அமுதவல்லி/பிறந்த பொன்னாடு
2. பிறந்த பொன்னாடு!
அடுப்பில் பூனை தூங்கிக் கொண்டிருக்கிறது! சல் லாபமான தூக்கம். அடங்கிக் கிடந்த சாம்பல் பள்ளம் அந்தப் பூனைக்கு வெகு உணக்கையாக இருந்திருக்க வேண்டும். வாடை புந்தான் அற்ப சொற்பமாகவா அடித்துத் தொலைக்கிறது பின் பூனையைக் குறை சொல்லத் தகுமா, என்ன? வீட்டுப் பூனை அது. முண்டன் மகன் தேடி வந்து கொடுத்தான், புரட்டாசிக் கெடுவில் அம்பைப் பூ நிறம் துளி ஒச்சம் இருக்க வேண்டுமே? திருஷ்டி பரிகாரத் துக்கென்றாவது அசந்து மறந்து ஒரு கரும்புள்ளியைச் சூடிக்கொண்டிருக்காதா? ஆஹா! அந்த மீசை நீட்டி விட்டவெள்ளிக் கம்பிபோல எவ்வளவு எடுப்பாக இருக்கிறது! (ஆமாம், சூடேறியும் சூடேற்றியும் வருகிற இந்த நவநாகரிக யுகத்திலே பூனை மீசை ஃபாஷன்” மட்டிலும் ஏன் தான் இன்னமும் அரும்பு விடவில்லையாம்?...! -
வெள்ளை’ படு சமர்த்து. இல்லாவிட்டால், அது கண் வளர்வதற்கு இந்த அடுப்பை சயனக் கிரமாகப் பொறுக்கியிருக்குமா? மீனாட்சி அடுப்பு மூட்டவில்லை என்கிற துப்பைக் கண்டு கொண்டு தான் இப்படி அடித்துப் போட்ட மாதிரி உறங்குகிறது போலும்! எத்தனை எலிகளை எங்கெங்கே அடித்துப் போட்டதோ, பாவம்!
வீட்டுப் பூனைக்குச் சகுனம் இல்லையாம், எதிர் வீட்டுச் செல் லிப் பாட்டி சொல்வாள், அதில் ஒரு நிம்மதி சுப்பையாவுக்கு. இல்லையேல், பாயும் படுக் கையுமாக ஆகிவிட்ட இந்த அவல நிலைமையிலேநெருக்கடி மிக்க இந்தச் சோதனைச் சமயத்திலே, உள்ள கஷ்டம் போதா தென்று, பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் சோதனையையும் மேற்கொண்டிருக்கமாட்டான் தான் !
நுரையீரல் குலையினின்றும் பயங்கர இருமல் புறப்பட்டது; இருமல் சத்தம் இவ்வளவு கர்ண கொடுரமாகவா இருக்கும்! எதிரியை விரட்டியடிக்க நம் பீரங்கிகள் இப்படித் தான் சத்தமிட்டிருக்குமோ? இப்போதுதான் சுப்பையாவுக்கு மூச்சு வந்தது. கண்கள் இரண்டும் என்னமா நிரம்பி வழிகிறது: தொண்டைக் குழியில் அரித்த எரிச்சல் அடங்கிவிட்ட தென்று சொல்ல வேண்டும். குழி விழுந்து கிடந்த விழிகளை, வேட்டியை இழுத்துத் துடைத்துக் கொண்டே நின்றது. நின்றபடி மறுபடியும் அந்த அடுப்படியையும் வெள்ளைப் பூனையையும் மாறி மாறி, மாற்றி மாற்றிப் பார்வையிட்டான். ஒரு மடக்கு நீராகாரம் குடித்தால் தேவலாம் போலிருந்தது. மெள்ளக் குந்திக்கொண்டு கஞ்சிப் பானையை இழுத்து நகர்த்தினான். கவிழ்த்திருந்த ஈயச் சட்டியை வாகு கணித்து எடுப்பதற்குள் அவனுக்கு மூச்சு வாங்கியது. மீனாட்சியின் சமர்த்து யாருக்கு வரும்? நேரம் காலம் கூடிவரவில்லை இன்னமும், மாங்குடியில் பிறந்த மனையில் பட்டது போதாதென்று இங்கு புகுந்த இடத்திலும் விதி நீட்டிய தளைக்குள் புகுந்து அல்லற்படுகிறாள், பாவம்! ...
கஞ்சிப்பானை முகம் காட்டி, அகம் காட்டியது, சுப்பையாவுக்குக் குழந்தைகளின் ஞாபகம் பீறிட்டிருக்க வேண்டும். உள்மனம் விம்மிப் புடைத்தது, உள்வட்டமாக ஏக்கமும் வேதனையும் சுற்றிச்சூழ, அவன் பார்வை பானையில் பதிய, நடுங்கும் கைகளைப் பானைக்குள் நுழைத்தான். ஒரு பிடி கஞ்சிப் பருக்கைக்கூட தட்டுப்படக் காணோம்! நீராகாரத் திற்கு மாத்திரம் துட்டு இல்லை. பெருமூச்சு நெளிந்தது.
சற்று முன்னே மிச்சம் சொச்சம் இருந்த கஞ்சியை வார்த்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு விளையாடப் போய்விட்டாள் சின்னக்குட்டி. அமுதாவுக்கு ஒரு நாளைக்குப் பத்துவாட்டி கஞ்சி அல்லது சோறு வேண்டும். இல்லாவிட்டால் லூட்டிதான் ; ரோதனைதான். பழசுபட்டதைத் தொட்டுக் கொண்டு உண்டு முடித்து ஒழுங்கைக்கு ஓடிவிடுவாள் விளையாட விளையாட்டுத்தான் சதம் அவளுக்கு,
மூத்தவன் காமராஜ் ஸ்கூலுக்குப் போய்விட்டான். மூன்றாம் வகுப்பு. கொஞ்ச நேரத்துக்கு முந்தி அவன் ஒட்டமாக ஓடி வந்து என்ன பாடு படுத்திவிட்டான்!- ‘நம்ப நாட்டைப் பாதுகாக்கிற துக்காக வாத்தியார் ஐம்பது காசு வாங்கிட்டுவரச் சொன்னார், அப்பா!’ என்றான்.
அவன்-சுப்பையா எங்கே போவான் ஐம்பது காசுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த ரத்தம் பாவ புண்ணியத்திற்கென்று ஒட்டியிருத்த அந்த ரத்தம்கூட இப்போது உறைந்து விடும்போல பூச்சாண்டி காட்டியது.பிறந்த பொன்னாட்டைக் காத்திட கையில் மடியில் இருப்பதைத் தாராளமாகக் கொடுக்க வேண்டியதுதான்!- அது நம் கடமை தான்! அறமே வெல்லும் என்கிற நித்தியச் சத்தியத்திற்குச் சான்று பகருவது மாதிரி, வீரபாரதத் திடம் பாகிஸ்தான் சரணடைந்த கதை அவன் இதயத்திரையில் சலனச் சித்திரமாகப் படம் காட்டத் தொடங்கியது. அவன் சுயப் பிரக்ஞையை மீட்டுக் கொண்டு தலையை நிமிர்த்திய நேரத்தில், தன் பல்லவியைப் பாடத் தொடங்கி விட்டான் வாண்டுப்பயல்.
“அப்பா, காசு கொடுங்க!”
“சுப்பையா தன் அருமைப்பிள்ளையை ஏறெடுத்து நோக்கினான். என்ன வகை செய்வான்? என்ன பதில் சொல்லுவான்? அவன் பார்வை அவனது இன்னுயிர்த் துணை யின் பால் பரிந்தோடியது.
அம்மா பக்கம் திரும்பி, நீ யாச்சும் காசு கொடம்மா. நம்ப நாட்டைப் பாதுகாக்கிற கடமை யிலே நம்ப பங்கையும் நாம் செலுத்திப் புட வேணாமாம்மா?’ என்றான்.
அவள் சிந்தனை வசப்பட்ட நிலையில், “ஆமாம். என்ற பாவனையில் தலையை வசமாக உலுக்கினாள். பிறகு பரிதாபமாக மகனை நோக்கலானாள். “காசு. இப்போ கைவசம் இல்லையேடா, கண்ணே இருந்திருந்தால் இந்நேரம் அடுப்பு புகையாமல் இருந்திருக்குமாடா?’ என்றாள். தங்கைக்கென்று கொஞ்சத்தை வைத்துவிட்டு, நாலு கொத்துக் கஞ்சியைத் தட்டில் போட்டுக் கொடுத்துச் சாப்பிடச் செய்து அவனைக் காலையிலே பள்ளிக்கு அனுப்ப வில்லையா அவள்?
அ-3 “நாட்டைப் பாதுகாக்கவேண்டியது நம்ப பொறுப்பு இல்லையா அம்மா ?”
கண்ணே இல்லேன்னு சொன்னது? அது நம் கடமையாச்சே!”
- பின்னே, காசு கொடேன்!’
விழி பிதுங்க, கொண்டவனை ஊடுருவினாள் மீனாட்சி.
“நாளைக்குக் கொடுத் திடலாமப்பா. இப்போ காசு இல்லையே என்ன செய்வது? திடுதிப்னு எங்கே போய் கடனோ கைமாற்றோ வாங்க முடியும்? நமக்குத்தான் அந்த மாதிரிப் பழக்கமும் கிடையாதே?. அப்பாவுக்கு உடம்புக்கு வந்தது தொட்டு இந்த நாலைஞ்சு மாசமாக எவ்வளவு பாடுபட்டுக் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்குது? நம்ப கஷ்ட நஷ்டம் நம்ப வீட்டுச் சுவர்களைத் தாண்டி வெளியே தடம் காட்டிடப்படாதேன்னு தானே நாம இம்புட்டு மானமாய் காலங்கடத்திட்டு வரோம்:இந்தத் துப்பு உனக்கு இன்னமுமா விளங்கலே?... நம்ப தாய் மண்ணைக் காக்கிறதுக்காக பாதுகாப்பு நிதிக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கத் தான் துடிக்குது என் மனசும்.அம்மா மனசும்!,. ஆனா, மாரியாத்தா இந்தச் சமயத்திலே இப்படிச் சோதனை செய்கிறானேயா அதுக்கு என்ன செய்யட்டும் நாங்க! சுப்பையாவின் தொண்டை அடைபட்டது. இருமல் அடைபடவில்லை.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ எனக்கு அம் பது காசு வேணுமாக்கும் இல் லாட்டி...’ என்று தொக்கு வைத்து அழத் தொடங்கினான். அவனுடைய மாமூலான கடைசி அஸ்திரம்: ரோசம் எப்படி வருகிறது: மீனாட்சி அவசரம் அவசரமாக ஐந்தறைப்பெட்டியை எடுத்து வெளிச்சத்தில் வைத்துத் திறந் தாள். ஏதாவது காசு பணம் ஒளிந்திருக்க வேண்டுமே என்று மாரியம்மனை நேந்து கொண்டது அவளது பெற்ற நெஞ்சம் கடுகுக்கடியில் இரண்டு ஐந்து காசுகளும் வெந்தயஅறையில் ஒரு பத்துக்காசும் கிடைத்தன. எடுத்துப் போட்டாள்.
சுப்பையா தன்னுடைய கிழிசல் பர்ஸைத் துழாவியபோது சில்லறைக் காசுகள் பதினைந்து காசுக்குத் தேறின.
எல்லாவற்றையும் வாய்விட்டு எண்ணத் தொடங்கினான் காமராஜ். கூட்டல் கணக்கில் அவன் சூரப்புலியாக்கும்! பலே! இன்னமும் பதினைஞ்சு காசு தான் வேணும்!” என்று முத்துப்பல் வரிசையை அம்பலப் படுத்திய வண்ணம் நடைக்கு ஓடினான்; பழைய அட்டைப் பெட்டியை எடுத்துப் பிரித்துக் கொட்டினான். சிதறிய கோவிக் குண்டுகளுக்கும் சினிமா நோட்டீஸ்களுக்கும் ஊடாக மூன்று காசுகளும் விழுந்தன. எப்போதாவது வாய் இளைத்து” வரும் வேளைகளிலே அம்மாவிடமோ அல்லது அப்பா விடமோ காசு வாங்கி ஏதாகிலும் வாங்கித்தின்டான் அவன், சில சமயங்களிலே, பொறுப்புக் கொண்டவனாக அந்தக் காசுகளைப் பத்திரமாகச் சேமித்து வைப்பதும் உண்டு. அவ்வகையில் மிஞ்சியவைதாம் இக்காசுகள்! எண்ணினான் பதினாறு காசுகள் சேர்ந் திருந்தன. சபாஷ் என்று கூவிய வாறு, ஒரு காசை மீண்டும் அந்தப் பழைய அட்டைப் பெட்டியில் போட்டுவிட்டு, பதினைந்து காசுகளை எடுத்துக் கொண்டான்; காத்திருந்த முப்பத்தைந்து காசுகளுடன் இணைத்தான். எல்லாவற்றையும் இனம்பிரித்து, திரும்பவும் எண்ணினான். “வள்ளிசாக அம் பது காசு இருக்கு. நான் போயிட்டுவாரேன் அம்மா. நான் போய் வாரேனுங்க அப்பா!’ என்று துள்ளிக் குதித்தபடி ஒடலானான். அவனா விளையாட்டுப் பிள்ளை?
இந்தச் சின்னப் பிள்ளைக்குத் தான் நாட்டின் பேரிலே எம்மாம் அக்கறை என்று பான்மை பூண்டு புன்னகை செய்தாள் மீனாட்சி.
வாஸ்தவம் தான்!” என்று பெருமையோடு ஆமோதித்தான் சுப்பையா. பெருமையில் பெருமிதம் சுடர் தெறித்தது.
“எழுதிக்கிடந்தால், நம்ப பயல் மணி தான்!” என்றாள் அவள். -
‘காமராஜ் பிழைச்சுக் கிடந்தால், உனக்குப் பயமே கிடையாது. மீனாட்சி! அவனுடைய வெளுத்த உதடுகள் துடித்தன.
அன்புக் கணவனை ஏக்கத்தோடு ஊடுருவினாள் மனைவி. மங்களம் பொலிந்த மஞ்சள் முகத்தில் கலவரம் சோக மேகமெனச் சூழ்ந்தது. அவன் பிழைச்சுக் கிடக்கட்டுமுங்க, அத்தான். அவன் பிழைச்சும் கிடப்பான்! சீரான வாழ்வுக்கு இந்த ரெண்டு செல்வங்களே போதுமின்றி திட்டமிட்டு முடிவு கட்டி மதிச்சு வாழ்கிற நம்பளோட பிரார்த்தனையைக் கட்டாயம் ஆத்தா மகமாயி ஈடேறச் செஞ்சிடுவாள். அந்த நம்பிக்கை உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் ரொம்பவும் உண்டுங்க. ஆனால் ஆனால்...? அவள் என்னவோ வாயெடுக்கத் துடித் தாள். ஆனால் சொற்கள் கூடினால் தானே?
சுப்பையா தன்னுடைய அழகான சுருட்டை முடிகளைக்கோதி விட்டபடி மீனாட்சியை ஆழ்ந்து நோக்கினான். அவளுடைய அன்பு மிக்க மார்பகத்தில் இழை ந்திருந்த அந்த மஞ்சள் தாலியை ஆதரவுடன் பற்றிக் கண்களிலே ஒற்றிக் கொண்டாள்; ஈரம் சுற்றியது. மீனாட்சி நம்பமகன் பிழைச்சுக்கிடந்தால் உனக்குப் பயமே இல்லைன்னு நான் சொன்னதை மனசிலே வச்சும்று குறியா ?- அவன் கெட்டிக்காரன். பிழைச்சுப் பெரியவன் ஆயிட்டா உன்னை அன்போடு காப்பாற்று வான், இல்லையா? அதை நினைச்சுத் தான் நான் இயல்பாய்ச் சொன்னேன். ஆனா நீயோ வேறே எதையோ நினைச் சுக்குமைகிறே! நான் தஞ்சாவூரிலேயும் சரி, இந்தப் பூவை மாநகரிலேயும் சரி, அடிக்கடி உன்கிட்டே சொல்லுற தில்லையா. நாம் நல்லதையே நினைக்கப் பழகிக்கிடனும் னு?... அது மாதிரி. நாம் நல்லதே நடக்கும் என்கிற ஒரு பரிசுத்தமான வைராக்கியப் பண் போடே காலத்தை தன்னம்பிக்கையோடு ஓட்டு வோம்! நீ பயப்படுறாப்பிலே என் உயிருக்கு ஒரு பயமும் இனி மேல் இல்லவே இல்லை, மீனாட்சி! ஆண்டவன் நம்மோ - நியாயமான பிரார்த்தனை களையும் நேர்மையான கன வுகளையும் கருணையோட செவிசாய்க்காமல் இருக்கவே மாட்டான் என்னை நம்பு, மீனாட்சி!’ -
உணர்ச்சிப் பெருக்குடன், பேசினான் சுப்பையா.
உங்களை நம்பாமல் இந்த மண்ணிலே நான் வேறே. யாரைத்தானுங்க நம்புவேன், அத் தான்?” என்று விம்மினாள் , சுப் பையாவுக்கு உடையது மீனாட்சி,
நெஞ்சைத் தடவி விட்டுக் கொண் டான் அவன்!
என்னவோ சத்தம் கேட்டது. எலிப்பண்ணை மீண்டும் படையெடுத்து விட்டதோ? கையிலும் காலி லுமாக இடமாய்த்துக் கொண்டிருந்த எலிப்படைகள் வெள்ளை’ வந்த நாளாக எங்கே தான் அஞ்ஞாத வாசம் செய்கின்றனவோ?-சனியன்கள்! சுப்பையா பானையடியினின்றும் மெதுவாக எழுந்தான். நீராகாரம் வேண்டவில்லை. மனம் நிம்மதியைப் பறிகொடுக்கும்போது, எதுதான் சுவாதினமாகப் படுகிறது? வேதனைப் பெருமூச்சோடு திண்ணைக்கு நடந்தான். காலை யில் அடுப்பைப் பற்றவைக்காமல் பிரமை பிடித்து அமர்த்து விட்ட துணைவியிடம், மீனாட்சி, இரண்டொரு நாளிலே நான் பிழைக்கப் போயிட்டதாக முடிவு செஞ்சிட்டேன். இனியும் உன்னையும் நம்புளோட ரெண்டு தங்கங்களையும் சோதிக்கிற துக்கு என் மனச்சாட்சி ஒப்பவே ஒப்பாது! விதிக்குப் பசி எடுக்குமோ, எடுக்காதோ? ஆனா, பசிக்கு விதி ஏது?’ என்று ஒரு தீர்மானச் செறிவுடன் அவன் உரைத்த முடிவும் அக் கணம் அவன் நினைவுகளிலே வைராக்கிய முத்திரை பதித் ததை அவனால் மறந்து விட முடியாதல்லவா? பூனை விழித்துக் கொண்டது.
அடுப்பு எப்போது விழித்துக் கொள்ளுமோ?
பழைய ஞாபகத்தில் இடதுகை மணிக்கட்டைத் திருப்பினான் அவன் பிறகு, வேதனை மல்க வெயிலைக் கவனித்தான். முற்றத்துக் கீழ்ப்புற வாசலை நெருங்கிக் கொண்டிருந்த வெய்யில் அவனுக்குக் காலத்தைக் கணக்கிட்டுக்காட்டியது போலும்! மகன் இனி மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து நிற்பானே? ...
“ஆத்தா!’ எங்கே போய் விட்டாள் மீனாட்சி? தட்டினால், திறக்கவேண்டும்!- இது விதி.
கையிலிருந்த செய்தித்தாளை வீசிவிட்டு நடந்து சென்று கதவைத் திறந்தான் சுப்பையா. காலையில செல்லையா கடையில் சாயா குடித்த போது குதிகாலுக்கு எத்துணை வல்லமை இருந்தது! தஞ்சாவூர் லெட்டர் இன்றைக்கேனும் வருமா?
வாசவில் தபால்காரன் நிற்கவில்லை.
அமுதா நின்றாள். கையில் பை, பையில் கொட்டாங்கச்சிகள், ஒழுங்கை மணல், ஒட்டை ரெயில்
“அப்பா, பிஸ்கட் தா!” என்று செல்லமாகச் சிணுங்கினாள்
அவன் நோக்கு தெருவுக்கு ஒடிய தருணத்தில், ராட்டை நூற்றுக் கொண்டிருந்த பெண்டுகள் காட்சி வளித்தார்கள். மீனாட்சியும் நூற்பாள். வாரம் எட்டு ரூபாய் கிட்டும். அந்த வருவாயும் தான் இந்த நாலைந்து மாதங்களாகப் போய்விட்டதே? மகளைப் பார்த்தார். கையை ஆவல் துள்ள நீட்டிய குழந்தையை ஆதரவுடன் தூக்கிக்கொண்டு, “வாம்மா, பிஸ் கட் தாரேன்! என்று சொல்லிக் கொண்டே சற்று வாசல் வெளியில் நின்றுவிட்டு, பிறகு, என்னவெல்லாமோ சிந்தித்தவனாக உள்ளே அடியெடுத்து வைத்தான்.
அமுதா படுசுட்டி இறங்கிக் கொண்டாள். பிஸ்கட் பாட்டுப் பாடலானாள்:
சுப்பையாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருப்பு கொள்ளாமல் வழிந்த காலமும் ஒன்று இருக்கத்தான் இருந்தது. காலம் மலையேறி விடலாம்; ஆனால் அந்தக் காலத்தின் சரிதத்திலே முத்திரை பதிந்த நிகழ்வுகள் மலைமேலிட்ட தீபங்களாகப் பிரகாசிக்காமல் இருக்க இயலுமா? தஞ்சாவூரிலே கீழவாசலில் இருந்த உயர் ரிட்ரேடிங் கம்பெனி ஒன்றில் அவனது படிப்பும் புத்தி சத்தியும் வாங்கிக் கொடுத்த மானேஜர் பதவி அவன் குடும்பத்தை அங்கே ராஜ போகமாகத் தான் வைத்துப் பேணியது. மானம் பேணி,'கெளரவம் காத்து வந்தான் அவன். அவனைப் பொறுத்த மட்டில் மிகமிக எளிமை வாழ்வு மேற்கொண்டான். அவனுக்குத் தக்க பிணைஇணை தான் மீனாட்சி. கட்டுச் செட்டாகத் தான் குடும்பம் ஓடியது காலமும் ஓடியது. காமராஜ் பிறந்தான். அப்பால் இந்த அமுதா ஜனனம். அஞ்சல் நிலையச் சேமிப்பு கரைந்தது. கடன், கைமாற்று என்கிற வியாபாரம் அவர்கள் வரை அனுபவிக்காத சோதிப்புகள் தான். ஆனால் குழந்தைகளைப் பொறுத்த அளவில் அளவிலா ஆனந்தம் அனுபவித்தார்கள் அவர்களின் நடைமுறை வாழ்வு கற்பித்த அனுபவங்கள். அந்த இரண்டு குழந்தைச் செல்வங்களோடு அமைதி காணப்போதித் தன சோதனை இல்லையேல் வாழ்க்கை ருசிக்காதோ?
ஒருநாள் டயர் கம்பெனி முதலாளி சுப்பையாவை
அழைத்தார். அப்போது அவன் மாத்திரம் தான் கணக்கு எழுதிக் கொண்டிருந்தான். சென்றான் மது விலக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நாள் தொட்டு அம்மாதிரியான இராக் காலங்களிலே சுப்பையா மிகவும் எச்சரிக்கையோடு இருப்பான். ஏனென்றால் முதலாளியைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். விதி தளர்த்தப்படும் போது, அந்த விதியையே சோதித்துப் பார்க்க முனைவதும் மனித இயல்பு தானோ? எஜமானர் காதோடு காதாக,
சுப்பையா. பஸ் ஸ்டாண்ட் வரை போயிட்டு வந்திடுங்க, இருபது ரூபாய் எடுத்திட்டுப் போங்க" என்று பூடகமாகப் பேச்சைத் தொடங்கி, பின், அவர் வழக்கமாகப் பருகும் , பிளாக் நைட்” மதுவின் பெயரையும் தெரிவித்தார்.
சுப்பையாவுக்கோ ஆத்திரம் சூடு பிறந்தது "உங்க கம்பெனியிலே இரு நூற்றைம்பது ரூபாய் கொடுத்து என்னை மானேஜராக நியமிச்சது உங்க கம்பெனியோட நிர்வாகத்தைக் கவனிக்கிறதுக்குத் தானே? இம் மாதிரியான ஈனச் செயல்களுக்கு பத்து இருபது கொடுத்து யாராவது ஈனப்புத்திக்காரனை எடுபிடியாக வச்சுக்கிடுங்க. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடணும்னு உங்க இனத்திலே சொல்லப்படுகிற வழக்கை நானும் அறிஞ்சவன் என்கிறதாலே தான் சொல்கிறேன். இதுநாள் பரியந்தம் என்னைச் சோதிக்காமல் இருந்த உங்க நல்ல புத்திக்குக் கும்பிடு போடணும் !” என்று சோளம் பொரியச் சொல்வி விட்டு, அத்துடன் நிற்காமல், தனக்குச் சேர. வேண்டிய சம்பளப் பாக்கியையும் வாங்கிக் கொண்டு அதற்கப்புறம் ஒரு கணமும் அங்கே நிற்காமல், மாநம் புச்சாவடி வீட்டுக்கு வந்து விட்டான்.
புயலின் காதை புரிந்தது மீனாட்சிக்கு. “பணம் ஒசத்தியில்லேங்க. நீங்க செஞ்சது தான் சரி. நமக்கு - நம்ப மாதிரி ஏழை பாழைங்களுக்கு இருக்கக்கூடிய விலை மதிக்க முடியாத செல்வம் நம்ப மானமும் கெளரவமும் தானுங்களே, அத்தான்!” என்று தேற்றினாள்.
அங்கேயே வேறிடத்தில் வேலை தேடிக் கொள்ள முயற்சி செய்தான் சுப்பையா. அப்போதுதான் அவனுக்கு விஷ ஜூரம் மூண்டு, பாயும் படுக்கையுமாகி, மீனாட்சியின் நகை நட்டுகளும் மிச்சம் மீத மிருந்த காசு பணமும் விதிச் சுழலுக்குச் சமர்ப்பண மாகிவிட நேர்ந்தது. பிறந்த மண்ணில் ஒய்வு கொள்ள வேண்டுமென்பது டாக்டரின் கட்டளை!
எதை மறப்பான்? எதை மறக்காமல் இருப்பான்?
இந்த லட்சணத்தில் வாழ்க்கை எப்படி விளையாட்டு ஆக முடியுமாம்? பொய்! வாழ்க்கை ஒரு தண்டனை!...ம்...!
"அப்பா, ரொட்டி!" என்று நாதம் கூட்டினாள் சுட்டிப் பெண். இடது தோள் பட்டையில் இருந்த கிழிசலை நாசூக்காக மறைத்துக் கொண்டாள்.
சுப்பையா இடுக்கியில் சிக்குண்ட கூண்டுப் புழு வெனத் துவண்டான். “இந்தா தாரேன் அம்மா!", என்று உருக்கமாகச் சொல்லிக் கொண்டே உள்ளே வந்து, ஆஸ்டர் மில்க் டப்பாக்களைத் திறந்து திறந்து மூடினான். ஒன்றிலேனும் சாஸ்திரத்திற்காவது ஒரு ரொட்டி, ஒரேயொரு ரொட்டி தரிசனம் கொடுக் காதா, தெய்வமே!
இத்தனை நாட்களிலே இப் படிப்பட்ட பயங்கரச் சோதனை ஒரு நாளில் கூட சம்பவித்ததில்லையே? வீட்டில் எஞ்சிக்கிடந்த வெள்ளிச் சாமான், வளைகள், ட்ரான் விஸ்டர், கடிகாரம் என்று எல்லாவற்றையும் புதுக்கோட்டையில் ரகசியமாக விற்றுப் பணம் பண்ணி, குடும்பத்தை ஒட்டிய கதையை அவர் களது வீட்டின் நான்கு சுவர்கள் கூட அறிந்திருக்க முடியாதே?
பழைய பல்லவியையே பாடி வீரிட்டது குழந்தை.
காலையில் தேநீர் அருந்தி விட்டு அருகிருந்த பெட்டிக் கடையில் பிஸ்கட் வாங்க காசைத் தேடினான். அவன். பை காலியாக இருந்தது. முன்பே தெரிந்திருந்தால், சாயா குடிக்காமல் இருந்திருப்பான் அவன். தின்பதற்கு ஏதாவது வாங்கியிருப்பான். அப்படி எத்தனையோ முறை செய்தும் இருக் கிறான் அவன். பசி வயிற்றைக் கிள்ளியது! இருமல் உயிரை வாங்கியது!...
என்னவோ ஒரு நினைப்புடன் மேலத் திண்ணைக் கொடியில் கிடந்த ஒரு பழஞ்சட்டையை எடுத்து உதறினான், சுப்பையா. ஒரேயொரு க்ளாக்லோ பிஸ்கட் விழுந்தது. என்றோ ஒரு தினம் வேண்டாம்’ என்று அமுதாவினால் நிராகரிக்கப்பட்ட அந்த ரொட்டி இப்போது ஆபத்துக்குக் கை கொடுத் தது; சுவை கொடுத்தது!
“அத்தான்! பிள்ளை குட்டிங்கன்னு ஆனப்புறம், தாம் நிதமும் குறைந்த பட்சம் பத்துப் பத்துக் காசாகவேச்சும் நம்மோட எதிர்காலக் குடும்பப் பாது காப்புக்கென்று சேமிச்சகச் சேர்த்து வைக்கப் பழகிக்கிட்டு வந்தால், ஆபத்துச் சமயங்களிலே எவ்வளவோ உபயோகப் படுமுங்க!’ என்பாளே மீனாட்சி அடிக்கடி!
மீனாட்சிக்குத்தான் எத்துணை தீர்க்க தரிசனம்: அவன் சமர்த்து யாருக்கு வரும்?
அவள் புத்திப்படி அவன் சேர்த்து வைத் திருந்ததெல்லாம் தான் அவ னுடைய பாழாப் போன நோய்க்கு அர்ப்பணமாகி விட்டதே!-இல்லையேல் அவன் மறு பிறவி கொண்டிருக்க முடிந்திருக்காது. சுப்பையா மட்டும் பைத்தியக்காரனா, என்ன...?
‘அமுதா, நாளைக்கு நான் வேலை தேடப் புறப்படப்போறேன். திரும்பினதும் முன் மாதிரி உனக்கு தின்கிறதுக்கு ஏராளமான முந்திரி பருப்பு, பிஸ்கட், ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு வாரேம்மா!'
"இன்னிக்கு?" என்று அடம் பிடித்தாள் குழந்தை வெறுங்கையை விரித்தாள். தின்ற ரொட்டியின் சுவடே தெரியவில்லை.
"அம்மா திரும்பட்டும். இப்பவே நான் ரோட்டுக்குப் போய் வாங்கி யாரேன்!"
"பக்கத்து வீட்டு பாமா மட்டும் சதா ரொட்டி தின்றாளே?”
"அவங்க புதுப் பணக்காரங்க"
"நாம்ப மட்டும் பழைய பணக் காரங்க இல்லியோ?”
அவனால் சிரிக்காமல் இருக்கக் கூட வில்லை. "ஊம்! நாம் பழைய பணக்காரங்கதானம்மா!"
உண்மைதான்!
சுப்பையா பெருங்காயம் வைத்த பாண்டம் தான் அதற்குச் சாட்சியம் சொல்லும் இந்த வீடு நிலைத்திருக்க வேண்டும்.
“ஆத்தா!...”
மறு பஸ்ஸில்தான் 'மெயில்' வந்திருக்கிறது.
சுப்பையா ஆவலோடு எதிர் நோக்கித் தவமிருந்த தஞ்சாவூர்த் தபால் வந்து விட்டது. அவன் எதிர்பார்த்த பிரகாரமே விஷயமும் பழம்தான் மீனாட்சி சென்ற வாரம் சொன்ன சோதிடம் நிஜமாகத் தான் இருக்கும் போலிருக்கிறது. குரு பெயர்ந்து விட்டானாம்.
சந்தோஷம் பிடிபடவில்லை. துன்பம் மட்டும் பிடிபட்டதா? ஊஹூம்! மனத்துக்கு உகந்தவளிடம். மகிழ்வுச் சேதியைச் சொல்ல நெகிழ்ச்சி பின்னிக் பின்னிக் காத்து நின்றான் அவன். நடைக்கும் வெளி வாசலுக்குமாக நடை பயின்றான். இடுப்பு வேட்டி 'பட்'டென்றது. எட்டு முழ வேஷ்டியைக் கண்டு இவ்வளவு நாள் தாக்குப் பிடித்தது. காந்திஜி என்ன, ஒளரங்கசீப் என்ன இவங்களெல்லாரும் தங்கள் கிழிசல்களை தாங்களே தானாக்கும் தைத்துக் கொண்டார்களாம்!” என்ற பீடிகையுடன் அவள் அவனுடைய வேட்டியைத் தைத்துக் கொடுக்க அதற்கு அவன் சமத் காரமாக, ‘மீனாட்சி நான் தைத் தால் என்ன, நீ ைதத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே?’ என்று ஒரு போடு போடவில்லையா?
தஞ்சாவூரில் பழ. மு. லேவா தேவிக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததும், முதலில் பிள்ளைகளுக்கு வேண்டிய தின்பண்டங்கள், துணிமணிகள் வாங்கியாக வேண்டும். பிறகு ஒரு வேட்டி, சட்டை வாங்க வேண்டும். ஊஹாம், முதலில் மீனாட்சிக்கு வாயில் சேலை வாங்க வேண்டும். மறுபடியும் தஞ்சையில், குடித்தனம் வைக்க வேண்டும். அங்கே வெள்ளைக்கு முன் போல வேளா வேளைக்குப் பால் வார்க்க வேண்டும்! ...
“அத்தான்!”
அதோ, மீனாட்சி வந்துவிட்டாள். அவலம் மிகுந்த துயரங்களை மாண்புமிக்க சகிப்புத் தன்மையோடு தன்னுடைய பற்களுக்கிடையே அடக்கிய வண்ணம், புன்னகை மென் மலரச் செவ்வதரங்களிலே துரவிய வளாக வந்து நின்றாள்; மீனாட்சி, நெற்றிப் பொட்டு எவ்வளவு பொலிவுடன் விளங்குகிறது!
"வா, மீனாட்சி" என்று இன்முகம் சுாட்டி முகமன் மொழிந்தான் சுப்பையா. உயிரின் மறு பாதியை உறுத்துப் பார்த்த அவனுக்கு நெஞ்சை அடைப்பது போலிருந்தது. வீசின கையும் வெறுங் கையுமாக நிற்கிறாள்! பாவம், அடுப்பு எப்போது புகையும்? - எப்படிப் புகையும் ? காமராஜ் வந்து நிற்கப் போகிறானே? அவன் இருந்தால் சாப்பிடுவான்; இருப்பதைச் சாப்பிடுவான். ஆனால் அமுதாக் குட்டி விதரனை தெரியாத சுட்டி ஆயிற்றே! பசி பொறுக்கமாட்டாளே என் ராஜாத்தி?
"அத்தாச்சி வீட்டிலேயேயும் அரிசி தட்டுப் பாடாம்" என்றாள் மீனாட்சி. "அத்தான், உங்களுக்குப் பசிக்குமே?" என்றாள் முந்தானை கன்னங்களுக்கு ஓடியது.
"உனக்கு மட்டும் பசிக்காதா? ராத் திரிகூட நீ சாப்பிடலையே? எனக்குத் தெரியும், மீனாட்சி. காலம்பற பிள்ளைங்களுக்கு வேணும்னு நீ ராத் திரி சாப்பிடாம இருந்திருக்கே. கஞ்சிப் பானை சொல்லிட்டுது!" நா தழு தழுத்தது.
"மனசு சரியில்லைன்னா, எதுவுமே மட்டுப்பட மாட்டேங்கிறது. எங்கேயோ கொஞ்சம் அரிசிக் குறுணை வச்சதாக ஞாபகம்" என்று தாய் வீட்டுக்கு விரைந்தாள் வாழ்வின் துணை!
அப்போது, யாரோ மீனாட்சியைப் பெயரிட்டுக் கூப்பிட்டார்கள்.
எட்டிப் பார்வையிட்டான்.சுப்பையா.
கீழத் தெருக் காமாட்சிப் பாட்டி வந்திருக்கிறாள். உப்பு புளி கடன் வேண்டியதாக இருக்கலாம்.
குரல் கேட்டு மீனாட்சி திரும்பினாள். “ஒரு ரூபாய்க்கு அவசரமாய் புளி வேணும். இந்தா ரூபா" என்று சொல்லி ஒரு ரூபாய்த் தாளை நீட்டினாள் கிழவி. "உங்க மரத்துப் புளி நல்ல காட்டமாய் இருக்கு மாக்கும்" என்றாள்.
"தெய்வம் தெய்வமாவே இருக்குது" என்று அமைதி கொண்டாள் மீனாட்சி. உணவுப் பிரச்னை திர்ந்து விடும் இப்போதைக்கு என்ற உணர்வின் அமைதியே அவள் பசியைக் கூட மறக்க- மரக்கச் செப்தது. கிழவியை அனுப்பி விட்டு, கணவனை நெருங்கினாள். "இந்தாங்க, ஒரு ரூபாய் இருக்கு. நீங்க கோயில் கடையிலே ஒரு லிட்டர் அரிசி வாங்கி யாறீங்களா? நான் அரிசி குறுணையைத் தேடி. எடுத்துக் கஞ்சி காய்ச்சுறேன். அவசரத்துக்கு ஆளுக்கு ஒரு லோட்டா குடிச்சுக்கலாம்" என்றாள் அவள் மார்பகம் எம்பி அடங்கிற்று.
"ஊம்" என்று பெருமூச்சுடன் சிரித் தான் சுப்பையா, வேட்டியை ஞாபகமாக புறம் மாற்றிக் கட்டிக் கொண்டான். டவலை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு புறப்படப் போனவன், மீனாட்சியிடம் அந்த நல்ல சேதியைத் தெரிவிக்கப் பின் வாங்கினான். அப்போது, அடுத்த வீட்டில் வானொலி கேட்டது.
"மீனாட்சி, மீனாட்சி" என்று ஆனந்தம் பொங்க விளித்தான்.
“என்னங்க!"
"ஒரு நல்ல சேதி தெரியுமா?”
“சொன்னாத்தானுங்களே தெரியும்?”
"நம் வங்க பந்து ஷேக் முஜ்பீர் ரெஹ்மான் ரிலீஸாகி வீட்டாராம். அவர் இப்போ லண்டனில் இருக்காராம்!”
"நல்ல காலம்!”
“யாருக்கு?”
"பாகிஸ்தானுக்கு!"
அந்தத் தலைவர் லண்டனுக்குப் போய்ச் சேர்ந்த விவரம் பற்றிப் பேச எண்ணமிட்ட சுப்பையா தனக்கு வந்த தஞ்சாவூர்க் கடிதம் பற்றிய நினைவு. பெற்று உடனே அந்த நல்ல சேதியை உரியவளிடம் முதலில் உரைத்தான்.
மீனாட்சி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள், சுற்றி வந்த வெள்ளைப் பூனை ஒன்றும் புரியாமல் விழித்ததை அவள் உணர்ந்தாள். பாவம், எங்களோடு சேர்ந்து இந்த வாயில்லா ஜீவனும் கஷ்டப்படுது.
"காலம்பற எப்படியாவது தோது பண்ணிக் கிட்டு தஞ்சாவூர் புறப்பட்டா கணும், மீனாட்சி!" என்றான் சுப்பையா.
அவள் இதழ்கள் துடிக்க, தலையை இணக்கமாக ஆட்டினாள். "நீங்க இப்படிச் சொல்றப்போ நான் என்ன சொல்வேனுங்க? அத்தான், சுவரை வச் சிட்டுத் தான் சித்திரம் வரையனும் நீங்கதான் எங்களுக்கெல்லாம் அச்சாணி. ஆகச்சே தஞ்சாவூர் போனடியும் பழைய டாக்டர் கோபால் இட்டே 'சோதனை' பண்ணிக்கிட்டு மருந்து சாப்பிடுங்க, இனியாச்சும் ஹார்லிக்ஸ் வாங்கிக் கலக்கி, சாப் பிடுங்க!... என்றாள். அவளால் தொடர்ந்து பேச இயலவில்லை.
"ஓ!"... அவன் புறப்பட ஆயத்தப்பட்டான், பையும் கையுமாக உள்ளங்கையிலே இருந்த அந்த ஒரு ரூபாய் விதி போல் நமட்டுச் சிரிப்புச் சிரித்ததோ, என்னவோ?...
அப்போது!
"சுப்பையா இருக்குதா?”
"யாரது?... ஒ , பிரசிடெண்ட் அண்ணனா?"
"வாங்க, உட்காருங்க!"
"இவங்க நம்ப ஹைஸ்கூல் வாத்தியார். அவர் கிராம சேவக்!”
"ஓ...வணக்கம்! வணக்கம்!"
"தம்பி உடம்பு ரொம்ப இளைச்சிட்டுதே?"
“நாலைஞ்சு மாசமாய் படுத்த படுக்கை ஆகிட்டேனே!”
"உடம்பைப் பார்த்துக்கிடுங்க, தம்பி!"
"ம்!"
"சாப்பாடு ஆயிடுத்தோ?”
"ஓ!"
காமராஜ் பசுங்கன்றாக வந்து நின்றான். புத்தக மூட்டையைப் போட்டுவிட்டு அடுப்படிக்கு ஓடினான். அன்னையின் கைச்சாடை கண்டு கம்மென்று நின்றான்.
“என்ன விசேஷமுங்க,அண்ணன்?” என்று விவரம் கோரினான் சுப்பையா, அவன் மனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணத் தலைப் பட்டது.
"தம்பி, தேசியப் பாதுகாப்பு நிதிக்கு வசூல் பண்ணிக்கிட்டிருக்கோம். அதுக்கு உங்க பங்குக் காணிக்கையையும் சேகரம் பண்ண வந்திருக்கோம். வார திங்கட்கிழமை கலெக்டர் கிட்டே கொண்டு போய்ச் சேர்க்கணும்... "ஓ , அப்படிங்களா?" சுப்பையா அப்படியே சிலையாகி நின்றான். உள்ளங்கையில் ஒளிந்திருந்த அந்த ஒரு ரூபாய் நோட்டு அவன் மனக் கண்ணில் நிழலாடியது. அந்த நிழலின் பின்னணியிலே. பசி விசுவரூபம் கொண்டு நிழல் காட்டியது. மறுகணம் அவன் தன் விழிகளை மூடினான்,
வீர பாரதம் தலைநிமிர்ந்து நின்றது.
பிறந்த பொன்னாட்டின் தாய் மண்ணைக் காத்திட, தருமத்தை நிலைநாட்ட, தங்கள் இன்னுயிர் களைத் தியாகம் செய்த வீரச்செம்மல்களின் அமர நினைவு சத்தியத்தின் ஓருருக்கொண்டு தலை திமிர்ந்து நின்றது.
மெய்ம் மறந்து நின்றான் அவன். அஞ்சலி முத்திரை வடிவம் கண்டது. அவன் தன்னுணர்வு கொண்டு கண் திறந்தான்; கண்கள் பொடித்தன.
பிறந்த பொன்னாட்டை நினைச்சு நன்றிக் கண்ணீரோடு பேசுற பேச்சு இது. தாய்த் திரு நாட்டுக்காக நான் மட்டுமல்ல. எங்க குடும்பமே எப்பவும் கடமைப்பட்டது என்கிற நடப்பையும் நான் உணர்ந்திருப்பவன். தேசப் பாதுகாப்பு நிதிக்கு உங்ககையிலே அள்ளி அள்ளிக் கொடுக்கணுமென்கிற மனசு இருக்குங்க, அண்ணன் ஆனா..ஆனா, இப்போதை என்னாலே இந்தச் சின்னஞ்சிறு தொகையைத் தான் கொடுக்க முடிஞ்சுது!” என்று உணர்ச்சி வயப்பட்டுச் சொல்லிக்கொண்டே மூடியிருந்த உள்ளங்கையைத் திறந்து, அதில் அம்பலக் கூத்துப் போல ஒளிர்ந்த அந்த ஒரு ரூபாய் நோட்டை ஊராட்சித் தலைவர் குலுக்கிய உண்டிப் பெட்டியிலே சமர்ப்பித்தான் சுப்பையா; கையெடுத்துக் கும்பிட்டான்.
விடை பெற்றார்கள், வந்தவர்கள்!
இப்போது சுப்பையா நழுவிக் கிடந்த பையை நோக்கினான். அமைதி கனிந்த திருஷ்டி!
மீனாட்சி மனம் விட்டுச் சிரித்தாள். "நாட்டுப் பாதுகாப்புக்கு நம்மாலான பங்கையும் நாம் செலுத்திட்ட வரைக்கும் நமக்கும் நிம்மதி தானுங்க, அத்தான்!. இந்தச் சமயத்திலே நம்ப வீட்டு டிரான்ஸிஸ்டர் நம்மகிட்டே தங்கியிருந்தாலாவது, கொஞ்ச நாழி பாட்டுக் கேட்டுக் கிட்டு பசியை மறந் திருப்பாங்க பிள்ளைங்க!... குழந்தைகளை வச்சுக்கிட்டு நீங்க கதை ஏதாச்சும் சொல்லிக்கிட்டு இருங்க, அத்தான்! நான் உள்ளே போய் அரிசிக்குறுணை இருக்குதான்னு சோதனை போட்டுட்டு ஓடியாரேன்!” என்று கூறி விட்டு உள்ளே விரைந்தாள் குடும்பத் தலைவி.
அந்தச் சமயத்திலே...!
தடாலென்று என்னவோ தரையில் விழுந்து நொறுங்கின அரவம் பயங்கரமாக ஒலி பரப்பியது.
அரவம் கண்ட பாங்கில் கதி கலங்கி உள்ளே ஓடினான் சுப்பையா.
சாதுவாக நின்ற வெள்ளைப் பூனையைச் சுற்றி மண் சில்லுகள் ஒட்டுச் சிதறல்கள் காட்சியளித்தன. அவற்றைச் சூழ்ந்து கிடந்தன பலவகையான நாணயங்கள்!
ஆஹா!...
“அத்தான் ஆபத்து சம்பத்துக்கு உதவுமேயென்று செலவுகளைச் சிக்கனம் பண்ணி மிச்சம் பிடிச்ச காசுகளை உண்டிக் கலயத்திலே அப்போ தைக்கப்போது போட்டுச் சேமிச்சு வைத் திருந்தது தான் இம்புட்டுப் பணமும்! நல்ல சமயத்திலே தெய்வம் கணக்கிலே வந்து அந்த உண்டியல் கலயத்தைக் காட்டிக் கொடுத்திட்டுதுங்க நம்பளோட அருமை வெள்ளை!..." மனம் கொள்ளாமல் பேசினாள் மீனாட்சி.
“ஓஹோ அப்படியா சமாச்சாரம்?...ம்... ஆத்தா!” வாய் கொள்ளாமல் சிரித்தான் சுப்பையா.
“அத்தான், கொஞ்ச முந்தி இந்த அதிசயக் கூத்து நடந்திருந்தால், நீங்க செப்பின மாதிரியே, தேசப் பாதுகாப்பு நிதிக்குக் கை நிரம்ப அள்ளிக் கொடுத் திருக்கலாமுங்களே?”
"வாஸ்தவம் தான். மீனாட்சி!"
குழந்தைகளுக்கு இனிமேல் தேவையானது கதையல்ல!...
✽ ✽ ✽