அன்பு வெள்ளம்/அன்பு என்ன

அன்பு என்ன செய்யும் ?

னக்குத் தெரிந்த ஒருவர், ஒருநாள் காலை, அன்பினைப் பற்றிய ஒலிப்பரப்பு நிகழ்ச்சியினை வானொலியின் பக்கத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டுவிட்டு, "வானொலியில் சொல்லப்பட்டது போன்ற அன்புடன் நானும் எனது அலுவலகத்தில் நடந்து கொண்டேன் என்றால் என்ன ஆகும் தெரியுமா?" என்று தன் மனைவியிடம் கேட்டார் அவர்.

"நீங்கள் செவியுற்ற அந்த வகையான அன்பினைத்தான்் பின்பற்றிப் பாருங்களேன்" என்றார் அவரின் மனைவி!

"அன்போடு ஒழுகுவதிலோ பழகுவதிலோ முற்பட்டால் அதற்கான துணிவும் இருக்க வேண்டும். துணிவுக்கே எதிரான - கோழையான நான் அன்பு வழி நடந்தால் பிறகு என் நிலை?” என்று உரைத்தார் கணவர். உடனே அவரது மனைவி 1 யோவான் 4 : 18 'அன்பிலே அச்சமில்லை; முழு அன்பு அச்சத்தைப் புறம்பே தள்ளும்' என்று மேற்கொள் காட்டினார்.

உண்மைதான், அறிவேன், எனக்காக நாள்தோறும் வேண்டுதல் செய்து வந்தால், நான் அன்பினைக் கடவுளிடமிருந்து பெறுகின்ற நல்வாய்ப்புப் பெறுவேன்! உணர்கிறேன் - உலகிலேயே அன்புதான்் மகத்தான் ஒன்று என்று தன் மனைவியிடம் சொன்னார் கணவர் - வானொலியைக் கேட்டு விட்டு உரையாடியவர்.

சில நாள்கள் கழிந்தன; ஒரு நாள், தன் கணவனைப் பார்த்து "அத்தான்! நீங்கள் சொன்னபடியே அன்பு நெறியில் அன்பாக அதுவும் இயேசு ஆண்டவரிடம் இருந்த அன்பினைப் போன்றே மன்னுயிர் அன்பினில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டிரா?" என்று பணிவுடன் கேட்டாள்.

"சொல்ல மறந்தேனே! எனக்காக நீ செய்த தொழுகை வீண்போகவில்லை. என்னை முழுக்க முழுக்க அன்புள்ளவனாக மாற்றிவிட்டது உன் வேண்டுதல். உன் வேண்டுதல் கேட்கப் பட்டது. என் உள்ளமும் அதில் சேர்க்கப்பட்டது. இயேசு தமது அன்பினை என் நெஞ்சத்தில் பொழிந்தார். நான் அன்போடு நடக்கிறேன். அதற்கு எடுத்துக்காட்டாக, என் அலுவலகத்தில் இருப்பவர் ஒருவர், 'உங்களில் ஏதோ ஒரு மாற்றத்ததைக் காண்கிறேன். உங்களின் அகம்புறம் இரண்டும் முன்போலன்றி, அன்பின் வெளிப்பாடாகத் தெரிகிறதே!' என்று கேட்டார். இது கேட்டுத் திகைத்துப் போனேன்" என்றார் தன் மனைவியிடம்.

இப்போது அந்த மனிதர் உள்ளபடியே இயேசு காட்டிய அன்பினில் திகழ்ந்தார்.

உண்மைதான்். அன்பு, அலுவலகத்தில் உள்ளவரையும் மாற்றும், இல்லத்தையும் மாற்றும்; முன்னேற்றும். நம் வாழ்க்கையினையும் அன்புப் பணியில் சேர்க்கும்; நல்வழியில் நாட்டும் என்பது முற்றிலும் உண்மை.

மெய்ப்பொருளான கடவுள், இயேசுவில் அன்பாக இருந்தது போன்று இயேசு நம்மில் அன்பாக இருப்பதனையும் கடவுள், இயேசுவில் அன்பர்க் இருந்தது போன்றே நம்மிலும் அன்பாக இருப்பதனையும் சற்றே நமது உள்ளம் நினைவு கூர்ந்திடும் போதும், நம் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்திடும் போதும், நமது வாழ்க்கைதான்் எத்தனை இனிதாகிறது! யோவான் 17:23 "என்னை நீர் அனுப்பினதையும் நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பாயிருக் கிறதையும் உலகம் அறியும் படிக்கும் நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்".

எந்தை கடவுள், இயேசுவை அன்புடன் விரும்பியது போல நம்மையும் அன்பாக விரும்புவாரேயானால் அவர் நம்மை ஒரு போதும் கைவிடார்! குழந்தையை ஈன்றெடுத்த தாய் இமை கொட்டாது காப்பாது போல, நம்மையும் அந்த எல்லையற்ற அறிவு படைத்த இறை காத்திடும் என்பதைச் சிந்தையில் கொள்ள வேண்டும்.

"எந்தையே! நீவிர் என்னைக் கனிந்த அன்புடன் விரும்பு வதற்காக என்றென்றும் செய்ந்நன்றியுடன் இருப்பேன். எங்குச் சென்றிடினும் எதனை எண்ணிடினும் எதைச் செய்திடினும் பேசிடினும் நீவிரும் நின் மைந்தரான இயேசுவும் என்னை அன்பாக விரும்புவது போலவே எல்லோரையும் அன்பாக விரும்புவேன்" என்று நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து சொல்வோமாக.

கிறித்தவர் திருமறை நூலை நாம் நன்கு படித்துணர்ந்தால் தெரியும் ஒரு வியப்பதிர்ச்சி ஊட்டும் செய்தி.

கிரேக்க மொழியில் (Doulos) 'தௌலசு' என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் (Servant) ஊழியக்காரன்’ என்று பொருள் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் சொல்லாக்கத்தை, எந்த மொழிப் பெயர்ப் பாளரும் ஒர் ஊழியக்காரன் அல்லது 'ஒரு குடும்பத்தின் அடிமை' என்னும் பொருளில் மொழிபெயர்க்கப்பட்டதனை மேலோட்ட மாகக் கூட சரி என்று இசைந்து ஏற்றுக் கொண்டு நிறைவு பெறமாட்டார்.

அதற்கு என்ன காரணம் என்றால், திருமறை அச் சொல்லுக்கு வேறு பொருளைச் சொல்கிறது - "இயேசு கிறித்துவின் அன்புப் பணியாற்றும் மிகச் சிறியன்' 'இயேசு கிறித்துவின் நெறியில் பணி செய்யும் அன்பு இளையன்' இன்னும் சொல்லப்போனால் "இயேசுவின் அன்புக்கு அடிமை” என்றே சொல்கிறது.

திருத்துதர் பவுலின் கூற்றுப்படி, "கடையன்", "மிகச்சிறியன்", "அன்புக்கு அடிமை", "அன்படியன்" என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்தச் சொல் தூய பவுலுக்கு மிக பிடித்தமான விருப்பமான - அடை மொழிப்பெயர் - புனைபெயர், சிறப்புப் பெயர், பண்புப் பெயர் ஆகும். ஏனெனில் இயேசுவின் அன்புக்கு, பவுல், அடிமையாகிவிட்டார். ஆகவே, 'இயேசுவின் அன்புக்கு அடிமை' என்பதிலே காண்கின்ற - பெறுகின்ற - அடைகின்ற இனிமை - பெருமை அளப்பரிது என்று அறியக் கிடக்கிறது.

ஊழியக்காரர்களையும் ஏன் பிள்ளைகளையும் கூட எப் போதும் நம்பிக்கைக்குரியவராக எண்ணிவிட முடியாது. ஆனால் அன்புக்கு அடிமையாகிவிட்ட ஒருவரை எப்போதும் எந்த அளவுக்கும் நம்பிடலாம் - நம்பிக்கைக்குரியவராகக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட கருத்தில்-உண்மையில் அறைகூவல் நம்மை - நம் உள்ளத்தைக் கூவி அழைப்பதாகக் கொண்டு நாம், இயேசு கிறித்துவுக்கு - இயேசுவின் அன்புக்கு அடிமையாகிவிடலாம்.

"என் ஆண்டவரே! என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் வகுத்தளித்துக் காட்டிய புதுவகையான அன்புக்கு என்னை அடிமையாக்கிக் கொள்ளுங்கள்" என்றெல்லாம் நாம் நம் குரலால் வேண்டுவதைவிட, நாமே நம்மை இயேசு கிறித்துவின் அன்புக்கு அடிமையாகிவிடச் செய்யும் அளவிற்கு, இயேசுவின் புதுவகையான அன்பு என்னை ஆட்கொண்டு விட்டது.

“எத்தகைய ஈகம் ஆயினும் மனம் உவந்து செய்யவும், எத்தகு வன்முறை நிலவும் இடமாயினும் அங்கே சென்று பணி யாற்றவும் நான் என்னைப் பக்குவப்படுத்திக் கொண்டேன்; உமது அன்பு என்னைத் துண்டுகிறது; என்னை ஊக்குவிக்கிறது - எதற்காக?

ஒப்பில்லாததாக இருந்த அதன் உயர் பண்பை இழந்த இன்றைய உலகை - மண்டலத்தை மீட்கும் ஒப்பரும் பணியாற்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இயேசுவே உம்மோடு என்னையும் இணைத்துக் கொண்டு பணியாற்றுவதற்காக உம்மை வேண்டு கிறேன்' என்று இயேசுவை நோக்கி உளமார வேண்டுதல் செய்யும் முன்னதாக, இயேசுவின் அன்பு நம்மைக் கவர்ந்து விட்டது. அவர் அன்புக்கு நம்மை அடிமையாக்கிவிட்டது.

அன்புடையார் எல்லாம் உடையார், அருளிரக்கம்
ஒன்றுடையார் கண்ணே உலகு.