அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/010

பரிசுப் பொருட்களால்
கணவன் மனைவி சர்ச்சை !

 ழக்குரைஞராக வருவாய் தேடப் புறப்பட்டுத் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தியடிகள், அங்கே உள்ள இந்தியர்கள் எல்லாம், ஆங்கிலேயரின் நிறவெறிச் சட்டங்களுக்குப் பலியாகி அவமானப்படுவதைக் கண்டு, அதற்காகப் போராடி, அந்த ஆட்சியைப் பணியவைத்து, அந்த இந்தியர்களை வெள்ளையர்களுக்குச் சமமாக உரிமைகளை அனுபவிக்கச் செய்து மானத்தோடு வாழவைக்கப் பாடுபட்டதைக் கண்ட தென்னாப்பிரிக்க இந்தியர்கள், இந்தியாவுக்கு மீண்டும் திரும்பிடும் காந்தியடிகளது குடும்பத்தை வழியனுப்பிட ஒரு பெரும் பாராட்டு விழாக் கூட்டத்தை நடத்தினார்கள்.

தென்னாப்பிரிக்க மக்களிற்கு காந்தியடிகளுடைய குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லை. ஆனால் அவர்கள் இந்தியாதிரும்புவதையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து, அவருக்கு விடை தந்து வழி அனுப்பிடவே அந்தக் கூட்டத்தை நடத்தினார்கள்.

அந்த வழியனுப்பும் விழாவில், தென்னாப்பிரிக்க இந்தியர்கள் ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். அன்னை கஸ்தூரிபாய்க்கு ஐம்பத்திரண்டு பவுன் மதிப்புள்ள ஒரு நெக்லசைப் பரிசுப் பொருளாக அன்புடன் வழங்கி, அவரையும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

பாராட்டு விழா முடிந்தது! வீட்டுக்கு வந்தார் காந்தியடிகள்! அன்று இரவு முழுவதும் அவருக்கு நித்திரை வரவில்லை. காரணம், மக்களுக்குத் தொண்டு செய்வது பிறப்பெடுத்ததன் கடமை! அந்தத் தொண்டுக்கு அன்பளிப்பாக இந்தப் பரிசுப் பொருட்களை மக்கள் வழங்கினார்களா அல்லது தொண்டு செய்ததற்கு இவை கூலியா? என்று சிந்தனை செய்தவாறே இருந்ததால் அவருக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை.

தொண்டர்கள் மக்களிடம் செய்த தொண்டுகளுக்காகப் பரிசு வாங்கலாமா? அவ்வாறு வாங்கினால் தொண்டு என்பதே பொருளற்றுப் போகாதா? தங்களுக்குக் கிடைத்த பரிசுகளைத் தொண்டர்கள் தனது சொந்தத்துக்கு உரிமையாக்கிக் கொள்ளலாமா? என்ற நோக்கம் காந்தியடிகளது மனத்தைக் குத்திக் குடைந்து கொண்டிருந்தன.

இறுதியாக, தங்களது தொண்டுகளுக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களைத் தங்களது சொந்த உரிமைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று முடிவுக்கு வந்தார்.

தொண்டர்கள் அன்போடு கொடுத்த பரிசுகளை அவர்களிடமே திருப்பித் தருவதும் தவறு. தந்தவர்கள் மனது புண்படுமே! எனவே, கொடுக்கப்பட்ட பரிசுகளைத் தான் அனுபவிக்காமல் அவற்றைப் பொது நன்மைகளுக்குப் பயன்படுத்துவது தான் நியாயம் என்றும் தீர்மானித்தார்.

இதைப் பற்றி தனது மனைவியிடமும் கலந்து பேசினார். ஏனென்றால், கஸ்தூரிபாய்க்கும் சில பரிசுப் பொருட்கள் வந்துள்ளனவே! அதனால் மனைவி கருத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று தனது தீர்மானத்தின் முடிவை மனைவியிடமும், பிள்ளைகளிடமும் காந்தியடிகள் விவரித்தார்.

அவரது பிள்ளைகள் இருவரும் அப்பாவின் கருத்தை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், கஸ்தூரிபாய் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. "உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் நகைகள் தேவையில்லை. நீங்கள் சொல்கிறவாறு பிள்ளைகள் சரி என்று கூறலாம். ஆனால், நான் பரிசாக வந்த நகைகளைக் கூடவா அணிந்து கொள்ளக் கூடாது?" என்ற கேள்வியை எழுப்பினார்.

காந்தியடிகள் இதற்கு மெளனமாக இருக்கும்போது, மீண்டும் கஸ்தூரிபாய், "சரி நான் நகைகளைப் போட்டுக் கொள்ளவில்லை. என் பிள்ளைகளுக்குத் திருமணமாகி, மருமகள்கள் வந்தால் என்ன செய்கிறது? அவர்களுக்கு வேண்டாமா நகைகள்? மக்கள் கொடுத்த பொருட்களை நான் திருப்பித் தர மாட்டேன்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் கணவரிடம்!

அப்போது காந்தி முன்புபோல் கோபப்படாமல் அமைதியாக, "பிள்ளைகளுக்கு எப்போதோ திருமணமாகப் போகிறது; அவர்கள் பெரியவர்களான பிறகு, அந்த நேரத்தில் அந்த வேலையை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். அதே நேரத்தில் நகைப் பைத்தியமுள்ள மருமகள்களை நாம் நமது வீட்டிற்குக் கொண்டு வர மாட்டோம். அப்படிப்பட்ட பெண்களை நமது பிள்ளைகளுக்கு மணம் செய்தும் வைக்கமாட்டோம். அவர்களுக்கு நகைகள் அணிய வேண்டிய ஆசைகள் இருந்தால் அதை நான் கவனித்துக் கொள்கிறேன். அப்போது நீ என்னைக் கேள்" என்றார்.

"அது சரி, உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? நான் போட்டிருந்த நகைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு என்னை நிர்க்கதியாக நிறுத்தி விட்டீர்களே! இப்படிப்பட்ட நீங்களா எனது மருமகள்களுக்கு நகை போடுவீர்கள்? எனது பிள்ளைகளை இப்போதே சாமியார்களாக்கி விட்டீர்கள். நீங்களா மருமகள்கள் வந்த பிறகு நகைபோடப் போகிறீர்கள்? எனக்குப் பரிசாக மக்கள் தந்த நகைகளை நான் திருப்பித் தர மாட்டேன்" என்று கூறினார் கஸ்தூரிபாய்.

"அது சரி, இந்த நகைகளை மக்கள் ஏன் தந்தார்கள்? உனது தொண்டுக்கா? அல்லது எனது சேவைக்கா? அதைச் சொல்" என்றார் காந்தியடிகள்.

"உங்களுடைய தொண்டுக்காகத்தான் மக்கள் கொடுத்தார்கள் என்று இருக்கட்டுமே. நீங்கள் செய்தால் என்ன? நான் செய்தால் என்ன? நீங்கள் செய்த தொண்டுக்கு நான் உடனிருந்து பாடுபடவில்லையா? இரவும் பகலும் கண் விழித்துப் பணி செய்தது எல்லாம் தொண்டாகப்பட வில்லையா? என்னிடம் எவ்வளவு அருவருப்பான, கேவலமான, அற்பமான வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லி வேலை வாங்கினீர்கள்? ரத்தக் கண்ணிர் வடிக்கும் அளவிற்கு என்னை அலைக்கழித்து, அதட்டி, உருட்டி, நோய் வாய்ப்படும் அளவிற்கு வேலை செய்யச் சொன்னீர்கள்? நானும் மக்களுக்காக உழைக்கவில்லையா?" என்று கஸ்தூரிபாய் நறுக் நறுக்கென்று சில கேள்விகளைக் கேட்டுக் கண்ணிர் விட்டார்.

கஸ்தூரிபாய் பேசியதை எல்லாம் காந்தியடிகள் ஏற்கவில்லை. நகைகளைப் பொது நிதியில் சேர்ப்பது தான் நியாயம் என்று கூறி, மனைவியை எப்படியெப்படியோ சமாதானம் செய்து நகைகளை வாங்கிவிட்டார் அவர்.

இதற்குமுன்பு கிடைத்த பரிசுகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவற்றை நிதியாக்கி அதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்கி அந்த நிதிகளை எல்லாம் திருப்பி மக்களுக்கே உதவுமாறு செலவு செய்திட திட்டம் தீட்டினார்.

கணவன், பொதுவாழ்க்கையில் உயர்ந்து நல்ல பெயர் எடுக்க, மனைவி கஸ்துரிபாய் எத்தகைய துணைபுரிந்தார் என்பதற்கு, அவர் தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை எல்லாம் கணவரிடமே திருப்பிக் கொடுத்த பெருந்தன்மைச் செயலும் ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

xxx