அப்பம் தின்ற முயல்/மரக்கிளையில் ஒரு முயல் குட்டி

4

மரக் கிளையில்
ஒரு முயல் குட்டி


பொழுது விடியும் நேரம். வானத்தில் இருந்த விண்மீன்கள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டிருந்தன. ஆயிற்று இன்னும் ஒன்றுதான். அதுவும் மறைந்துவிட்டது. கிழக்கில் செங்கதிர் வண்ணப்பந்து போல் தலை நீட்டிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் முன் திட்டமிட்டபடியே முருகனும் மாதவனும் முயல் வேட்டைக்குப் புறப்பட்டார்கள். இருவர் கையிலும் வேட்டைத் துப்பாக்கிகள் இருந்தன.

மாதவன் வனத்துறையில் ஒரு பெரிய அதிகாரி. அவரிடம் கண்ணன் என்ற வேட்டை நாய் ஒன்று இருந்தது. “கண்ணா!” என்று அழைத்தால் பாய்ந்தோடி வரும். சொன்ன வேலையைச் சொன்னபடி செய்யும். முயல்களை விரட்டிப் பிடிப்பதில் மிகத் திறமையுடையது கண்ணன். அப்படிப்பட்ட நாயை அன்று அவர்கள் அழைத்துச் செல்லவில்லை. அது ஒரு பாறையிலிருந்து சறுக்கி விழுந்ததால், காலில் சுளுக்கு ஏற்பட்டு வீட்டிலேயே தங்கி மருந்து போட்டுக் கொண்டிருந்தது.

கண்ணன் கூட வராதது ஒரு பெருங் குறை. முயல்களைக் கண்டு பிடிப்பதற்கு அவர்கள் மிக அலைய வேண்டியதாயிற்று. கண்ணன் வந்திருந் தால் மோப்பம் பிடித்தே முயல்கள் இருக்கும்.இடத்தை அறிந்து விடும். முருகனும் மாதவனும் உச்சிப்பொழுது வரை அலைந்தும் ஒரு முயல் கூடக் கண்ணில் அகப் படவில்லை.

"பசிக்கிறது உணவுண்ட பிறகு தேடலாம்." என்று முருகன் சொல்லவே, இருவரும் ஒரு மரத் தடிக்குச் சென்றார்கள். நிழலில் உட்கார்ந்து கட்டிக் கொண்டு வந்திருந்த தயிர்ச்சோற்றைப்பையிலிருந்து எடுத்தார்கள்.

அப்போது பக்கத்தில் இருந்த ஒரு புதருக்குள் ளிருந்து ஒரு முயல் பாய்ந்தோடியது. சோற்றுப் பொட்டலத்தை அப்படியே போட்டுவிட்டு அது பாய்ந்த திசையில் ஓடினார்கள். ஆனால் எவ்வளவு தொலை ஒடியும் மீண்டும் அது கண்ணில் படவே இல்லை. மீண்டும் சோர்ந்து போய் உணவு உண் பதற்காக மரத்தடிக்கு வந்தார்கள்.

மரத்தடியில் உட்கார்ந்து மீண்டும் கட்டுச் சோற்றை எடுக்கும்போது பக்கத்துப் புதர் சல சலத்தது. ஒருமுயல் அவர்கள் முன்னேகுதித்தது. பர பரவென்று ஏறி எதிரில் இருந்த ஓர் அரச மரத்தின் கிளையில் குந்திக் கொண்டது. அவர்களை உற்றுப் பார்த்தது. மாதவன் வியப்புடன் சொன்னார். “நானும் வனத்துறையில் பத்து ஆண்டுகளாகப் பணி புரிகிறேன். மரமேறும் முயலை இது வரை பார்த்ததேயில்லை. இது ஒரு விந்தைதான்!”

“விந்தையல்ல; மூடத்தனம்” என்று ஒருகுரல் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மற்றொரு வனத்துறை அதிகாரி குமரன் என்பவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார்.

“குமரன், அதோ பார்த்தாயா? மரக்கிளையில் ஒரு முயல் குட்டி! நீ இதுவரை முயல் குட்டி மரமேறிப் பார்த்ததுண்டா?” என்று மாதவன் கேட்டார்! “காலங் கெட்டுவிட்டது” என்றார்.

“கொலம் கெடவில்லை; உங்கள் கண் தான் கெட்டுவிட்டது! கண்களைக் கசக்கிக் கொண்டு நன்றாகப் பாருங்கள்!” என்றார் குமரன்.

முருகனும் மாதவனும் உற்றுப் பார்த்தனர்.

“உண்மையில் மரக்கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தது முயலல்ல; ஒரு வெள்ளைப் பூனைக் குட்டி!”

அந்தப் பூனைக் குட்டி எழுந்து நின்று அவர்களைப் பார்த்து ‘மியாவ்’ என்றது.

“நாங்கள் சரியான அறிவிலிகள்!” என்று கூறிச் சிரித்துக் கொண்டே தயிர்ச் சோற்றுப் பொட்டலத்தைப் பிரித்தனர்.

இரண்டு பொட்டலங்களை மூன்று பேரும் பங்கு போட்டுக் கொண்டனர்.

அந்த முயல் வேட்டையை நினைத்துப் பார்த்தால் இன்றைக்கும் அவர்களுக்குச் சிரிப்பு வருகிறது!