அன்பு வெள்ளம்/அன்பு உண்மை

அன்பு உண்மை, மெய்ம்மை வாய்மை!

கிறித்துவின் ஆவி, அன்பின் ஆவி! இயேசு அனை வருக்கும் அன்பர் அனைவருக்கும் அன்பினர். "ஆயக்காரனிலும் இவன் பெரியவன் என்றும் மத்தேயுவிலும் பெரியவன் என்றும் சொல்லப்பட்ட 'சகேயு’ (Zacchaeus) என்பவனை அன்புடன் விரும்பினார்; யூதா, யூதாசு, யூதாசு காரியோத்து என்றெல்லாம் அழைக்கப்பெற்ற (Judas) யூதாவை அன்புடன் விரும்பினார். பொந்தியு பிலாத்து (Pontius Pilate) என்பவனையும் அன்புடன் விரும்பினார்.

இயேசு நோயாளிகளைக் குணமடையச் செய்தது தம்மைக் கடவுள் என்று மெய்பிக்க அன்று. நோயுற்றவர்களையும் விரும்பினார். மன்பதை மாந்தர்படும் துன்பம் அவருக்கு ஓர் அறைகூவலாக இருந்தது. ஆகவே மன்பதையின் - மாந்த இனத்தின் துன்பங்களைப் போக்கினார்.

குறுக்கையில் இயேசு கிறித்து தம்மை ஒப்புக் கொடுத்து மரித்தது எதற்காக? நம்மை விரும்பியததால் - நம்மில் அன்பு கூர்ந்ததால். நம்மை அன்புடன் நேசித்தார்; நமக்காகவே அவர் தம்மை ஒப்புக் கொடுத்தார்.

உரோமர் 12 : 9 'உங்கள் அன்பு மாயமற்றதாக இருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள்' இதனையே மற்றொரு வகையாகச் சொன்னால் அன்பு என்பது தன்னலம் அற்றதாக இருத்தல் வேண்டும்; ஏனெனில் தன்னலம் என்பது படிற்றொழுக்கமாம் போலி நடிப்பினை உண்டாக்கச் செய்யும்.

அன்புலகில் நுழையத் தடை செய்யப்பட்டது தன்னலம். அன்புலகில் செல்ல வொட்டாமல் தடுத்து நிறுத்தப்படுவது தன்னலம். ஏன்? அன்பினைக் கீழே தள்ளி, அதன் இடத்தில் அமர்ந்து, அன்பின் உயர்வினை, மணிமகுடத்தைத் தட்டிக் கொள்ளத் தோள் தட்டி நிற்பது தன்னலம். தன்னலம் என்பது ஒரு கொள்ளைக்காரன். பழிபாவத்தினை அஞ்சாத கொள்ளைக்காரன்.

தன்னலம் மாந்தரை, பொய்வேடம் இட்டு நடிக்கச் செய்யும். நட்பினை முறிக்கும். இல்லறத்தைச் சீர்குலைக்கும். திரு அரங்குகளைப் பாழ்படுத்தும். அன்பின் கனியை அழிக்கும்.

மாந்தர் தம் வாழ்வில் தன்னலத்தை - அதன் விளைவுகளை அழித்து வெற்றி பெற வைக்க ஒரே ஓர் ஆற்றல்தான் உண்டு. அந்த ஆற்றல், புதிதான், புதுமையான அன்பு ஒன்றே!

இயல்பாக ஓர் ஆண் ஒரு பெண்ணைக் காதலிப்பது - அன்பு செலுத்துவது என்பது எதற்காக? அவன் நெஞ்ச வேட்கையைத் தணிப்பதற்காக! தன் வேட்கையைத் தணித்த பெண்ணுக்கு மகிழ்ச்சி தருவதற்காகவா? இல்லவே இல்லை! தன் ஆவல் தீர்த்துக் கொண்டால் போதும் என்பதுதான்் தவிர, அவள் அகம்புறம் இன்புற்றுத் திளைப்பதற்காக அன்று! அவள் இவனுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இசைந்து வரவில்லையேல் அன்புடன் அடங்கி நடக்கவில்லையேல், தன்னைப் பிடிக்கவில்லை என்று கருதி அவளை அழித்துவிடுவானேயன்றி நான் அவளுக்குப் பொருத்தமானவன் அல்லேன்; வேறு பொருத்தமுள்ள ஒருவருடனேனும் வாழ்ந்து போகட்டும் என்று அப் பெண்ணினைத் துணைவியை விட்டு வைக்கமாட்டான். இத்தகு அன்பைக் கொலைச்செய்யும் இரக்கமற்ற மானிடர்களும் மாந்த வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். இயற்கையான மானிட அன்பு என்பது அசட்டை செய்வது, காழ்ப்பு - பகைமை - பொறாமை கொள்வது மட்டுமல்ல கடைசியாகக் கொலை அளவுக்கும் மாறிவிடுகிறது.

சில திங்களுக்கு முன்பாக, கடலோர நகரங்கள் ஒன்றில் உள்ள அறமன்றம் ஒன்றினில் ஒரு குற்றவாளி கூறினான்:- அறவாணர் அவர்களே! என் மனைவியை உள்ளபடியே அன்புடன் விரும்பினேன்; தொடர்ந்து அன்புடன் அவளைக் காதலிக்க முடியவில்லை. அதற்காக அவளைக் கொன்றுவிட்டேன்' என்றான். எத்துணைக் கொடுமை! அரசியலிலும் இதுதான்.

ஆனால் சான்றோரின் மேலான அன்பு ஒருகாலும் பொறாமை, கசப்பு, வெறுப்புணர்ச்சி, வன்மம், பகைமை இவை அனைத்தையும் கடந்து கொலை செய்தல் என்னும் அளவுக்கு மாறிடும் என்று கற்பனை செய்யக் கூட முடியாத ஒன்றாகும். மானிட வாழ்வில் ஏற்படும் எல்லாச் சிக்கல்களையும் தீர்ப்பது ஒன்றே ஒன்று அன்புதான்். வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியேனும் அன்பினால் ஆகாததென ஒன்றும் கிடையாது.

அன்புமிக்க தொழிலாளி ஒருவன் தன் ஊதியத்திற்கான பணியைவிட மேலும் பணி செய்வான்; அதே போன்று வேலை வாங்கும் முதலாளியும் அன்புள்ளம் கொண்டவராக இருந்தாரே யானால் வேலையைச் செய்து அதற்கான கூலியை - ஊதியத்தைக் கேட்கும்போது, தொழிலாளி கேட்கும் தொகையைவிட அதிக மாகவே கொடுப்பார். அவர்களுக்கிடையே தகராறு ஏதும் இருக்காது. மற்றவர்களைவிடத் தொழிலாளியும் கூடுதலாக வேலை செய்வான் முதலாளியும் கூடுதலாக ஊதியம் கொடுப்பார். அதுதான் அன்பின்பாற்பட்டவரிடையே காணப்படும் ஒப்பரும் உயர்குணம் - அருஞ்செயல்!

இத்தகு அன்புப் பரிமாற்றம் வாணிக உலகில் பார்க்க முடியுமா? பார்க்கக் கூடாதா? வாணிக உலகிலும் இத்தகு அன்புப் பிணைப்பு, உறவு, தொழிலாளர் - முதலாளர் இடையே இருக்குமேயானால் நீங்காத ஏழைமை கொண்ட தொழிலாளர் நசுக்கப்படல் நடவாது; நடப்பது தொடராது!

உயிர்ப்பான அன்பியல்பு மாந்தருள் வந்துறையும்போது, அவர்கள் உள்ளே நிலைத்துவிட்ட தடுமாற்றம் ஆளுமை உணர்வு அத்தனையும் வெளியேறிவிடும். இயேசுவின் அன்பு மட்டுமே அவர்கள் அகத்தில் நிறைந்திருக்கும்; பின்பு ஆண்டவரின் அன்புத் திருப்பணிக்குச் சமமான பணிகளே நடைபெறும் மாந்தர் மூலமாக!

எபேசியார் 5:2 “கிறித்து நமக்காக தம்மைத் தேவனுக்கு நறுமணமான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக் கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்ததுபோல் நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்".

மேலே கூறப்பட்ட உரைபோல், 'அன்பிலே நடந்து கொள்ளுங்கள்' என்றால் என்ன பொருள்? ஏதோ அன்பு எனும் பாதை இருப்பது போலவும் அதிலே நாம் நடப்பது என்றா பொருள் கொள்வது? இல்லவே இல்லை?

'நடப்பது' என்பது காலால் நடப்பது என்பதல்ல. “வாழ்ந்து காட்டுதல்" "நடத்தையால் அன்பினைக் காட்டுதல்” என்று பொருள் கொள்வதுதான் சரியானது. எடுத்துக்காட்டாக ஒரு வாணிகம் செய்பவர் தன்னைப்போன்ற வாணிகரிடமோ நுகர்வோரிடமோ செய்யும் வாணிகம் அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதுதான்்!

கடவுள் எப்படி மாந்தர் தம்மை நடத்துகின்றரோ அதேபோல் தான் நாமும் மற்றவரை நடத்தவேண்டும். புலனுக்கு உட்பட்ட அறிவு நம்மை அதன் அடிமையாக்கி வைத்திருக்கிறது.

இன்று மாந்தராகிய நாம் பெற்றுள்ள அறிவு பொதுவாக, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கற்றுத் தரப்பட்டவற்றினால் பெற்ற அறிவுதான். அதுவும்கூட நம் புலன்கள் ஐந்தின் மூலமாகப் பெறப்பட்டதுதான். அதாவது கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களின் வாயிலாகப் பெற்ற கல்வி அறிவுதான்! நமது உடல் ஓர் அரிய ஆய்வுகூடம், அறிவு நாம் செய்யும் செயற் பயிற்சியின் மூலம் பெறப்படுவதேயாம்.

வெறும் புலனறிவு, உயிர் மெய்ம்மையை ஆவியின் ஆற்றலை அல்லது ஆன்மாவின் மதிப்பினை அறியாது. அறிந்தும் புலனறிவின் இடத்தை அன்பு பெற வைத்ததில்லை நாம். அன்பினை நாம் நமக்குத் தேவையானபோது மட்டுமே குழந்தை தேவைப்படும்போது பொம்மை ஒன்றுடன் ஆடுவது போன்று அன்பினை ஒரு கைப்பாவையாகக் கொண்டு விளையாடுகிறோம். எதுவும் முடியவில்லை என்றால் கடைசியாக அன்பினைக் கைகொள்ள முனைகிறோம்.

அப்படிக் கூடாது. புலனறிவுக்கு அப்பாற்பட்டு உள்ள அன்பினைப் புலனறிவின் இடத்தில் கொண்டு வந்திட வேண்டிய - நேரம் நமக்கு வந்துவிட்டது.

அன்பு நெறியினைச் சமூகம் எப்பாடுபட்டேனும் - மட்டு மீறிய முயற்சியால் தகர்த்தெறியப் பார்க்கிறது. நாட்டில் ஒழுங்-கின்மையும் அமைதிக் கேடும் இனி தலைவிரித்து ஆடுகிறது; ஆடப் போகிறது. தறுதலை ஆட்சி நடத்தப் போகிறது.

ஒழுங்கின்மை என்பது என்ன? எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதத் தன்னலம். தன்னலம் இருக்குமிடத்தில் இறைமை இருக்காது. அதன் விளைவு என்ன? மனிதர் தாமே தங்கள் வாழ்வில் வந்துற்ற அனைத்துச் சிக்கல்களைச் சிந்திக்காமல் தீர்க்க முனைந்துவிட்டனர். நம் சிக்கல்களைப் பண்பாளரிடம் விட்டு விடுவோம் என்பதனை மறந்தனர். அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னலம் மேலோங்கிய ஒழுங்கற்றவனாக ஆகி விட்டான்.

தன்னலம் நம்மில் தலைதூக்கி நிற்கையில்
மன்னலம் மாய்ந்து விடும்.