அமுத இலக்கியக் கதைகள்/பாம்புக் குட்டி

பாம்புக் குட்டி


சிவகங்கையை ஆண்டு வந்த மருத பாண்டியரைப் பற்றிப் பல அருமையான வரலாறுகள் தமிழ் நாட்டில் வழங்குகின்றன. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த அவர் பெருவீரர்; நல்ல கலைத்திறம் தேரும் இயல்பினர்; பெருவள்ளல். அவரைப் புலவர்கள் பாடிய பாடல்கள் அங்கங்கே வழங்குகின்றன.

அக்காலத்தில் இராமேசுவரம் செல்லும் யாத்திரிகர்கள் பெரும்பாலும் நடந்தே செல்வார்கள். அப்படிச் செல்பவர்கள் தங்கி இளைப்பாறவும், உணவு கொள்ளவும் அங்கங்கே அரசர்களும் அறச் செல்வர்களும் பல சத்திரங்களைக் கட்டிவைத்தனர்; சாலைகளில் மரங்களை நட்டு நிழல் செய்தனர்; இடையிடையே தண்ணீர்ப் பந்தலை அமைத்தனர். மருத பாண்டியரும் இப்படிச் சில சத்திரங்களைக் கட்டிவைத்தார். தாம் நிறுவிய அறங்கள் செவ்வனே நடைபெறுகின்றனவா என்று அவ்வப்போது சென்று, பார்த்து வருவது அவர் வழக்கம்.

இராமேசுவரத்துக்குச் செல்லும் வழியில் கலிய நகர் என்ற ஊர் இருக்கிறது. அங்கே ஒரு சத்திரம் கட்டினால் வழிப் போவோருக்கு நலமாக இருக்கும் என்று சிலர் கூறினர்கள். மருத பாண்டியர் அந்த ஊர் சென்று பார்த்து வந்தார். அங்கே சத்திரம் கட்டுவதனால் பலர் பயன் பெறுவார்கள் என்பதை அவர் உணர்ந்தார். அப்படியே கட்டும்படி கட்டளை பிறப்பித்துவிட்டார். கட்டிட வேலை நடந்துகொண்டிருந்தபோது அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

இராமநாதபுரத்தில் அரசவைப் புலவராகச் சர்க்கரைப் புலவர் என்பவர் இருந்து தம்முடைய கவியாற்றலால் பெரும்புகழ் பெற்றுவந்தார். நெட்டி மாலைப் புலவர் பரம்பரையில் வந்தவர் அவர். அவர் ஒரு நாள் மருத பாண்டியரைப் பார்க்க எண்ணினார். அம் மன்னர் கலிய நகருக்கு வந்ததை அறிந்து, அங்கேயே சென்று, அவரைக் கண்டு அளவளாவலாமென்று தீர்மானித்தார். அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமானால் வெறுங்கையோடு போகலாமா? பழம் முதலிய கையுறைகளை மற்றவர்கள் கொண்டு செல்வார்கள். புலவரும் அவற்றைக் கொண்டு செல்லலாம். ஆனால், பிறர் யாரும் கொண்டு செல்ல இயலாததை அவர் கொண்டு போவதுதானே சிறப்பு? சர்க்கரைப் புலவர் நாகபந்தம், முரசபந்தம் முதலிய சித்திர கவிகளைப் பாடுவதில் வல்லவர். அவர் அட்டநாக பந்தமாக ஒரு கவியை வரைந்தார். எட்டு நாகங்கள் பின்னிப் பிணையலிட்டதாக அமைந்த சித்திரம் ஒன்றில் கவியை அடைந்திருப்பார்கள். அதுதான் அட்ட நாகபந்தம். அத்தகைய கவிகளில் சில எழுத்துக்கள் பல இடங்களில் பொதுவாக அமைந்திருக்கும்.

காலையில் எழுந்து நீராடிவிட்டு இந்த அட்டநாக பந்தத்தை வரைந்து முடித்தார் புலவர்.அதை ஓரிடத்தில் வைத்துவிட்டுச் சிவபூசை செய்யப்போனார். பூசையை நிறைவேற்றி உணவுகொண்டு மருத பாண்டியரைப் பார்க்கப் புறப்பட்டார். இராமநாதபுரத்து அரசர் அவருக்குச் சிவிகை வழங்கியிருந்தார். அந்தச் சிவிகையில் ஏறி அவர் கலிய நகருக்குச் சென்றார்.

புலவர் வந்ததை அறிந்த மருத பூபர் மிக்க ஆர்வத்தோடு அவரை வரவேற்று இன்மொழி கூறி அமரச் செய்து அளவளாவத் தொடங்கினர். புலவர் தாம் பாடிய அட்டநாகபந்தக் கவியைக் கூறிப் பிறகு அதனை எழுதி வைத்திருந்த ஏட்டையும் மருதபூபரிடம் தந்தார்; அந்தப் பாட்டின் பொருளையும் கூறினார்.

சித்திர கவிகளின் பெருமை சித்திரத்திலே அதனை அடைத்துப் பார்த்தால்தான் தெரியும். ஆகவே பாட்டைக் காதினுல் கேட்டபின்னர், அது சித்திரத்தில் அமைந்திருப்பதைக் கண்ணுல் பார்க்க எண்ணிப் புலவர் கொடுத்த ஏட்டைப் பிரித்துப் பார்த்தார் மருத பாண்டியர்.

அந்த ஏட்டில் சர்க்கரைப் புலவர் கூறிய அட்ட நாகபந்தச் செய்யுள் இருந்தது. அது மட்டுமா? அந்தப் பாட்டை வரைந்த இடத்துக்கு அருகே உள்ள குறுகிய இடத்தில் சிறியதாக வேறு ஒர் அட்டநாக பந்தமும், அதில் செய்யுள் ஒன்றும் இருந்தன. அந்தச் செய்யுளையும் பாண்டியர் படித்தார்.

பின்பு புலவரை நோக்கி, "தாங்கள் முதலில் எழுதிய அட்டநாகங்கள் போதர்வென்று, அவற்றைக் குட்டி போடச் செய்து சிறிய நாகங்கள் எட்டை வேறு அமைத்திருக்கிறீர்களே!' என்று கூறினார்.

புலவருக்கு முதலில் அவர் கூறியது விளங்கவில்லை. "பெரிய அட்டநாகபந்தமும் அதன் அருகே குட்டி அட்ட நாகபந்தமும் இருக்கின்றனவே! நீங்கள் ஒரு பாடலைத் தானே சொன்னீர்கள்?' என்று மறுபடியும் மருத பாண்டியர் கேட்டார்.

அப்போது புலவருக்கு ஒரு வகையாகச் செய்தி தெரிந்தது. "இன்னும் ஒரு பாடல் இருக்கிறதா?” என்று வியப்போடு கேட்டார்.

"என்ன, அப்படிக் கேட்கிறீர்கள்? அது உங்களுக்குத் தெரியாதா?" என்றார் மருத பாண்டியர்.

புலவருக்கு உண்மை விளங்கிவிட்டது. 'குழந்தையைக் கேட்க வேண்டும்!" என்று கூறினார்.

"குழந்தையா? யார் குழந்தை? தங்கள் குழந்தையா?’ என்று கேள்விமேல் கேள்வியை அடுக்கினார் மன்னர்.

சர்க்கரைப் புலவருக்கு ஒரு குமாரன் இருந்தான். அவன் இளம் பருவத்தினன். ஆண்டில் இளையவனாலும் அறிவில் சிறந்தவனாக இருந்தான். இலக்கண இலக்கியங்களைத் தன் தந்தையாரிடம் பாடம் கேட்டு வந்தான். கவிபாடும் ஆற்றல் அவனிடம் இருந்தது. தந்தையாரைப் போலவே சித்திர கவிகளை இயற்றும் திறமையும் அவனிடம் அமைந்தது. அவனையே சர்க்கரைப் புலவர் குழந்தை என்று குறிப்பிட்டார்.

அந்தக் குட்டி நாகபந்தத்தைச் சர்க்கரைப் புலவருடைய குழந்தை எழுதியிருக்கிறான் என்பதைப் பாண்டியர் அறிந்தபோது அவருக்கு வியப்புத் தாங்க வில்லை. அந்தக் குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. "குழந்தையை நான் பார்க்கவேண்டும். அரண்மனைச் சிவிகையை அனுப்பட்டுமா?" என்று கேட்டார்.

புலவர் சற்றே தயங்கினார். அவருக்கு ஒரு பயம். தம் குமாரன் வந்து பாண்டியர் பார்வையில் பட்டால் அவனுடைய இளம் பருவத்தைக் கண்டு, 'இவ்வளவு சிறியவன பாடினன்?’ என்று மன்னர் வியப்பார். 'அவர் கண் பட்டுவிட்டால் என்ன செய்வது? அது மிகவும் கொடியது என்று சொல்வார்களே!' இப்படி எண்ணிப் புலவர் தடுமாறினர்.

“சமூகத்தில் அந்தக் குழந்தையிடம் பிறந்த கருணைக்கு நான் எழுமையும் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் விளையாட்டுப் பிள்ளை; எங்கேயாவது போய் விளையாடிக் கொண்டிருப்பான். நானே அவனைப் பிறகு ஒரு நாள் அழைத்துவருகிறேன்" என்றார் புலவர்.  "உங்கள் பிள்ளையின் விளையாட்டைத்தான் இதோ நான் பார்க்கிறேனே. உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் படைத்த நாகங்களைக் குட்டிபோட வைத்து விட்டானே! அவனை உடனே பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களுக்குத் தடை ஏதாவது உண்டா?"

"தடையா? சமுகத்தின் கருணைப் பார்வைக்கு அவன் இலக்காவது பெரிய பாக்கியம் அல்லவா? அவன் இத்தகைய இடங்களுக்கெல்லாம் தன் தாயை விட்டுத் தனியே சென்றவனும் அல்ல. சிவிகையைக் கண்டால் அஞ்சுவான்.”

"நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் சிவிகையேறும் கவி மன்னர் ஆயிற்றே! அவன் சிவிகையைப் பாராதவனா?’’

"அதைச் சொல்லவில்லை. சமூகம் அனுப்பும் சிவிகைக்காரர்கள் இவ்விடத்துக்கு ஏற்ற மிடுக்குடன் இருப்பார்கள். அவர்களைக் கண்டால் அஞ்சி வர மாட்டேன் என்று சொல்லி அழுதாலும் அழலாம். குழந்தைதானே? மன்னருடைய அழைப்பின் அருமையை அவன் எங்கே உணரப் போகிறான்? ஆகையால் நானே அவனுக்கு எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லி ஒரு நல்ல நாளில் அவனை இங்கே அழைத்து வருகிறேன்.”

"இன்றே நல்ல நாள்தான். இந்த அருமையான பாடலைப் பாடும் ஆற்றலுடைய உங்கள் குழந்தை பயப்படுபவன் என்று நான் நினைக்கவில்லை. அவன் இப்போது இங்கே வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லைபோல் இருக்கிறது!"

புலவருக்குத் தம் எண்ணத்தைக் கூறத் தைரியம் இல்லை. என்ன சொல்வதென்று தெரியாமல், விழித்தார். 

அவர் சும்மா இருப்பதைக் கண்ட அரசர் அதனை அவர் சம்மதமாகவே எண்ணிச் சிவிகையோடு அரண்மனையைச் சேர்ந்த ஒருவரையும் அந்தக் குழந்தையை அழைத்து வரச் சொல்லி அனுப்பினார்.

"கடவுளே! நீதான் அந்தக் குழந்தைக்குக் கண்ணேறு வராமல் காப்பாற்ற வேண்டும்” என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்தார் சர்க்கரைப் புலவர்.

சர்க்கரைப் புலவர் சிறுகம்பையூர் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தார். கலிய நகருக்கும் அதற்கும் ஐந்தாறு கல் இருக்கும். இவ்வளவு அண்மையில் வந்திருக்கிறாரே, பார்க்கலாமே என்ற எண்ணத்தால் தான் மருத பாண்டியரைப் பார்க்கப் புலவர் வந்தார். அவரை அறியாமல் குட்டிபோட்ட நாகபந்தம் அவருக்கு அச்சம் உண்டாகக் காரணமாயிற்று.

சிறிது நேரத்தில் பாண்டியர் அனுப்பியிருந்த பல்லக்கில் குழந்தை வந்து சேர்ந்தான். மன்னரிடமிருந்து பல்லக்கு வந்திருப்பதை அறிந்த அந்த இளங் கவிஞனுடைய தாய் அவன் தலையை வாரி நல்ல ஆடையணி அணிந்து வரவிடுத்தாள்.

குழந்தை பல்லக்கிலிருந்து இறங்கினான். மருத பாண்டியர் அவனைப் பார்த்தார். உண்மையில் அவுன் குழந்தைப் பருவம் தாண்டாதவனாகவே இருப்பதை உணர்ந்து அவர் வியப்பே வடிவமானார். ஒடிச் சென்று அவனைக் கட்டி அணைத்தார்.

"இந்த ஏட்டில் குட்டி நாகபந்தத்தை வரைந்தவர் யார்?" என்று மருத பூபதி கேட்டார்.

குழந்தை சற்றும் தயங்கவில்லை. "நான்தான்!” என்று மிடுக்குடன் சொல்லி அருகில் நின்ற தன் தந்தையைப் பார்த்தான். அவருக்கு முன்பு இருந்தஅச்சம் இப்போது இல்லை; பெருமை உணர்ச்சியே உண்டாயிற்று.

அரசர் குழந்தையைத் தம் அருகில் அமரச் செய்து அந்தப் பாட்டைச் சொல்லச் சொன்னர். அவன் கணீரென்று தான் எழுதிய பாடலைச் சொன்னான். அதைக் கேட்ட மருத பாண்டியருக்கு உவகை பொறுக்க வில்லை. தந்தையாருக்கோ ஆனந்தக் கண்ணீர் துளித்தது.

"புலவரே!” என்று அழைத்தார் மருத பாண்டியர். சர்க்கரைப் புலவர் பாண்டியரைப் பார்த்தார்.

"இந்தக் குழந்தை இனி இந்த அரண்மனைக் குழந்தை. என் அருகிலேயே இவன் இருக்கட்டும்" என்றார் மன்னர்.

புலவர் மனம் ஒரு பக்கம் உவகையும் ஒரு பக்கம் வருத்தமும் அடைந்தது.

"இங்கேயே இருப்பதென்றால் தாய் தந்தையரைப் பாராமல் இருந்து விடுவதன்று; வேண்டும் போதெல்லாம் உங்கள் ஊர் வந்து பார்த்துவிட்டு வருவான். ஆனல் அங்கே தங்கமாட்டான்.”

புலவருக்கு வார்த்தை எதுவும் வரவில்லை

நீங்கள் எப்போது இவனைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்போது இவனைச் சிவிகையில் அனுப்புகிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் அடிக்கடி அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி விட்டும் செல்லலாம்."

"மன்னருடைய பேரன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! இவனுக்குக் கிடைத்த பாக்கியத்தை மிகப் பெரியதாக நான் கருதுகிறேன். ஆனால்-" 

ஆனால் என்று ஏதோ தடை சொல்ல வருகிறீர்களே! இவனை நான் நன்றாகக் காப்பாற்ற மாட்டேன் என்ற ஐயம் உங்களுக்கு உண்டாகிறதோ?”

"அப்படி நான் சொல்வேனா? எங்கள் வீட்டில் கிடைப்பதைவிட ஆயிரம் மடங்கு நன்மை இங்கே கிடைக்கும் என்பதை நான் அறியமாட்டேனா? இவன் கவி பாடப் பழகியிருக்கிறான். இன்னும் இலக்கண இலக்கியங்களில் போதிய ஆழம் வேண்டும். இப்போது தான் பாடம் கேட்டு வருகிறான். ஒருவாறு சொல்ல வேண்டிய பாடங்களைச் சொல்லிய பிறகு இவனை அழைத்து வந்து இவ்விடத்தில் அடைக்கலமாய் விட்டு விடுகிறேன்.”

"இவன் தங்களிடம் பாடம் கேட்க வேண்டுவது மிகவும் இன்றியமையாததே. அந்தக் காரணத்தைக் கொண்டு நீங்களே அடிக்கடி இங்கே வந்து பாடம் சொல்லிக் கொடுங்கள். உங்களோடு உரையாடும் இன்பமும் எனக்குக் கிடைக்கும். அதுமட்டும் அன்று. இங்கே எவ்வளவோ புலவர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நூலில் ஆழ்ந்த புலமையுள்ளவராகப் பலர் வருவர். அவர்களைக் கொண்டு சில நூல்களை இவனுக்குக் கற்பிக்கச் செய்வேன்.”

மருத பாண்டியருக்குக் குழந்தையிடத்தில் உண்டான அன்பு உரம் பெற்றது என்பதைப் புலவர் அறிந்தார். அரசரிடம் எவ்வளவு நேரம் வாதாட முடியும்? கடைசியில் புலவர் தம் மகன் அரண்மனையிலே வளர்ந்து வருவதற்கு இசைந்தார்.

அன்றுமுதல் சர்க்கரைப் புலவருடைய குமாரர் மருத பாண்டியருடைய வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தார். அவருக்குச் சாந்துப் புலவர் என்பது இயற் பெயராக இருந்தாலும் யாவரும் அவரை அன்போடு 'குழந்தை' என்றே அழைக்கலாயினர். பிறகு, குழந்தைக் கவிராயர் என்று வழங்கலாயினர். சிலர் 'பால கவீசுரர்' என்று பின்னும் மதிப்பாகக் கூறினர்.

மருத பாண்டியருடைய அவைக்களப் பெரும் புலவராக விளங்கினார் குழந்தைக் கவிராயர். அவர் குன்றக்குடியில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் மீது ஒரு கோவையைப் பாடி அரங்கேற்றினார். அப்போது மருத பாண்டியர் அவருக்குப் பல வகையான பரிசுகளை அளித்துப் புலவர் மருதன்குடி என்ற கிராமத்தையும் முற்றூட்டாக வழங்கினார்.

தம்மை வளர்த்துப் பாதுகாத்த மருத பாண்டியரைச் சாந்துப் புலவராகிய குழந்தைக் கவிராயர் அந்தக் கோவையில் பலபடியாகப் பாராட்டியிருக்கிறார்.

குட்டி நாகபந்தத்தால் தம் புலமையை இளமையில் காட்டிய குழந்தைக் கவிராயர் மருத பாண்டியருக்குத் தோழராகி வாழ்ந்தார். அவர் செய்த போரில் துணை நின்று வாளெடுத்துப் போர் செய்தாரென்றும் கூறுவர்.