அமுத இலக்கியக் கதைகள்/வியத்தற்குரிய கொடை
தொண்டை மண்டலத்தில் ஓர் ஊரில் வல்லாளர் என்ற செல்வர் வாழ்ந்திருந்தார். அவர் வாழ்ந்திருந்த ஊர் இன்னதென்று தெரியவில்லை.
அவர் செல்வத்தைப் பயன்படுத்தும் வகை தெரிந்தவர். வறியவர்களுக்கு அளிக்கும் வண்மை உடையவர்.
ஒரு வகையில் புலவர்களும் வறியவர்களாகவே வாழ்க்கையை நடத்தினர். வறியவர்களுக்குப் பொருள் கிடைப்பதில்லை. புலவர்களுக்கோ கிடைத்தும் கையில் நிற்பதில்லை. இதுதான் வேறுபாடு.
அவ்வப்போது கிடைக்கும் பொருளை உற்றாருக்கும் உறவினருக்கும் வாரி வீசிவிடுவார்கள் புலவர்கள். ஒருவகையில் அவர்கள் துறவிகளாகவும், மற்றாரு வகையில் வள்ளல்களாகவும் இருந்தனர். 'நாளைக்கு வேண்டுமே!’ என்ற கவலை இல்லாமல் கையில் உள்ளதை வீசவேண்டுமானால் துறவிகளைப் போன்ற மனப்பான்மை அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படியே வறியவர்களைக் கண்டால், உள்ளதை இரங்கி ஈயும் பான்மை வள்ளல்களுக்குரியது மாத்திரம் அன்று; புலவர்களிடமும் அந்த இயல்பு இருந்தது. அதனால்தான், புலவர்கள் எப்போதும் வறியவர்களாக வாழ்ந்தனர் போலும்.
தொண்டை நாட்டு வள்ளலாகிய வல்லாளர் தம்முடைய ஆற்றலுக்கு ஏற்ற வகையில் வறியவர்களைப் பாதுகாத்தார்; புலவர்களைப் போற்றினார். எந்தச் சமயத்தில் ஏது இருந்தாலும் புலவர் கேட்டால் கொடுத்து விடுபவர் என்ற புகழை அவர் பெற்றார். அந்த இயல்பைப் புலவர்களே பாராட்டி வியந்தார்கள்.
ஒரு சமயம் தொண்டை நாட்டுப் புலவர் ஒருவர் வேற்று நாட்டுக்குப் போயிருந்தார். அங்கே ஒரு புலவரைச் சந்தித்தார். புலவர்களைப் பற்றியும் புரவலர்களைப் பற்றியும் தங்கள் தங்கள் அநுபவத்தில் உணர்ந்தவற்றைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அயல் நாட்டுப் புலவர் தாம் கண்ட ஈகையாளர்களின் பெருமையையும், அவர்கள் ஈகைப் பான்மையை நன்கு எடுத்துக்காட்டும் சில நிகழ்ச்சிகளையும் எடுத்துச் சொன்னார். தொண்டை நாட்டுப் புலவரும் தாம் அறிந்த கொடையாளரைப் பற்றிப் பேசினார். இடையே வல்லாளருடைய இயல்பையும் சொன்னார். "அவரைக் காட்டிலும் மிகுதியான செல்வம் படைத்தவர்கள் பலர் உலகில் இருக்கலாம். தம்பால் வரும் புலவர்களுக்கு விலை உயர்ந்த பொருள்களைக் கொடுத்துப் புகழ் பெறுபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், வல்லாளருடைய இயல்பு தனிச் சிறப்புடையது. அவர் எங்கே இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், யாரேனும் வந்து இரந்தால், கையில் அப்போதைக்கு எது இருந்தாலும் உடனே கொடுத்துவிடுவார். எங்கேனும் வெயிலில் குடை பிடித்துக்கொண்டு போவார். இடையே புலவனே வறியவனே வந்து கையை நீட்டினால், அந்தக் குடையை அவன் கையில் கொடுத்து விட்டுப் போய்விடுவார்."
"வீட்டுக்கு வாருங்கள், தருகிறேன் என்று சொல்ல மாட்டாரா?"
"அதுவும் சொல்லுவார். ஆனால், கண்ட உடனே இருப்பதைக் கொடுப்பதில் அவருக்குத் திருப்தி அதிகம். வீட்டிற்குப் போவதற்குள் மனம் மாறினால் என் செய்வது என்று எண்ணுவார் போலும்! எத்தனையோ சமயங்களில் நடுவழியில் கண்ட புலவனுக்குக் காதுக்கடுக்கனைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார், இடுப்பு அரைஞாணை. எடுத்து வழங்கியிருக்கிறர்.”
"அப்படியானால் அந்த வள்ளலை அவசியம் பார்த்து அளவளாவ வேண்டும். நீங்கள் என்னை அவரிடம் அழைத்துச் செல்வீர்களா?”
"அதற்கு அவசியமே இல்லை. உங்களிடம் தமிழ் இருக்கிறது. அதுவே உங்களை அழைத்துச் செல்லுமே! நான் வந்து உங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில்லையே! அவருடைய இயல்பை உள்ளபடி உணரவேண்டுமானல், நீங்கள் தனியாகச் சென்று அவரைக் காண்பதுதான் நல்லது. நான் அவருக்குத் தெரிந்தவனாகையால், எனக்காக உங்களை வரவேற்றுப் பரிசளித்தார் என்று நீங்கள் ஒருகால் கருதவும் கூடும். அந்தக் கருத்துக்கு இடம் இல்லாமல் நீங்கள் தனியே சென்று பாருங்கள். வீட்டில் இருக்கும்போதுதான் பார்க்க வேண்டும் என்பதில்லை. எங்கேயாவது வழி மறித்துச் சோதனை போடுங்கள்.”
"நான் என்ன வழிப்பறிக்காரனா?"
"இல்லை, இல்லை; எங்கேனும் சென்று கொண்டிருக்கும்போது அவரைச் சந்தித்துப் பாருங்கள் என்று சொல்லவந்தேன். அப்போது நாள் கூறியவை எவ்வளவு உண்மை என்று தெரியவரும்" என்றார் தொண்டை நாட்டுப் புலவர்.
அயல் நாட்டுப் புலவர் வல்லாளரைச் சென்று காண்பதென்று தீர்மானித்துக்கொண்டார். அவர் இருக்கும் ஊருக்குச் செல்லும் வழியைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
ஒரு நாள் புலவர் தொண்டை நாட்டுக்குப் புறப்பட்டார். அந்த நாட்டுப் புலவர் சொன்னவையெல்லாம். அவரது நினைவுக்கு வந்தன. வல்லாளரை மிகவும். சங்கடமான நிலையில் வைத்துச் சோதனை செய்து பார்த்துவிட வேண்டும் என்ற பைத்தியக்கார எண்ணம் அவருக்குத் தோன்றியது. வள்ளல் வாழும் ஊருக்குச் சென்றார். அவர் தம் வீட்டில் தங்கியிருக்கும்போது பார்க்கக்கூடாது என்பது புலவர் கருத்து. அவர் எங்கேனும் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும் போது நடுவழியில் மறிக்க வேண்டும் என்று எண்ணியவராதலின், அதற்கு ஏற்ற காலத்தைப் பார்த்துக் கொண்டு, ஒருவர் வீட்டில் தங்கினார்.
ஒரு நாள் வல்லாளர் எங்கோ புறப்படப் போகிறார் என்ற செய்தி புலவருக்குக் கிடைத்தது. காஞ்சியில் இருந்த மன்னன் அந்தச் செல்வரை அழைத்திருந்தான். அரசாங்கத்தில் ஏதேனும் மாறுபாடோ, சிறப்பு நிகழ்ச்சியோ நேருமானல், நாட்டில் உள்ள செல்வர்களையும் அதிகாரிகளையும் அழைத்து யோசிப்பது அந்த மன்னன் இயல்பு. இப்போதும் ஏதோ ஒன்றைப்பற்றி ஆலோசனை செய்வதற்காகவே வல்லாளரை அழைத்தான் மன்னவன்.
அந்தக் காலத்தில் மன்னனிடமிருந்து அழைப்பு வருவதானால் அதைப் பெறற்கரும் சிறப்பாக எண்ணுவார்கள் மக்கள். மன்னவனுக்கு இருந்த பெருமை கிடக்கட்டும்; அவனால் மதிக்கப் பெறும் மனிதர்களுக்கு, அவனை அடிக்கடி பார்த்துப் பழகும் உரிமை உடையவர்களுக்கு, இருந்த செல்வாக்குக்கே எல்லை இல்லை.
வல்லாளர் அரசனைப் பார்க்கப் புறப்பட்டார். அரசவைக்குச் செல்வோர் நல்ல ஆடை அணிகளை அணிந்து செல்வார்கள். அவ்வாறே அவர் இடையில் சிறந்த துகிலையும், மேலே சரிகைக் கரையிட்ட மேலாடையையும் புனைந்தார். காதில் நல்ல வைரக் கடுக்கன்களை அணிந்துகொண்டார். நல்ல தலைப்பாகையையும் சிறந்த காலணியையும் அணிந்து புறப்பட்டார்.
வல்லாளரின் இயல்பை அறிந்துகொள்ளக் கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருந்த புலவருக்கு இந்தச் செய்தி தெரிந்தது. சோதனையில் தம் பங்கில் அதிக ஊதியம் இருக்கும் என்று ஊகித்து மகிழ்ந்தார். வல்லாளர் காஞ்சிக்கு எந்த வழியில் போவார் என்று தெரிந்துகொண்டார். அவர் வாழ்ந்த ஊர் காஞ்சிக்கு அருகிலேயே இருந்தமையால், கால்நடையாகவே மன்னனைக் காணப் புறப்பட்டார் அவர்.
இன்னவாறு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டு புலவரும் புறப்பட்டார். வல்லாளர் புறப்படுவதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டு அவர் புறப்படுவதற்கு முன்பே அவர் போகும் வழியே சென்று இடையே ஓரிடத்தில் வள்ளலின் வருகையை எதிர் பார்த்துக்கொண்டு நின்றார்.
வல்லாளர் அன்று தனியேதான் போனர். அருகில் உள்ள ஊருக்குத் துணை எதற்கு என்று புறப்பட்டுச் சென்றார். வழியில் புலவர் அவரைக் கண்டார்; கும்பிடு போட்டார். "தங்களைக் காண்பதற்காகத்தான் வந்து கொண்டிருக்கிறேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போலத் தாங்கள் காட்சி அளிக்கிறீர்கள். என்னுடைய அவசரத்தில், இங்கேயே தங்களைக் கண்டு என் குறையை நிரப்பிக்கொண்டு போவது நல்லது தான்" என்றார்.
"நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் வல்லாளர். -
"நான் புலவன். உங்கள் பெருமையைப் பல புலவர்களின் வாயிலாகக் கேட்டிருக்கிறேன். எனக்கு உங்கள் தயை வேண்டும்.”
"நான் இப்போது அரசரைப் பார்க்கச் செல்கிறேன். நீங்கள் எங்கள் ஊர் சென்று என் வீட்டில் இருங்கள். தான் நாளைக்கே வந்துவிடுவேன். வந்த பிறகு உங்களோடு அளவளாவி இன்புறுவேன். உங்களுக்கு வேண்டியதை அறிந்து என் ஆற்றலுக்கு இசைந்த வகையில் அந்தக் குறையைப் போக்க முயலுவேன்” என்று கூறினர் செல்வர்.
"எனக்கு மிகவும் விரைவாகப் போக வேண்டியிருக்கிறது. எப்படியும் நாளை மாலைக்குள் எங்கள் ஊரில் இருந்தால்தான் நான் நினைத்த காரியம் கைகூடும்" என்றார் புலவர்.
"அப்படியானால் நானே உங்களை என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.”
"அதற்கு அவசியமே இல்லை. எனக்கு வேண்டிய பொருள்களை நீங்கள் மனம் வைத்தால் இங்கேயே கொடுக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதற்கு நீங்கள் துணிய வேண்டுமே!’
"என்னிடம் இப்போது உள்ளதைக் கேட்டால் கொடுத்து விடுகிறேன். என் கையில் இருப்பது சிறு தொகைதானே?"
"எனக்குப் பணம் வேண்டியதில்லை; பண்டம் வேண்டியதில்லை. எங்கள் வீட்டில் திருமணம் நடக்க வேண்டும். என் மகன் மாப்பிள்ளைக் கோலம் புனைய இருக்கிருன். அவனுக்கு ஆடை அணிகள் இல்லை. அவற்றை நாடியே புறப்பட்டேன்.”
"அப்படியா? எங்கள் வீட்டுக்கு வந்தால் வேண்டியவற்றைத் தருகிறேன்.'
"அதற்கு நேரம் இல்லை. நீங்கள் எச்சமயத்தில் எது இருந்தாலும் கேட்பவர்களுக்குக் கொடுத்து விடுவீர்கள் என்று கேள்வியுற்றேன். அது உண்மையால் என் காரியம் இப்போதே நிறைவேற வசதி இருக்கிறது.
"நீங்கள் இன்ன கருத்துடன் பேசுகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. என்னிடம் இருப்பதைக் கொடுக்க இப்போதும் ஆயத்தமாக இருக்கிறேன். இந்தாருங்கள். இந்தக் குடையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அதை நீட்டினர் வல்லாளர். புலவர் அதை வாங்கிக்கொண்டார். "இந்தப் பாத ரட்சையைக்கூட நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்” என்று செல்வர் அதைக் கழற்றினர். புலவர் அதையும் பெற்றுக்கொண்டார்.
"மறந்துவிட்டேனே! இந்தக் கடுக்கன்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று அந்த வள்ளல் அவற்றையும் கழற்றிக் கொடுத்தார்; 'போதுமா?" என்றார்.
"வெறும் அணிகள் போதுமா? ஆடை வேண்டாமா?’ என்றார்? புலவர்.
வள்ளல் சிறிதே யோசித்தார். ஏதோ தீர்மானத்துக்கு வந்தவர்போல் மேலே அணிந்திருந்த ஆடையையும் எடுத்துப் புலவர் கையில் கொடுத்தார். 'இவரை அனுப்பிவிட்டு, நாம் நம் வீடு சென்று மறுபடியும் ஆடையணி புனைந்து காஞ்சிபுரம் போகலாம்’ என்று அவர் நினைத்துக்கொண்டார். அதனால், தம் இடையில் இருந்த ஆடை ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும் புலவருக்கு வழங்கிவிட்டார். "போதும் அல்லவா?’’ என்று அவர் கேட்டார்.
புலவர் தயங்கித் தயங்கி நின்றார். வள்ளல். "இன்னும் என்னிடம் யாதும் இல்லை. இருந்தால் கொடுப்பேன்" என்றார்.
"உங்களிடம் இன்னும் கொடுக்க ஒன்று இருக்கிறதே" என்று அந்தத் துணிவுமிக்க புலவர் கூறினார்.
வல்லாளர் இடுப்பைத் தடவிப் பார்த்துக் கொண்டார். செருகியிருந்த பணத்தை முன்பே கொடுத்துவிட்டார். இப்போது அங்கே ஒன்றும் இல்லை. புலவர் எதைக் குறிக்கிறார் என்று அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. "என்னிடம் இப்போது உங்களுக்குக் கொடுக்க என்ன இருக்கிறது?’ என்று கேட்டார்.
புலவர் அதை வாயால் கூறவில்லை. கையால் குறிப்பித்தார்; அவர் இடையில் அணிந்திருந்த ஆடையைச் சுட்டிக் காட்டினர். வள்ளலுக்கு வியப்போ கோபமோ உண்டாகவில்லை. புன்முறுவல் பூத்தார். சிறிது யோசித்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். இடையில் இருந்த ஆடையையும் அவிழ்த்து அளித்துவிட்டுக் கோவணத்துடன் நின்றார்.
புலவர் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு போய் விட்டார். கோவணத்துடன் நின்ற வள்ளல், வழியில் அவ்வாறு நிற்கக் கூடாது என்று கருதி மறைவிடம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார். நல்ல வேளையாக அருகில் ஒரு குளம் இருந்தது. அங்கே விரைந்து சென்றார். குளத்துக்குள் இறங்கி இடுப்பளவு நீரில் நின்று கொண்டார்.
அங்கு இருந்தபடியே தம்மை அறிந்தவர் யாரேனும் அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். புகழ்பெற்ற அவரை அறியாத மக்கள் அந்த வட்டாரத்தில் யார் இருக்கிறார்கள்? அந்த வழியே சென்ற ஒருவர் குளத்தில் நின்றுகொண்டிருந்த வள்ளலைப் பார்த்தார்.
"ஏன் இங்கே நிற்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"முதலில் உம்முடைய மேலாடையை இப்படி வீசும்’ என்றார் வல்லாளர். அவர் அப்படியே செய்ய அதை உடுத்துக்கொண்டு கரையேறினர். அதற்குள் வேறு இருவர் வந்துவிட்டார்கள். அவர்கள் தம் மேலாடைகளை வழங்கினர்கள். "ஏன் இப்படி இருக்க வேண்டும்? யாரேனும் வழிப்பறி செய்தார்களா? என்று கேட்டார்கள் அவர்கள். அவர் ஒருவாறு நிகழ்ந்ததை அறிவித்தார். புலவர்மேல் குற்றம் சாராதவாறு திறமையாகத் தாமே வாக்களித்து அகப்பட்டுக் கொண்டதாகச் சொன்னர். அதைக் கேட்ட யாவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
விரைவில் வீட்டிலிருந்து ஆடைகளை வருவித்து அணிந்துகொண்டு, வல்லாளர் காஞ்சிக்குப் புறப்பட்டார். அரசனைக் கண்டு உரையாடி யிருந்தார். மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தார்.
அங்கே அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. அவரிடம் கொடை பெற்ற புலவர் அங்கே ஒரு மூட்டையுடன் காத்துக்க்ொண்டிருந்தார். வள்ளல் தம் வீட்டை அடைந்தவுடன் புலவர் தம் கையிலிருந்த மூட்டையை அவர்முன் வைத்து நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து எழுந்தார். அவர் கண்ணில் அருவி பாய்ந்தது. விம்மியபடியே பேசலானார்.
"தங்களைப் போன்ற கொடையாளியை நான் பார்த்ததே இல்லை. தங்கள் பெருமைகளைக் கேட்டறிந்த நான் தங்களைச் சோதிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு வழி மறித்து இந்தக் காரியத்தைச் செய்தேன். தாங்கள் சோதனையில் வெற்றி பெற்றிர்கள். நான் செய்தது அறியாமையானலும், தங்கள் இணையற்ற வள்ளன்மையை உலகத்துக்கு வெளிப்படுத்த அந்த அறியாமை உதவியது. தாங்கள் வழங்கியவற்றை இதோ அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்' என்று கூறி அழுதார் புலவர்.
"புலவரே, நீங்கள் ஏன் இப்படி வருத்தப்பட வேண்டும்? உங்கள் முகமாக இறைவன் இந்தச் சோதனையைச் செய்தான். அவனே எனக்குத் துணை நின்று. என் கொள்கையை நிலை நிறுத்தினன். ஒரு முறை அளித்ததை மீண்டும் பெறுவது தவறு. அப்போது என்னிடம் உள்ளவற்றையே நீங்கள் கேட்டு எனக்குப் பெருமை அளித்ததுபற்றி உங்களிடம் நான் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்."
புலவரும் வள்ளலும் ஒருவரை ஒருவர் பாராட்டி அளவளாவினர். புலவர் வள்ளலுடைய அன்பைப் பெற்றுச் சிலகாலம் தங்கி அவருடைய புகழைத் தமிழால் அளந்தார். வேறு பரிசில்களும் பெற்று விடை கொண்டு சென்றார்.