அப்பம் தின்ற முயல்/இரங்கூன் முயலும் யானை வேட்டையும்

10

இரங்கூன் முயலும்
யானை வேட்டையும்


நமது தமிழ் நாட்டுக்குக் கிழக்கே ஒருபெரிய கடல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கண்ணகி சிலை இருக்கும் கடற்கரைக்குக் காற்று வாங்கச் செல்கிறோம். அங்கே அலைமோதிக் கொண்டிருக்கும் கடலில் இறங்கிக் காலை நனைத்துக்கொண்டால் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. சில சிறுவர்கள் கடலுக்குள் இறங்கி அலைகளை எதிர்த்து நீந்திக் குளிப்பதைப் பார்க்கும் போது அவர்கள் அடையும் இன்பத்தை நாம் அளவிட்டுக் கூறமுடியாது.

இந்தக் கடலை நாம் வங்கக் கடல் என்று அழைக் கிறோம். இந்த வங்கக் கடலில் கப்பலில் ஏறிக் கிழக்கே சென்றால் ஆயிரம் கல் தொலைவில் இரங்கூன் என்ற நகர் உள்ளது. இரங்கூன் பர்மிய நாட்டின் தலைநகரமாகும்,

இரங்கூன் நகரிலிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் ஒரு குட்டி முயலுக்கு ஒரு முறை பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் அன்று அதன் அம்மா ஒரு பெரிய விருந்து வைத்தது. அந்த விருந்துக்கு வந்த பல முயல்கள் வகை வகையான இலைகளையும் குழைகளையும் பரிசாகக் கொண்டு வந்து கொடுத்தன. குட்டி முயலின் அம்மாவுக்கு ஏராளமான உறவினர்கள் இருந்ததால் பல பகுதிகளிலிருந்து முயல்கள் வந்து வாழ்த்துக் கூறின.

ஷான் நாட்டிலிருந்து வந்த சின்ன முயல் ஒன்று குட்டி முயலுடன் அன்பாகப் பழகியது. இரண்டும் நண்பர்களாகி விட்டன. விருந்தெல்லாம் முடிந்தபிறகு ஷான் நாட்டு முயல், குட்டி முயலைப் பார்த்து உங்கள் காடெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் வருகிறாயா என்று கேட்டது. குட்டி முயலும் அம்மாவிடம் ஒப்புதல் பெற்றுக் கொண்டு அந்த வெளியூர் முயலுடன் புறப்பட்டது.

காட்டுப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு இரண்டு முயல்களும் துள்ளிப் பாய்ந்து ஓடின. கால்வாய்களைக் கடக்க ஒரு தாவல். கரும்புத் தோட்டங்களின் இடையே ஒரு துள்ளல். நெல் வயல்களின் ஊடே ஒரு ஒட்டம். காட்டு மரங்களின் நடுவில் ஒரு ஆட்டம். புதர்களைத் தாண்டி ஒரு பாய்ச்சல். இப்படியாக அவை போட்ட ஆட்ட பாட்டங்களுக்கு அளவில்லை,

இரண்டு முயல்களும் போட்டிபோட்டுக் கொண்டு பாய்ந்த போது, ஒரு மரத்தடியில் படுத்திருந்த ஒரு காட்டானை மீது விழுந்தன. சினத்தோடு விழித்தெழுந்த காட்டானை தன் துதிக்கையை நீட்டி அவற்றை வளைத்துப் பிடித்து வீசி எறிந்தது. விட்டெறிந்த பந்துகளைப் போல் அந்த முயல் குட்டிகள் இரண்டும் ஒரு தேக்க மரத்தின் அடியில் மோதி விழுந் தன. உடம்பெல்லாம் ஒரே வலி!

இன்னொருமுறை என் தூக்கத்தைக் கெடுத்தால் உங்களை வானுலகத்திற்கே அனுப்பி விடுவேன் என்று அந்தக் காட்டானை பிளிறியது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று அந்தக் குட்டி முயல்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்தன.

ஒரு கால்வாய்க் கரையில் இருந்த மாமரத்தின் அடியில் இரண்டு முயல்குட்டிகளும் இளைப்பாறுவதற் காகத் தங்கின, அப்போது ஷான் நாட்டுச் சின்ன முயல், "இந்த யானை தூக்கி எறிந்ததில் என் முதுகெல்லாம் வலிக்கிறது?" என்றது.

'எனக்கு வயிற்றில் நல்ல அடி. இன்னும் வலிக் கிறது?" என்றது குட்டி முயல்.

"இந்த யானைக்கு ஒரு பாடம்காட்ட வேண்டும். நீ என்ன சொல்லுகிறாய்?"என்று கேட்டது ஷான் நாட்டுச் சின்னமுயல். -

"அது எவ்வளவு பெரிய விலங்கு. அதை நாம் என்ன செய்யமுடியும்?" என்று கூறியது குட்டிமுயல். இவ்வாறு பேசிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டன. வழியில் வெட்டிக் கிடந்த ஒரு பள்ளத்தைக் கண்டன. இரண்டும் ஒரே தாவலில் அந்தப் பள்ளத்தைக் கடந்தன. -

"கொஞ்சம் நில். இப்படிச் செய்யலாமா?" என்று ஷான் முயல் கேட்டது.

"என்ன செய்யலாம்?" என்று கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டே குட்டி முயல் கேட்டது.

"இந்தப் பள்ளத்தில் அந்தக் காட்டானையை விழச் செய்யவேண்டும். அது மேலே ஏற முடியாமல் தத்தளிக்கும் போது எங்களை வீசி எறிந்தாயே இப் போது எப்படி இருக்கிறது? என்று கேட்க வேண்டும் என்று சொல்லியது ஷான் நாட்டு முயல்,

"அது எப்படிப் பள்ளத்தில் வந்துவிழும். பள்ளத்தைக் கண்டால் ஒதுங்கித்தானே போகும்" என்று சொல்லியது இரங்கூன் முயல்,

"பள்ளம் இங்கே இருப்பது அதற்குத் தெரியக்கூடாது. ஆனால் அது இந்த வழியாக வரவேண்டும். கண்ணைத் திறந்து கொண்டே அது பள்ளத்தில் விழ வேண்டும்" என்றது ஷான் முயல்.

"பாவம் விழுந்து அடிபட்டால் அதற்கு உடம்பெல்லாம் வலிக்குமே!’ என்று இரக்கப் பட்டது இரங்கூன் முயல்.

"நமக்கு வலிக்கிற மாதிரி அதற்கும் வலிக்க வேண்டும். அப்போது தான் அதற்குப் புத்தி வரும்!?? என்று சினத்துடன் கூறியது ஷான் முயல்.

ஷான் நாட்டு முயலின் கருத்துப்படி இரண்டு முயல் குட்டிகளும் செயல்புரிந்தன.

பக்கத்துக் கரும்புத் தோட்டத்தில் வெட்டிக் கிடந்த கரும்புகளை ஒவ்வொன்றாகக் கெளவி இழுத்து வந்தன. பள்ளத்தில் குறுக்கில் இருபது கரும்புகளை வரிசையாக அடுக்கின. அதை இலை தழைகளால் மூடின.

பள்ளத்தின் எதிரில் கரும்புகளைக் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு வைத்தன. அந்தக் கரும்புக் குவியலிலிருந்து பள்ளத்தின் குறுக்காக, வரிசையாகக் கரும்பைப் போட்டன. பள்ளம் இருந்த இடத்திலிருந்து

பத்து அடிக்கு ஒரு கரும்பாக, யானை இருக்கும் இடம் வரையில் போட்டுக் கொண்டே சென்றன.

யானை பார்க்குமுன் புதர் மறைவில் ஓடி மறைந்து கொண்டன.

காட்டில் உலாவிக் கொண்டிருந்த யானையின் கண்ணில் தரையில் கிடந்த கரும்பு தெரிந்தது.உடனே அது ஓடி வந்து அதை எடுத்தது. துதிக்கையால் வளைத்து அப்படியே வாய்க்குள் செலுத்தியது. கடித்துக் கடித்துத் தின்றது.

சற்று தள்ளிக் கிடந்த கரும்பைப் பார்த்தது. ஒடி வந்து இழுத்துக் கடித்துத் தின்றது.

இன்னும் சற்று தொலைவில் கிடந்த கரும்பை இழுத்துக் கடித்தது.

இப்படியாக ஒவ்வொரு கரும்பாகத் தின்று கொண்டே, பள்ளத்தின் அருகில் வந்து விட்டது. பள்ளத்தின் எதிரில் குவியலாகக் கிடந்த கரும்புகளைப் பார்த்தவுடன் யானை விரைவாக நடந்தது. அப்படி நடந்து செல்லும்போது, பள்ளத்தின் வழியாகச் சென்றது. பள்ளத்தின் குறுக்காகப் பரப்பியிருந்த கரும்பு களின் மேல் அது காலடி யெடுத்து வைத்தவுடன், யானையின் பளுவைத் தாங்காமல், கரும்புகள் ஒடிந்து யானை பள்ளத்திற்குள் விழுந்து விட்டது.

பள்ளம் ஒடுக்கமாகவும் ஆழமாகவும் இருந்ததால், அந்தக் காட்டு யானையால் அசையவோ, நகரவோ, மேலேறவோ முடியவில்லை.

விழுந்த அதிர்ச்சியில் அது பிளிறிய பிளிறல் காடெங்கும் எதிரொலித்தது.

"எங்களைத் தூக்கி எறிந்து துன்பப் படுத்தினாயே, இப்போது எப்படியிருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே ஷான் நாட்டு முயல் வெளியே வந்தது.

"பாவம் யானையாரை இப்போது யார் காப்பாற்றுவார்கள்!" என்று கேட்டது இரங்கூன் முயல்.

அப்போது ஏதோ புதுவிதமான ஒலி கேட்டது இரண்டு முயல்குட்டிகளும் திடுக்கிட்டுத் திரும்பின.

இரண்டு சரக்குப் பேருந்துகளும் ஒரு சிறிய உந்தும் அந்தக் காட்டுக்குள் வந்து நின்றன. அவற்றிலிருந்து பதினைந்து மனிதர்கள் இறங்கினார்கள்.

அவர்களில் ஒருவன் யானை பள்ளத்தில் விழுந்து தத்தளிப்பதைப் பார்த்து விட்டான்.

"தலைவரே, யானை பிடிக்க வந்தோம். இதோ பிடிபட்டே யானை கிடைத்திருக்கிறது"
என்றான்.

"நம் வேலை எளிதாகி விட்டது" என்று கூறிக் கொண்டே தலைவர் யானையை நோக்கி நடந்தார்.

பிறகு அவருடைய கட்டளைப்படி சில ஆட்கள் யானையைக் கயிற்றால் கட்டினார்கள். சரக்குப் பேருந்து ஒன்றின் மீது இருந்த சுழல் தூக்கியால் யானையை அப்படியே மேலே தூக்கினார்கள். சுழல்

தூக்கியை இயக்கினார்கள். அது அப்படியே யானையைத் தூக்கி மற்றொரு பேருந்தின் மீது வைத்து விட்டது.

யானை அசையாதபடி பேருந்துடன் சேர்த்துப் பல கயிறுகளைக் கொண்டு கட்டினார்கள். பிறகு அவர்கள் வேறு யானைகள் ஏதாவது அகப்படுமா என்று காட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.

யானை பள்ளத்தில் விழுந்ததிலிருந்து இரங்கூன் முயலுக்குத் துன்பமாய் இருந்தது. ஷான் முயல் பேச்சைக் கேட்டுத் தான் தவறான செயலைச் செய்வதாக மனத்தில் உறுத்தியது. இப்போது மனிதர்கள் அதைக் கட்டித் தூக்கிக் கொண்டு போகப் போவதை எண்ணிய போது அதற்கு மனமே உடைந்து போய் விடும் போல் இருந்தது.

ஷான் முயல் யானையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரங்கூன் முயல் அதற்குத் தெரியாமல் அங்கிருந்து நழுவியது. சிறிது தொலைவில் சுண்டெலிகள் இருக்கும் பகுதிக்குச் சென்றது.

சுண்டெலிகளின் தலைவன் குட்டி முயலைக் கண்டவுடன் வெளியே வந்தது.

"குட்டி முயலே, உன் பிறந்தநாள் விருந்துக்கு வர முடியவில்லை. உன் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டதாகச் சொல். என் மனைவிக்கு உடல் நலம் இல்லை’ என்று சுண்டெலித்தலைவன் கூறியது,

"எலியண்ணா, நான் இப்போது உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்."என்று குட்டி முயல் கூறியது.

நடந்த கதையைக் கூறி யானையைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்று குட்டி முயல் சுண்டெலியை மன்றாடிக் கேட்டது.

"உன்னைப் போல் எல்லாருக்கும் நன்மையே எண்ணுகின்ற மனம் எல்லாருக்கும் இருந்து விட்டால், இந்த உலகம் பொன்னுலகம் ஆகிவிடும்" என்றுகூறிய சுண்டெலி, அங்கு இருந்த நூறு எலிகளையும் அழைத்துக் கொண்டு முயலுடன் புறப்பட்டது.

நூறு எலிகளும் யானையைக் கட்டியிருந்த பேருந்தின் மேல் சரசரவென்று ஏறின. கயிறுகளை அங்கங்கே கடித்துக் குதறின. எல்லாக் கட்டுகளும் அவிழ்ந்தவுடன் பாய்ந்தோடித் தங்கள் இருப்பிடத்திற்குத் சென்று விட்டன.

கட்டுத் தளர்ந்தவுடன், யானை பேருந்தின் பக்க அடைப்புகளை ஒடித்துக் கொண்டு கீழே இறங்கியது. பிளிறிக் கொண்டு அங்கிருந்து ஓடியது.

காட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற யானை பிடிக்கும் வீரர்கள் திரும்பி வந்தார்கள்.

கயிறுகள் தூள் தூளாய் அறுந்து கிடப்பதையும் யானை தப்பியோடி விட்டதையும் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள்.

அவ்வளவு பலமான கட்டுக்களைக் குதறி எறிவது யானையால் முடியாது. ஏதோ தெய்வம் தான் வந்து இதைச் செய்திருக்க வேண்டும். அந்தத் தெய்வம் வனதேவதையாகக் கூட இருக்கலாம்.

வனதேவதைக்கு அன்பான யானையைத் தாங்கள் பிடித்தது அந்தத் தெய்வத்துக்குப் பிடிக்க வில்லை போலிருக்கிறது.

இந்தக் காட்டில் மேற்கொண்டு தங்கினால், தங்களுக்கு, வனதேவதையால் ஏதாவது கேடு வரும் என்று அஞ்சி உடனே புறப்பட்டுச் சென்று விட் டார்கள்.

குட்டி முயலுக்கு அப்போதுதான் மன அமைதி ஏற்பட்டது.



தமிழாலயம்
வெளியீடுகள்
நாரா நாச்சியப்பன் எழுதியவை

1.நாச்சியப்பன் பாடல்கள் 1 15-00

2..தாச்சிவப்பன் பாடல்கள் !! 15.00

3.மூன்று திங்களில் அச்சுத்தொழில் 10-00

4.புதுமுறை பஞ்சதந்திரக் கதைகள் 15-00

5.நாயகப் பெருமான் 4-00

6.ஏழாவது வாசல் 5-00

7.அசோகர் கதைகள் 4-00

8.பறவை தத்த பரிசு 4-00

9.மாயத்தை வென்ற மானவன் 5-00

10.அப்பம் தின்ற முயல் 5-00

11.தாவிப்பாயும் தங்கக் குதிரை 4-00

12.பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள் 5-00

13.குயில் ஒரு குற்றவாளி 5-00

14.பாசமுள்ள தாய்க்குட்டி 6-00

15.என்ன? ஏன்? எப்படி? 10-00

16.மன ஊஞ்சல் 25-00

17.குயிலும் சஞ்சீவிபர்வதத்தின் சாரலும் 5-00

18.நான்கு பார்வையில் பாரதிதாசன் 7-00

19.பாடுபாப்பா 4-00

20.கடவுள் பாட்டு 5-00


தமிழாலயம் 137, ஜானிஜான் கான் தெரு,

சென்னை-6000l4