அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்/புரட்சிக் கவிஞர்-கட்டுரை 2

புரட்சிக் கவிஞர்


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று சொல்லியவுடனேயே இன்முகங்காட்டி எங்கே என்று எதிர்பார்க்கும் இளைஞர்கள் பலரைத் திருச்சிப்பாசறையிலே கண்டோம். ‘அக்காட்சி சிங்க இளைஞனே திருப்பு முகம்! திற விழி’ என்று கவிஞர் சொல்லிய சொற்றொடரின் எதிரொலி என்போம். போர்ப்படை நடத்திப் பாசறையமைத்துப் பகைவரைக்கொன்று வெற்றி பயந்து நிற்கும் தார்வேந்தனைப் பரணிபாடி மகிழ்விக்கும் பாவலன் வீரர்களிடையே தீரம்பேசி நிற்பது திராவிட நாட்டின் முந்தைநாள் பண்பு. அதுபோலப், புரட்சிக் கவிஞரின் உணர்ச்சிக் கருத்துக்கள் தூவப்பட்ட உள்ளத்தினால் உந்தப்படும் இளைஞர்கள் ‘வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே!’என்ற திராவிட நாட்டுப் பண்ணைத் தெருவெல்லாம் முழக்கம் செய்ய வீறிட்டெழுந்துள்ளார்கள். அந்த வெட்டாத கத்தியினை வீசாக்கையால் வெடுக்கென்று தூக்கி எமை வீழ்த்தப் பார்க்கும் முட்டாள்கள் வைதிகர்கள் குருக்கள் சூழ்ச்சி முனையழிய நடமாடி நாட்டு மக்கள் கட்டோடு சமத்துவத்தைத் தரவும் இன்பக் கருத்தளிக்கும் சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்ற பேரொலியை எங்கணும் எழுப்பத் துடிக்கின்றார்கள். பழைமையில் நெளியும் பாமரரும் பண்டிதரும், பணம் பிடுங்கும் கூட்டத்தினரும் அந்நிலையைக் கண்டு மனங்கலங்குவர். யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தடுத்தாலும் தடுக்காவிட்டாலும், எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் பகுத்தறிவுணர்ச்சி பரவியே தீரும். அது காலத்தின் கோலம். கருத்தின் வேகம்.

உரையாடலிலே ஒப்புக்கொண்டு மேடைப்பேச்சிலே வெளிப்படுத்த மறந்து போகும் 'விரிந்த மனப்பான்மையையுடைய' தேசீயத் தோழர்கள் பலரும் ஒப்புக்கொள்ளுகின்ற நிலைக்காவது வந்திருப்பது, தடுத்தும் தாண்டிப் பாய்ந்த உணர்ச்சி வெள்ளத்தின் விளைவு என்போம். நாளும் நாளும் செல்லவொழிந்தால் ஏது நினைந்து என்ன செய்வாரோ என்று பயங் கொண்டு நயங்கேட்கக் காத்துக் கொண்டிருக்கும் பண்டிதர்கள் சுற்றி வீற்றிருக்க,கவிஞரின் கவிதை ஒன்றைப் படித்துக்காட்டி இது தான் கவியாம்! இதில் தான் இலக்கணம் இருக்காம்! இதைப்பாடியவர் தான் கவியாம்!' என்று கேலிக்குரலிலே இழித்துக்கூறிய பண்டித மணியார் வாழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே 'பாரதிதாசன்' படம் திறந்து வைக்கப்பட்டது என்றால், கவிஞரின் கவிதை கல்லூரி மாணவர்களின் கருத்திலே எத்தகைய புரட்சியை எழுப்பியிருக்க வேண்டும்!

புரட்சிக்கவிஞரின் கவிதைகளிலே உள்ள கலையழகையும், கவிநயத்தையும், கருத்தின்பத்தையும் பகுத்தறிவு பாதையில் நடக்கக் கற்றுக்கொண்ட பண்பினரேயன்றி மற்றையோர் போற்றார் - உணரார். காலத்திற்கு ஒட்டிய கருத்துக்களை முன்னேற்றப் பாதையிலே ஓட்டி, படித்தவரோடு பாமரரையும், பாட்டாளி மக்களையும் சேர்த்து இழுத்துச் செல்கின்கின்றவன் எவனோ அவனே புத்துலகைத் தோற்றுவிக்கும் புரட்சிக்கவியாகக் காட்சியளிக்கிறான். அவனே ஒடிந்த உள்ளங்களுக்கு உணர்ச்சி ஊட்டும் கவி! உயிர்க்கவி! மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கை, மதோன்மத்தர்களின் போக்கு, மமதையாளரின் செருக்கு, மதக்குருக்களின் கொடுமை, உலுத்தரின் உல்லாசவாழ்வு, வஞ்சகர்களின் சூழ்ச்சி, ஆகியவற்றை நமது புரட்சிக்கவிஞர் கண்டிக்கும் அளவுக்கு எந்தக் கவிஞனும் இந்த நாட்டில் இதுவரையில் சென்றதில்லை. கடவுளை இயற்கையில் காண்கிறார், நாகர்கோயிலார். நாமக்கல்லாரோ கடவுளும் காந்தியுமன்றி வேறொன்றறியேன் பராபரமே என்கிறார். காதலின் எழில், வீரத்தின் எழுச்சி, இயற்கையின் வனப்பு, தமிழின் சிறப்பு, கருத்தின் தெளிவு, உழைப்போர் உள்ள நிலை, மக்கள் பண்பு ஆகியவற்றைக் கவிதைகளின் ஊடே மல்கி மிளிரும்படி செய்யும் தன்மை நமது புரட்சிக் கவிஞரிடத்தே அமைந்திருக்கக் காணலாம். அறிவை அறிவாகவும், அன்பை அன்பாகவும், அழகை அழகாகவும் கவிஞர் தம் கவிதையில் காணுவாரேயன்றி அறிவே கடவுளாக, அன்பே கடவுளாக, அழகே கடவுளாகப் பகுத்தறிவுக் கவிஞராக, ஆனதன்பின் காணமாட்டார். அவர் தமிழிடத்துக் கொண்டிருக்கும் அன்பை “மங்கை ஒருத்தி தரும் சுகமும் மாத்தமிழுக்கீடாமோ” என்று வெளிப்படுத்தியிருப்பது போல் வேறு யாரும் வெளிப்படுத்த நினைத்ததில்லை கவிகளில் பலர் வருந்தித்தத்தளிக்கும் இடங்களிலெல்லாம் மிக எளிதாகத் தாண்டிச் செல்லும் திறமை படைத்தவர் நமது கவிஞர். தீந்தமிழுயர்வினுக்குச் செத்தான் அன்பன், செத்ததற்குச் செத்தாள் அத்தென்னாட்டன்னம் என்ற இடத்திலே மிக எளிதாகக் கதையை முடித்துவிட்டார். பாட்டுடைத் தலைவன் இறந்ததற்குப் பிறகு பாட்டுடைத்தலைவியை இறக்கச் செய்வதற்கு பல கவிதைகளும், பல பக்கங்களும், தாண்டிச் சென்று இடர்ப்பட்டு அவளும் இறந்தாள் என்று பலரும் முடிக்கக் காண்கிறோம். ஆனால் நமது கவிஞரோ "செத்தான் செத்தாள்" என்று மிக மிக எளிதாக எழில் துலங்கக் காட்சியைப் புலப்படுத்தியுள்ளார். கருத்துப் பொலிவோடு கூடிய புத்தம் புதிய உவமைகளை மக்கள் மனதிலே சென்று பதியும் படியாக ஆங்காங்கு மிளிரச் செய்யும் பாங்கு கவிஞரிடத்தே தனித்தமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட நம்மையெல்லாம் மகிழச் செய்வது பகுத்தறிவுக் கருத்துக்களை எல்லாக் கவிதைகளிலும் அள்ளி வீசியிருப்பதுதான்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் களங்கமற்ற குழந்தையுள்ளங்கொண்டு கருத்துப் பொதிந்த உரையாடல்களால் நம்மோடு மகிழும் பண்பினராவார். புலவர்கள் இயல்பாகவே வரவழைத்துக் கொள்ளும் வளைந்து வணங்கித் தன்னிலையில் தாழ்ந்து நடக்கும் பண்பினை நமது கவிஞரின் சொல்லிலோ, செயலிலோ, தோற்றத்திலோ காண முடியாது. தன் உள்ளக் கிடக்கையை எவ்விடத்தும் எடுத்துக்கூற எப்பொழுதும் தயங்கியதில்லை. அத்துணை அளவு திண்ணிய உரம் படைத்தவர். அதற்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு. பிரான்சிலே மூயில்பெரி என்பார் குடியரசுத் தலைவராக வந்தார். அவர் ஆட்சிபீடம் ஏறிய காலத்தில் கல்வியானது குருமார்கள் கையில் இருந்தது. அந்த நாடு மட்டுமின்றி உலகில் எங்கணும் பாதிரிகள், குருமார்கள், ஆச்சார்ய பரம்பரையினர். தனிப்பட்டவர்கள் ஆகியவர்களால் கல்விகற்பிக்கப்பட்டு வந்ததேயல்லாமல், எந்த அரசியலும் நேரே தொடர்பு படுத்தி கைக்கொள்ளவில்லை. மத குருமார்கள் கையிலிருந்த கல்வியைப் பிடுங்கி அரசியலார் நடத்தினால் தான் கல்வி எல்லோருக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும் என்றுகருதிய மூயில்பெரி, கருதியதைச் செய்து முடித்தார். கல்வி புகட்டும் முறையிலே போற்றிப் புகழ அவருடைய படத்தைப் பிரஞ்சுப் பள்ளிகளிலெல்லாம் விளங்கும்படி செய்வது வழக்கம். உலகிற்கே வழிகாட்டியாகத் தோன்றிய அந்தத் தலைவராம் மூயில் பெரியின் நூற்றாண்டு நினைவுவிழா எங்கணும் கொண்டாடப்பட்ட பொழுது, பாண்டிச்சேரியிலும் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை சிறப்புச் செய்ய எண்ணிச் செய்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக வாழ்த்துப்பாக்கள் பல மொழியிலும் இயற்றச்செய்வது என்ற திட்டத்தையும் போட்டார்கள். அதன்படி தமிழில் வாழ்த்துப்பா புனைய நமது கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார். கவிஞரும் அதற்கிணங்கினார். குள்ள நரிக் கூட்டத்தினர் சிலர் பாரதிதாசன் ஒரு சுயமரியாதைக்காரன், அவன் பாடுதல் ஏற்புடைத்தாகாது என்னும் கருத்துப்படச் செயற்குழுத்தலைவரிடம் புறஞ்சொல்லியும் பயனற்றுப்போகவே பாரதிதாசனே தமிழில் பா இயற்ற வேண்டி ஏற்பட்டது. விழாவில், அழகு செய்யப்பட்ட மண்டபத்தில், கவர்னரும், அவரது ஆட்சி சுற்றமும், நீதிமன்றத் தலைவர்களும், குருமார்களும், பாதிரிமார்களும், பிரெஞ்சு நாட்டு திராவிட நாட்டு மக்களில் பணக்காரர்களும், பட்டம் பதவி வகிப்போரும், பாமரரும் குழுமியிருக்கின்றார்கள். நிகழ்ச்சிநிரலின்படி தமிழில்வாழ்த்துப்பா இசைக்கப் புரட்சிக் கவிஞர் அழைக்கப்பட்டார். கவிஞரின் பாட்டை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துக் கூறச் சில நரியுள்ளம் படைத்தோரும் அங்கிருந்தனர். காரணம் கவிஞரின் கவிதையில்வரும் சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துக் காட்டி கவிஞரின் மீது பிரெஞ்சுத் தலைவர்களுக்கு ஆத்திரம் ஏற்படவும், அப்படி எடுத்துக்கூறிய தம்மீது அன்பு பிறக்கவுமாகும். புரட்சிக்கவிஞர் பாடத்தொடங்கி “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை” என்ற முதலடியை இசைத்தார், அது மொழிபெயர்க்கப்பட்டது. பின் “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை” என்று இரண்டாவது அடியையும் சேர்த்து இசைத்தார். கவிஞரைக் காட்டிக் கொடுத்துத் தடை செய்யக்காத்திருந்த கல்நெஞ்சம் படைத்த காக்கையினத்தோன் உளங்களித்து மொழி பெயர்த்தான். உடனே பாதிரிமாரின் மலர்ந்த முகமெல்லாம் குவிந்தன. சாந்தம் குடியிருந்த உள்ளத்தில் சினம் குடியேறிற்று, கண்கள் வெண்மை சிவப்பாயிற்று. சாய்ந்திருந்தோர் நிமிர்ந்தார். கேளாச்செவிகள் கேட்கத் தலைப்பட்டன. விழாத் தலைவர் சோர்ந்தாரேனும் அறிவும் அவா மேலீட்டால் மற்றப் பகுதியையும் கேட்கவேண்டி ‘கோந்தினியே’ ‘கோந்தினியே’ (மேலே தொடங்கு மேலே தொடங்கு) என்றார். “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை!” என்று மூன்றாவது அடியையும் சேர்த்து கவிஞர் இசைத்தார். மொழி பெயர்க்கப்பட்டவுடன் கோணியிருந்த முகமெல்லாம் முற்றுங் கோணலாயின. தலைவர் மீண்டும் வாட்டமுற்றாரேனும் மேலும் அறிய ‘கோந்தினியே’ என்றார். “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத்தொலைந்தது அந்தப்பீடை, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!” என்று நான்காவது அடியையும் சேர்த்து இசைத்தார் கவிஞர், மொழிபெயர்ப்பினைக் கேட்டார் தலைவர். சுருங்கிய முகம் மலரத் தள்ளி எழுந்து சிலசொன்னார். அது தான் அது தான் இந்தப் புலவன் சொல்லியது தான், குருமார்களிடத்தே முடங்கிக்கிடந்த கல்வியை நாடெல்லாம் நீர் போல பரப்பினான் மூயில் பெரி. அதைத்தான் இந்தப்புலவன் சொல்கிறான். இவன் தான் புலவன் மற்றையோரெல்லாம் புலவராகமாட்டீர்! என்பது மகிழ்ச்சியினால் எழுச்சியுற்று அத்தலைவர் கூறிய கூற்று, அன்று முதல் அந்தத் தலைவரின் மதிப்பிற்குரிய கவியாகவும், உற்ற நண்பராகவும் கவிஞர் விளங்கினார். பாதிரிமாரின் சீற்றமும், பாராள்வோரின் கொடுமையும் சூழக்கூடும் என்ற நிலையிலும் கவிஞர் கொண்டிருந்த துணிச்சல் வேறு எந்தக் கவிஞருக்கும் இந்த நாளிலும் வந்ததாகக் கண்டறியோம். கவிஞர் தாம் பார்த்து வந்த வேலையினின்றும் ஓய்வு பெற்று வெளியேறி விட்டார் என்பதைக் கேட்டு திராவிடம் மகிழ்ச்சிக் கொண்டு வருக என்று வாயார வாழ்த்தி மனமார வரவேற்கின்றது.

புரட்சிப் புன்னகையில் மலர்ந்து பொலிவுபெற்று வரும் உலகம், புரட்சி வீரர்களை காலந்தோறும் கண்டு வருகிறது காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் தாம் நின்றதொரு நிலையிலிருந்து தேவைக்கேற்றவண்ணம் நல்ல முறையில் சிறந்த நிலைக்கு மாறும் தன்மையைப் புரட்சி என்கிறோம். ஒவ்வொரு துறையிலும் படிப்படியாக ஏற்பட்ட புரட்சியின் விளைவால் தான் இயற்கை உலகில் செயற்கைக் காட்சிகள் கவின்பெற இலங்கக் காண்கிறோம், பொதுவாக உலகம், பொருள்களிடத்தே ஏற்படும் புரட்சியினால் உருக்கொள்ளுகின்றது; பொருள்கள் மக்கள் செயலாற்றலில் ஏற்படும் புரட்சியினால் உருமாறுகின்றன; செயலாற்றல் மக்கள் சிந்தனையில் ஏற்படும் புரட்சியினால் உருவடைகின்றது என்பதை நன்கு அறிகிறோம். எனவே மக்களின் சிந்தனையைப் பொறுத்துத்தான் செயப்படு உலகம் ஒவ்வொரு துறையிலும் உருக்கொள்ளுகின்றது என்பது பெறப்படுகின்றது. அப்படிப்பட்ட அடிப்படைக் காரணமாக அமைந்த மக்களின் சிந்தனையில் புரட்சியைச்செய்யும் வீரனைத்தான் உலகம் மிகமிகப்போற்றி புகழ்ந்து வந்திருக்கிறது. சிந்தனையைக்கிளரும் எழுதுகோலைத் தாங்கிய வீரனைப் போற்றிய அளவுக்கு உலகம் இதுவரையில் வேறு யாரையும் போற்றியதில்லை. “வாளினும் வலிது எழுதுகோல்” என்பது ஆங்கிலநாட்டுப் பழமொழி. “வில்லே ருழவர் பகை கொளினும், கொள்ளற்க சொல்லே ருழவர் பகை” என்பது வள்ளுவன் வாய்மொழி. சிந்தனையைச் சீர் படுத்தும் சிந்தனைச்சிற்பிகளிலே தலை சிறந்து விளங்கும் வீரன் கவிஞனாவான். அவனைத்தான் புரட்சிக்கவிஞன் என்று உலகம் போற்றும். வெறும் கவிதைகளைப் பாடுபவன் கவிஞனாகலாமேயொழிய அவன் புரட்சிக் கவிஞனாகமாட்டான. இருக்கின்ற நிலையிலிருந்து உயர்ந்த சிறந்த அழகிய அறிவுடைமையோடு கூடிய நிலைக்கு மக்களுள்ளத்தை இழுத்துச் செல்லுகின்றவனே புரட்சிக் கவிஞனாகக் கருதப்படுகிறான். முதல் சிந்தனைச் சிற்பியின் உள்ளத்தே எழுந்த ஏன்? என்ற கேள்வியின் எதிரொலி உள்ளங்கள் தோறும், இடத்துக்கு இடம், நாட்டிற்கு நாடு, காலத்திற்கு காலம் மாறி மாறி அடுத்தடுத்து ஒலிக்கவே உலகம் வளர்ச்சியடையத் தொடங்கிற்று. உலக இயல்பை அப்படியே படம் பிடித்து உள்ளத்தே இருத்தி, ஏன் என்று கேட்டு, அதற்கு மெருகிட்டு, வேண்டும் அளவுக்குத் திருத்தி, அவ்வண்ணமாக உலகைக்காண விழைகிறான் புரட்சிக் கவிஞன், தமிழகத்தில் தோன்றி வாழ்ந்து மறைந்த கவிஞர் எண்ணிறந்தோர் என்றாலும் அவரெல்லாரிடத்தும் அமையப்பெறாத புரட்சிக் கவிஞனுக்குள்ள புலமை பாரதிதாசன் ஒருவரிடத்தே அமையப்பெற்றபடியால் அவரைப் புரட்சிக் கவிஞர் என்று போற்றுகிறோம். பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞராக ஆக்கியது அவரது சூழ்நிலையேயாகும். ரஷ்யா ஒரு புஷ்கினையும், ஆங்கிலநாடு ஒரு ஷெல்லியையும், பிரான்ஸ் ஒரு ஹூகோவையும், அமெரிக்கா ஒரு வால்ட் விட்மனையும் கண்டவாறு திராவிடமும் ஒரு பாரதிதாசனைக் கண்டது.

கவிஞனுள்ளத்தோடு தோன்றிய கனக சுப்புரத் தினம் பாரதிதாசனாகி, தீந்தமிழ்த் தேன் மாந்தித் தம் தாய்நாட்டின் பெருமைதன்னை, நல்ல மனிநதியை, உயர்குன்றை, தேனை அள்ளிப் பெய்யும் நறுஞ்சோலையினை, வீசு தென்றலைப் பாடினார்; பாடி மக்களுள்ளத்தை அவற்றிலே படியவைத்தார். நாட்டின் மண் வளத்தைக் காணத் தம் கண்களைத் திருப்பினார். நாடிழந்து நலமெலாமிழந்து அரசிழந்து அழகெலாமிழந்திருக்கும் தம்மக்களின் தாழ்நிலையைக் கண்டார். வாளோச்சி வாழ்ந்த தமிழ் மறவர் வீணரின் தாளடியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்தார். உள்ளம் குமுறிற்று. குமுறிய உள்ளம்,

“நாயினுங் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்
ஓயுதல் இன்றி அவர்கலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்”

என்ற உறுதிமொழி கூறி எழுந்தார்; எழுந்து,

“தமிழரின் மேன்மையை இகழ்ந்த வனைஎன்
தாய் தடுத் தாலும் விடேன்
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்”

என்று வஞ்சினங் கூறிப் பாசறை புகுந்த கவிஞர் பகுத்தறிவு வாளேந்திப் பகைப்புலங்கள் பலவற்றையும் அழிக்கத் தொடங்கினார். அழிக்கத் தொடங்கவே புதுமைக் கவிஞர் புரட்சிக் கவிஞரானார்.

வேங்கைகள் உலவிய தம் தாய்நாட்டில் நரிகள் உலவக் கண்டார். வாளேந்தி வாழ்ந்த மக்கள் வகையற்றோரின் தாளேந்தி நின்றனர். அறிவும் திறனும் செறிந்திருந்த நாட்டில் மடமையும் மருளும் சூழ்ந்தன. கைவிரித்துவந்த கயவர், மக்களிடத்துப்பொய்விரித்து அவரின் உரிமையெலாம் பறித்து வாழலானார். ஏற்றம் மிகுந்திருந்த நாட்டில் இழிகழுதை ஆட்சி வளர்ந்தது. இவற்றையெல்லாம் கண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், உறங்கிக்கிடக்கும் தமிழர்களின் உள்ளத்தே சொல்லம்புகள் ஊடுருவிப் பாயச்செய்தார். ‘சிம்புட் பறவையே சிறகை விரி, எழு, சிங்க இளைஞனே திருப்பு முகம், திறவிழி’ என்றார். ‘உங்கள் குகையினை விட்டே வெளிவருவீர் சிங்கங்காள்!’ என்று கூறி இளைஞர் கூட்டத்தை வரவேற்க எதிர்நோக்கி நிற்கிறார்.

காலத்திற்கேற்ற கருத்துக்களைக் கவிதையின் மூலம் குழைத்தூட்டியே மக்களை மக்களாக ஆக்கினார்கள் மற்றை நாட்டுப் புரட்சிக் கவிஞர்கள். அரசனையும் ஆண்டவனையும் மட்டும் பாடும் பணியில் கவிஞர்கள் ஈடுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது. மதுவோடும் மங்கையோடும் கொஞ்சும் மன்னன், கயமை பொருந்திய திருவிளையாடல்களைச் செய்த ஆண்டவன் இவர்கள் கவிஞனின் பாட்டுடைத் தலைவர்களாக விளங்கினார்கள். அந்தக் காலங்களில்தான் மக்களின் ஆயுள் அரசனுக்கும், அறிவு ஆண்டவனுக்கும் அடிமைப்படுத்தப்பட்டன. அவைகளில் மக்கள் உள்ளம் ஊறத்தொடங்கிய பிறகுதான் அறிவு வளர்ச்சிக்கான வழிகளில் தடைகள் ஏற்பட்டன. ஆகவேதான்.

"இருட்டறையில் உள்ளதடா வுலகம்
சாதியிருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே
மருட்டுகின்ற மதத்தலைவரும் வாழ்கின் றாரே
வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்"

என்று அறிவுரை பகன்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அறிவும் திறனும், அழகும் எழிலும், மலையும் மடுவும், சோலையும் சாலையும், வளமும் வகையும், மக்களின் பண்பும் பழக்க வழக்கமும், கொள்கையும் கோட்பாடும் பாடல்களின் பொருள்களாக மிளிர்ந்து வந்த நாட்டிலே கவிஞர்கள் கயமை நிறைந்த கடவுட் புராணங்களைப் பாடி மக்களை மடமைச் சேற்றில் அழுந்தச் செய்த தன்மையைக் கண்டார், கண்டு வெகுண்ட புரட்சிக்கவிஞர், “மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும், மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்” என்று முழங்கினார். கடவுள், மதம், மூடப் பழக்க வழக்கம், குருட்டு நம்பிக்கை , அரசியல், வாழ்க்கை இயல் ஆகியவற்றின் பேரால் பெருங்குடி மக்கள் தனிப்பட்ட ஒரு சிலரால் ஏமாற்றப்படுவதைக் கண்டு மனம் புழுங்கினார்.

புழுங்கிய அவர் உள்ளத்தினின்றும் எழும்பிய தீப்பொறி கொடுமைக்குட்படுத்தப்பட்டோரின் உள்ளங்களில் கொழுந்துவிட்டெரிகிறது. புது உலகைப் புரட்சிக் கருத்துக்களிலே பூக்கச் செய்து புது உலகை அமைக்கப்போகும் புரட்சிக்கவிஞர், பழைய உலகைப் பார்த்துக் கேட்கிறார்:

“மண்மீதில் உழைப்பாரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண் மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வராம்”

இது நீதியா என்று கேட்கிறார்.

“முழங்காற் சேற்றினில் முக்கி விளைத்தவன்
மூடச் சகோதரன் பள்ளப் பயல்—அதை
மூக்குக்கும் நாக்குக்கும் தண்ணீர்க்காட்டித் தின்னும்
மோசக் காரன் மேலாம்"

இது நேர்மையா என்று கேட்கிறார்.

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளை யடிப்பதும் நீதியோ?

என்று கேட்கிறார்.

இத்தகைய புரட்சிக் கேள்விகளை இந்த நாட்டில் வேறு எந்தக் கவிஞனும் கேட்டதில்லை; கேட்கத் துணிவு கொண்டதில்லை. நம் புரட்சிக் கவிஞர் மக்களைப்பார்த்து மூடப் பழக்கவழக்கங்களென்னும் பழமைச்சேற்றில் புரளாமல் புரட்சி மனங்கமழும் பூங்காவில் உலவச் சாெல்லுகிறார். இளமையுள்ளங்களைப் பார்த்து, கன்னங்கருத்த இருட்டின் கறையாக, தொங்கும் நரம்பின் தூளாக வாழாமல் மக்களாக வாழச் சொல்லுகிறார். புரட்சி மணங்கமழும் பூஞ்சோலை நிறைந்த புது உலகிற்கு மக்களை அழைக்கிறார் பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப் பேசு சுயமரியாதை உலகு எனப் பேர் வைப்போம் என அறைகூவி அழைக்கிறார்! புரட்சியில் மலரும் புது உலகத்திற்கு நம்மை அழைக்கிறார்! நாமும் புன்முறுவலோடு போவோம்! புரட்சிக் கவிஞனால் தான் புரட்சியில் பூக்கும் புது உலகிற்கு நம்மை அழைத்துச் செல்ல முடியும்!

—இரா. நெடுஞ்செழியன் எம். ஏ.