அமுத இலக்கியக் கதைகள்/தளவரிசை


தளவரிசை

"இந்த இடம் மனத்துக்கும் உடம்புக்கும் இன்பம் தருவதாக இருக்கிறது. குற்றால மலையின் அழகைச் சொல்வதா? அங்கிருந்து எப்போதும் சலசலவென்று வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியைச் சொல்வதா? இங்கே எழுந்தருளியிருக்கும் திருக்குற்றால நாதரின் திருக்கோயில் அழகைச் சொல்வதா? இங்கே வீசும் காற்றுக்கு ஒரு பெருமை; இங்கே ஒடும் தண்ணீருக்கு ஒரு சிறப்பு."

ஒரு பெண்மணி இப்படிப் பேசினாள் அவளுடன் நடந்துகொண்டிருந்த மற்றொரு பெண்மணி, "ஆம், ஆம்" என்று அவள் பேச்சுக்கு ஊக்கம் ஊட்டி வந்தாள்.

"சுற்றிலும் என்ன அழகான சோலை! மனிதனுடைய முயற்சி இல்லாமல் இயற்கையிலே இவ்வளவு அழகை இங்கே இறைவன் கொட்டிக் குவித்திருக்கிறான். அவனுடைய பெருங் கருணையையும் பேராற்றலையும் என்னவென்று சொல்வது! இந்தச் சூழ்நிலையிலே தெய்வத்தன்மை மணக்கிறது; கண்ட கண்கள் குளிர்கின்றன; இந்தக் காற்றுப் பட்டு உடம்பு குளிர்கிறது; அருவியின் ஓசை கேட்டுக் காது குளிர்கிறது; பழமும் மலரும் நாவையும் நாசியையும் இன்புறுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குற்றால நாதருடைய தரிசனம் உள்ளத்தையே குளிர்விக்கிறது" என்று அந்தப் பெண்மணி பேசிக் கொண்டே சென்றாள். 

சிலுசிலுவென்று சாரல் வீசிக்கொண்டிருந்தது. பன்னீர் தெளிப்பதுபோல இருந்தது அது இறைவன் திருக்கோயிலே வலம் செய்துகொண்டிருந்தார்கள், அந்த இரண்டு பெண்மணிகளும், உள்ளேகோயிலுக்குச் சென்று குற்றால நாதரையும் குழல் வாய்மொழியம்மையையும் வணங்கிவிட்டு இப்போது வெளிப் பிராகாரத்தை வலம் வந்துகொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டு வந்த பெண்மணி உடம்பு முழுவதும் பொன்னும் மணியும் புனைந்திருந்தாள். வளப்பமான தோற்றம். பார்த்த அளவிலே செல்வம் நிறைந்த குடியைச் சார்ந்த பெண்மணி என்று தெரியும். அவளுடன் வந்த நங்கை சற்றே இளையவள். முகத் தோற்றத்தைப் பார்த்தால் இருவரும் சகோதரிகள் என்று சொல்ல இயலாது. இவர்கள் யார்?

திருநெல்வேலிச் சீமையில் பழைய காலத்தில் பல பாளையப்பட்டுகள் இருந்தன. இப்போது சொக்கம் பட்டி என்ற பெயரோடு வழங்கும் இடம் முன்பு ஒரு சமீனுக்கு இருப்பிடமாக இருந்தது. வடகரை யாதிக்கம் என்ற பெயரால் அதை வழங்கி வந்தனர். அந்தச் சமீனில் இருந்து ஆட்சி நடத்தியவர்களில் சின்னணைஞ் சாத்தேவர் என்பவர் மிக்க புகழ் பெற்றவர். அவரைப் பாராட்டிப் புலவர்கள் பாடிய பிரபந்தங்கள் பல உண்டு. அந்தக் குடியில் வந்தவர்கள் திருக்குற்றாலநாதர் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். திருக்குற்றால நாதரிடம் பேரன்பு பூண்டு அடிக்கடி வந்து தரிசனம் செய்து போவார்கள்.

அந்த மரபில் சின்னணைஞ்சாத் தேவருக்கு முன் இருந்த சமீன்தார் ஒருவரின் மனைவியும் அவருடைய தங்கையுமே மேலே சொன்னபடி திருக்கோயிலை வலம் வந்துகொண்டிருந்தார். இருவரும் மனம் கலந்து பழகுகிறவர்களாதலின் மகிழ்ச்சியோடு உரையாடிக்  கொண்டே திருக்கோயில் பிராகாரத்தில் வலமாக நடந்துகொண்டிருந்தார்கள்.

சமீன்தாரிணி புரளப் புரள ஆடை உடுத்துக் கொண்டிருந்தாள். சரிகை மினுமினுக்கும் பட்டாடை அவள் உடம்பில் தகதகத்தது. அவளுடைய நாத்தியின் மேனியில் சற்றே மெல்லிய ஆடை வண்ணமும் சித்திர வேலைப்பாடும் உடையதாக விளங்கியது.

அக்காலத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்த பிராகாரம் தளவரிசை இல்லாமல் தரையாகவே இருந்தது. சாரல் இடைவிடாமல் வீசியமையால் அது ஈரமாகியிருந்தது. அந்த ஈரத்தில்தான் இரண்டு பெண்மணிகளும் நடந்துகொண்டிருந்தார்கள்.

பேச்சிலே மனம் ஈடுபட்டபடி வலம் வந்த அவர்களில் இளையவள் சமீன்தாரிணியைப் பார்த்து, "என்ன அண்ணி, இது? உன் புடைவையெல்லாம் மண்ணாகி விட்டதே!" என்றாள். தழையத் தழைய உடுத்திருந்த சீலையின் விளிம்பு பிராகாரத்தில் உள்ள மண் பட்டு அழுக்கேறியிருந்தது.

சமீன்தாரிணி தன் சிலையைப் பார்த்தாள்; "ஆமாம்; இவ்வளவு மண் ஆகிவிட்டதே!" என்றாள்.

"நீ உன் நிலைக்கு ஏற்றபடி புடைவையைப் புரளப் விட்டு நடக்கிறாய். எந்த இடத்தில் நடக்கிறோம் என்ற நினைவே உனக்கு இல்லை.”

"சரி என்ன பண்ணுவது? சீலை அழுக்காகுமென்று அஞ்சித் திருக்கோயிலை வலம் செய்யாமல் இருக்க முடியுமா? கால் தெரியும்படி சீலையைக் கையால் பிடித்துக்கொண்டு போவதற்கும் நாணமாகஇ ருக்கிறது.”

"மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசையென்றால் முடியுமா? சீலை மண்ணாகாமல் இருக்க வேண்டுமானால் நாகரிகத்தையோ நம் நிலையையோ நாணத்தையோ  பார்க்கக்கூடாது. எல்லாருமே உன்னைப்போலப் புரளம் புரளத்தான் சீலை உடுத்துகிறார்களோ?” -

"எல்லாருமே சமீன்தார் மனைவிகள் ஆவார்களா?"

"அப்படியானால் நீ இங்கே நடக்கக்கூடாது "

சமீன்தாரிணி சற்றே உறுத்து அந்த இளம் பெண்ணைப் பார்த்தாள். என்ன பைத்தியக்காரப் பேச்சுப் பேசுகிறாய்? கோயிலுக்கே வரக் கூடாது என்றுகூடச் சொல்வாய் போலிருக்கிறதே! ஆடை அழுக்கானால் துவைத்துக் கொள்ளலாம்; அழுக்கைப் போக்கிவிடலாம். இதை ஒரு பெரிய காரியமாக எண்ணிக்கொண்டு இறைவன் கோயிலை வலம் செய்யாமல் இருப்பதா?" என்றாள்.

"அதெல்லாம் சரிதான்; நாம் நம் ஊருக்குப் போகு மட்டும் இந்த அழுக்காடையைக் கட்டிக்கொண்டு தானே இருக்க வேண்டும்? மாற்றுடை ஒன்றும் கொண்டு வரவில்லையே! சற்றே நம்முடைய உயர்ந்த நிலையை நினைத்து, சீலையில் அழுக்குப்படாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கலாமே!”

"இந்த எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எங்கேயாவது இப்படி நடந்திருந்தால்தானே பழக்கம் இருக்கும்? அப்படி நடந்தாலும் கையால் சீலையைக் கால் தெரியும்படி பற்றிக்கொண்டு நடக்க மனம் துணியாது."

"சரி சரி, நீ சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிருய், ஆடையைத் தழையத் தழைய உடுத்துக் கொள்ளவும் வேண்டும், அழுக்கும் படக்கூடாதென்றால் ஒரு காரியம் செய்தால் நல்லது. இந்த ஒரு சீலைக்காக அப்படியார் செய்வார்கள்?"

சமீன்தாரிணி தன் நாத்தியைப் பார்த்தாள். அவன் கண்ணில் கேள்விக் குறி படர்ந்தது. "ஆம்; அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி நடக்கலாம்" என்று சற்றே பரிகாசம் தொனிக்கும்படி சொல்லிச் சிரித்தாள் இளம் பெண். அவள் ஏதோ பரிகாசமாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள் சமீன்தாரிணி.

"நீ என்னவோ குறும்பாகப் பேசுகிறாய். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுகிறாய்?"

"ஓர் அரசன் வெயிலில் வெளியே புறப்பட்டான். வெயில் கடுமையாக இருந்தது. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. இந்த வானம் முழுதும் மறையும்படி பந்தல் போடச் சொல் என்று உத்தாவிட்டானாம். அப்படி நீ ஓர் உத்தரவிட்டால் உன் சங்கடம் தீரும்."

"உன் உவமை இருக்கட்டும். அந்த அரசனைப் போல முட்டாள்தனமான செயல் ஒன்று நான் செய்ய வேண்டும் என்கிறாய். அது இன்னதென்று சொல் பார்க்கலாம். உன்னுடைய கற்பனை வளத்தை நானும் அறிந்து மகிழ்ச்சி பெறுகிறேன்."

"உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? நீ நடக்கிற இடமெல்லாம் அழுக்கும் மண்ணும் இராமல் இருக்கவேண்டும் என்று அண்ணனிடம் சொல்லி ஓர் உத்தரவு போட்டுவிடு. அப்போது உன் ஆடை அழுக்காகாமல் இருக்கும். அதாவது, நீ மண்ணிலேயே நட்க்கக் கூடாது. நீ போகும் இடம் முழுவதும் கல்லினால் 'தளம் போட்டுவிட வேண்டும். அப்படியானால் உன் நாகரிகம் கலையாது. ஆடை புரண்டு புரண்டு பள பளக்கும்.

இன்னும் அந்தப் பெண் குறும்புப் பேச்சை விடவில்லை. ஆனால் இப்போது அவளுடைய அண்ணி, ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். அவள் முகத்தில் இப்போது கோபக் குறிப்பு இல்லை. எதையோ மிகவும் ஆழ்ந்து சிந்திக்கிறாள் என்று தோன்றியது. முகத்தில் திடீரென்று ஒளிக் கீற்றுப் படர்ந்தது. அவள் கடை வாயில் புன்முறுவல் இழையோடிற்று. சட்டென்று தன் நாத்தியின் முதுகைத் தட்டினாள். "ஆ ஆ! உன் குறும்புப் பேச்சிலும் எனக்கு ஓர் உபதேசம் கிடைத்தது. ஓர் அற்புதமான யோசனையை வெளியிட்டதற்காக நான் உன்னைப் பாராட்ட வேண்டும்.”

இதை அவள் உண்மையில் மகிழ்ச்சிக் கொந்தளிப்போடு தான் கூறினாள். 'இவள் என்ன எண்ணி இப்படிப் பாராட்டுகிறாள்?'–இளையவளுக்கு அது விளங்கவில்லை.

"என்ன அண்ணி, சொல்லுகிறாய்? திடீரென்று உன் கோபம் மாறிவிட்டதே!" என்று கேட்டாள் அவள்.

"நீ இன்று முத்து முத்தாகப் பேசினாய். அதன் பயனை இதோ பார்க்கப் போகிறாய்" என்று கூறி வேக்மாக நடை போட்டாள் சமீன்தாரிணி.

"என்ன அண்ணி, என்னை மிரட்டுகிறாயா?”

"அடி பேதைப் பெண்ணே! நீ பேசின பேச்சின் அருமை உனக்கே தெரியவில்லை. நான் நடக்கும் இட மெல்லாம் கல் பாவ வேண்டுமென்று சொன்னாயே; அதைத்தான் சொல்கிறேன்.”

"பரிகாசமாக அல்லவா அதைச் சொன்னேன்?"

"அது பரிகாசம் அன்று; உபதேசம். என்னுடன் வா; நடப்பதைக் கவனி. பிறகு எல்லாம் தெரியும்."

வேகமாக இருவரும் நடந்தார்கள். மீட்டும் இறைவன் சந்நிதியை அடைந்தார்கள். சமீன்தாரிணி தன் கையில் வைத்திருந்த சிறிய துண்டை அங்கே விரித்தாள். தன் கை வளையைக் கழற்றி அதில் வைத்தாள். பிறகு காலில் இருந்த அணியைக் கழற்றி வைத்தாள்.

அவள் நாத்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை; "என்ன அண்ணி இது? ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கேட்டாள். "பேசாமல் இரு; திரிகூடாசலபதியின் திருக்கோயிற் பிராகாரம் முழுவதும் கல்லால் தள வரிசை போட வேண்டும். இந்த யோசனையை அந்தப் பெருமான் உன் வாயிலாக அறிவுறுத்தினன்.”

இப்படிச் சொல்லிக்கொண்டு அந்தப் பெண்மணி மூக்குத்தியைக் கழற்றினாள். காதணியை எடுத்து வைத்தாள். திருமங்கலியத்தைத் தவிர மற்ற அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு, கோயிலில் இருந்த தருமகர்த்தரை அழைத்து வரச் சொன்னாள்.

"இதோ பாருங்கள்; இந்த அணிகலன்கள் யாவும் கோயிலுக்கு நான் வழங்கிவிட்டேன்" என்று அவரிடம் சொன்னாள்.

"என்ன இப்படித் திடீரென்று யோசனை வந்தது?" என்று கேட்டார் தருமகர்த்தர்.

"இவ்வளவையும் விற்றுப்பணமாக்குங்கள். இந்தத் திருக்கோயிலின் வெளிப்பிராகாரம் முழுவதும் கல் பாவி விடுங்கள். இந்த அணிகலன்கள் போதவில்லையானால் மேற்கொண்டு பொன்னும் பொருளும் அனுப்புகிறேன்" என்றாள் சமீன்தாரிணி.

"என்ன அண்ணி இது? அண்ணனுக்குத் தெரியாமல் இப்படிச் செய்யலாமா?" என்று நாத்தி கேட்டாள்.

"என் நகைகள் இவை; என் பிறந்தகத்திலிருந்து கிடைத்தவை; ஆதலால் இவற்றைக் கொடுக்க முன் வந்தேன். அன்றியும் உன் தமையனார் இதைக் கேட்டால் மகிழ்வாரேயன்றி வருத்தப்படமாட்டார்".

"இப்போதே இப்படிச் செய்யாமல் ஊருக்குப்போய் அவருடன் கலந்துகொண்டு வேறுவகையில் நீ நினைத்த காரியத்தைச் செய்திருக்கலாமே; இவ்வளவு அவசரம் எதற்கு?” 

"அப்படி அன்று. நல்லகாரியம் செய்யும் எண்ணம் எப்போது உண்டாகிறதோ, அப்போதே அதைச் செய்து விட வேண்டும். சற்றே தாமதம் செய்தால் அந்த எண்ணமே மாறிப்போனாலும் போகும்.”

"இப்படிச் செய்ய என் பரிகாசப் பேச்சு இடம் கொடுத்ததே என்று நான் வருந்துகிறேன்.”

"வருந்துவதா? நீ அந்த புண்ணியத்திற்குக் காரணம் ஆனாய். உனக்கும் இதில் பங்கு உண்டு. நீ என்னவோ பரிகாசமாகத்தான் பேசினாய். ஆனால் அந்தப் பேச்சினூடே இறைவன் திருவருள் இருந்து, இது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை எனக்கு. உண்டாக்கியது.”

இப்போது அந்த இளம் பெண்ணால் பேச முடிய வில்லை. அவள் உள்ளம் உருகியது. அவளும் தன் கை வளைகளைக் கழற்றினாள்; "அண்ணி, உண்மையில் இந்தப் புண்ணியத்தில் எனக்கும் பங்கு இருக்கட்டும்" என்று முன் இருந்த அணிகலக் குவியலின்மேல் அவற்றை வைத்தாள்.