அன்பு வெள்ளம்/மயக்குறு மக்கள்
மயக்குறு மக்கள் வழிகாட்டுபவர்
ஒரு சிறு குழந்தை பெரியவர்களை இயேசுவின் அன்பிற்கு உரியவர்கள் ஆக்குகிறது. உள்ளபடியே இயேசுவின் அன்பின் சூழலில் வளர்ந்துவரும் குழந்தைக்குச் சண்டையைப் பற்றியோ, கசப்புணர்ச்சி - வெறுப்புணர்ச்சியோ தெரியாது.
இயேசுவின் அன்புச் சூழலில் தழைத்துவரும் குடும்பம் ஒன்றில் ஒரு சிறு குழந்தை அந்தக் குழந்தையின் தாய்-தந்தை இருவரிடையே சண்டையோ சச்சரவோ ஏற்பட்டதில்லை; எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தக் குழந்தையின் தந்தை தாயின் இடையே கடுமையான சொற்கள் வெளிப்பட்டது கிடையாது. அப்படிப்பட்ட தாயும் தந்தையும் அந்தக் குழந்தையின் அத்தை வீட்டுச் சென்றார்கள், ஒருவாரம் இருந்துவிட்டு வந்திட! அங்கே அந்தக் குழந்தையை விட்டு விட்டு, தொலைவிலிருந்து நகரம் ஒன்றினுக்குச் சென்றார்கள் தாயும் தந்தையும்.
ஒரு நாள் அந்தக் குழந்தையின் அம்மான், அதன் அத்தையைத் தடித்த சொற்களால் திட்டிவிட்டார். அதனைக் கேட்ட அந்தக் குழந்தை 'ஓ' என்று அழுது விட்டது. உடனே அழுகின்ற குழந்தையைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு, செல்லமாக, 'அமிழ்து என்ன நேர்ந்தது? ஏன் அழுகிறாய்?' என்று கேட்டார் மாமன். "மாமா! நீங்கள் அத்தையை அன்புடன் விரும்புகிறீர்கள் என்று எண்ணினேன்” என்று தேம்பித் தேம்பி அழுதது அந்தக் குழந்தை!
"ஆமாம்! செல்வமே உள்ளபடியே அத்தையிடம் அன்புடன் தான் இருக்கிறேன்” என்றார் மாமன்.
"இல்லை! ஒருபோதும் இல்லை! என் அம்மாவை அப்பா அன்புடன் விரும்புவது போல், அப்பாவை அம்மா அன்புடன் விரும்புவது போல் நீங்கள் அத்தையை அன்புடன் விரும்புவதில்லை. அப்படி நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டிருந்தால் சற்றுமுன் கெட்ட சொற்களால் அத்தையைத் திட்டியிருப்பீர்களா?" என்று கேட்டது குழந்தை.
தன் தோள் மீது அமர்ந்திருந்த குழந்தை முகத்தைப் பார்த்தார் குழந்தையின் அம்மான்; மறுகணம் தன் மனைவியின் முகத்தைப் பார்த்து, "உன்னைத்தான்! சற்றுக் கேளேன்! நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய மேலான ஒன்றினைக் கைவிட்டு விட்டோமோ இல்லையா?" என்று கேட்டார்!
இதிலிருந்து நாம் என்ன காண்கிறோம்? எவர் ஒருவர் தன் மனைவியை அன்புடன் நேசிக்கத் தவறுகிறாரோ அவர், அவருடைய வாழ்க்கையைத் தரும் மிக்க அழகிய ஒன்றினைப் பெற்றிடத் தவறுகிறார் இல்லையா!
ஒருநாள் 'நற்செய்தி' ஒலிபரப்பினைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், தன் தாயைப் பார்த்து "அம்மா, நம் வீட்டிலும் இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பினை நாம் பெற்றோம் என்றால், நாம் மகிழ்ச்சியோடு இருக்கலாம் இல்லையா?” என்று கேட்டான்.
அந்தத் தாய், குழந்தை கேட்டதை நினைவிற் கொண்டாள்; இரவு தம் கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன், சொல்லி விளக்கினாள். அது கேட்ட கணவர், ஞாயிற்றுக் கிழமை காலை இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பினை பற்றிய சொற் பொழிவினைக் கேட்டேன். அதனையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நாமும் இயேசுவின் அன்பினைப் பின்பற்றி அவ் அன்பினில் நாம் இருவரும் வாழ்ந்து வந்தால் என்ன? என்று மறுமொழி உரைத்தார்! நீங்கள் அப்படிச் சொன்னால், அதன்படி நடந்திட வாழ்ந்திடவே நான் விரும்புகிறேன் என்றாள். இது கேட்டு மகிழ்ந்தார் கணவர். உடனே, கணவனும் மனைவியும் சேர்ந்து, "நாம் இருவரும் சேர்ந்து அன்பில் இணைந்து வாழ்ந்திட இயேசுவை நம் நெஞ்சக் கதவினைத் திறந்து வைத்து அழைப்போம். அவர் அன்பினில் தழைப்போம். அந்த அன்பினில் வாழ்ந்து வருவோம்” என்று ஒருசேரச் சூளுரைத்தார்கள்.
அது கேட்ட அந்தச் சிறுவன், அம்மானின் இரு கைகளையும் சேர்த்து தன் மார்போடு அணைத்தபடி "இனி மேல் நாம் எல்லாம் இயேசுவின் அன்பில் அவர்கொண்ட அன்புக்குச் சமமான அன்பில் வாழ்ந்து மகிழ்வோம் அல்லவா மாமா?" என்று கேட்டான்.
"அப்படித்தான்” என்றார் மாமா.
நானிலத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்பினை ஒத்த அன்பினைப் பெறுதல் வேண்டும்; பெற்று அன்பு வழி வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கற்பிக்க வேண்டும். அந்தப் போதனையில் அவர்கள் அனைவரும் அன்பினைத் தம்மில் கொண்டு விளங்குபவராக வேண்டும். இல்லை என்றால், ஒருவர் மற்றொருவரிடையே சண்டையும் சச்சரவும் பிணக்கும் காழ்ப் புணர்ச்சியும் கொண்டவராகத் தான் இருப்பார்கள். எனவே, எல்லோரும் இடைவிடாமல் நாள்தோறும் இயேசுவைப் பின்பற்றி அவர் வெளிபடுத்திய அன்பினைத் தம்மில் கொண்டு வாழ்ந்திடல் வேண்டும்.