அப்பம் தின்ற முயல்/பள்ளிக் கூடத்தில் முயல் குட்டிகள்

3
பள்ளிக்கூடத்தில்
முயல் குட்டிகள்

காடு முழுவதும் ஒரே பேச்சாய் இருந்தது. விலங்குகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது விசாரித்துக் கொண்டன.

”கழுதை அக்கா, உன் குட்டியைச் சேர்த்து விட்டாயா?”

”இல்லை குரங்கண்ணா. என் குட்டிக்கு கழுதை வயது ஆகிவிட்டதாம். அந்த ஆசிரியர் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.”

”புலிக்குட்டியைக் கூட சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டாராமே. எல்லாப் புலிகளும் உறுமிக் கொண்டிருக்கின்றன.”

”அதற்குக் காரணம் தெரியுமோ? புலிக்குட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மான்குட்டியும், ஆட்டுக்குட்டியும் பாடம் படிக்கவா முடியும்.”

இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் அந்தக் காட்டில் பட்டணத்து அல்சேசன் அண்ணாவி தொடங்கியுள்ள பாலர் பள்ளி பற்றித்தான்.

பாலர் பள்ளியில் மென்மையான இயல்புள்ள விலங்குகளின் குட்டிகளுக்கு மட்டும்தான் இடம் உண்டு என்று அல்சேசன் அண்ணாவி அறிவித்து விட்டார். இதில் வன்மையான இயல்புள்ள விலங்குகளுக்கு முதலில் கோபம் கோபமாக வந்தது. ஆனால் அண்ணாவி விளக்கஞ் சொன்ன பிறகு அவை எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு விட்டன. பெரியவர்கள் எடுத்துச் சொன்னதின் பேரில் கடைசியாக கழுதைக் குட்டிகளையும் பாலர் பள்ளியில் அண்ணாவி சேர்த்துக் கொண்டு விட்டார்.

பள்ளிக்கூடம் தொடங்கி பத்து நாள் கழித்துத்தான் முயலம்மாவுக்குச் செய்தி தெரியும். முயலம்மா செய்தி தெரிந்த மறுநாளே தன் நான்கு குட்டிகளை யும் அழைத்துக் கொண்டு காட்டுப்பள்ளி கூடத்துக்குச் சென்றது. பட்டணத்து அல்சேசன் அண்ணாவி இந்த நான்கு முயல் குட்டிகளையும் உற்றுப்பார்த்தார். அவை பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்தவுடன் பள்ளிக்கூடமே களை கட்டி விட்டது. அங்கு இருந்த எல்லா மாணவ, மாணவிகளைக் காட்டிலும் இந்த முயல் குட்டிகளே அழகாய் இருந்தன. நான்கும் வெள்ளை, வெளேரென்று பனிக்கட்டியின் நிறத்தில் பளிச்பளிச்சென்று அழகாய் இருந்தன. அவற்றின் அழகுக்காகவே அண்ணாவி பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

அழகாக மட்டும் அல்ல அறிவுள்ள குழந்தைகளாகவும் அந்த முயல் குட்டிகள் இருந்தன.கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கடகடவென்று பதில் கூறின. விளையாட்டிலும், அவை நல்ல மதிப்பெண்கள் வாங்கின.

பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. தன் மாணவர்கள் எல்லாம் ஒருநாள் கூட குளிக்காமல் வருவதை அண்ணாவி மோப்பம் பிடித்தே அறிந்து கொண்டார். உடனே அவர் ஒரு கட்டளையிட்டார். நாள்தோறும் குளித்து, துவைத்த சீர் உடைகளையே அணிந்து வரவேண்டும் என்று கட்டாயமாகக் கூறி விட்டார்.

எல்லாக் குட்டிகளும் மறு நாள் காலையில் குளிப்பதற்காக காட்டுக் குளத்திற்கு சென்றன. முதன் முதலாகச் சென்ற எருமைக் கன்றுகள் குளத்தில் இறங்கித் தண்ணிரைக் கலக்கி விட்டன. ஆதலால் குளத்துநீர் முழுவதும் சேறும் சகதியும் ஆகிவிட்டது. பின்னால் வந்த மற்ற குட்டிகளெல்லாம் குளிக்காமல் திரும்பி விட்டன.

அக்கம் பக்கத்தில் வேறு குளம் ஒன்றும் கிடையாது. அவை என்ன செய்யும். குளத்து நீர் தெளிந்த பிறகுதான் குளிக்கலாம். அண்ணாவியிடம் சொல்லி மறுநாள் காலையில் மற்ற எல்லோரும் குளித்த பிறகு தான் எருமைக் கன்றுகள் குளிக்க வேண்டும் என்று ஆணை பெற்றன.

இதற்கிடையில் முயலம்மா பட்டணத்திற்குச் சென்று ஒரு மரத்தொட்டியும் சோப்புக் கட்டியும், புதிய சீர் உடைகளையும் வாங்கிக் கொண்டு வந்தது. பிறகு தன் குட்டிகளை அழைத்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் மலையடிவாரத்திற்குச் சென்றது. அங்கிருந்த தெளிந்த நீரோடையில் தண்ணிர் பிடித்தது. மரத்தொட்டியில் நீரை நிரப்பி அதற்குள் தன் குட்டிகளை விட்டு குளிப்பாட்டியது. ஒவ்வொரு குட்டியாக பிடித்து சோப்புத் தேய்த்து தலையில் நீர் ஊற்றி அழகாக குளிப்பாட்டியது. அதன் பிறகு குட்டிகளின் உடலில் மணப்பொடி தூவி சீர்உடை அணிந்து புல் உணவு தந்து பள்ளிக்கு அனுப்பியது.

பள்ளிக்கூடத்திற்குள் நான்கு முயல் குட்டிகளும் நுழைந்த போது கம கம வென்று மணம் கமழ்ந்தது. மற்றகுட்டிகளெல்லாம். ஏதோ காரணம் சொல்லி குளிக்காமல் வந்தன. ஆனால் முயல் குட்டிகள் மட்டும் அண்ணாவியின் பேச்சை மதித்து குளித்து அழகாக வந்திருந்தன. அல்சேசன் அண்ணாவிக்கு அந்த முயல் குட்டிகளை பார்க்கப்பார்க்கப் பெருமையாய் இருந்தது.

அண்ணாவி மற்ற மாணவர்களைப் பார்த்து “டே குட்டிகளா நீங்களும் படிக்க வந்து விட்டீர்களே.இதோ பாருங்கள் இந்த முயல் குட்டிகள் குளித்து எவ்வளவு அழகாக வந்திருக்கின்றன” என்று கேட்டார்.

உடனே குரங்குக் குட்டி ஒன்று எழுந்து நின்றது. “அண்ணாவி ஐயா நீங்கள் ஒரு நாள் முயலம்மா வீட்டுப் பக்கம் போய் வாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்” என்று சொல்லியது.

அந்தக் குரங்குக் குட்டி ஏன் இப்படிச் சொன்னது என்று அண்ணாவிக்குப் புரியவில்லை.

அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டதும் அண்ணாவி முயல் குட்டிகளைப் பின் தொடர்ந்து சென்றது.

முயலம்மா தன் குட்டிகளோடு ஒரு புதரின் நடுவில் வாழ்ந்து வந்தது. மாலையில் புதருக்கு வெளியே வந்து குட்டிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. குட்டிகள் நான்கும் துள்ளித்துள்ளிப் பாய்ந்து ஒடிச் சென்றன. அம்மாவைச் சுற்றிக் கொண்டன. அம்மாவும் ஒவ்வொன்றையும் முத்தம் இட்டது. தன் நாவினால் ஒவ்வொரு குட்டியையும் தடவிக் கொடுத்தது.

தொலைவிலேயே இந்த அன்புக் காட்சியை அண்ணாவி அல்சேசன் பார்த்தது.ஆனால் அதனால் அந்தப் புதரின் அருகில் நெருங்கிச் செல்ல முடியவில்லை. அந்த முயல்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வந்த தீய நாற்றம் அதை நெருங்க விடவில்லை.

இத்தனை அழகாகவும் பளபளப்பாகவும் பார்க்கப் பரிசுத்தமாகவும் இருக்கும் இந்த முயல்கள் வாழும் இடம் இப்படி இருக்கிறதே. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறை இருப்பது இந்த உலகத்து இயற்கை போலும். எல்லா நிறையும் உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது என்று அண்ணாவி நினைத்துக் கொண்டது.

மறுநாள் முதல் அண்ணாவி அல்சேசன் எல்லா மாணவர்களையும் ஒன்றுபோல் நடத்தியது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி எல்லாக்குட்டிகளையும் சமமாக நடத்தியது. அதனால் அண்ணாவியின் புகழ் காடெங்கும் பரவியது.

அண்ணாவி ஓர் அதிசய ஞானி என்று அந்தக் காட்டு விலங்குகள் பேசிக்கொண்டன. அது தொடங்கிய பாலர் பள்ளி சீரும் சிறப்புமாக நடந்தது.