அன்பு வெள்ளம்/அன்பெனும் அறக்கட்டளை
அன்பெனும் அறக்கட்டளை
முதல் அல்லது பழைய உடன்படிக்கையில் பலப்பல அறக் கட்டளைகள் இருந்தன; அந் நாளில் செய்து கொண்ட பழைய உடன்பாட்டின் கீழ் வந்த மக்கள் பல்வேறு சட்டங்களின்படிதான் வாழ்ந்திட வைத்தன. அதன் கீழ்ப்படிந்து நடக்கவோ, செய்யவோ தக்க ஆற்றல் காணப்படவில்லை அம் மக்களிடையே!
இந்தப் புதிய உடன்படிக்கையிலோ ஒரே அறக்கட்டளை தான்; அஃதும் ஒரே ஒரு சொல்தான் - அச் சொல் - 'அன்பு' என்பதுதான்! அந்தச் சட்டம்தான் மனித வாழ்க்கையின் பலப்பல கட்டங்களிலும் தடுத்தாட்கொள்வது. கடவுளின் இயற்கையான ஆற்றல் நம்மிலும் வந்துற்றிருப்பதால், நாம் அன்பின் வழி நடப்பதற்கான திறன் அளிக்கிறது.
உரோமர் 13:10 "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு அறக்கட்டளையின் நிறைவேறுதலாக யிருக்கிறது” இயேசு கிறித்து இந்தப் புதிய அறக்கட்டளையை வலியுறுத்திக் கூறுகிறார்.
யோவான் 15:9:11 "தந்தை என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில், அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்து இருங்கள்".
"நான் என் தந்தையின் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போலவே, நீங்களும் என் கற்பனைகளைக் கைக் கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்”.
"என்னுடைய அன்பு உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்படியும் இவற்றை உங்களுக்குச் சொன்னேன்".’
அன்பில் வாழ்ந்து வருபவர், அன்றாட வாழ்வில் அனைத்திலும் அன்பினைக் கடைபிடித்து ஒழுகுவார்களேயானால் அவர்கள், பண்பாளர்களின் மகிழச்சியில் கொண்டு போய்ச்சேர்க்கப்படுவர். மன்பதையின் மகிழச்சி அவர்களில் நிறைவேற்றப்படும்.
கடவுள் நம்மில் அன்பு கொண்டது போலே நாமும் ஒருவரில் மற்றொருவர் அன்பு கூர்ந்திடக் கடமைப்பட்டுள்ளோம். இந்த முறையினைக் கடைப்பிடிப்பவர் யாராயினும் அவர் எந்தவிதத் தவறையும் எண்ணவும் மாட்டார்; செய்யவும் மாட்டார் என்பது திண்ணம். அன்பு நெறியில் நடப்பவர் - வாழ்பவர் தீவினை ஏதும் செய்திடார்!
அன்பினை விட்டு, அன்பு நெறியினை விட்டுவிலகி வைக்கும் ஒவ்வோர் அடியும் பண்பாளரின் தோழமையையும் இன்பத்தினையும் விடுத்து விலகிப் போகும் பாதையில் எடுத்து வைக்கும் அடியாகும் என்பது வருந்தற்குரிய செய்தியாகும். நெஞ்சில் நிறுத்திட வேண்டிய செய்தியாகும்.
மாந்தர் நமக்கு ஏற்படும் இன்னல் சிக்கல் அனைத்தினையும் தீர்க்கத் தக்கது அன்பு என்பதைனையும், ஒவ்வோர் இடறினைத் தீர்க்கத் தக்கது அன்புதான் என்பதனையும் நம்பிக்கை கொண்டிட நம்மிலே பலருக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது என்பதை எண்ணும் போது வியப்பாயிருக்கிறது.
அன்பெனும் வாழ்வின் அறக்கட்டளை ஒன்றே
துன் பெலாம் தோற்கடிக்கும்