அம்புலிப் பயணம்/அப்போலோ - 15
அப்போலோ-15 விண்வெளிப் பயணம் மனிதன் மேற்கொண்ட 43 ஆவது பயணம்.[1] அமெரிக்காவை மட்டிலும் நோக்கினால் அஃது 25ஆவது பயணமாக அமைகின்றது. அம்புலிக்கு அருகில் மனிதன் சென்ற பயணங்களை மட்டிலும் கணக்கிட்டால் 7 ஆவது பயணமாகும். அம்புலியில் மனிதன் இறங்கிய பயணமாகக் கருதினால் 4ஆவது பயணமாக அமைகின்றது.[2] இந்தப் பயணத்தில் மனிதன் ஓர் அபாயகரமான இட்த்தில் இறங்க வேண்டும். அம்புலியில் மூன்று புறத்தில் 'அப்பினைன்' என்ற மலைகளால் சூழப்பெற்ற ஒரு பள்ளத்தாக்காள பகுதியில் விண்வெளி வீரர்கள் இறங்குதல் வேண்டும். இம்மலைகளின் அருகில் வறண்டுபோன. ஆற்றுப் படுகையைப்போல் சுமார் 96 கி.மீ. நீளத்தில் ஒரு வெற்றாறு உள்ளது. இஃது எப்படி ஏற்பட்டிருத்தல் கூடும் என்பது அறிவியலறிஞர்களை மலைக்க வைக்கின்றது. ஒருவேளை அம்புலியில் எரிமலைகள் வெடித்து அந்தக் குழம்பு ஓடிய ஆறாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். மூன்று புறம் மலைகளும் ஒருபுறம் இந்த ஆறும் உள்ள பகுதியில் தாள் விண்வெளி வீரர்கள் இறங்கி ஆய்வுகள் நடத்தினர்.
இந்தப் பயணத்தில் அதிசயமானது அம்புலியில் மனிதன் 'கார்' ஓட்டப் போகின்றான் என்பதுவே. பல்லி போன்ற 'லூனாகோட்' என்ற இரஷ்ய இயந்திரம் இன்னும் அம்புலியில் உள்ளது என்பதையும், அது பூமியிலிருந்தே இயக்கப்பெற்று ஆய்வுகள் நடைபெறுகின்றன என்பதனையும் நாம் அறிவோம். இந்தப் பயணத்தில் அப்போலோ விண் வெளி வீரர்கள் 'ரோவர்' (Rover) என்ற காரில் பல இடங்கட்குச் சென்று ஆய்வுகள் நடத்தினர். ஒன்றிரண்டு நாட்களில் அம்புலியில் அதிகத் தொலைவு நடந்து சென்று அதிகமான இடங்களைப் பார்க்கவும் முடியாது. அப்படிச் சென்றாலும் உடற் சோர்வு அதிகமாகி ஆய்வுகள் நடத்துவதற்கு உடலில் வன்மை இல்லாது போகும்.
இந்தப் பயணத்தில் பங்கு பெற்ற தலைமை விமானி டேவிட் ஸ்காட், இவர் தாம் 1966 மார்ச் 16ஆம் தேதியன்று விண்வெளியில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்குடன் இணைப்புப் பணி நடத்தியவர். ஜெமினி-8 கப்பலில் தீவிபத்து ஏற்பட்டபோது மயிரிழையில் உயிர் தப்பிய பெருமகனாரும் இவரே. உயிரைத் துரும்பாக மதித்துச் செயல்கள் ஆற்றும் தீரர் என்று புகழ் பெற்றவர் இவர். அம்புலியில் இறங்கும் நிலாக்கூண்டின் விமானி ஜேம்ஸ் இர்வின். தாய்க்கப்பலில் அம்புலியைச் சுற்றிக் கொண்டிருந்தவர் ஆல்ஃப்ரெட் எம். வோர்டன். இவர் திருமண முரிவு ஆனவர்.
இந்தப் பயணத்தில் இவர்கள் செல்லும் தாய்க்கப்பல் 'எண்டெவர்' என்பது. இதிலிருந்து பிரிந்து அம்புலியில் இறங்கின நிலா ஊர்தி ஃபால்க்கன் என்பது. அம்புலியில் இவர்கள் இவர்ந்து சென்ற மின்விசை மோட்டார் 'ரோவர்' எல்லாச் சாதனங்களையும் கொண்டிருந்தது. இதுதான் அம்புலியில் கார் யுகத்தை ஆரம்பித்து வைத்தது. இதுகாறும் அம்புலியில் இறங்கினவர்கள் அதிகத்தொலைவு சென்று சோதனைகளை மேற்கொள்ள இயலவில்லை. இவர்கள் அதிகப்படியாகச் சென்ற தொலைவு 990 மீட்டர் தான். ஆகவே, கி.மீ. கணக்கில் சென்று சோதனைகளை நடத்துவதற்கு ஒரு கார் இன்றியமையாதது. அந்தத் தேவையிலிருந்து பிறந்தது தான் ரோவர் என்ற கார். அம்புலியில் செல்லும் ஊர்திக்குப் பல இலக்கணங்கள் தேவை. ஊர்தியின் அளவு சிறிதாக இருத்தல் வேண்டும்; அதன் பளு. குறைவாக இருத்தல் வேண்டும். அதிகச்சுமை ஏற்றக் கூடியதாகவும் அமைதல் வேண்டும். மண் போன்ற தூசுபடிந்த தரைமீதும், கரடு முரடான தரையிலும், மேட்டிலும், பள்ளத்திலும் பாதுகாப்பாகச் செல்லக்கூடியதாக - இருத்தல் வேண்டும். இந்த இலக்கணங்கள் யாவும் அமைந்த ரோவரைத் தயாரிப்பதற்கான செலவு 120 இலட்சம் டாலர் (ஒன்பது கோடி ரூபாய்), அம்புலியில் ரோவரின் சராசரி வேகம் மணிக்கு எட்டுக் கிலோ மீட்டராக இருந்தது. ஒரு கட்டத்தில் அதன் வேகம் பன்னிரண்டு கிலோ மீட்டரை எட்டியது. மலைச்சரிவில் ஏறிய போது அதன் வேகம் எட்டுக் கிலோ மீட்டருக்கும் குறைந்தது. ஏதோ ஒரு படகைச் செலுத்துவது போல் இருந்ததாக ரோவரைச் செலுத்தின ஸ்காட் கூறினார்.
திட்டமிட்டபடி டேவிட் ஸ்காட்டும் ஜேம்ஸ் இர்வினும் எண்டெவர் மூலம் அம்புலியில் அப்பினைன் என்ற மலைப் பகுதியில் இறங்கினர். ஆல்ஃப்ரெட் எம். வோர்டன் மட்டிலும் தனியாகத் தாய்க்கப்பலில் 73 மணிநேரம் 109 கிலோ மீட்டர் உயரத்தில் அம்புலியை வலம் வந்துகொண்டிருந்தார். அப்போலோ - 14 பயணத்தில் சென்ற தாய்க்கப்பல் விண்வெளி வீரர் ஸ்டூவெர்ட் ரூஸா என்பவர் தனியாக அம்புலியை வலம் வந்தநேரம் 39 மணி 44 நிமிடம். அன்றுவரை அதுவே அதிகநேரமாக இருந்தது. வோர்டன் செயல் அதனைக் குறைவாக்கி விட்டது. அம்புலியில் முதலில் இறங்கினவர் ஸ்காட். இவர் அம்புலியில் அடிஎடுத்து வைத்த ஏழாவது மனிதராகின்றார். அடுத்து இறங்கிய இர்வின் எட்டாவது மனிதராகின்றார். இவர்கள் மூன்று நாட்கள் அம்புலியில் தங்கிப் பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். எவ்வளவோ அனுபவங்கள் பெற்றனர். இவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் தொலைக்காட்சி மூலம் பூமியிலிருந்தோர் கண்டுகளித்தனர்.
விண்வெளி வீரர்கள் இருவரும் ஆம்புலித் தரையில் தங்கள் கடமைகளை முடித்துக்கொண்டு மூன்றாம் நாள் தாய்க்கப்பலுக்குத் திரும்பினர். அம்புலி, ஊர்தி அம்புலியினின்றும் கிளம்பிய காட்சியைப் பூமியிலுள்ளோர் தொலைக் காட்சி மூலம் கண்டனர். தாங்கள் கிளம்புவதற்கு முன்னர் அம்புலிக் காரில் பொருத்திவிட்டு வந்த தொலைக்காட்சி காமிராதான் இவர்கள் கிளம்பின காட்சியை முதல் தடவையாகப் படம் பிடித்துக் காட்டியது. அம்புலி ஊர்தியின் அடியிலிருந்து கிளம்பிய புழுதிப்படலம் வாணவேடிக்கை போல் தொலைக்காட்சியில் தெரிந்தது. ஊர்தி கிளம்பும் போது ஒளிப்பொறிகள் நாலாபக்கங்களிலும் மத்தாப்பு போல் சொரிந்தன. கிளம்பிய பத்துவிநாடி நேரத்தில் அம்புலி ஊர்தி 20 மீட்டர் தொலைவு சென்றுவிட்டது. அதன் பிறகு விநாடிக்கு விநாடி வேகமும் உயரமும் அதிகரித்துக் கொண்டேபோயின. எட்டு நிமிட நேரத்தில் அம்புலி, ஊர்தி அம்புலியை வலம்வரும் பாதையை அடைந்து, அம்புலியைச் சுற்றத் தொடங்கியது. அப்போது தாய்க்கப்பல் 109 கி. மீ. உயரத்தில் அம்புலியை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஸ்காட்டும் இர்வினும் சுமார் இரண்டு மணிநேரம் அம்புலி ஊர்தியைச் செலுத்தி அதனைத் தாய்க்கப்பலுடன் சேரும் நிலைக்குக் கொணர்ந்தனர். பிறகு அஃது அம் புலியிலிருந்து 112 கிலோ மீட்டர் உயரத்தில் தாய்க் கப்பலுடன் இணைந்தது. மூவரும் இரண்டு நாள்கள் அம்புலியை வலம் வந்த நிலையில் பல சோதனைகளை நடத்தினர்.
பூமிக்குத் திரும்பும் ஒருமணி நோத்திற்கு முன்பு 35 கிலோ கிராம் (80 இராத்தல்) எடையுள்ள ஒரு சிறு செயற்கைத் துணைக்கோளைத் தாம் அம்புலியைச் சுற்றிவரும் வழியில் விட்டுவந்தனர். ஓர் ஆண்டிற்கு இஃது அம்புலியைச் சுற்றிவந்து கொண்டிருக்கும். அம்புலியின் சூழ் நிலையைப் பற்றிய தகவல்களைப் பூமிக்கு அளித்துக் கொண்டிருக்கும். மேலும், கதிரவனின் வெப்ப ஆற்றல், சந்திரனின் பருமன், பூமியின் காந்தசக்தி ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இஃது . உதவும். இது செலுத்தப்பெற்ற ஒரு சில நிமிடங்களில் பூமிக்குத் தகவல்களை அனுப்பத் தொடங்கியது.
இனி, அப்போலோ விண்வெளி வீரர்கள் மூவரும் அம்புலியின் ஈர்ப்பு ஆற்றலிலிருந்து விடுபட்டு நான்கு லட்சம் கி. மீ. தூரத்தைக் கடந்து பூமியை அடைதல் வேண்டும். பூமிக்குத் தெரியாத அம்புலிப் பகுதியில் தாய்க்கப்பல் பறந்து கொண்டிருந்தபொழுது பூமிக்குத் திரும்புவதற்கு அதன் என்ஜின் இயக்கப் பெற்றது. உடனே அதன்வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. அது மணிக்கு 8,230 கிலோ மீட்டர் வேகத்தில் பூமிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தது. 7 மணிநேரத்தில் அது பூமியை வந்தடைய வேண்டும்.
தாய்க்கப்பல் பூமியிலிருந்து சுமார் 23 இலட்சம் கி.மீ. தொலைவிலிருந்த பொழுது ஆல்ஃப்ரெட் வோர்டன் திட்டமிட்டபடி சுமார் 20 நிமிடம் விண்வெளியில் உலா வந்தார். இதற்கு முன்னர் விண் வெளியில் இரஷ்ய வீரர்களும் அமெரிக்க வீரர்களும் நடந்துள்ளனர். ஆனால், பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் விண்வெளியில் யாரும் நடந்ததில்லை. விண்வெளியில் இங்ஙனம் நடந்தவர்களில் இவர் பத்தாவது மனிதராகின்றார். இதற்கு முன்னர் ஆறு அமெரிக்க விண்வெளி வீரர்களும் மூன்று இரஷ்ய வீரர்களும் இவ்வாறு நடந்துள்ளனர். இவரது விண்வெளி உலாவை ஒரு தொலைக்காட்சிக் காமிரா பூமிக்கு அஞ்சல் செய்தது. இக் காட்சியை வோர்டனின் பெற்றோர், இரு மகள்கள் ஆகியோர் மிக்க ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
வோர்டன் விண்வெளியில் நுழைய அடியெடுத்து வைத்த போது அவரது இதயத்துடிப்பு அதிகமாகியது. அதுவரை நிமிடத்துக்கு 70 தடவைகள். துடித்த அவரது இதயம் 130 தடவைகள் துடிக்கத் தொடங்கியது. அவரை வெளியேற்றத் துணை செய்த ஜேம்ஸ் இர்வினின் இதயத்துடிப்பு 116 ஆக இருந்தது. கப்பலுக்குள் அமர்த்திருந்த டேவிட் ஸ்காட்டின் இதயத்துடிப்பும் உயர்ந்தே இருந்தது. இங்ஙனம் பல்வேறு சாதனைகளை முடித்துக்கொண்டு திரும்பிய விண்வெளி வீரர்கள் அம்புலியினின்றும் 1,92,000 கி. மீ. வந்த பின்னர்த்தாய்க்கப்பலின் சாளரத்தின் ஓரத்தில் தொலைக் காட்சிக் காமிராவை வைத்துச் சந்திரகிரகணம் அங்கே எப்படித் தெரிகிறது என்பதைப் பூமியிலுள்ளோருக்குக் காண்பித்தனர். அப்போது அம்புலியின் விளிம்பு ஆரஞ்சு நிறத்தில் தெரிந்தது. பூமியின் வளிமண்டலப் பாதிப்பு இன்றி ஒரு கிரகணத்தை மனிதன் படம் பிடித்தது இதுவே முதல் தடவையாகும்.
பூமியின் வளிமண்டலத்தில் அப்போலோ 15 தாய்க் கப்பல் நுழைந்தபோது அதன் வேகம் மணிக்கு 39,590 கி. மீ. ஆக இருந்தது. அப்போது அது பசிபிக் மாகடலுக்குமேல் 121 கி.மீ. உயரத்தில் இருந்தது. வேகமாக வந்த அக் கப்பல் பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு வந்ததால் அதன் வெளிவெப்பம் 2,204°C ஆக உயர்ந்தது. அது செந்நிறக் கோளமாகக் காட்சி அளித்தது. அதன் ஒருபுறம் எரிந்தும் விட்டது. ஆயின் வெளியில் இவ்வளவு வெப்பம் இருப்பினும் உள்ளே அஃது 27°C ஆகவே இருந்தது. அந்நிலையிலேயே இருக்கப் பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. இந்தச் சமயத்தில் சுமார் மூன்று நிமிட நேரம் பூமிக்கு எந்தவித செய்தித் தொடர்பும் இல்லாமல் இருத்தது.
மூன்று விண்வெளி வீரர்களும் திட்டமிட்டபடி பசிபிக் மாகடலில் வந்திறங்கினர்.[3] அவர்கள் கடலில் இறங்குவதற்கு முன் அவர்கள் இருந்த கூண்டு தொலைக்காட்சியில் நன்கு தெரிந்தது. கூண்டின் மூன்று குதிகொடைகளுள் ஒன்று சரியாக விரியாததால், கூண்டு சாய்ந்து விழுந்தது ; அதிர்ச்சியும் அதிகமாக இருந்தது. விழும்போது அதன் வேகம் மணிக்கு 30 கி. மீ. இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அது 33 கி. மீ. வேகத்தில் விழுந்தது. நல்ல வேளையாக கடல் அமைதியாக இருந்தது ; அதிகக் காற்றும் இல்லை. விரியாத குதிகொடை கடலில் மூழ்கிவிட்டதால் அதில் ஏற்பட்ட சீர்கேட்டை அறுதியிட முடியவில்லை.
மீட்புப்படகு ஒன்று அவர்களை அண்மையிலிருந்த 'ஒக்கினவா' என்ற கப்பலில் கொண்டு சேர்த்தது. கப்பலில் வீரர்கட்கு நான்கு மணிநேரம் மருத்துவ சோதனைகள் நடைபெற்றன. முதல் சோதனைகளிலேயே அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பது தெரிந்தது. அம்புலிக்குச் சென்று திரும்பிய பின்பு. 'குவாரண்டைன்' எதுவுமின்றி நடமாட அனுமதிக்கப் பெற்ற வீரர்களுள் இந்த மூவர்களே முதலானவர்கள் ஆவர். அம்புலியில் முதன் முதலாகக் காரோட்டிய அப்போலோ - 15 விண்வெளி வீரர்களுக்கு மூன்று கோடி காரோட்டிகள் தம் பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். அமெரிக்க மக்கள் தலைவர் நிக்ஸன் “அப்போலோ - 15 பயணம் பூமியின் வரலாற்றில் ஒருபுது யுகத்தைத் தோற்றுவிக்கக்கூடிய அறிவியல் அறிவை அளிக்கும். மூன்று விண்வெளி வீரர்கட்கும் நாம் தலைவணங்குகின்றோம்“ என்று பாராட்டினார்.
அடியிற் கண்டவற்றை இந்தப் பயணத்தின் உறுதிப் பயன்களாக (ரிகார்டு சாதனைகளாக'}க் கொள்ளலாம்:
1. அப்போலோ-15 வீரர்கள் அம்புவியில் இருந்த மொத்த நேரம் 66 மணி 55 நிமிடம். இஃது அப்போலோ-14 வீரர்கள் இருந்த 33 மணி 31 நிமிட காலத்தைப்போல் இரு மடங்காகும்.
2. விண்வெளி வீரர்கள் அம்புலித் தரையில் ஆராய்ச்சிகள் நடத்திய காலம் 18 மணி 37 நிமிடம்; அப்போலோ-14 வீரர்கள் 9 மணி 23 நிமிட நேரமே அங்ஙனம் கழித்தனர்.
3. முதன் முதலாக அம்புலிக் காரை ஓட்டியது இந்தப் பயணத்தில்தான். அது மணிக்கு 27.8 கி.மீ. வீதம் ஓட்டப் பெற்றது.
4. விண்வெளி வீரர்கள் 171 இராத்தல் அம்புலிக் கற்களையும் மண்ணையும் பூமிக்குக் கொணர்ந்தனர். இதற்கு முன்னர் அப்போலோ-14 வீரர்கள் கொணர்ந்த இவற்றின் எடை 92.8 இராத்தல்களே.
5. ஆல்ஃப்ரெட் எம். வோர்டன் என்ற கட்டளைப் பகுதி வீரர் 20 நிமிட நேரம் பரந்த வான வெளியில் பூமியிலிருந்து 313,600 கி.மீ. உயரத்தில் உலாப் போந்தார். பூமிக்குப் புறத்திலுள்ள சுற்று வெளியில் மேற்கொண்ட உலா இதுவே முதலாவதாகும்.
6. அம்புலியின் சுற்று வழியில் அதிகநேரம் தங்கியது (145 மணி 15 நிமிடம்) இதுவே முதல் முறையாகும்.
7. வோர்டன் இந்தப் பயணத்தில் தனியாக 73 மணிநோம் அம்புலியைச் சுற்றினார். இதுகாறும் நடைபெற்ற அம்புலிப் பயணங்களில் சுற்றிய நேரத்தில் இதுவே அதிகநேரம் ஆகும்.
8. அப்போலோ ஊர்தியினின்றும் ஒரு செயற்கைத் துணைக்கோள் அம்புலியின் சுற்றுவட்டத்தில் இயக்கியது இதுவே முதல் தடவையாகும்.
இந்தப் பயணத்தில் கண்ட சில ஆய்வுமுடிவுகள் இவை:
1. அம்புலியின் தரை 25 கி.மீ. ஆழத்துக்குக் கெட்டியாக உள்ளது என்பதை உறுதியாக்கியது.
2, அம்புலியின் மேட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் அங்குள்ள பள்ளப்பகுதிகளிலிருப்பதைவிட அலுமினியம் அதிகமாக உள்ளது.
3. அம்புலியின் முன்பக்கத்தைக் காட்டிலும் பின்பக்கத்தில் கெட்டியான தரை 4 கி,மீ. உயரம் அதிகம் இருப்பது தெரிந்தது.
4. பூமியில் உள்ளதைவிட அம்புலியில் மேல் தரைக்கும் அடித்தரைக்கும் உள்ள வெப்ப ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருப்பது உறுதியாயிற்று.
5. அம்புலியினின்றும் கொண்டுவந்த கற்களையும் மண்ணையும் ஆராய்வதால் மேலும் பல தகவல்கள் தெரிதல் கூடும்.