அமிழ்தின் ஊற்று/சிறு பறை!

சிறு பறை!


எழுபிறப் பின்பங் கோடி
இணைந்தநல் பண்பின் சான்றே !
விழுப்புணை அணியாய்க் கொண்ட
வீரமாத் தமிழின் தூணே!
இழிநிலை திராவி டத்தே
ஏற்றினர் ஒருசார் கும்பல்.
ஒழித்திடு!புதுமை சேர்க்க
சிறுபறை கொட்ட டாநீ!


மூவேந்தர் ஆண்ட இந்த
முத்தமிழ்த் திராவி டத்தே
பாவேந்தர் கனவை எல்லாம்
மெய்ப்பித்தார் பாங்கென் சொல்வேன்
சாவேந்தும் ஆளி யர்கள்
சஞ்சலச் சுனையாய்ச் செய்தார்
கோவேந்தே! குடிவி ளங்க
சிறுபறை கொட்ட டாநீ !

கல்தோன்றி மண்தோன் ருத
காலத்தின் முன்பே தோன்றி,
தொல்புகழ் வீரம் ; கல்வி ;
தூய்தமிழ் ; வாழ்க்கை : செல்வம்
எல்லையின் றிருந்த நாட்டில்
ஏற்றினர் வஞ்ச னைத்தீ !
கொல்லேறே ! தமிழர் ஒங்க
சிறுபறை கொட்ட டாநீ !