அப்பம் தின்ற முயல்/சின்ன முயலும் சிங்க அரசனும்



9

சின்ன முயலும்
சிங்க அரசனும்


காவிரியாற்றங்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஓர் அரசாங்கம் நடந்தது. அந்த அரசாங்கத்தில் யார் மன்னராக இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?

எந்தக் காட்டு அரசாங்கத்திற்கும் மன்னராக இருக்கக் கூடிய தகுதி சிங்கம் ஒன்றுக்கே இருந்தது. அதுபோல் அந்தக் காட்டுக்கும் ஒரு சிங்கம்தான் அரசராக இருந்தது.

ஒரு நாள் இரவில் முழு நிலா தன் பால் ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்த அழகிய நிலவொளியில் காட்டின் நடுவில் ஒரு வெட்ட வெளியில் அரசவை கூடியது.

உயர்ந்த அரியணை ஒன்றில் சிங்கமாமன்னர் அமர்ந்திருந்தார். அருகில் கூரிய வாள் தக தகவென மின்ன அதை வாயில் பற்றியபடி படைத்தலைவர் புலியார் நின்றுகொண்டிருந்தார். பாராங்கல்லாலான இருக்கைகளில் அமைச்சர்கள் வீற்றிருந்தார்கள். திருநீறு பூசிய நெற்றியுடன் அமைச்சர் வேலனார் என்று சிறப்புப் பெயர் பெற்ற யானையாரும், பரிப்பெருமாள் என்று பெயர் பெற்ற குதிரையாரும், சாணக்கியனார் என்ற பெயருள்ள நரியாரும், தந்தியார் என்ற பெயர் உள்ள காட்டெருதும், அமைச்சர்களாக வீற்றிருக்க, வேட்டைநாய்கள், காட்டெருமைகள் ஆகிய படைவீரர்கள் சூழ்ந்திருக்க அந்த அரசாங்கம் கூடியிருந்தது.

காட்டுவிலங்குகளின் பாதுகாப்பு, குடியுரிமை, உணவு விதிகள் போன்ற பல இன்றியமையாத சட்டங்கள் பற்றி அங்கு ஆய்வு செய்யப்பட்டது.

சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதர் மறைவில் இருந்து ஒரு சின்ன முயல் இந்த அரசவை நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. அங்கு வீற்றிருந்த அமைச்சர்களின் பெருமிதமான தோற்றமும் அவர்கள் கணீரென்று பேசிய கருத்துரைகளும் அந்தச் சின்ன முயலின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டன.

அந்த அமைச்சர்களைப் பார்க்கப் பார்க்க தானும் ஓர் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை அந்த முயலின் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. சிங்க அரசரின் பக்கத்தில் ஓர் அமைச்சராக வீற்றிருந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று அது நினைத்துப் பார்த்தது.

சிங்கத்தைக் கண்டாலே முயல்களுக்கு உடம்பெல்லாம் வெடவெட என்று ஆடும். சிங்கம் தன் முன் கையால் ஓர் அறை அறைந்தால் ஒரு முயல் அப்படியே செத்துப்போய் விடும். ஆனால் இந்த முயல் குட்டிக்கோ சிங்கத்தின் பக்கத்தில் போய் அமைச்சராக இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது.

ஒரு நாள் வேட்டையாடி வயிறு புடைக்கத்தின்று விட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது சிங்க மன்னன். அப்போது அதன் எதிரே போய் தொபுக்கென்று குதித்தது சின்ன முயல். சிங்கம் நிமிர்ந்து பார்த்தது. மாமன்னரே வணக்கம் என்று சிங்கத்தின் பாதத்தைத் தொட்டு வணங்கியது சின்ன முயல்.

“அடே, குட்டிப்பயலே உனக்கு என்னால் என்ன ஆக வேண்டியிருக்கிறது. ஏன் கூழைக்கும்பிடு போடுகிறாய்?” என்று சிங்க மன்னன் கேட்டது.

“அரசே, இந்தச் சிறுவனின் விண்ணப்பம்ஒன்று. தாங்கள் செவிசாய்த்துக் கேட்க வேண்டும். ஒரு குட்டிப் பயலால் என்ன முடியும் என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. தாங்கள் என் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தால், என் வாழ்நாள் முழுவதும் என் உயிரும் உடலும் உங்களுக்கே ஒப்படைப்பேன்” என்று பணிவாகக் கூறியது சின்ன முயல்.

“உன் உயிரால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. உன் உடலோ என் ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூடப் பயனில்லை. நீ எனக்கு என்ன உதவி செய்து விடப்போகிறாய்? ஒன்றுமில்லை. இருந்தாலும் சரி, உன் விருப்பம் என்ன சொல்” என்று கேட்டது சிங்க மன்னன்.

“அரசே, சின்னவனின் ஆசை எல்லாம் தங்கள் அரசவையில் ஒர் அமைச்சனாக வீற்றிருக்க வேண்டும் என்பதுதான். இதைத் தாங்கள் மறுக்கக் கூடாது” என்றது முயல்.

சிங்கம் ஆவாவா என்று சிரித்தது. அதன் சிரிப்பொலி அந்தக் காடெங்கும் எதிரொலித்தது. சின்ன முயல் சிங்கத்தின் பதிலை எதிர்பார்த்து ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தது.

“பிடித்தால் ஒரு பிடி இருக்க மாட்டாய், உனக்கு அமைச்சர் பதவியா? யாருக்கு என்ன ஆசை இருக்க வேண்டும் என்ற கணக்கே இல்லாமல் போய் விட்டது” என்று கூறிய சிங்கம் முயலை உற்று நோக்கியது.

ஏக்கத்தோடும் பெருநம்பிக்கையோடும் நின்று கொண்டிருந்த சின்ன முயலின் தோற்றம் அதற்கு இரக்கத்தை உண்டாக்கியது.

“சின்னப் பயலே, உன் ஆசையை நிறைவேற்றுகிறேன். நாளை முதல் உன்னை அமைச்சனாக ஆக்குகிறேன். உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு புறா வீதம் சம்பளம் தருகிறேன்” என்றது சிங்கம்.

முயல் விழி, விழியென்று விழித்தது. எனக்கு எதற்குப் புறா என்று அது சிந்தித்தது.

உடனே கல கலவெனச் சிரித்த சிங்கம் “ஒவோ! நீ சைவம் அல்லவா? உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முட்டைக்கோசு சம்பளமாகத் தருகிறேன்?” என்று கூறியது.

முயலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சிங்கத்தின் காலடியைத்தொட்டு வணங்கி விடை பெற்றுக் கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடியது. அது தங்கியிருக்கும் குகைக்குச் சென்று அங்கிருந்த எல்லா முயல்களிடமும் “நான் அமைச்சனாகி விட்டேன் அரசர் ஆணையிட்டு விட்டார். நாளைமுதல் இந்தக் காட்டுக்கு நான் ஓர் அமைச்சன்” என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டது.

முதலில் அந்த முயல்கள் அதன் பேச்சை நம்ப வில்லை. ஆனால் அது நடந்த செய்திகளையெல்லாம் தொகுத்துக் கூறிய பொழுது, அந்த முயல்கள்

எல்லாம் நம்பின. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அந்தக் குகையின் எதிரில் அன்று நிலா விருந்து நடத்தின.

முயல் மறு நாள் காலை அரசவைக்குச் சென்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

அாசவை வேலையெல்லாம் முடிந்து கலையப்போகிற நேரம் ஒரு பூனைக் குட்டி ஓடி வந்தது. "அரசே, பக்கத்துக் காட்டுக்குப் போயிருந்தேன். அந்தக் காட்டரசன் நம் காட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான். அங்கே இதே பேச்சாய் இருக்கிறது. படை திரட்டுகிறார்கள். எப்போது பாய்ந்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை, எதற்கும் நாம் அணியமாக இருக்க வேண்டும்" என்று சொல்லி விட்டுச் சென்றது.

உடனே அவையில் இருந்த எல்லா விலங் களையும் போகச் சொல்லிவிட்டு அரசனும், அமைச்சர் களும் மட்டும் கமுக்கமாக இருந்து ஆலோசனை நடத்தினார்கள்,

படையெடுப்பை எப்படிச் சமாளிப்பது என்று ஒவ்வொரு அமைச்சனும் தம் தம் கருத்தை எடுத்துச் சொன்னார்கள்.

அமைச்சர் வேலனார் என்ற யானை, அரசே, எதிரிகளின் காட்டில் இருப்பவை அனைத்தும் வலுவில்லாத சிறு விலங்குகளே. அவைகளை நம் காட்டு

எல்லைக்குள்ளேயே வர விடாமல் தடுப்பதற்கு மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. நம் காட்டில் மொத்தம் முந்நூறு யானைகள் உள்ளன. இந்த முந்நூறு யானைகளையும் அடுத்த காட்டின் எல்லையிலேயே வரிசையாக நிறுத்தி வைத்தால் சின்னஞ் சிறிய விலங்குகள் தொலைவிலேயே பயந்து திரும்பி ஓடி விடும். மீறி வருபவற்றை நம் வீர யானைகள் துதிக்கையால் பற்றித் தூக்கி மரங்களில் அடித்து மோதிச் சின்னாபின்னமாக்கி விடும், மிக எளிதில் நாம் வெற்றி பெறலாம் " என்று கூறியது.

அடுத்த அமைச்சராகிய பரிப்பெருமாள் என்ற குதிரையார் தம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தம் கருத்தைக் கூறலானார்.

"மன்னருக்கு மன்னனே, மாவீரனே, சிங்க வேந்தே, உன் பொன் அடிக்கு வணக்கம். நம் காட்டில் உள்ள குதிரைகள் எண்ணிக்கை மொத்தம் 925 ஆகும். இவற்றில் சின்னஞ் சிறுசுகள், நோய் நொடி உற்றவை, நொண்டிகள் ஆகியவற்றைத் தள்ளி விட்டால் எண்ணுறுக்குக் குறையாமல் இருக்கின்றன. அத்தனை குதிரைகளும் போர்ப்பயிற்சி மிக்கவை. தாங்கள் உத்தரவிட்டால் இப்பொழுதே நான் சென்று எல்லாக் குதிரைகளையும் அழைத்துக் கொண்டு அடுத்த காட்டின் மீது படையெடுக்கிறேன். வெற்றி நமதே, விடை கொடுங்கள்" என்று கூறியது.

அடுத்து சாணக்கியனார் என்ற பெயருடைய அமைச்சர் நரியார் பேசத் தொடங்கினார்.

"அரசே, ஒரு பகைவன் போர் தொடுக்கத் திட்டம் தீட்டுகிறான் என்றால் ஏதோ அவனிடம் புதிய பலம் சேர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு நாளும் அடங்கிக் கிடந்த அடுத்த காட்டான், நம் மீது படையெடுக்கிறான் என்றால், அவனுக்கு யாரோ மறைமுகமாக உதவி செய் கிறார்கள் என்று பொருள். ஆகவே, நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தக் காட்டுக்குள் முதலில் நம் ஒற்றர்களை அனுப்பி உளவு பார்த்து நிலைமைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். படையெடுப்பதற்கு முடிவு செய்த காரணம் தெரிந்தால் அதற்குத் தகுந்த தந்திரங் களைக் கையாண்டு எதிரியை எளிதாக முறியடிக்கலாம்."

அடுத்து நந்தியார் என்ற அமைச்சர் காட்டெருது தன் கருத்தைச் சொல்லியது.

"மன்னர் பிரான் அவர்களே, நரியார் சொன்ன ஆலோசனை வரவேற்கத் தக்கதே. ஆனால் நாம் உளவு பார்த்து மறுபடியும் ஆலோசனை செய்து நட. வடிக்கை எடுப்பதற்குச் சிறிது காலம் செல்லும். அதற்குள் எதிரி படையெடுத்து வந்து விட்டால் அதைச் சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஆகவே உடனடியாக நம் காட்டில் உள்ள

வலிவு மிக்க விலங்குகள் அனைத்தையும் திரட்டிப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். எதிரி எந்த நேரத்தில் நுழைந்தாலும் விரட்டியடிக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.’’

நான்கு அமைச்சர்களும் கூறிய கருத்துக்களைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிந்த் சிங்கமா மன்னர், ஒரு சிறிய உறுமலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"எங்கே அந்தக் குட்டிப் பயல்?’'என்று கேட்டுக் கொண்டே சின்ன முயல் எங்கே இருக்கிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

"அரசே, இதோ இருக்கிறேன்!” என்று கூறிக் கொண்டே முன்னால் தாவி வந்தது முயல்.

"நான்கு அமைச்சர்களும் தங்கள் கருத்தைச் சொல்லி விட்டார்கள். நீ என்ன சொல்லுகிறாய்;" என்று அலட்சியமாகக் கேட்டது சிங்கம்.

"மன்னர் பெருமானே, போர் இல்லாத காலத்திலேயே உணவுக்காகவென்றும் மனிதர்கள் வேட்டையாடுவதாலும் நம்முடைய விலங்கு இனங்கள் நாள் தோறும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் போர் ஒன்று தோன்றுமானால் இரண்டு பக்கத்திலும் ஏராளமான விலங்குகள் தேவை யில்லாமல் கொல்லப்படும்; இந்தப் போரைத் தவிர்த்து நம் விலங்கு இனங்கள் பூண்டோடு அழியாமல்பார்த்துக் கொள்ள வேண்டியது தங்களைப்போன்ற மேலான அரசர்களின் கடமையாகும்.

"அடுத்த காட்டு அரசர் ஏதோ ஒரு தவறான தூண்டுதலால் இந்தப் போரைத்தொடங்க எண்ணி யிருந்தால் அவரிடம் தக்க முறையில் பேசி அவரு டைய எண்ணம் சரியல்ல என்று எடுத்துக் காட்டிப் போரை நிறுத்த வேண்டியதே முதலில் நாம் செய்ய வேண்டியதாகும். இதனால் நம் வீரத்திற்குக் குறை எனறு நினைக்கக் கூடாது. இது நம் இனங்கள் வாழ்வு பெற நல்ல முறை என்று எண்ண வேண்டும்.

"அரசே, இந்தச் சிறியவனின் கருத்தை ஏற்று அதற்குரிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டிக் கொள்கிறேன்." இதைக் கேட்ட சிங்கம், "முயல் குட்டியே உன் கருத்து சரிதான். ஆனால் இதை நிறைவேற்றுவதில் தான் தொல்லை இருக்கிறது. அந்த மூட அரசன் நல்ல எண்ணத்தில் இதை ஏற்றுக் கொண்டால் எல்லாம் நல்ல படியாக முடியும். ஆனால் நாம் போருக்குப் பயந்த கோழைகள் என்றும், அதனால் தான் நாம் சமாதானம் பேச வருகிறோம் என்றும் அவன் நினைத்தால் அதைவிடக் கேவலமானது ஒன்றுமில்லை.

"மன்னர் பெருமானே, தாங்கள் ஆணையிட்டால் நானே அடுத்த காட்டுக்குப் போய் அந்தக் காட்டரசனைச்சந்தித்து. சமாதானம் பேசிக் கொண்டு வருகிறேன். இதனால் தங்கள் பெருமைக்குச் சிறிதும் களங்கம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வேன். நம் விலங்கினத்தின் நன்மையை முன்னிட்டுத் தாங்கள் என் கருத்தை ஏற்று எனக்குக் கட்டளையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்." மற்ற அமைச்சர்களுக்கு முயல் சொன்ன கருத்துச் சரியாக தோன்றாவிட்டாலும், சிங்கஅரசன் அதை ஊக்கப்படுத்திப் பேசியதால் அவை வாய்மூடிக் கொண்டிருந்தன. சிங்கம் சரி என்று நினைக்கிற ஒரு கருத்தை மறுத்துச் சொன்னால் அதற்குக் கோபம் வந்து விடும் என்று கருதியே அவை பேசாமல் இருந்தன. .

முயல் சொன்ன கருத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்க அது மிகச்சரியான கருத்தாகத் தோன்றியது சிங்கமன்னனுக்கு. ஆனால் தன்னைப்போலவே அடுத்த காட்டு மன்னனும் நல்ல எண்ணம் உள்ளவனாக இருந்தால்தான் இந்த முயற்சி வெற்றி பெறும். இல்லாவிட்டால் இது பைத்தியக்காரத்தனமாகவே கருதப்படும். இந்த நிலையில் முயலை ஆதரிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் சிங்கம் சிந்தித்தது "விலங்கு இனத்தின் நன்மையை முன்னிட்டுக் கட்டளையிடுங்கள்" என்று முயல் குட்டி சொன்ன சொற்கள் சிங்கத்தின் மனத்தில் ஒரு மந்திரம் போல் பதிந்து விட்டன. முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என்று அது நினைத்தது.

"குட்டிப் பயலே, இப்பொழுது நாம் பேசுவது எளிய செயலைப் பற்றியதல்ல. வாழ்வா, சாவா என்ற மிகப்பெரிய லட்சியத்தைப் பற்றியது ஆகும். ஆகவே இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கு ஒருநாள் தவணை தருகிறேன். நாளை இரவு

இதே நேரம் வருவதற்குள் நீ எனக்கு விடைசொல்ல வேண்டும். உன் முயற்சியை நீ இப்பொழுதே தொடங்கலாம். நாளைப் பொழுதுக்குள் முடிவு தெரியாவிட்டால் நாம் போர் செய்வது உறுதி.

"படைத்தலைவர் புலியாரே, நம் படைகளையெல்லாம் ஆயத்த நிலையில் வைத்திருங்கள். எந்த நொடியும் கட்டளை பிறக்கலாம். அந்த நொடியிலேயே பகை மீது பாய நம் படைகள் அணிய மாகட்டும்.’’

சிங்கம் முயலுக்கு ஒப்புதல் கூறிய உடன், அதன் காலில் விழுந்து வணங்கி எழுந்து மற்ற அமைச்சர்களிடமும் ஆசி பெற்றுக் கொண்டு, அடுத்த காட்டை நோக்கிப் பாய்ந்து சென்றது.

அடுத்த காட்டில் ஆட்சி புரிந்தது ஒரு கிழட்டுச் சிங்கம். அதன் குகைக்குள் முயல் போய்ச் சேர்ந்த நேரத்தில் அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டி ருந்தது. குகை வாயிலில் யாரும் காவலுக்கு இல்லாததால் முயல் நேரே உள்ளே சென்றது.

பொதுவாகச் சிங்கங்கள் பகலில்தான் உறங்குவது வழக்கம். இரவில் அவை மிகச்சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் அந்தக் கிழட்டுச் சிங்கமோ அந்த இரவுநேரத்திலும் குறட்டை விட்டுக் கொண்டிருந்தது வியப்பாய் இருந்தது.

முயல் அதன் முன்னே போய்ச் சற்று தொலைவில் நின்று கொண்டு "மன்னவா, மன்னவா" என்று

அழைத்தது. மன்னவன் காதில் அந்தச் சின்னவன் குரல் எட்டவில்லை. முயல் தன் காலடியில் கிடந்த ஒரு சின்னக் கல்லை எடுத்து அந்தக் கிழட்டுச் சிங்கத் தின் மீது வீசியெறிந்தது. சிறிது புரண்டு படுத்த அந்தச் சிங்கம் சோதிடர் வந்து விட்டாரா?" என்று கூறிக்கொண்டே கண் விழித்தது.

எதிரில் ஒரு முயல் நிற்பதைப் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

"கடவுளின் தூதரே, நலம் தானா? சிவபெருமான் பார்வதி தேவி எல்லாரும் நலம்தானா?"என்று கேட்டது.

முயலுக்கு ஒரு ஐயம் தோன்றியது. இத்த கிழட்டுச் சிங்கம் உண்மையில் அரசர் தானா? இல்லை அரைப் பைத்தியமா என்று நினைத்தது. இருந்தாலும், அது அரசனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு அதனுடன் பேசத் தொடங்கியது.

அரசே, என்னைக் கண்டவுடன் தாங்கள் இவ்வளவு மகிழ்ச்சியடையக் காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?' என்று கேட்டது.

"சிவபெருமான் தூதரே, உங்களைப் பார்த்ததால் என் கவலை எல்லாம் தீர்ந்து விட்டது. இரண்டு நாட் களுக்கு முன் என் இனத்தவர்கள் ஒரு மானிடக் கிழவனை இங்கு பிடித்து வந்தார்கள். அவன் யார் என்று விசாரித்தபோது பட்டணத்து ஆலமரத்தடியில் சோதிடம் சொல்பவன் என்று தெரிந்தது. என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு இந்த வாரத்திற்குள் போர் தொடங்கினால் எனக்கு வெற்றி நிச்சயமென்றும் அந்த வெற்றிக்கு அடையாளமாகச் சிவபெருமான் ஒரு முயல் தூதரை அனுப்புவாரென்றும், அந்தச் சோதிடர் சொன்னார். அவர் சொன்னபடியே இன்னும் இரண்டு நாளில் அடுத்த காட்டின் மேல் படையெடுக்கப் போகிறேன். அந்தப் போரில் எனக்குத் தான் வெற்றி என்பதற்கு அடையாளமாகச் சிவதூதர் நீரும் வந்து விட்டீர். அந்தச் சோதிடன் திறமைசாலி தான்!" என்று அந்த கிழட்டுச் சிங்கம் கூறியது.

அதைக்கேட்ட முயல் கலகலவென்று சிரித்தது. "அரசே, நான் கேட்கிற சில கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டுகிறேன். தங்கள் காட்டில் எத்தனை சிங்கங்கள் இருக்கின்றன???

"ஏழு"

"எத்தனை புலிகள் இருக்கின்றன?"

"இருபது"

"எத்தனை யானைகள்?"

"ஐம்பது"

"குைதிரைகள்?"

"முப்பது."

"அரசே, நான் சொல்லுவதைத் தாங்கள் சினங்கொள்ளாமல் கேட்க வேண்டுகிறேன். தங்களிடம் உள்ள வலிமை மிக்க விலங்குகளின் தொகை மிகக்

குறைவாக இருக்கிறது. பக்கத்துக் காட்டிலோ பத்து மடங்கு கொடிய விலங்குகள் உள்ளன. அவை அத்தனையும் ஒன்று சேர்ந்து தங்கள் காட்டைத் தாக் கினால் அரைமணி நேரத்தில் ஒன்றுகூட மிஞ்சாமல் போய்விடும்,

"யாரோ வழியில் அகப்பட்ட சோதிடன் தான் உயிர் பிழைத்துப் போவதற்காகச் சொல்லிய பொய்யுரையை நம்பிக் கொண்டு தாங்கள் போராடப் புறப்படுவது பேதைமையாகும்.

"இந்த வழியாக வந்த நான் நம் அரசரைப் பார்த்து வாழ்த்துப்பெற்றுச் செல்லலாம் என்று உள்ளே வந்தேன். தாங்களோ பாதுகாப்பே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். சரியான வலுவில்லாமல் பகையைத் தேடிக் கொள்வது நமக்கே தீமையாக முடியும். :பக்கத்துக் காட்டில் உள்ளவர்கள் போரைப் பற்றியே நினைக்காமல் இருக்கும் போது நீங்கள் ஓர் போரை உண்டாக்கி வீணாகப் பல உயிர்களை இழக்க முடிவு செய்திருப்பது சரியல்ல."

"தாங்கள் விரும்பினால், நான் பக்கத்துக்காட்டு அரசனுடன் தங்களுக்கு நட்பு ஏற்படச் செய்கிறேன். இருவரும் நண்பர்களாகவும் ஒற்றுமையாகவும் இருந்து எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டுகிறேன்."

முயலைச் சிவபெருமான் தூதரென்றே நினைத்துக் கொண்டிருந்த கிழட்டுச் சிங்கம் அதன் சொல்லுக்கு மதிப்பு அளித்தது. "தூதரே உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது. உங்கள் கருத்துப் படியே நான் நடக்க விரும்புகிறேன். அடுத்த காட்டு அரசனுக்கு என்னை நண்பனாக்குவதை நான் வரவேற்கிறேன்" என்று கிழட்டுச்சிங்கம் கூறியது.

அடுத்த நாள் மாலையில் ஒர் ஆலமரத்தடிக்கு வந்திருக்கும் படியும் அந்த மரத்தடிக்கு அடுத்த காட்டு அரசனை அழைத்து வருவதாகவும் சொல்லி விட்டு முயல் அங்கிருந்து கிளம்பியது. .

அந்தக் கிழட்டுச் சிங்கம் நட்புக்கொள்ள வருகிற செய்தியை அப்பொழுதே சென்று தன் அரசனிடம் கூறியது சின்னமுயல். சென்ற இரண்டு மணி நேரத் திற்குள் சொன்னபடி ஒரு நல்ல முடிவை வந்து சொன்ன முயலின் மீது சிங்கத்திற்குப் பெரும் மதிப்பு ஏற்பட்டது. .

மறுநாள் கிழட்டுச்சிங்கத்துடன் அன்புடன் நட்புக் கொண்டு உறவாடி விட்டு மகிழ்ச்சியோடு திரும்பியது சிங்கஅரசன். அதன் அரசாங்கத்தில் அந்தச் சின்ன முயல் தலைமை அமைச்சராகி விட்டது.

ஒரு பெரிய போரைத் தன் திறமையால் நிறுத்தி வைத்த அந்தக் குட்டி முயலைப் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டும் காட்டிலும் இருந்த விலங்குகள் எல்லாம் அந்த முயலைப் போற்றிப் பாராட்டின. -

சின்ன உருவம் இருந்தாலும் ஒரு பெரிய செயலைச் செய்து முடித்த பெருமை அந்த முயலை அந்தக் காட்டுக்கே பெரிய தலைவனாக்கி விட்டது.