அமுதவல்லி/ஒரு மோகினியின் கதை
3. ஒரு மோகினியின் கதை
“அவள் தாசி. தாசிக்குப் பெயர் இல்லாமல் இருக்குமா? பெயர்: மோஹினி. ஆம்! மோஹினியே தான்! மோகம் நிறைந்து. கிளைத்து, முகிழ்த்துக் கிடந்த அவளுடைய கண்களில்-கன்னக் கதுப்புகளில் நெஞ்சு வெளியில் நான் போதை கொண்டு, 'அவளே சதம்’ என்று அதனால் தான் விழுந்து கிடந்தேனோ? நான் ஏன் அப்படி ஆனேன்? முன்னைப் பழவினையின் மூட்டம் விலகி. இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து விட்டிருக்கிறதே? ஆமாம்; அப்படித்தான் விதித்திருக்க வேண்டும்! இல்லையென்றால், அவள் மோஹினி என்ற பெயருடன் என் உடல், பொருள், ஆவி ஆகிய சகலத்தையுமே சுவீகரித்துக் கொண்டு விட்டிருப்பாளா?... மெய்தான்! அவள் மோஹினியே தான்! மோஹினி என்றால், சாதாரண மோஹினியா, என்ன? பத்மாசூரனை அழிக்க திருமால் எடுத்த அவதாரத்துக்குப் பெயர் கூட மோஹினி அவதாரம் தானே?
அவள் தெய்வமா?
அவ்வாறென்றால், நான் அரக்கனா?
ஊஹூம்!
அவள் தான் அரக்கி!... அவள் தான் பிசாசு!... மோஹினியா அவள்?...பேய் பெண் பேய்!...”
என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லவா? அதே போலத் தான். அந்த மனிதரும் எனக்குப் பழக்கமானார். அதாவது, என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். தொடக்கத்தில் பிரவாடிக் குரல் எடுத்து பித்துப்பிடித்த பாங்கினிலே அதோ கதறிக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பற்றித் தான் இத்துணை நேரமாகக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் மாதிரி நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இந்தத் தமிழ் மண்ணில் முளைத்து விட்டிருக்கையில், என்னை மட்டிலும் அவர் ஏன் சந்திக்க வேண்டும்? போகட்டும். எப்படியோ சந்தித்தார், சந்தித்தவர், என்னைக் கண்டு பேசிப் பெருமைப்பட்ட பெருமையுடன் விடைபெற்றிருக்கக் கூடாதா? அவர் தம் கதை முழுவதையும் அடி தொட்டு முடிவரைக்கும் எதற்காகச் சொன்னார் ? அந்தத் துன்பமிகு கதையை நான் எதற்காகக் காது பொருத்திக் கேட்டேன்?
அவரை உங்களுக்குத் தெரியாது!
அவர் பெயர் : மணிகண்டன் லகாரத்தில் எண்களை உருட்டி, இருப்புப் பெட்ட கத்திலே விளையாடித் திளைத்த நபர் அவர். பட்டுச்சட்டை, பட்டும் படாமலும் நின்ற வெகுளித்தனம். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் சீமான் வீட்டுப் பெண்கள் “நான்...நீ என்று போட்டி போட்டார்களாம், ஏன் என்று புரியவில்லையா?-அவரை மணவாளனாக அடையத் தான்! எல்லாம் இருத்தும், 'சிருஷ்டி முடிச்சு' என்று ஒன்று இருக்கிறது. பாருங்கள், அந்தத் தொல்வினைப் பயன் அவரது மண்டையைத் திருகிக் குடைந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் தான். அவர் ஆடுதுறையிலிருந்து திருக்கோகரணத்திற்குப் பயணப்பட்டார்.
அப்போது, புதுக்கோட்டை சமஸ்தானமாக விளங்கிய நேரம்.
திருக்கோகரணத்தில் தான் “தசரா விழாவிற்கு முத்தாய்ப்புக் கிடைக்கும். மன்னர் பிரான் அம்பெய்து முடிந்து, அன்னை பிரஹதாம்பாளின் தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும், சதங்கைகளின் காதற்பண்ணுக்கு தம்முடைய இளமை மனம் தஞ்சமடைந்த விந்தையினை அவரது உள்ளத்தின் உணர்வு எடுத்துச் சொல்லக் கேட்டார். அவரையும் அறியாமல், அவரது கால்கள் வழி நடந்து முன்னேறின. கோயில் நடன மண்டபத்தில் ஆடலழகியைக் கண்டார். மோஹினி என்பது அவள் பெயரென்பதையும் கேட்டுக்கொண்டார். திரும்பி விட்டார் எப்படித் திரும்பினார்? அவளது நல்லெண்ணத்தைச் சுமந்த பெருமிதத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு தான் திரும்பினார் மணிகண்டன்.
அவரைப் பற்றிய காதற் விளையாட்டுகளுக்கு முன் னுரை வேண்டுமானால், அவரிடமிருந்து நான் பெற்றுக் கொண்ட அந்தக் காதற் கடிதத்தை நீங்களும் பார்த்து விடுவதுதான் உசிதமாகும்.
"உயிருக்கு உயிராகிவிட்ட மோஹினிக்கு மணிகண்டன் எழுதுவதாவது:
உபயஷேமம்.
இப்பவும், உன்னைப் பார்த்தது முதலாக, எனக்கு என் மனசானது வசம் இழந்து தவிக்கிறது: தவியாய்த் தவிக்கின்றது.
ஆடுதுறைப் பண்ணை என்றால், நண்டு சுண்டு கூட அறியவேண்டும். அப்படி ஒரு மகத்துவம் எங்கள் குடும்பத்துக்கு. இது பாரம்பரிய ரீதியான ஒரு செல்வாக்கு. இந்தச் செல்வாக்குக்கு உள்ள சகலவித மான சம்பத்துக்களுக்கும் நானே தான் ராஜா; உடைமையாளன் . இவைகளை நான் துச்சமென்று மதிப்பவன். ஆனால் நீ எனக்கு உயிர். உனது உயிர் எனக்கு உலகம். உன்னுடைய சந்தோஷமே எனக்கு கடமை. நான் படித்தவன். ஆகவே, பண்பும் இருக்கிறது. என்னை நீ நம்பவேண்டும். இந்த ஒரு லெட்டரை அடியில் கையொப்பம் இட்டிருக்கக்கூடிய என்னுடைய இந்தக் கடுதாசியைக் கொண்டே நீ என்னை பின்னால் மடக்கவும் மடக்கலாம், பார்த்தாயா? நானே உனக்கு வழியையும் காட்டுகிறேன். ஆக, என் மனசை நீ புரிந்து கொண்டதாக நான் உன்னிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால், உண்மையாகவே நான் ரொம்பவும் மகிழ்ச்சி கொள்வேன்.
மாதவியைக் கண்டவுடன் கோவலன் எப்படி நினைத் திருப்பானோ, எனக்குத் தெரியாது, ஆனால் உன்னைப் பார்த்தவுடன் , பிறவிப் பயன் எடுத்ததன் தாத்பரியம் எனக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது.
மற்ற விவரங்களை நேருக்கு நேராகப் பேசுவது தான் சிலாக்கியம்.
இப்படிக்கு,
மணிகண்டன்."
மணிகண்டன் அத்துமீறிய குதுகலத்தோடு மோஹினியைச் சந்தித் தான். அவளை அவன் பார்த்தபோது, மஞ்சள் வெயில் மயங்கி வந்தது. அவளுடைய போதம் பூத்த போதை விழிகளின் கிறக்கத்தினால், அவனும் மயங்கித் தான் போனான். பிள்ளையாய்ப் பிறந்த எவனும் அவளுடைய அழகுக்கு அடிமையாகாமல் இருப்பானா? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை, அவளை நானும் தான் சந்தித் திருக்கிறேன். அது ஒரு தனிக் கதை, அது போய்த் தொலை யட்டும். எதற்கு இந்தப் பேச்சு வந்தது?. ஒஹோ!... சரி. அவ ளுடைய எழிலை மெய்ப்பிக்கச் சொன்ன பேச்சாகி விட்டது!
ஆம்: அவள் அப்படித்தான் ஈடு எடுப்பற்ற அழகுடன் விளங்கினாள். இத்துணை லாவண்யம் பெற்றிருப்பதையே ஒரு பாக்கியமாகவும், அந்தப் பாக்கியத்தையே ஒரு வரப்பிரசாதமாகவும் அவள் கருதி யிருந்தாள். இதில் தவறு இருக்க முடியுமா? அந்த அழகுக்கும் மகத்துவம் பிறந்தது. மணிகண்டன் அவளுக்கு உண்டான ரூப அழகை உபாஸிக்கத் தயாரானான். அதற்காகத் தானே இவ்வளவு தூரம் அவன் ஓடிவந்தான்!
அந்தி முல்லையென வந்து நின்றாள் மோஹினி.
அவளை உள்ளத்திலிருந்து வெளியே எடுத்துப் பதுமையாக்கி அழகு பார்த்து ரசித்துக் கொண்டி ருந்த மணிகண்டன் அவளை நேரில் கண்டதும், ஒரு சில வினாடிகள் தடுமாறினான். புது இடம், புது உணர்வுகள் ஆட்கொண்டிருந்த வேளையுங் கூட, இருக்கத் தானே இருக்கும்? -
“மோகினி!.. இல்லை! மோஹினி" என்று உச்சரித்தான் அவன்.
அவள் நகையொலியில் நாணம் பூத்தது. 'மூக்கு பில்லாக்கு' ஆடி அசைந்தது. செக்கச் சிவந்த உதடு களின் கங்குச் சிவப்பு பிர மாதமாக இருந்தது.
பூசனைக் கூடத்திற்கு அவனை அவள் அழைத்துச் சென்றாள். நாட்டிய உடுப்புக்கள் திகழ நின்றாள் அவள். அவனுடைய சரமாரியான பேச்சு வார்த்தைகள் தேனில் வீழ்ந்த ஈயின் நிலைக்கு நேராக இன்பத் தவிப்பில் இருந்தன.
“எங்கள் குலத்தில் இந்தப் பழக்கம் கிடையாது. ஆனால் நான் இம்முறையை கைக் கொள்ளுகிறேன். நான் புதுப்பூ. என் தூய்மையைப் பற்றி தாங்கள் அறியவேண்டும். இன்று உங்கள் வாக்குப் பிரகாரம் வரவில்லையென்றால், என் புனிதம் அழிந்துபட்டிருக்கும். என்னுடைய பதினான்கு நாள் கன்னி நோன்பு இன்றிரவோடு கழிகிறது. நோன்பு முடிந்ததும், அம்பலவாணனின் சந்நிதியை மன சில் இருத்திக் கொண்டு ஆடுவேன். நீங்களும் இருக்க வேண்டும். நீங்கள் மன நிம்மதியுடன் இருக்கலாம். என்னை வளர்த்த மாமாவிடம் எல்லாச் சமாசாரத்தையும் சொன்னேன். உங்கள் தபாலையும் காண்பித்தேன். எங்கள் வழக்கப்படி, நான் 'பொட்டு' கட்டிக் கொள்ள விரும்பாத நிலையை பல நாள் முன் னிருந்தே கவனித்து வருபவர் என் மாமா. ஆகவே, இப்போது என் மனசுக்கு ஏற்றபடி சம்பவித் திருப் பதிலிருந்து, இது ஏதோ தெய்வானுகூலமாகவே இருக்க வேண்டுமென்று கருதுகிறார். இன்றிரவு நீங்கள் இங்கேயேதான் தங்கவேண்டும்!”
இவ்வாறு அவள் மொழி பறித்து, விழி பதித்துச் சொல்லிய சடுதியுடன், ஓவல் கொண்டு வந்தாள். அவன் கோப்பையைக் கை தூக்கி வாங்கிக் கொண் டான். அப்போது அந்த ஈ ஓவல் கோப்பையைச் சதமடையுமென்று அவன் எப்படி அனுமானம் செய் திருப்பான், பாவம்?
‘ஆஹா மோகினி என்ற பெயர் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! ஆசையோடு அவள் தந்த பானத்தை ஆர்வத்தோடு குடிக்க விழைந்து ஆனந்தத்தோடு கை நீட்டிய நேரம் பார்த்துத் தனா, அந்த ஈ அதில் விழுந்து தொலைக்க வேண்டும்? ஐயையோ!... என் வாழ்வே சிதைந்து விட்டதே?. என் மனமே சித்தம் குலைந்து விட்டதே: நாடகக் கலைஞன் போன்றிருந்த அந்த ஆணழகன் கார்? அவன் துள்ளி வந்து அவளது பூங்கரம் பற்ற வேண்டுமென்றதால், அதற்கும் கதை - காரணம் என்று ஒன்று இருக்கத் தானே வேண்டும்?...மோஹினி 'இரு மனப் பெண்டிர்' இனத்தைச் சார்ந்த விலை மகள் என்பதை மெய்ப்பித்து விட்டாளோ? ....
தேதிப்படத் தாள்கள் கபளிகரம் செய்துவிட்ட காலத்தின் பத்தாண்டுச் சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பவர்கள் என்னைப் பற்றியும் கட்டாயம் அறிந்து வைத்திருப்பார்கள்.
“இவ்வளவு தூரம் என்னைப் பற்றிப் பிரமாதப் படுத்திக் கொள்ளுகிற நான், இந்த நண்பர் மணிகண்டனைப் பற்றி அப்படிப் பெரிதாக எவ்வளவு தொலைவு புரிந்து கொண்டிருக்கிறேன்?. இந்த ஒரு கேள்வி எழுந்து, எழுந்த அவசரத்திலேயே என்னைத் திக்கு முக்காடவும் செய்து விட்டது. காரணம் இல்லாமல் இல்லை :- மோஹினி நல்லவள். பெண் மனத்தின் மெல்லிய உணர்விழைகளால் வண்ணமும் இதயப் பரிசுத்தத்தால் சுகந்தமும் இரண்டறக் கலந்து விளங்கியவள். அவளைப் பற்றிய என்னுடைய கணிப்பு இது. இப்படியிருக்க, அவளைத்தாறு மாறாக அவன் ஏசலாமா? பேசலாமா? தூற்ற லாமா? காற்றில் தூற்றப் பெற்ற உமியென நினைவு பாடிப் பறக்கத் தலைப்பட்டது. என் தலை கனத் தது. தலைவலி, அவ்வளவே!
சந்தேகம் என்ற சூதுக்குணம் இருக்கிறது பாருங்கள், இதுதான் வாழ்க்கை நாடகத்திற்கே ஒரு வில்லன், சந்தேகத் தூசி படிந்து, கண் மறைந்து, கண் மறைத்து போன கதைகள்-வாழ்வியல் சித்திரங்கள் எத்தனை எத்தனை என்றுதான் உங்கள் எல்லோருக்கும் மனப்பாடமாயிற்றே?
'சந்தேகம்'-இதுவே தான் ஒருவேளை, சிருஷ்டிக்குச் சூத்திரமாக இருக்குமோ?
எனக்கென்னவோ, இந்த விஷயத்திலே துளியந்தனைகூட விசுவாசம் இருப்பது கிடையாது!
நாடகக் கலைஞன் போன்றிருந்த ஓர் ஆணழகன் மோஹினியின் பூங்கரத் தொட்டுவிட்டானாம்! மணி கண்டன் பிரலாபிக்கின்றான். கை தொட்டதால், உரிமை பறிபோய்விடுமா?...உறவு துண்டிக்கப்பட்டு விடுமா?
பாவம், அவள் கொடுத்த பானத்தில் ஈ ஏன் விழுந்து தொலைத்தது?...
'கனவுகளின் கருத்தாழம் இன்னதென்று விளங்கிக் கொள்ள மாட்டாத அந்த ஓர் ஈ என்னுள் வளர்ந்து, வளப்பமுற்றுத் தழைத்துச் செழித்த காதலெனும் கனவுகளைப் பொய்யாக்கி விட்டதே?... வாழ்வாகி நிற்பாள் மோஹினி என்று இருந்தேன். ஆனால், அவளது உதாசீனம் என்னைத் தாழ்நிலைக்குத் தள்ளி விட்டதே?... முதன் முதலில் நான் உங்களுக்குப் பானம் அருளினேன். அதில் ஈ வந்து இப்படி விழுந்து விட்டது. இதை ஓர் அபசகுன மாகவே நான் கருதுகிறேன். தெய்வத்தை எண்ணிப் பிரார்த்தனைப் பாடலுடன் உங்கள் முன் நடனமிடத் திட்டம் புனைந்திருந்தேன் நான். கடைசியில் அனைத்தும் பாழாகி விட்டன. என்னை மன்னியுங்கள்” என்று கூறிவிட்டாளே அவள்!
அந்த ஆணழகன் நாடகக்காரன் அல்லனாம் யாரோ ஒர் ஓவியனாம். இயற்கைக்கும் செயற் கைக்கும் பாலம் சமைக்க கடவுள் அனுப்பிய தூதுவனாம் அவன், பெயர்: சுந்தரன். சுந்தரமாகவே இருந்தான். என்னுள்ளே புனையா ஓவியமாகி எழில் காட்டும் அந்தப் பாவையை அவன் சித்திரமாக்கப் போகிறானா?...என் ஒருவனுக்கே உடைமையாக வேண்டுமென்ற லட்சிய நிழலில் ஒதுங்கி இருந்த என்னை ஒதுக்கிவிடவே தான் அவன் இப்படித் தோன்றி விட்டிருப்பானோ? இருக்கும், யார் கண்டார்கள்?
ஆ! என்ன சத்தம், கும்மாளம்? அடைபட்டுக் கிடக்கின்ற கதவுகளைத் திறந்து கொண்டு, அடைபடாமல் வெடித்துச் சிதறி ஓடிவருகின்ற அவர்கள் இருவரின் சிரிப்புக் கலவைக்குப் பெயர் என்ன? நான் என்ன கண்டேன்?...
எனது சேமநிதிக்குப் பொருள் இருக்காதா இனி மேல்?
அதோ, கனவுகள் திறக் கப்படுகின்றன. மோஹினியின் கைகளிலே எத்தனை விதமான ரூபாய் நோட்டுக்கள்!
அவள் பெண்ணா? அவள் கொடுத்த பானத்தை எவ்வளவு ஆர்வத்துடன் குடித்தான். அந்தச் சுந்தரன்?
பின், ஏன் இப்படி மயங்கிச் சுருண்டு நிலைதப்பித் தரையிலே சாய்ந்து விட்டான்?
மோஹினி வாஸ்தவமாகவே மோஹினிப் பேயோ?
மோஹினி இவ்வளவு கெட்டிக்காரியா?...
தேனில் விழுந்த ஈயாக உருவம் எடுத்து வந்து நின்று அவளைப் பார்த்தான் மணிகண்டன், “என்னையே நொடிப் பொழுதிற்குள்ளாக அழித்து ஒழித்து விடப் பார்த்தாயே, மோஹினி?" என்று தழுதழுக்கக் கேட்டான்.
அவன் பிறப்பித்த வினாவைச் சட்டை செய்யாமல், அவனையே உறுத்துப் பார்த்தாள் அவள். பிறகு, மெல்லுணர்வுச் சிரிப்பை உதறினாள்.
அவனுக்குத் தலைகால் புரியாத மகிழ்வு. அவனைப் பார்த்து அவள் சிரித்துவிட்டாளல்லவா? உடனே, அவள் நின்ற பக்கமாக கால்களை எடுத்து வைத்து நடந்து, பதவிசுடன் அவளுடைய காந்தள் மென்விரல்களைத் தொட்டு, ஏதோ சொல்ல வாயெடுக்க விழைந்த வேளை கெட்ட வேளையாக இருக்க வேண்டும். காரணம் இதுதான்: பாவம், அவன் தன் வலது கன்னத்தைத் தடவித் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். விரல் நகங்களில் ஈரம் சொட்டியது. ‘மோஹினி!’ என்று அடித் தொண்டையில், சுவடு தெரியாமல், கூப்பிட்டான்.
அவள் பொருட்படுத்தாமல், தரையை நோக்கிக் குனிந்தாள். மேலாடை விலகி விழுந்த அழகை வெறி பாய்ச்சி ரசித்தான் மணிகண்டன், மோகம் தலைக்குச் சாடிவிட்டிருக்க வேண்டும். மறுபடி, அவள் முகம் விழிநோக்கில் பட்டதும். பட்டு வெட்டப்பட்டது போல, நறுக்கென்று தலையைத் தாழ்த்திக் கொண்ட போது, அவள் கையில் கடிதமொன்று தவழக் கண்டேன்.
“இந்த ஓவியனும் சுத்தப் பைத்தியமோ?" என்ற சொற்கள் துலாம்பரமாகக் கேட்டன.
நெருப்புச் சுட்டது போலிருந்தது அவனுக்கு: மயங்கி விழுந்த அந்தக் கலைஞனைப் பற்றிக் கருதி, அவனுக்காக அனுதாபப்படும் நிலையிலா மணிகண்டன் இருந்தான்?
"மணிகண்டன், உங்களுக்குப் பழைய புராணம் நினைவிருக்குமா? சீதை தன் கற்பை உலகுக்கு உணர்த்த தீக்குளித்தாளல்லவா? அது போல, உங்கள் புனிதத்தை என் முன் நிரூபிக்க, நான் அமைக்கும் சோதனைக்கு நீங்கள் உட்பட வேண்டும்: அதோ பாருங்கள், அழகர்கள் பட்டாளத்தை!...” என்று கருவம் இழையோட, வீரப் பெரு மிதத்துடன் சொன்னாள் மோஹினி.
சித்தம் குலைந்தான் மணிகண்டன்.
ஐந்தாறு புதுக் கார்கள் வாசல் முகப்பின் நிழலில் வந்து நின்று ஓய்வு பெறலாயின!
"திருக்கோகர்ணத் தெய்வத்தின் கழலடிகளே சதம் என்று தஞ்சம் அடைந்து கிடந்தேன் நான். ஊர்-உலகம் எதுவுமே எனக்கு மட்டுப்பட மறுத்தது. என்னுடைய வாழ்வும் வளமும் மோஹினிதான் என்று கோட்டை கட்டியிருந்தேன். பைத்தியக்காரன் நான். என்னிடம் தஞ்சம் புகுந்திருக்கின்ற சேமநிதி முழுவதும் தான் என்னைப் பைத்தியக்காரனென ஊருக்கு அம்பலத்திவிட்டது வேண்டும், எனக்கு இன்னும் வேண்டும்!... மை விழி மாதிடம் நான் மையல் கொண்ட மாதிரியாகவே, அந்தத் தையலும் என் பேரில் காதல் கொண்டிருக்க வேண்டுமென்று நான் எண்ணினேன்; இறுமாந்தேன்; எக்களித்தேன்; ஏகாந்தேன்.
கடைசியில், என்னுள் பிறந்த அகந்தை என்னையே 'துவம்சம்' செய்துவிடத் துடித்துக் கொண்டிருக்கிறதே! என் துடிப்பை துடிப்பின் உயிர்ப்பை உயிர்ப்பின் பொருளை நான் அறிந்து அலறிப் புலம்புகிறேனே. உன் செவிகளில் இவை கரை சேரவில்லையா, தாயே?
அவள் தாசி. நிரூபித்து விட்டாள்.
கோவலன் - மாதவி கதையை நான் படித்திருக்கவில்லை யென்றாலும், அவர்களது கதையை நாடக மேடையில் கண்டு களித்திருக்கிறேனே? ஆமாம்; அந்தக் களிப்புத்தான் போதையாக மாறி விட்டது. மாதவியைப் பொறுத்த அளவில் அவளது போதையில் போதம் அவிழ்ந்த தாம். சொல்லக் கேட்டது உண்டு. ஆனால், இந்த மோஹினி யார்?...
நான் அவளை ஆளவேண்டுமென்று கனாக் கண்டேன். இதோ, அவளே இப்பொழுது என்னை ஆண்டு கொண்டிருப்பது போதாதென்று என்னை அழித்து. என் அழிவில் அவள் தனக்குகந்த புதுச் சரித்திரத்தைச் சமைத்துவிடக் காத்திருக்கிறாளே?...
தாயே! நீ எங்கு இருக்கிறாய்?...
என்னவோ, எனக்கு இந்த மோஹினியின் இருப்பிடக்கூட புலப்படக் காணோமே?...
காதல், காதல் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்களே, காதல் என்றால் என்ன அர்த்தமென்று உங்களில் யாருக்காவது தெரியுமோ? எனக்குக் 'காதல்' என்கிற இந்த வார்த்தை தான் பழக்கமே தவிர, காதலின் உருவத்தையோ, இல்லை, காதலின் உள்ளத்தையோ அறிந்தவன் அல்லன்...!
காதல் எனில், சித்த பேத நிலை சேமித்துக் கொண்டிருக்கும் மூலதனம்!
கற்பனையின் அடி மனத்தில் விடிகின்ற தெய்வீக சக்திக்கும் பெயர் காதல்தானாம்:
மனக் கிறுக்கின் பிணவாடையின் நெடுமூச்சு உதிர்க்கும் முன்னைப் பழவினையின் விட்டகுறை - தொட்ட குறையின் விடுபடமுடியாத ஒரு வகையான சலன புத்தியே காதல்!
காதல், காதல், காதல்!
காதல் இன்றேல் சாதல்!
காதலாம்..! சாதலாம்...!
சே
உலகம் கேடு கெட்டது!
உலகத்தைச் சொல்ல நான் யார்?
ஒன்றை மட்டும் சொல்லுவேன்.இந்த மணிகண்டன் இருக்கிறான் பாருங்கள், அவன் சுத்தப் பைத்தியக்காரன்.
அவன் அவளைக் காதலித்திருக்கக் கூடாது.
பாத்திரமறிந்து பிச்சை ஏற்கத் தவறி விட்டான் அவன்.
உண்மையாகவே, அவன் அவள்பால் காதல் வசப்பட்டிருந்தால், காதல் தோற்ற சடுதியிலேயே செத்து மடிந்... வேண்டாம். அவன் சீமான் மகன். சீமாட்டி ஒருத்தி அவனுக்கு 'முன்றானை விரிக்க' எங்கேனும் ஒரு பகுதியில் பிறந்து, பார்வதி இயற்றிய "உசிமுனைத் தவம்" மாதிரி அந்த மானுடப் பெண்ணும் இவனுக்காகத் தவம் பண்ணிக் கொண்டுதான் இருப்பான்; இருக்க வேண்டும், இது வாழ்வின் உட் பொருள் தத்துவம்! -
யார் அழைக்கிறார்கள்?... சைந்நொடிப் பொழுது எனக்காகக் காத்திருப்பீர்களா நீங்கள்?
ஊம்!
சித்திரம் தீட்டும் இளைஞன் அவன். தன் மனச் சித்திரத்தை அலங்கோலமாக்கிக் கொண்டு வந்தான். என்னைப் பேட்டி கண்டான்.
வாழ்க்கைக்கும் வறட்டுச் சிரிப்புக்கும் ஏனோ என்னால் பாகுபாடு காண முடிவதில்லை. பாவம், இந்த ஓவியனைப் பாருங்கள்:
மாரனுக்குத் தம்பியெனத் தோன்றுகிறான். ஆனால் அவன் விழிகளில், இதயம் தோற்ற வேதனை ஊறித் தளும்புகிறது. மனக்குமுதம் குவித்திருந்த விந்தையை என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.
தூரிகையைச் சுற்றிக் கொண்டது பேனா.
அந்த ஓவியன் தன் காதல் கதையை ஆதியோடந்தமாகச் சொன்னான்:
“ஐயா, தாங்கள் பெரிய எழுத்தாளர். ஆகவே, இந்தச் சித்திரக்காரனின் சிந்தையைப் பற்றியும் உங்களால் படித்தறிய முடியுமென்பதில் எனக்குத் தினையளவு சந்தேகங்கூட தோன்ற நியாயம் இல்லை; என் உயிருக்கு நான் கைப்பிடித்திருக்கும் இந்தத் தூரிகைதான் உயிர். ஆனால் என் மனமோ, ஆடற் கலைக்குப் பெருமை தேடித் தரவல்ல இந்தப் பொற்பதுமை மோஹினியைத் தான் என்னுடைய தூரிகையாகக் கொள்கிறது. இவள் இல்லையேல் என் வாழ்வு இல்லை. ஆனால், இவளோ, நான் இணைந்தால், தனக்கு வாழ்வு சித்திக்காதென்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். பெண்ணுக்குரிய கற்பு நிலை ஆணுக்கும் உரித்தானது என்பதை தான் அறிவேன். என் கலையே இப்போது என் புனிதத்துக்கு ஊறு செய்துவிட்டது. அவள் என்னை ஐயப்படுகிறாள்! விசாகத் திருநாளன்று ஒருமுறை மோஹினிப் பாவையின் மோகம் முகிழ்த்த நாட்டியத்தை ரசித்தேன். விளைந்தது வினை. அதுவே எனக்கு வாய்த்த கால வினையா, ஐயா?...நான் இனிமேல் அழிந்து பட்டவன் தான். அட்டியில்லை; என் கன்னங்களில் பட்ட அவளது தெய்வ மணிக்கரங்களின் இன்ப ஸ்பரீசம் பதித்த தழும்புதான் எனக்குத் தேறுதல் சொல்ல வல்லது; நான் வருகிறேன். தான் உங்களிடமிருந்து விலகிச் சென்றவுடன், இந்தத் தபாலை உங்கள் பக்கம் நெருக்கிக் கொள்ளுங்கள்!”
கட்டறுத்துக் கொண்டு, காடு மேடு தெரியாமல் திட்டுடைத்து, கரை அரித்துப் பாயுமே ஆடி வெள்ளம், அதை ஞாபகப்படுத்தக்கூடிய வகையில் அவனது நேத்திரங்கள் புனல் கக்கின.
“அன்பின் ஒவ்வொரு செய்கையும் வாழ்வுக்கு மகிழ்வையே கொணரும்!’ - வாழ்வியலைக் கற்றுத் தேர்ந்த தத்துவஞானி விவேகானந்தர். உங்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும். அவரது தங்கமான உதாரணம் இது,
என்னை ஒரு சிலர் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். அவர்களது அறியாமைக்காக தான் வருந்துவதை விடுத்து, அவர்களுடைய மதி தப்பிய செயல்களுக்காகப் பழி வாங்க ஒப்புவது கிடையாது இந்தப் பேனாவைப் பிடிக்கும் வேளை களில் நான் என் சொந்த விருப்பு வெறுப்புக்களை மூட்டைகட்டி வைத்துவிட விழைபவன். ஒரு சம்பவம் நினைவுக்கு வழி திறக்கிறது. நண்பர் ஒருவர்: எழுத்தாளர்தான், நிரம்ப உதவியிருக்கிறேன் நான். ஒரு முறை, பெரிய நாவல். ஒன்றைக் கொடுத்தார். புகழ்ப்புராணம் பாடவேண்டுமென்று தனது பண் ணினார். இவர் மாதிரி ஆயிரம் பேர் வழிகளை இந்தப் பத்து ஆண்டுகளில் பார்த் திருக்கிறேனே? ஒப்பு வேனா நான்? குறைகளை எழுதினேன். விமர்சனத்தில் சூடு பறந்தது, இதைக் கண்டதும், செய்ந்நன்றி மறந்து, என்னை கன்னாபின்னா வென்று திட்டிக் கடிதம் போட்டார். பிறரை மட்டந்தட்டி, அதன் ஏணிப்படிகளிலே உச்சியில் ஏறிக் குந்தக் கனவு காணுபவர், என்னைக் காட்டிலும் அனுபவப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி அவதூறு மொழிந்திருக்கிறாராம்: சுபரூபம் ஒரு நாளைக்கு வேஷம் கலைத்துவிடாமல் தப்பாது என்ற கார்லைல் வாசகம் ரொம்பப் பொருத்தம், அவர் திருந்த இடைவேளை நல்கினேன். கடைசியில் நானே அவரைத் திருத்தினேன். ஏணியை உதைத்துவிட எண்ணினால், முடியுமா? என் நல்ல மனத்தை மனச்சாட்சியையே தெய்வமாகக் கருதிக் கைதொழும் பழக்கமுடைய என்னை அவர் புரிந்து கொள்ள மெய்யாகவே தவம் இருக்க வேண்டும்!. பாவம்...!
இப்படியிருக்கையில், இந்த நல்லிதயக் கலைஞருக்கு ஆபத்துக்கு உதவாமல் இருப்பேனா?
முதலில் மோஹினியைச் சந்தித்து, அவளது உள்ளக் கிடக்கையைப் படித்தறிந்து கொள்தாக அவனுக்கு அமைதி மொழி சொல்லி விடை கொடுத் தேன்.,
பாரதிக்கு எல்லாம் தெரியும். அவர் பாடுகிறார்:
‘ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சம் உண்டோடா?...
இந்த வரியில் உலக தத்துவமே முடங்கிக் கிடக்கிறது. இவ்வுண்மையை இந்தச் சைந்திரீகன் அறிந்திட அவனுக்கு வயது போதாதே?
மூப்புப் பழுத்த நேரம், அடிக்கடி படுத்து விடுகிறேன். உடம்பைப் பழிவாங்கி உள்ளத்தால் உழைத்துப் பிழைத்த என்னை, இப்போது அதே உடம்பு: பழிக்குப் பழி வாங்கி, என் உள்ளத்தை அயர்வுறச் செய்து விட்டது.
சுந்தரன் போய் விட்டான். அதாவது, என்னை விட்டு விலகிவிட்டான். அவன் கொடுத்த கடிதம் என்னுடனே தங்கிவிட்டது. நான் கொடுத்த வாக்கை அவனுடன் அனுப்பி விடுவேனா? கடிதத் தாளைப் புரட்டினேன். இது என்ன தொல்லை? கோமான் வீட்டுத் திருக்குமரன் மணி கண்டனின் கடிதம் அல்லவா இது? நெஞ்சை ஒடுக்கும் பயங்கரக் கடிதமாக அல்லவா இருக்கிறது? மணிகண்டனா இவ்வாறு செய்திருப்பான்?
முடிவை வைத்து ஆரம்பத்தை உண்டாக்குகிறவன் நான். இவன் ஆரம்பத்திலேயே முடிவை உண்டாக்கி விடுவானோ?.
“போர்க்களத்தில் அதிகாரத்துக்காகச் சண்டை நடக்கின்றது. வாழ்க்கைகூட யுத்தகளம்தான்!. இங்கே ஆசைக்காகப் போராட்டம் நிகழ்கிறது. ஆசைக்கோர் அளவில்லை யென்கிறார்கள். உண்மை தான். நான் மோஹினியின் அழகில் ஆசை வைத்தேன். அதற்காகத் தான் இப்படிப்பட்ட போருக்கும் போராட்டத்துக்கும் ஊடே நான் அல்லாட வேண்டியிருக்கிறதா? இந்தச் சூட்சுமம் எதையும் நான் கிரகிக்க இயலாதவனாக இருக்கிறேன். எல்லோருக்குமே வாழ்க்கை புரிந்து விடுகிறதா, என்ன?
மோஹினியின் மேதாவிலாசம் ஒருபுறம் இருக்கட்டும். அவளது ஈடில்லா எழிலும், எழில் பொதிந்த இனிமையும் அல்லவா என்னை தேனில் விழுந்த ஈயாக ஆக்கித் தொலைத் திருக்கிறது? ஈக்காவது தேன் சுவையைத் துளியாவது சுவைக்க முடிந்திருக்கும். அந்தச் சுவை இன்பத்தின் பெறுமதியுடன் தன் வாழ்வையே குலைத்துக் கொள்ளக் கூடிய ஒரு துணிச்சல், அல்லது பக்குவம் அதற்கு இயற்கையிலேயே உண்டாக்கி விடும் போலிருக்கின்றது.
ஆம்; நான்கூட அந்த ஈயாக மாறத் தான் போகிறேன். தேன் கூட்டின் காலடியில் என் உயிரைப் பினை வைக்கப்போகிறேன்.
புதுக்கோட்டை டவுனில் நான் ஹோட்டலில் தங்கியிருந்தேன். காலையில் விழித்தெழுந்ததும், எனக்கு அறிமுகமற்றவர்கள் சிலர் அறிமுகமாயினர். பழக்கப்பட்ட முகங்களுக்கு மத்தியில் துன்பமும் குழப்பமும் கலக்கமும் தலைகாட்டத் தயங்காதா? அவர்களை நான் எங்கே, எப்போது, எப்படிப் பார்த்தேன் என்பதை ஒரளவுக்கு அனுமானம் செய்து கொண்டு, அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன் . மோஹினியின் சோதனைப் பொருள்களாக வந்தவர்கள் அவர்கள். அன்றைக்கு ஒவ்வொருவரும் எப்படி இருந்தார்கள்? முகத்தில் பவுடர் என்ன , காரைக் கால் வாசனைத் திரவியம் என்ன, கையில் காப்பிக் கொட்டைச் சங்கிலி என்ன, கழுத்தில் எனாமல் டாலர் பதித்த மைனர் சங்கிலி என்ன ! ...அப்பப்பா ! காதலின் கதையை இன் சுவைக் காவியமாக்குவதற்கு இத்தனை ஆடம்பரங்களா? ..
பாவம், அவர்கள் முகத்திலும் கரியைப் பூசி அனுப்பி விட்டாளாம் மோஹினி!
வாழ்க்கையே ஒர் ஆடம்பரம். அப்படிப்பட்ட ஒர் உணர்வு தான் நேற்றுவரை-அதாவது, மோஹி னிப்பெண் என்னுள் தோல்வியை எழுதிக் காட்டிய நேரம் வரை சதா என்னிடம் பிறந்து வளர்ந்து, என்னைப் பணச் செருக்குக்கு அடிமையாக்கி, பின்னர், பணமமதையின் கடைக்கண் வீச்சில் சிக்க வைத்து, காதலெனும் மகுடி நாதத்தின் கைப்பொம்மையாகவும் உருமாற்றி வந்திருக்கிறது.
மோஹினி தாசி, அப்படிச் சொன்னால், தெய்வத் திருவுளத்திற்கு அடுக்காது. அவள் இருமனப் பெண்டிர் குலம், இருக்கட்டும். அவள் மனம் ஒரு பூ மல்லி கைப்பூ கற்புக்கு ஒர் எடுத்துக் காட்டு அப் பூ.
அஞ்சேல் என அபயமுத்திரை காட்டி நின்ற அம்பிகையின் திருச்சந்நிதானத்திலே, அஞ்சேல் முத்திரை பதித்து ஆடினாள்
மோஹினி.
“ தாம். திதாம்...
தீம்...ததை...!”
நட்டுவனாரின் கட்டைக் குரலும் நார்மணியின் பாளை வெடிச் சிரிப்பும் என்னை விட்டு அகல வேண்டுமானால், முதலில் நான் பிடிசாம்பலாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பாக்கியம் எனக்குக் கிட்டினாலும் தகும். . ஆனால்... ஆனால்... அவள் என்னை - என்னுடைய புனித நிலையைச் சந்தேகப்பட்டாளே?... அவளைப் பழி வாங்காமல் நான் அடங்குவதா? பெட்டகத்தில் கடைசிக் காசு இருக்கும் பரியந்தம் செலவழித்துப் பார்த்து விடத்தான் போகிறேன்!
மோஹினியை ஆட்டிப் படைக்கும் நட்டுவனார் சேகரலிங்கம் இப்பொழுது என் கைக்குள் அடக்கம்!
இதோ, என் கைப்பிடிக்குள் ஒரு படம் அகப்பட்டிருக்கிறது. மரக்கிளை பற்றி ஒயில் மிளிர நிற்கும் மோஹினிக்கு அருகில் நிற்கும் அந்த ஆணழகன் யார்?இந்தப் படம் ஒன்று போதாதா, அவளைப் பழிவாங்க?
நெஞ்சம் என்பது நீராழி மண்டபத்துத் திருவிளக்கு. ஆழம் பறித்துக் காவல் புரியும் நீர் வெளி தான் மனச்சாட்சி. நீரைக் கடந்தால், நீராழி மண்டபத்தைத் தரிசிக்க முடியும். மனச்சான்றின் அனுமதிச் சீட்டுப் பெற்றால்தான் பெறக்கூடிய பக்குவமும் தெளிவும் பயிற்சியடைந்தால்தான், மனம் எனும் திருவிளக்கு தெளித்துக் காட்டும் தெய்வ ஒளியைத் தரிசிக்க வாய்க்கும்.
மனத்தின் காதை இது.
வாழ்வின் கதை இது.
மணிகண்டன் இருக்கிறான் பாருங்கள். அவனைப் பற்றி அவனது இது நாளைய நடவடிக்கைகளை வைத்து எடை போட்டுப் பார்த்தால், அவன் ஒரு விந்தை மனிதன் என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பச்சையாக, மனிதாபிமானத்தோடு சொல்ல வேண்டுமானால், அவனை 'மனிதப்பிராணி' என்றும் அழைக்க வேண்டும். தவறில்லை. மனிதனுக்கென்று ஆக்கப்பட்டிருக்கும் சட்ட திட்டங்களை அவன் கட்டுக் குலைத்து நொறுக்கி வீச முனையும்போது, அவனுக்கு உகந்த பேரும் புகழும் அவனை விட்டு விலக முனைவது தானே உசிதம்: மணிகண்டன் யாராயிருந்தால் என்ன? நான்: யாருக்காகப் பயப்பட வேணும்? உடலுக்குப் பட்டுச் சொக்காய் அத்தியாவசியமாக இருக்கக்கூடும். உள்ளத்திற்கு அது தேவையில்லை யல்லவா? மணிகண்டனிடமே நான் கேட்டுவிட்டேன் நீர் மனிதன் தானா? கருதிய பொருள் கைக்குக் கிட்டவில்லையென்றால், 'சீ, சி: இந்தப் பழம் புளிக்கும்!' என்று நாகரிகமாகவும் நாசூக்காகவும் தப்பிய நரியாக மாறும்; நான் மறுப்புச் சொல்லேன். ஆனால், நீர் நினைத்த வகையில், உம் காதல் வெற்றி பெறவில்லை யென்பதற்காக, மோஹினியைப் பழி வாங்கப் போவதாக முடிவு கட்டியிருக்கிறீரே? இது மனிதப் பண்பு தானா? நீர் மனிதனா? இல்லை, மிருகமா? சே!” என்று.
சைத்ரீகன் சுந்தரன் என்னிடம் கடிதம் ஒன்றை நீட்டினான் என்றேன் அல்லவா?-அவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, கடிதத் தாளைப் பிரித்தால், அங்கே மணிகண்டனின் பயங்கரமான முகத்தைத் தான் என்னால் பார்க்க முடிந்தது. கடிதங்கள் மாறிவிட்டனவே தவிர, கதையை மாற்ற அவற்றால் முடியவில்லை.
மணிகண்டன் எழுதியிருந்தான். “மோஹினி!
நீயே சதமென்று, உன்னைச் சரணடைந்தேன் நான், பரிசுத்தமான என்னுடைய அன்பு மனசைப் புண்படுத்தி விட்டாய் நீ. மறக்க முடியாத எந்த ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள பெண் மட்டும் தான் ஒப்பமாட்டாள் என்பது கிடையாது. ஆணும் ஒப்ப மாட்டான், இதோ, நான் இருக்கிறேன். எனக்குக் கை கொடுக்கும் சந்தர்ப்பத்திற்காக நான் காத்திருக்கிறேன். எனது நினைப்பு கைகூடி வந்தால், தீர்ந்துவிடும் உன் வாழ்வு என் ஆண்மையின் புனித சக்தியைச் சோதனை செய்யப் புது நாடகம் நடத்தினவளாயிற்றே நீ? ஆனால், அதே நேரத்தில், உன் புனிதத்தையும் நான் பட்டவர்த்தனமாய்க் கண்டதறிய விரும்புவது சகஜமேயன்றோ? ஒரு பக்கம் பழி புறப்பட்டால், எதிர்ப் பக்கம் அந்தப் பழியைச் சுமந்து கொண்டிருக்காது என்பதையாவது நீ மறந்து விடாதே!
இவ்விதம், மணிகண்டன்.” (ஆடுதுறை பெரிய பண்ணை)
பெண்ணை ஒரு பண்ணை ஆட்டிப் படைக்கும் லட்சணத்தை என்னவென்று சொல்வேன்?
இந்தக் கதாசிரியர்களே இப்படித்தான்!
யதார்த்த வாழ்க்கை வேறு; லட்சிய வாழ்க்கை. வேறு.
இவை இரண்டையும் தாங்கள் குட்டை குழப்பிக் கொள்வதுடன் நிற்காமல், நம்மையும் வேறு குழம்பச் செய்துவிடுவார்கள்:
இந்த உண்மையை-அதாவது, என் வாதப்படி உதிர்ந்துள்ள உண்மையை-அதாவது, அவரது தர்க்கத்தின் பிரகாரம் அமையவல்ல பொய்யை நான் என்னவென்று எடுத்துரைப்பேன்?
- மோஹினியை நான் திட்டியதற்காக வேண்டி, இவர் என்னைத் திட்டுகிறாரே? அவருக்கு என்னுடைய தவிப்பு எப்படிப் புரியும்? ஒருவர் துன்பத்தையும் தொல்லையையும், திகைப்பையும் தவிப்பையும் இன்னொருவரால் அறிந்துகொள்ள முடியுமென்பது வெதும் அளப்பு. வயசு கடந்தவர்; போகட்டும்!...
- சுந்தரம் என்பவருக்குப் படம் எழுதும் அலுவல், அல்லது பிழைப்பு. பைத்தியங்களில் பல ரகம் உண்டு,இல்லையா? இந்த அப்பாவி ஒரு வகை. அவருடைய கடிதம் ஒன்று என் கையில் இப்பொழுது இருக்கிறது. மோஹினிக்கு எழுதியிருப்பதால், இதைக் காதல் கடிதம் என்பதற்கில்லை.ஆனாலும் ,ஒரு விஷயத்தை என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது. காதல் இல்லாவிட்டாலும், காதல் வெறி சூடுபிடித்து, சூடுபட்ட பூனையின் வெறியாகக் கனிந்திருக்கிறது. மோஹினிக்கு எழுதப்பட்ட இம் முடங்கல் என் வழியில் ஏன் முடங்கிக் கிடக்க வேண்டும்? எது எப்படிப் போனால் எனக்கென்னவாம்? என்னுடைய கடிதம் அந்தப் பரத்தையிடம் இந்நேரம் போய்ச் சேர்ந்திருக்கும். கட்டாயம் அவளது கெண்டை விழிகள் கலங்கி, மண்டை ஓடு கனம் தட்டிப் போயிருக்கும்!என்னுடைய உணர்ச்சிகள் நேர்மையான கோணத்தில் இயங்குவதற்குரிய வழி வகைகளில் அவளுடைய நடைமுறைச் செயல்கள் இயக்கப்பட்டிருந்தால், நான் ஏன் இவ்வளவு துாரம் ஆங்காரம் பெறப் போகின்றேன்? இந்த மோஹினியை ஆதியில் நான் பார்த்த நேரத்தில், அசல் தேவதையைப் பார்ப்பது போலவே என் மனசு உணர்த்திய அந்தப் பாவனையை நான் இன்றல்ல, என் சிதை சாம்பலாகும் பரியந்தம் மறப்பேனோ? மறக்கத் தூண்டும் சந்திப்பா அது? 'நான் உங்கள் நிழலிலேயே ஒண்டி விடத் தான் துடிக்கிறான்! என்று எரிதழலில் துவப்படும் சாம்பிராணித் துகள்களினின்றும் புறப்பட்டுப் பரவுத் தூய நறுமணசமெனச் செப்பினாளே? எல்லாம் பொய்யா?
ஆம்: அவளே பொய்!.. பொய்யே அவள் ...!
அந்தப் பொய்யின் திரையைக் கிழித்துத் தரையில் வீசியெறிய, இந்தப் போட்டோப் படம் எனக்குக் கடைசிக் கட்டம் வரையிலும் கை கொடுக்கும்: அதுவே எனக்கு உயிரும் கொடுக்கும்!...ஏன் முடியாது?
புதுக்கோட்டையில் சந்தைப்பே ட்டை என்றால் ரொம்பவும் கியாதி, அதைச் சுற்றிப் பார்த்து விட்டு, 'பிரஹதாம்பா' ளில் சினிமாப் பார்த்தேன். பார்த்து முடிந்தவுடன், நான் தங்கியிருக்கும் ஹோட்டலை எல்லையாகக் கொண்டு வழி கழித்தேன். சந்தைக்கு வந்திருந்த என்னுடைய உறவுக்காரப் பிள்ளை ஒருவன் என்னிடம் கொட்டிய செய்திகள் என் சித்தத் தைக் கலக்கின. சரி, நீ போ, தம் பி. நாளைக்காலம் பற நான் புறப்பட்டு வாரேன்னு அம்மா கிட்ட சொல்லு" என்றேன்.
குழம்பிய மனம் என்னை அழுத்த, அந்த அழுத்தத்தில் என் மனச்சாந்தி அழுந்த நடந்தேன். நட்டு வனார் சேகரலிங்கம், குறுக்கே ஓடியே பூனையானார். இந்தப் பூனையைக் கெட்ட சகுனமாகக் கொள்ளலாமோ! கூடாது, கூடாது!
அவர் என் காதைக் கடித்தார்.
நான் பல்லைக் கடித்தேன்!
பொதுவாகச் சொல்லும் பேச்சு இது.
இந்த எழுத்தாளர்களுக்கு, சமகா மயங்களில், குரூரமான ஒர் ஆசையின் உணர்வு பொறி தட்டிக் காட்டுவது இயல்பு. அதன் விளைவாகத்தானே? என்னவோ, அவர்கள் எந்த ஒரு நட்பையும், எந்த ஒரு காட்சியையும், எந்த ஒரு பொருளையும் விசித்திரம் நிழலாடும் பார்வையுடன்-விந்தை கரைகட்டும் சுழிப்புடன்-வேடிக்கை பாய்ச்சல் காட்டும் குறும்புடன் நோக்குவார்கள்: தீர்ப்பும் எழுதிவிடுவார்கள், -
அந்த எழிலரசி மோகினியிடம் எனக்குப் பரிச்சயம் உண்டு என்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். நினைவிருக்க வேண்டும். பரிச்சயம் என்றால் பழக்கம் என்று தான் அகராதியில் அர்த்தம், ஆகவே, என்னைப் பற்றி வாசகர்கள் எவ்விதமான பரிணாமத்தையும் உண்டுபண்ணிக் கொள்ளக் கூடாது. மோஹினிதாசி. இருக்கலாம். ஆனால், அவள் அழகை எப்படி உங்கட்கு எடுத்துக் காட்டுவேன்? மெய்தொட்டு, மெய் தீட்டிக் கூறவேண்டுமெனில், அழகுக்கு எப்படி உருவக் கொடுக்க இயலும்? காமவேதனை தட்டும் படாத, நறுவிசாகக் காதளவோடிய அவளுடைய கயல் விழிகள் இரண்டையும் கண்டேன். நான் திட்டமிட்டு எனக்குப் பிடித்தமாதிரி எழுதிய பிரச்சினைக் கதையைத் திரும்ப ஒருமுறை படித்துப் பார்க்கும் பொழுது என்னுள் ஏற்படும் மயக்கம் கிளர்ந்தெழுந்தது. அவள் உதடுகளைக் கண்டேன். இளமை நிலவின் அடிமட்டத்தில் அடங்கிக் குறுநகை கோர்க்கும் இன்ப வெறி எழுந்தது. மூக்கின் அமைப்பைப் பார்த்தேன். நான் விரும்பும் லாவண்யம் பெற்றிருந்தது அது. தேகக்கட்டு தெரிந்தது. ஒவியர் மணியம் வரையும் சிற்ப உருவங்களின் உயிர் ஊடாடும் கவர்ச்சியை இமை வெட்டாமல் பார்த்தேன்.
ஊம், என் அமிர்தம் இதைப் படித்தால் -இது பற்றிக் கேள்விப்பட்டால் என்மீது சினம் கொள்ளப்போகிறான்!
ஆக, ஒன்று உறுதி:
மோஹினி எழில் மோஹினியே!
என்னைக் கண்டு பேச வந்திருந்தாள், நேற்று, அது அவள் கடமையாகவே இருக்கட்டும். மணிகண்டன், சுந்தரன் ஆகிய இரு காதல் கோமாளிகளுக்காக நான் செய்தாக வேண்டிய கடமையும் காத் திருக்கிறதல்லவா?
பையன் பானம் கொணர்ந்தான்,
"ரொம்பவும் இனிக்கிறதுங்க, ஐயா!" என்றாள் அவள்.
அவள் பேச்சைவிடவா? இல்லை, அவள் ரூபத்தைக் காட்டிலுமா? இல்லை, அவள் நாட்டியத்தைப் பார்க்கிலுமா?
அவளிடம் கேட்டேன். இவ்விருவரையும் பற்றித் தான்.
நகைகள் மின்ன, அவள் நகை புரிந்தவளாக, பேசாமல் கொள்ளாமல், நிழற்படமொன்றை எடுத்து நீட்டினாள், ஓர் இளைஞனின் படம் அது: தீர்க்கமான எழில் பூத்த உருவ அமைப்புடன் விளங்கினான். தொடர்ந்து அவள் இதழ் திறந்து பேசிய பேச்சின் முத்தாய்ப்பில் என் இதயம் அடித்துக் கொண்டது. சற்றுப் பொறுத்து வந்த ஓர் உருவத்தைக் காட்டி எனக்குப் பழக்கப் படுத்தினாள், என் னையே என்னால் நம்ப முடியவில்லை!
ஒன்பதாவது, பத்தாவது அதிசயமா இது?
‘வாழ்ந்து காட்டியவர்கள் என்று நாம் சிலரைப் பகுத்துச் சொல்வது உண்டல்லவா? அவர்களுக்கு அப்படிப்பட்ட பட்டப் பெயரை நாம் ஏன் சூட்ட நேரிடுகிறது? கேள்விகள் இல்லையென்றால், வாழ்வு இல்லை. அதுபோலவே வாழ்வு இல்லையென்றால் அப்பால், வினாக்களுக்கும் அலுவல் கிடையாது. இத்தகைய தர்க்க ரீதியான வாதத்தில் முனைந்து, வாழ்ந்து காட்டியவர்களைப் பற்றி ஒரு விளக்கம் சொல்லத் தான் ஆசைப் படுகிறேன். வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் அடியெடுத்து வைத்து, வாழ்க்கையை அவர்கள் படிக்கப்போய், வாழ்க்கை அவர்களைப் படித்து முடித்து, கடைசியில் வாழ்வையும் இம் மனிதர்களையும் ஆடு காய்களாக்கி இறைவன் விளை யாடி-விளையாட்டுக் காட்டி முடிந்ததும், இவர்களுக்கு உண்மைகள் பல பளிச்சிடுகின்றன. உண்மைகள் பளிச்சிடக்கூடிய நேரத்தை அற்ப சொற்பமானதாகக் கணிக்கலாமா? பொன்னான நேரம் என்று எடுத்த தற்கெல்லாம் எடுத்து வீசிச் சொல்கிறார்களே, அப்படிப்பட்ட நேரம் அது. அப்போது தான் வாழ்ந்து காட்டியவர்கள்’ என்கிற பட்டத்தைச் சூட்டும் சூழல் அவர்களைச் சுற்றிலும் உருவாகிறது, இத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தம்முடைய சொந்த அனுபவங்களாக ஏற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல் இருக்கிறது. பாருங்கள். அதற்காகத்தான் அவர்களுக்கு அத்துணை மதிப்பு, கெளரவம்.
இந்தப் பட்டியலில் எனக்கு மட்டிலும் இடம் கிடைக்காமல் இருக்க முடியுமா?
நான் சொல்லுகின்றேன்:
காலில் முள் தைத்து விடுகின்றது. வலி எக்கச் சக்கம். அடிப்பாதத்தின் விளம்பில் முள் பதிந்த இடம் மெல்லிய சதைப் பிடிப்புக் கொண்டது ஆகவே, முள் லகுவாகப் பதிந்து விடுகிறது. முள்ளை எடுக்க முள்ளையே பயன்படுத்துவார்கள். ஆனால்: கால் அசைவினாலோ, அல்லது எப்படியோ, தைத்த முள் தன்னாலேயே விழுந்து விடுகிறதென்று கொள் ளுவோமே. அப்போது, உபாதைக்கு உள்ளானால்: உனுக்குக் கூடுதலான மகிழ்வு .உண்டாவது இயல்பே அல்லவா?
இன்னொன்று :
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது சாகஸ உலக வாழ்விற்கும் பொருந்தி வர வல்லதொரு புதுமொழியாகும். குத்திய முள்ளை எடுக்க வேண்டிய மற்றொரு முள்ளே கதாநாயகக் கோலத்திலிருந்து வில்லன் வேஷத்திற்கு உருமாறும் நிலை உருவானால், சாகசத்தைப் பிறப்பித்தவனின் மனமும், சூது மதியின் பிரதிபலனை எதிர்பார்த்த இதயமும் படும் பாடு சொல்லத் தரமா?
வாழ்க்கையே முள்,
சிலர் முள் வலியை உணருகிறார்கள்.
அவர்கள் வாழ்ந்து காட்டியவர்கள். வலி தாளாமல் உதடுகளை அசைத்து விடுகிறார்கள்.
சிலரை முள்ளின் வலி ஏதும் செய்ய முடிவதில்லை.
அவர்கள் ஞானிகள்!.
இப்படிப்பட்ட விசித்திரமான பூதலம் தன் போக்கில்-தன் அளவில் தன் நியதியில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கையில்தான், பாவம், அந்த மணிகண்டன் அதோ, துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறான்! மணிகண்டன் சாமானியப்பட்டவனா? நட்டுவனாரைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டான். ஆடலழகி மோஹினியுடன் காணப்பட்ட ஓர் இளைஞனின் புகைப்படத்தையே சூதாக்கி, சூது விளையாடத் திட்டமிட்டிருந்தான் அவன். அந்தத் திட்டம், அவன் கண்ட தோல்வியில் விளைந்த வெறி யாகும்.
ஆனால், நடந்தது என்ன, தெரியுமா?
நான் கதைகள், புனைபவன். நானே எதிர்பாராத-எதிர்பார்க்க முடியாத . அப்படியொரு மூலைத் திருப்பம் அது.
நெஞ்சிடைச் சிலையமைத்துக் கொண்ட உருவத்தை வெளியே உலவ விட விரும்பும் கலைஞனின் நிலையிலா நான் இருந்தேன்? பின் ஏன் அப்படிப் பட்ட நிலையிலும் நினைவிலுமாக நான் அல்லாட வேண்டும்? மோஹினியைப் பற்றியே சதா சர்வகாலமும் நினைத்து. அந்நினைவிலேயே மனம் மயக்க நிலை பெற்றிருப்பவனைப் போல நான் ஏன் அப்படித் திகைப்படைந்து விளங்க வேண்டும்? அவளைப் பார்த்தேன். சரி. ஒரு தடவை, இரண்டு தடவை என்று தடவைகளுடன் எண்ணிக்கை வரிசை நீண்டது. நீண்ட பெருமூச்சும் நீண்டது. திரும்பத் திரும்ப ஓர் ஆசை ஆவல், ஆதங்கம். அவனைக் கண்டேன், அவளை நினைத்துப் பார்த்தேன். விழிகளின் இடுக்கில் விளையாடியவள், அதே விழிகளின் இடைவெளியில் என் இடைவேளைப் பொழுதானான்.
ஸார்!. தமிழுக்குத் தான் இனிமை மிகுதி என்பதாகப் படித்திருக்கின்றேன் நான். இப்பொழுது அவள், அழைத்த அந்த ஆங்கிலச் சொல் கூட இனிமை சொட்டி ஒலிக்கிறதே?.
மோஹினியை ஏறிட்டுப் பார்த்தேன். அதே பார்வையின் மூலை மட்டத்தில் அந்தப் புதிய இளைஞனின் சிரிப்பையும் பார்த்தேன். அவனைப் பற்றி அவள் அறிமுகப்படுத்தினாள். என்றேன். அறிமுகப்படுத்திய விதத்தை அல்லது பாவணையை உங்களிடம் விரிவுபடுத்தினால் மோசம் ஏதுமில்லை என்பது என் அபிப்பிராயம், புண் உடம்புடன் சாம்பலாவதில் அந்த ரகசியத்துக்கு அப்படி என்ன தான் விடி மோட்சம் வந்து சேர்ந்துவிடப் போகிறது?
மோஹினி சொன்னாள். மோகம் முகிழ்த்த உதடுகளின் நெளிவு சுளிவுகளிலே கள்ள நகை இழை யோட, தாபம் நிறை விழிக் கணைகளிலே மோஹக் கவர்ச்சியின் புனிதம் தழைபின் ன அவள் பேசினாள். மார்பகத்தின் இருமுனைப் பகுதிகளில் வெய்துயிர்ப் பின் களர் நிலம் காணியாட்சி பிடித்துக் கொண்டிருந்தது. தீ சிரிக்குமோ?
அவள் சொன்னதாவது:
“எழுத்தாளர் ஐயா. நீங்கள் வாழ்க்கை எனும் மர்மக்கதை சொல்லி வந்திருக்கின்ற எத்தனையோ தினுசான அதிசயத் திருப்பங்களைக் கற்பனை பண்ணியிருப்பீர்கள். ஆகவே, நான் சொல்லும் இவ்விஷயம் உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்ற வாய்ப்பில்லை; இருக்கவேண்டுமென்று விரும்ப வுமில்லை நான். விரும்புவதும் உசிதமாகாது. ஆனால், இந்த நடப்பு என் வரையிலேனும் ஒரு மாற்றம் என்று தான் செப்ப வேண்டும். இந்த மாற்றத்துக்குத் ‘தியாகம்’ என்ற பெயர் சூட்டுகிறார் இவர். இதை நான் ஒப்பாதவன். தியாகம் என்பதுகூட ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் மாதிரி தான். சுய விளம்பரத்தினால் தியாகம் விலைபோகுமென்றோ, அல்லது தியாகத்தின் கதை பரவலாக ஒலிபரப்பப்படு மெனவோ எண்ணினால், அது மடமை என்பது என் கருத்து ஆடிப் பிழைக்கும் லவிதம் போட்டவளுக்கு இப்படிக்கூட, ஞானோதயம் தோன்றுமா என்று: நீங்கள் தற்சமயம் கருதுவீர்களானால்கூட அதிசயம் கொள்ள மாட்டேன் நான். குப்பையில் புதைந்து கிடைக்கக்கூடிய குன்றிமணிக்கு தன் வாழ்வே ஒரு சிருஷ்டித் தத்துவம் என்றேன், அதுவே: படைப்பின் புதிர்ச் சக்தியென்றோ தெரியவும் கூடா தல்லவா? இப்படிப்பட்ட வாழ்வின் பிசிறுத் தத்துவ உள்நோக்கங்களையும் புறவாழ்வுப் பொலிவுகனையும் கண்டு தெளிந்தவர்கள் பலர் சொன்னதைப் படித்து வருகின்றவள் தான்!...
“பெண்ணின் உள்ளமானது ஆழியைக் காட்டிலும் ஆழம் அதிகமுடையதென்பதாக எழுத்தாளர்கள் எழுதி வருகின்றார்கள். நீங்கள் கோபிக்கலாகாது. நீங்கள் கூடி ஒருமுறை இவ்வாறு உவமை காட்டியிருக்கிறீர்கள். பெண் உள்ளம் ஆழமுடையதாக இருப்பது தவறு என்று நீங்கள் வாதாட முடியுமா? ஆழமாகயிருப்பது ஒன்றுதான் பெண்மைக்கு ஏற்றம் தரவல்லது என்பது என்னுடைய பணிவான எண்ணமாகும். ஆழத்தில் தான் அமைதி இடம் காண்கிறது. இவ்வுண்மைக்குச் சரித்திர-சாத்திர தத்துவங்களை ஆதாரமாகக் கேட்க மாட்டீர்களே?
"என் கேள்விகளில் தேங்கிக் கண்சிமிட்டும் சூட்டைத் தாங்கள்" உணராமல் இருக்கமாட்டீர்கள். என்ன செய்வேன்? அபலை நான்! என்னை ஆட்டிப் படைத்து விட்டார்கள் வெறும் மனிதர்கள்!
“இனி நான் பாக்கியவதி. இதோ, இவரே தான் என் காதலர்: கணவர். என்னை- என்னுள்ளே உறைகின்ற என்னை, இதயம் தழுவிய தேசத் தோடு நேசம் முத்தமிடும் நினைவுப் பொலிவுடன் நினைவு காதலிக்கும் நேர்மையுடன் விரும்புகிறார் இவர், அடுத்த பதினைந்தாம் நாள் சாந்தனார் தெய்வத்தின் திருச்சபையின் முன்னே எங்கள் வதுவை விழா நடைபெறும். அழைப்புக்கள் அனுப்புவது எங்கள் குலவழக்கமல்ல. ஏனென்றால், இவ்வகையான திருமணங்களே எங்கள் குலதருமப் பிரகாரம் செல்லுபடியாகா .ஊம்,:குலமாவது!.. தர்மமாவது!...”
மோஹினியின் அழுகையில் கூட எவ்வளவு எழிற் கவர்ச்சி சொட்டுகிறது?
வானின் உயர் பீடு பெறும் பொற்பு நிறை அழகே உன் பெயர் தான் விதியா?
மோஹினியைப் பொய் என்றேன். இப்பொழுது, அவள் என்னையே பொய்யாக ஆக்கி விட்டாளே?...
எந்தப் படம் என் சூழ்ச்சித் திருவிளையாடலுக்கு எனக்குக் கடைசி நிமிஷம் வரை கைகொடுக்கு மென்று மனப்பால் குடித்து வந்தேனோ, அதே படம் இன்று அவளுக்கு-அந்த மோகினிப் பெண்ணாளுக்குக் கை கொடுக்கு பரம ஒளஷதமாக ஆகிவிட்டிருக்கிறதே?
தெய்வமே, அழகுக்கு உவமைப் பொருளாக
அவளை ஏன் படைத்தாய்? அந்த அழகை விலை போட்டு வாங்க முடியாத நிலையில் என்னை ஏன் படைத்தாய்? அந்த மோஹினியைச் சந்தித்து, அவள் வசம் நான் வசமிழந்து இப்படிப் பேயாய்த் தவிக்கும் திலைக்கு உடந்தையாக, என் கண்களில் அவளது எல்லையற்ற பேரெழிலை ஏன் காட்டித் தொலைத்தாய்?...
சந்திப்பு என்பது கூட, விட்ட குறை-தொட்ட குறையின் அறுவடைப் பலன் தானோ?... நான் என்ன கண்டேன்? இந்தக் கதை இருக்கட்டும்.
நேற்று நடந்த சம்பவம் என்னுள் படக் காட்டுவதைப் பார்க்கையில், அதே தொட்ட குறை-தொடாத குறையின் கதைதானே நினைவில் பளிச்சிடுகிறது? அம்மா கூப்பிட்டிருந்தாள். ஊருக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு சந்திப்பு. புதிது என்று சொல்வதற்கு உரித்தானதா? ஊஹீம்! பற்றிய சுற்றம் காட்டி, ஒட்டிய உறவைக் குறித்துச் சொல்ல எனக்கெனப் பிறந்திருக்கின்றாளாம் எவளோ ஒருத்தி அவள் எனக்கு அத்தை மகளாம்! அம்மா சொல்கிறாள். கனியைப் பற்றிக் கனியக் கனியப் பேசுகிறாள் அம்மா. அப்பாவிற்குப் பிறகு அம்மாதான் எங்கள் பண்ணைக்கே அதிகாரி. ஆடு துறைப் பண்னணை என்றால், பின்னே சும்மாவா?
வந்தவளைப் போய்ப் பார்த்தேன். அழகிதான். அட்டியில்லை. நிர்மலா என்று நாமகரணம். எல்லாம் சரி. என் இதயத்தில் இவளைப் பிடித்துப்போட ஒற்றைக் காலால் தவம் இருக்கிறாள் அன்னை. என் னால் நிலையை நன்கு ஊகித்துக் கொள்ள முடிகின் றது. ஆனால், இதய பீடத்தில் தனி ஆசனம் தந்து அமர்த்திக் கொண்டுள்ள மோஹினியை என்னால் எப்படி வெளியேற்ற இயலும்?
மோஹினி, மெய்யாகவே நீ பொய்யில்லையா? மோஹினி அவதாரம் கொண்ட புனை வடிவம் பதுமை இல்லையா நீ? பின் ஏன் என்னை இப்படி ஆட்டிப் படைக்கிறாய்? உன்னைப் பற்றி நட்டுவனார் சேகரலிங்கம் சொன்னதெல்லாம் கதைதானா? என் புனித மிகு ஆண்மையைச் சோதித்திட அன்று நீ நாடக மாடினாய்! இன்று, என்னையே பரீட்சை செய்ய இந்த நாட்டுவனார் உன்னால் அனுப் பப்பட்டிருக்கிறார்!
சோதனை என்பது எரிதழல் அல்ல; அதுவே, தீக்குளிப்பு மண்டபம் போலும்! நீ தீயா?
நான் தோன்று விட்டேனா? முடிந்த முடிவிலே.
மோஹினி, உனக்கு ஒரு கடிதம் எழுதினேனே, நெஞ்சிருத்திக் கொண்டிருப்பாயா? உன்னுடைய பவித்திரமான முதற் பார்வையைக் கையேந்திப் பெறப் புண்ணியம் கொண்டதாக நான் களித்துப் பறந்து திரிந்த சடுதியில், உனக்கு நான் அனுப்பிய முடங்கல்களிலே இப்படி எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம், “ உன்னைப் பார்த்தவுடன், பிறபிப்பயன் எடுத்ததன் தாத்பரியம் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது’ என்று குறித்திருந்தேன்.
எல்லாம் இனிமேல் பழங்கதை: என்னைப் பார்த்த நிகழ்வுகூட தெய்வானுகூலமாகவே இருக்கவேண்டுமென்றும், என்னை அன்று உன் வீட்டிலேயே தங்கும் படியும் நீ சொன்னது கூட பொய்க் கனவாகி விட்டதே!
மோஹினி, நீ இப்போதாவது சொல்! பத்மா சூரனை துவம்சம் செய்ய திருமால் மோஹினி அவதாரம் கொண்டாராமே? அதற்கும் உனக்கும் தொல்வினைத் தொடர்பு ஏதாகிலும் உண்டா?
ஐயோ! ... நான் தோற்றுப் போனேன்!
மோஹினிக்குக் கல்யாணம்!
உண்மையாகவே எனக்கு அப்படித் தான் புலப்படுகிறது. இந்த மோஹினி அசல் மோஹினி யாகவே தான் இருக்கவேண்டும். அவளுடைய அவதார மகிமையின் விளைவாக, துன்ப விளைவுதான் ஏற்பட்டாக வேண்டுமென்று இருக்கும் போலும்!
குப்பை இருக்கிறது. அதிலிருக்கின்ற குன்றி மணிக்கு ‘சுக்கிரதசை வாய்ப்பதையொப்ப, அனாம தேயன் ஒருவனுக்கு இந்த வாழ்வு கிட்டுவதென்றால். அதற்கு என்ன பெயரிட வேண்டும்?
ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.
அஞ்சன வண்ணன் இராமபிரான் அயோத்தி மாநகரை விட்டு நீங்குவதற்கு விதியின் பிழை தான் காரணமெனச் சுட்டுகிறார் கவிச்சக்கரவர்த்தி அதே போல், இந்த இளைஞன் இன்பசாகரன் எழில் ராணி மோஹினியை இன்பம் துய்க்கும் பேறு கொள்ளக் காத்திருப்பதுக - விதியின் பிழை” யாகவே இருக்கலாமோ? பிழை திருத்தும் நான் , சிருஷ்டிச் சுவடிகளின் தலையில் கைவைக்கத் துணிந்து விட்டதாக உங்களில் யாரும் அன்பு கூர்ந்து கருதலாகாது!
இன்பசாகரன் பிச்சைக் காரன். மோஹினியின் ஆட்டத்தைத் தரிசித் திருக்கிறான். அதுவே, அவனுக்குத் தேவ தரிசனம்’ ஆகவும் தோன்றியிருக்க வேண்டும். உடனே அவன் என்ன செய்தான், தெரியுமா? வழி மறித்த தடைகளை வழி விலக்கி விட்டு மோஹினியை நேருக்கு நேர் தரிசித்தான். ‘நான் உருவத்தில் பரம ஏழை. ஆனால், உள்ளத்தால் நான் மாபெரும் சீமான். உன் முதற் பார்வை பட்ட கனத்திலேயே என்னுள் இதுவரை நான் அனுபவித்தறியாத ஓர் இன்ப உணர்வு தலையெடுத்து என்னை அலைக் கழித்தது, அடைந்தால் உன்னையே அடை வது இல்லையென்றால் சாவது என்று வந்திருக்கிறேன். என் புனித மிகு ஆண்மைமீது உறுதி வைத்துப் பேசக்கூடிய பேச்சு இது!’ என்று வீறு கொண்டு முழங்கியிருக்கின்றான் அவன்,
அவள் சிரித்தாளாம்!
சிரிப்பென்றால், எதிரியைத் துரசாக நிர்ணயித்து எடை போட்ட ஏளனச் சிரிப்பு.
இன்பசாகரன் அவளை ஒருமுறை விழிகளால் விழுங்கிவிட்டுப் பிரிந்து விட்டான்.
அடுத்த பத்தாவது நிமிஷம், மோஹினியின் முன்னே ஓர் அதிசயம் ஏடவிழ்ந்தது.
இன்பசாகரன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்து மோஹினியின் வீட்டுக் கேணியில் விழுந்திருக்கிறான். அவனுக்கு ஆயுள் கெட்டி, யாரோ காப்பாற்றி விட்டார்கள்.
இன்பசாகரனைப் புரிந்து கொண்டாள் மோஹினி. அவள் தன்னுள் என் தவம் இப்போது தான் பொருள் பெறப் போகிறது என்று கூறிக் கொண்டாளாம்!
இதோ, அழைப்பு. அவ்விருவரும் இனி உயிரும் உயிருமாகப் போகிறார்கள்! வாழ்க!
சைத்திரிகன் பிழைக்கத் தெரிந்தவனாம்!
ஆடுதுறைப் பண்ணை மணிகண்டன் பிழைக்கத் தெரியாதவன் சூது கவ்விய மதியுடன், பிடிப் பற்றுக் கிடக்கிறானாம்! எப்படியோ, அவனுடைய திருமண வைபவமும் ஒரு நாள் நடக்கத் தான் போகிறது. .
மோஹினி-இன்பசாகரன் வதுவை விழா வெகு அற்புதமாக நிகழ்ந்தது.
சாப்பாடு என்றால், செட்டி நாட்டுச் சாப்பாடு: இன்பசா கரனுக்குத் தான் எவ்வளவு குது கலம்! ..
“முதல்-இரவின் பொழுது விடிந்தது. எனக்கு ஒரு செய்தி விழுந்தது.
“இன்பசாகரனின் உயிர் விடுதலை அடைந்து விட்டது.
மோஹினியை என் மனக் கண் களில் கொணர்ந்து நிறுத்திப் பார்க்கிறேன். என் மெய் சிலிர்க்கிறது. பொய்யினின்றும் பிரிந்து, மெய்யே உயிராக நிற் கின்றாள் அவள் என்னுள் மற்றுமொரு நினைவு பளிச் சிடுகிறது. திருமுருகாற்றுப் படை"யில் ஒரு கட்டம். மனிதர்களின் கைத்திறனுக்கும் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு முருகவேளின் அழகு இருக்கிற தாம்! “கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு’ என்று பேசப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வீக அழகு இந்தத் தாசி மோஹினிக்கும் வாய்த்திருந்தது!
மீண்டும் ஒரு செய்தி. நான் எப்படிக் கூறுவேன்? அந்த உடற்கூடு பிடி சாம்பலாகிவிட்ட மறு கணத்திலேயே, அந்தப் பிடி சாம்பலுடன், தீ"யின் எரிசாம் பலும் கரைந்து விட்டதே!
தாம். தீம்... ைத. ைத’ என்ற சதங்கைப் பண் ஒலி உங்கள் செவிகளில் விழுகிறதல்லவா?
ஆம்; மோஹினி அசல் மோஹினியேதான்!
※ ※ ※