
போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பெண்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தால் அதை மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டுமே தவிர, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னால் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறையிலே இருந்து வெளியே வரக்கூடாது என்பதை அந்தப் போராட்டப் பெண்களுக்கு வலியுறுத்திக் கூறி, அதற்குச் சம்மதம் உள்ள பெண்கள் மட்டுமே, இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் காந்தியடிகள் வலியுறுத்திக் குறிப்பிட்டு வீரஉரை ஆற்றினார்.
அப்போது கஸ்தூரிபாய் பேசும்போது, ”இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களாகிய நாங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜெயிலில் அனுபவிக்கும் துன்பங்களுக்குப் பயந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியே வரமாட்டோம். இந்தியத் திருநாட்டின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை உருவாக்க மாட்டோம். இது எங்கள் தாய் நாட்டின் மீது ஆணை” நாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யம் மீது ஆணை என்று கோபாவேசமாகக் குறிப்பிட்டார்.
கஸ்துரரிபாயின் வீர உரையை ஏற்று நடப்போம் என்ற உணர்ச்சியோடு மற்ற போராட்ட வீராங்கனைகள் கையொலி எழுப்பி, கஸ்தூரிபாயின் வீர மொழிகளை ஆமோதித்தார்கள்.
பெண்கள் போராட்டக் குழுவில் சம்மதம் தெரிவித்தபடியே, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அறப்போர் செய்து சிறை புகுந்தார்கள். இந்தப் போராட்டத்தை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் காந்தியடிகள் தலைமையிலும், கஸ்தூரிபாய் தலைமையிலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். ஆண்களும் பெண்களும், விக்ரமாதித்தன் என்ற மன்னன் காடாறு மாதம், நாடாறுமாதம் ஆட்சி நடத்தியதைப் போல, வீடாறுமாதம் சிறை ஆறுமாதம் என்று போராடி இறுதியிலே வெற்றி பெற்றார்கள்.
காந்தியடிகளோடு ஃபீனிக்ஸ் செட்டில்மெண்டில் வசித்த நண்பர்களில் சிலர் மட்டுமே, சிறைத் தண்டனைக்குப் பயந்து போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று பின்வாங்கி விட்டார்கள்.
நண்பர்கள் சிலரின் இந்தத் தவறுக்கு தன்னுடைய பலவீனமே காரணம் என்று கருதினாரே தவிர, பின்வாங்கிச் சென்றவர்களை அவர் குறை கூறவில்லை. அந்தப் பலவீனத்திற்குத் தண்டனையாக, பதினான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து காந்தியடிகள் தன்னைத் தானே வகுத்திக் கொண்டார்.
இந்தப் பதினான்கு நாள் உண்ணாவிரதத்தின்போது கஸ்தூரிபாய் தனது கணவர் காந்தியடிகளுக்குரிய பணி விடைகளைச் செய்து கொண்டு அதே நேரத்தில் போராட்ட வீரர்களுடனும் வீராங்கனைகளுடனும் ஒன்று சேர்ந்து அந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக அல்லும் பகலுமாக உழைத்து வந்தார்.
இறுதியில் தென்னாப்பிரிக்க இந்தியரின் அறப்போர் வெற்றி பெற்ற பின்பு, ஆங்கிலேயர் ஆட்சி இந்தியர்களுக்குரிய நீதியை வழங்கியது. இதன் எதிரொலியாக, இந்திய மக்களுக்கு விரோதமான நிறவெறிச் சட்டங்களை அந்த ஆட்சி திரும்பப் பெற்றுக் கொண்டது.
காந்தியடிகளும் அதற்குப் பிறகு தனது அறப்போர் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார் பிறகு தனது தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப முடிவு செய்தார்.