அம்புலிப் பயணம்/அப்போலோ - 8
சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் மனிதனை நேரடியாக விண்வெளிக்குச் சென்று, சந்திர மண்டலத்தை நெருங்கிச் சில அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். இதனைத் திறம்படத் தெளிவாக அறிந்து கொள்வதற்கு. அப்போலோ - 8 என்ற விண்வெளிக்கலம் அனுப்பப் பெற்றது.[1] [2] இன் விண்வெளிப் பயணம் ஈடும் எடுப்பும் அற்றது. இதுகாறும் கண்டு பிடிப்பிற்காக மேற்கொள்வாரப் பெற்ற எந்தப் பயணமும் 147 மணி நேரம் பயணம் சென்ற அப்போலோ - 6 இன் பயணத்துடன் ஒப்பிடும். தகுதியுடையதன்று. மேலும், இதுகாறும் ஆளுடன் சென்ற பதினேழு அமெரிக்க விண்கலப் பயணங்களோ, அல்லது ஆளைக் கொண்ட பத்து சோவியத் விண்கலப் பயணங்களோ இதற்கு நிகர் அன்று. ஏனெனில், இவை யாவற்றிலும் சென்ற விண்வெளி வீரர்கள் அனைவருமே பூமியின் சுற்று வழியிலேயே தங்கியிருந்தனர் ; அன்றியும், அவர்கள் பூமியின் அருகிலேயும் இருந்தனர்.
நிகரற்ற பயணம் ; அப்போலோ - 8 இன் பயணம் மேற்கூறிய அனைத்திலும் மாறுபட்டது. இதில் சென்ற விண்வெளி வீரர்கள் பூமியின் கவர்ச்சி ஆற்றலின் இழுப்பினைக் கண்டு வேறொரு கோளினை நெருங்கிச் சென்றனர். அவர்கள் அக்கோளின் கவர்ச்சி ஆற்றல் ஆதிக்கமுள்ள பகுதிக்குச் சென்றனர். இங்ஙனம் சென்ற பயணங்களில் இதுவே முதலாவது. இந்தப் பயணத்தின் பொழுதுதான் மனிதக் கண்கள் சந்திரனின் மேற்பரப்பை மிக அருகிலிருந்து கிட்டத்தட்ட (எழுபது மைல்) 112 கிலோ மீட்டர் தொலைவில்.- முதன்முதலாகக் கண்டன. சந்திரனின் பின்புறத்தை-அஃதாவது பூமியை என்றுமே நோக்கியிராத பகுதியை-முதன்முதலாக மனிதன் கண்டது இப் பயணத்தின் பொழுதுதான். இப் பயணத்தின் போது சந்திரனுக்கு அருகிலிருந்து எடுக்கப்பெற்ற ஒளிப் படங்களைக் கொண்ட ஃபிலிம்கள் (Films) முதன்முதலாகப் பூமிக்குக் கொண்டுவரப்பெற்றன. இதற்கு முன்னர் எடுக்கப் பெற்ற ஒளிப் படங்கள் யாவும் தாமாக இயங்கும் விண்கலங்களால் எடுக்கப்பெற்று தொலைக்காட்சி (Television) மூலம் பூமிக்கு அனுப்பப்பெற்றவை.
அப்போலோ - 8இல் சென்ற விண்வெளி வீரர்கள் இதுகாறும் மனிதர்கள் பூமியிலிருந்து விண்வெளியில் போயிராத தொலைவினை-(233,000 மைல்கள்) 373,000 கிலோ மீட்டர்கள்-அடைந்தனர் ; இத்தொலைவு பூமியிலிருந்து சந்திரனுக்கு மறுபுறம் உள்ள சுற்ற வழியில் மனிதர்கள் இருக்கும்போது உள்ளதாகும். இதுகாறும் மனிதர்கள் பயணம் செய்திராத வேகங்களிலும் பயணம் செய்தது முதன்முதலாக இப் பயணத்தின் பொழுதுதான். பூமியின் கவர்ச்சி ஆற்றலுள்ள விண்வெளிப் பகுதியைக் கடந்து சந்திரனின் கவர்ச்சி ஆற்றலின் பகுதியில் நுழையும் பொழுது விண்வெளி வீரர்கள் மணிக்கு (24,171 மைல்) 88,674 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றனர். திரும்பவும் அவர்கள் பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் நுழையும் பொழுது மணிக்கு (24,629 மைல்) 39,406 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தனர். சிந்தனைக்கும் எட்டாத நெடுந் தூரத்திலுள்ள மனிதர்கள் செய்தித் தொடர்பு கொண்டதும் முதன்முதலாக இப் பயணத்தின் பொழுதுதான்.
பயணம் செய்த வீரர்கள் : அப்போலோ - 8இல் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் மூவர். அவர்கள் ஃப்ராங்க் போர்மன் (Frank Borman), ஜேம்ஸ் ஏ. லோவெல் (James A. Lovell), வில்லியம் ஏ. ஆண்டர்ஸ் (William A, Anders) ஆகியவர்கள் ஆவர். இந்த மூவருள் பயணத்தின் தலைவராக இருந்த போர்மனுக்கு வயது நாற்பது. விண்வெளிப் பயணங்களுள் மிக அதிகநேரம் நீடித்த பயணம் ஜெமினி-1 இன் பதினான்கு நாள் பயணமே. அப்பயணத்தின் தலைவராகப் பணியாற்றியவர் இந்த போர்மன் என்பவரே. எடையற்ற நிலையில் நீண்ட நாள்கள் இருக்க நேரிடினும் மனிதன் அலுப்புச் சலிப்பு இன்றி அதனைத் தாக்குப் பிடித்து உழைக்க முடியும் என்று மெய்ப்பித்த வீரர் இவரே. இவர் தொடர்ந்து 330 மணி 35 நிமிட நேரம் பூமியைச் சுற்றி 206 தடவைகள் வலம் வந்தவர். இவர் நகைச்சுவையுடன் உரையாடும் திறனுடையவர். ஜெமினி - 7இன் விண்வெளிப் பயணத்தின் பொழுது இரண்டு வாரம் முகச் சவரம் செய்து கொள்ளவும் இல்லை; குளிக்கவும் இல்லை. அவற்றிற்கு நேரம் ஏது ? இந் நிலையில் அவர் பூமிக்குத் திரும்பியபொழுது உயர் அதிகாரிகள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்க அவரை நெருங்கினர். அவர்களை நோக்கி நீட்டிய கரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே ”சகிக்க முடியாத அளவுக்கு என் உடலில் அழுக்கேறியுள்ளது” என்றார் போர்மன். ”ஆமாம், சிறிது அழுக்கடைந்துதான் காணப்படுகின்றீர்கள்” என்று அநுதாபத்துடன் சொல்லிவைத்தனர் அந்த அதிகாரிகள். உடனே அதற்கு அவர் ”ஆனால் இந்த அழுக்கு உண்மையான உழைப்பின் விளைவாக எழுந்த தூய்மையான அழுக்காகும் இதை மறந்து விடாதீர்கள்” என்று நகைச் சுவையுடன் மறு மாற்றம் அளித்த வித்தகர்.
அப்போலோ - 8 பயணம் இவருக்கு இரண்டாவது விண்வெளிப் பயணமாகும். இதுகாறும் விண்வெளியில் ஒரு தடவைக்கும் அதிகமாக உலவித் திரும்பியவர்கள் எண்மர். அவர்களுள் எழுவர் அமெரிக்கர் ; ஒருவர் இரஷ்யர். கோமரோவ் (Komarow) என்ற பெயர் கொண்ட இந்த இரஷ்ய வீரர் இரண்டாம் முறை சென்றபோது எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்து போனர். இப்பொழுது போர்மன் ஒன்பதாவது மனிதராகின்றார்.
இதுகாறும் விண்வெளியில் பயணம் செய்தவர்களுள் மூன்று முறை சென்று திரும்பியவர் வால்ட்டீர் ஷிரா என்ற அமெரிக்கர் ஒருவரே. இப்போது அப்போலோ - 8 இல் பயணம் செய்த ஜேம்ஸ் ஏ. லோவெல்லும் இந்தப் பெருமையை அடைகின்றார்.[3] இவரும் நாற்பது வயதையுடையவர். இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பே இவ்வீரர் விண்வெளியில் கழித்துள்ள நேரம் மற்ற எல்லோரும் கழித்த நேரத்தைவிட மிக அதிகமானது (18 நாள்). அங்ஙனமே, உலக வரலாற்றிலேயே வேறு எவரும் பயணம் செய்திராத அளவிற்கு இவர் 73 இலட்சம் மைல் பயணம் செய்துள்ளார். அப்போலோ-8 பயணத்தையும் கணக்கில் சேர்த்தால் மேற் குறிப்பிட்ட எண்ணிக்கை விவரங்கள் மேலும் அதிகமாகும்.
அப்போலோ - 8 பயணத்தில் பங்குகொண்ட மூன்றாவது வீரர் வில்லியம் எ. ஆண்டர்ஸ் என்பார். முப்பத்தாறு வயதை எட்டிய இவர் 1968லேயே விண்வெளி வீரருக்குரிய தகுதியை அடைந்த போதிலும், இந்தப் பயணமே அவரது முதற் பயணமாகும். ஏற்கெனவே விண்வெளிப் பயண அநுபவம் பெற்ற முப்பத்து மூவருடன்[4] இவர் முப்பத்து நான்காவது மனிதராகச் சேர்ந்து கொள்கின்றார்.
இந்த பயணத்தின் பொழுது இந்த மூன்று வீரர்களும் கிட்டத்தட்ட (595,000 மைல்) 952,000 கிலோ மீட்டர் பயணம் செய்து அம்புலியை வலம் வந்ததுடன் அதற்கு மிக அருகில்-112 கி. மீட்டர் தொலைவில்-இருந்தனர். அம்புலியின் பல்வேறு பகுதிகளையும் ஒளிப் படங்களாக எடுத்தனர். தொலைக்காட்சிக் காமிராவையும் இயக்கிப் பூவுலகிலுள்ளோர் அம்புலிக் காட்சிகளை உடனுக்குடன் அவரவர் இல்லங்களிலிருந்து கொண்டே காணும்படி செய்தனர். இவர்கள் கொண்டுவந்த ஒளிப் படங்களும் மிகத் துல்லியமாக அளக்கப் பெற்ற விண்வெளி எடுகோள்களும் சந்திர மண்டலத்திலுள்ள எரிமலை வாய்களின் (Craters) உயரம், வடிவம், அளவு முதலியவற்றையும் அம் மண்டலத்தைப்பற்றிய வேறு தகவல்களையும் ஆராய்ந்து அறிவதற்குப் பேருதவியாக இருக்கும். மேலும், அறிவியலறிஞர்கள் இவற்றை ஆராய்ந்து அம்புலியின் இயல்பு, அதன் தோற்றம் முதலியவற்றையும் கணித்தல் இயலும்.
எதிர்காலத்தில் மனிதன் அம்புலியில் இறங்கும் பயணத்தில்
எத்தகைய இராக்கெட்டு பயன்படுத்தப்பெறுமோ அத்தகைய இராக்கெட்டே இப்பயணத்தில் பயன்படுத்தப் பெற்றது. அங்ஙனமே, எந்த மாதிரியான விண்வெளிக் கலம் அப்பயணத்தில் பயன்படுத்தப் பெறுமோ அத்தகைய கலமே இப் பயணத்திலும் மேற்கொள்ளப்பெற்றது. ஆனால், அம்புலி ஊர்தி (LEM-Lunar Excursion Module) என்ற ஒரு பகுதி மட்டிலும் இதில் பொருத்தப் பெறவில்லை. இந்த அம்புலி ஊர்திதான் சந்திரனைச் சுற்றி வரும் மனிதனைச் சந்திரனுக்குக் கொண்டு செல்லும்.
சாட்டர்ன் - 5 : அப்போலோ - 8 என்ற விண்வெளிக் கலத்தை விண் வெளிக்கு உந்தியது சட்டர்ன் - 5 (Satum - 5) என்ற இராக்கெட்டு ஆகும். இஃது ஒன்றன்மீது ஒன்றாகப் பொருத்தப்பெற்ற மூன்றடுக்கு இராக்கெட்டு ஆகும். இந்த இராக்கெட்டின் முதல் அடுக்கிற்கு மட்டிலும் 1600 டன் திரவ உயிரியமும் (Oxygen), 650 டன் மண்ணெண்ணெயும் பயன்பட்டன. இரண்டாவது பகுதியில் மேற் குறிப்பிட்டவை தவிர தனியே திரவ நீரியமும் (Hydrogen) திரவ உயிரியமும் கலந்த எரிபொருள் நிரப்பப் பெற்றது. இந்த எரி பொருள்களின் எடை இராக் கெட்டின் மொத்த எடையில் 92 சதவிகிதமாகும் ! இராக்கெட்டில் இந்த எரி பொருள்கள் நிரம்பியிருக்கும் தொட்டிகள் இது காறும் மனிதனுல் உருவாக்கப் பெறாத சிறப்பியல்புகள் வாய்ந்தவை. இவை யாவும் காற்று புகாத அறைகள் ; அணுவளவும் ஒழுகாதவை. இச் சிறப்பியல்பை விளக்க ஒர் எடுத்துக்காட்டு : இத்தொட்டி ஒன்றில் பனிக்கட்டி நிரப்பி அத்தொட்டியை 700F வெப்ப நிலையிலுள்ள ஓர் அறையில் வைத்தால் அப் பனிக்கட்டி உருக எட்ட்ரை ஆண்டுகள் ஆகும் மேற் குறிப்பிட்ட இரண்டு அடுக்குகளும் அப்போலோ - 8 கலத்தை பூமியின் சூழ்நிலைக்கு அப்பால் விண்வெளிக்குக் கொண்டு சென்றன. முதல் அடுக்கிலுள்ள (அடியிலுள்ளது), ஐந்து பொறிகளும் இயங்கத் தொடங்கியதும் அவை வினாடிக்கு 15 டன் எரி பொருளை எரித்தன. இந்த அடுக்கு மணிக்கு 9600 கி.மீ. வீதம் பயணம் செய்து 51 கி.மீ. உயரத்திற்கு விண்வெளிக் கலத்தை உயர்த்தியது. இதற்கு ஆன காலம் இரண்டரை நிமிடங்களே. அதன் பிறகு இரண்டாவது அடுக்கி (நடுப்பகுதி) லுள்ள ஐந்து சிறு பொறிகளும் இயங்கத் தொடங்கின. இதனால் ஏற்பட்ட உந்துவிசை விண்வெளிக் கலத்தை 189 கி.மீ. உயரத்திற்குக் கொண்டு சென்றது. தங்கள் கடமை முடிவுற்றதும் இந்த இரண்டு அடுக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக அவ்வப்பொழுது கழன்று கொண்டன.
இந் நிலையில் மூன்றாவது அடுக்கு இராககெட்டு மட்டிலும் விண்வெளிக் கலத்துடன் 189 கி.மீ. உயரத்தில் சுற்று வழியில் பூமியை வலம் வந்தது. ஒரு முறை வலம் வருவதற்கு 90 நிமிடங்கள் ஆயின. அங்ஙனம் இரண்டு தடவை சுற்றி வருவதற்குள் விண்வெளி வீரர்கள் கலத்தில் எல்லாச் சாதனங்களும் சரியாக இயங்குகின்றனவா என்று சோதித்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் மூன்றாவது அடுக்கு இராக்கெட்டினை இயக்கினர். அதிலுள்ளது ஒரு பொறியே. அஃது அம்புலியை நோக்கி இவர்களை இட்டுச் சென்றது. சிறிது தூரம் சென்றதும் அதன் ஆற்றல் தீர்ந்து போயிற்று இராக்கெட்டும் தனியே கழன்று கொண்டது. எனினும், விண்வெளிக் கலத்தின்
வேகம் தனியாமல் சென்ற வேகத்திலேயே அது மேலும் 3-2 இலட்சம் கிலோ மீட்டர்களைக் கடத்து அம்புலியை நெருங்கத் தொடங்கியது.
அம்புலியின் கவர்ச்சி ஆற்றலின் இழுப்பால் விண்கலத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. கலம் பூமியினின்றும் கிளம்பிய 69 மணி நேரத்திற்குப் பிறகு கலத்திலுள்ள ஒரு பொறியை இயக்கி மணிக்கு 9,334 கி. மீட்டராக இருந்த வேகம் 5,944 கி. மீட்டராகத் தணிக்கப்பெற்றது. நான்கு நிமிடம் இயங்கினதில் இப்பொறி 16,000 இராத்தல் எரி பொருளை எரித்துத் தீர்த்தது. இதனால் விண்கலம் 111 கி. மீட்டரிலிருந்து 310 கி.மீ. வரையுள்ள நீள் வட்டப் பாதையில் இயங்கத் தொடங்கியது. அப்பொழுது விண்கலம் அம்புலியின் மறுபுறத்தில் இருந்தது. அப்போது வானெலித் தொடர்பும் தொலைக்காட்சித் தொடர்பும் அறுபட்டதால் பூமியிலுள்ளோர் சில நிமிட நேரம் கவலையுடன் கழித்தனர். அம்புலியின் மறுபுறத்திலிருந்து விண்கலம் நேர்ப்புறத்திற்கு வருங்கால் அது நீள்வட்டப் பாதையில் இருந்தது. பின்னர் கலத்திலுள்ள முக்கிய பொறியைப் பதினோரு விநாடிகள் இயக்கிக் கலத்தைக் கிட்டத்தட்ட ஒரு வட்டச் சுற்று வழியில் செலுத்தினர் விண்வெளி வீரர்கள். விண்கலம் மூன்றாவது முறையாக அம்புலியின் மறுபுறம் வருங்கால் இச் செயல் நிகழ்ந்தது. இதற்குள் கிட்டத்தட்ட நாலரை மணிநேரம் கழிந்துவிட்டது.
இப்பொழுது விண்கலம் கிட்டத்தட்ட 96-3 கி. மீட்டரிலிருந்து 97.2 கி.மீ. வரை உள்ள தொலைவில் ஒரு வட்டப் பாதையில் சுற்றி வரத் தொடங்கிற்று. ஒருமுறை சுற்றுவதற்கு ஆன நேரம் சுமார் இரண்டு மணி. விண்கலம் மணிக்கு (3,700 மைல்) 5,920 கி.மீ. வீதம் அம்புலியைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இங்ஙணம் பத்துத் தடவைகள் அது சந்திரனை வலம் வந்தது. இந்நிலையில் விண்வெளி வீரர்கள் பல்வேறு சோதனைகளைச் சுறுசுறுப்பாக நடத்தினர். இப்போது பயணத் தலைவர் போர்மனின் இதயம் நிமிடத்திற்கு 78-80 ஆகத் துடித்தது. சில நிமிட நேரமே இந்நிலை நீடித்தது. பூமிக்கும் 4,00,000 கி.மீட்டர் தொலைவிலுள்ள அம்புலிக்கும் செய்தித் தொடர்பு மிகத் தெளிவாக இருந்தது. ஆண்டர்ஸின் குரல் தெளிவாகவும் அமைதியாகவும் கேட்டது;தங்கள் பணி நிறைவுற்றதும் கலத்திலுள்ள ஒரு விசையை இயக்கி அம்புலியின் ஈர்ப்பு ஆற்றலினின்றும் விடுபட்டுப் பூமியை நோக்கி விரைந்தனர் விண்வெளி வீரர்கள். சுமார் 57 மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் பசிபிக் மாகடலில் குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பாக இறங்கினர். இந்தப் பயணத்திற்கு ஆன மொத்த நேரம் 147 மணி ஆகும். அப்போலோ-8 பயணம் வரையில் இந்த விண்வெளிப் பயணத்தில் விண்வெளியில் பறந்த நேரம் அமெரிக்க கடிகாரம் 2774 மணி 8 நிமிடங்கள் என்று காட்டியது. இரஷ்யக் கலங்கள் 628 மணி 52 நிமிட நேரமே இங்ஙனம் விண்வெளியில் பறந்துள்ளன. அமெரிக்கர்கள் இதுகாறும் பூமியைச் சுற்றி 800 தடவைகள் வலம் வந்துள்ளனர்; இரஷ்யர்ளோ அங்ஙனம் வலம் வந்தது 371 முறைதான். ஜெமினி 11இல் (செப்டம்பர் 1966) சென்ற ஓர் அமெரிக்கர் 1,363 கி.மீ. உயரம் வரை பறந்து சென்றார். வாஸ்டாக் - 5இல் (சூன் 1963) சென்ற இரஷ்யர் 787.2 கி.மீ. உயரமே பறந்தார். இறுதியாக ஐந்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடைபோட்ட மொத்த நேரம் 6 மணி 1 நிமிடம்; இரஷ்யர் ஒருவர் தமது கலத்தைவிட்டு வெளிவந்த நேரம் 10 நிமிடங்களே.
இப்பொழுது அப்போலோ-8 பயணத்தை மேற்கொண்ட மூவரும் தொடர்ந்தாற்போல் பல முதல் நிலைகளை உரிமை கொண்டாடக் கூடும். இதுகாறும் மனிதர்கள் எட்டியிராத மணிக்கு 38,674 கி.மீ. வேகத்தை இவர்கள் எட்டினர்; பூமியின் ஈர்ப்பு விசைச் சூழலைத் தாண்டியபோது இஃது ஏற்பட்டது. இதுகாறும் மனிதர்கள் சென்றிராத தொலைவினை-3,72,800 கி. மீட்டர்கள் இவர்கள் கடந்தனர். அம்புலியைச் சுற்றியபோது இது நேரிட்டது. முதன்முதலாகச் சந்திரனை வட்டமிட்டதும், முதன்முதலாக பூமியின் ஈர்ப்புச் சூழலைக் கடந்ததும், முதன்முதலாக அம்புலியின் ஈர்ப்பு ஆற்றலைக் கண்டதும், முதன்முதலாகப் பூமியின் தொடர்பின்மையை முற்றிலும் அற்றதும், முதன்முதலாக அம்புலியின் மறுபுறத்தைக் கண்டதும் இந்த வீரர்களே ஆவர்.
சாட்டர்ன்-5 இராக்கெட்டும் அதன் மீது அப்போலோ-8 விண்வெளிக் கலமும் கென்னடி முனையின் (Cape Kennedy) தளத்தில் நின்றபொழுது அவற்றின் உயரம் 36 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்குச் (84.6 மீட்டர்) சமமாக இருந்தது! இரண்டாயிரம் பெரிய கார்களின் எடை 543 ஜெட் போர் விமானங்கள் பறக்கும்போது உருவாக்கக்கூடிய ஆற்றலை இந்த இராக்கெட்டு பெற்றிருந்தது. இந்த ஆற்றலைக் கொண்டு ஒரு மோட்டார் காரை மணிக்கு 96 கி. மீட்டர் வேகத்தில் 34 ஆண்டுகள் ஓட்டமுடியும்! பன்னிரண்டு ஆண்டுகள் பாடுபட்டு இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர் அமெரிக்க அறிஞர்கள். இதற்காகப் பணியாற்றிய அறிவியலறிஞர்கள், பொறிஞர்கள் முதலானோர் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்கள் இருபதாயிரம் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இப்பயணத்தில் பங்கு கொண்டது. இந்த இராக்கெட்டிலுள்ள பகுதிகள், துணைக் கருவிகள், மின்னியல் சாதனங்கள் முதலியன முப்பது இலட்சம்.
இத்தனை ஏற்பாடுகளிலும் எதிர்பாராமல் நேரிடும் விபத்துக்களைச் சமாளிக்க எடுத்துக் கொள்ளப்பெற்ற அக்கறைதான் மிகவும் முக்கியமானது. எந்த ஏற்பாடு தவறாகப் போயினும் அதற்குப் பதிலாக இன்னொரு ஏற்பாடு தயாராக இருந்தது. 1967இல் கென்னடி முனையிலுள்ள தளத்தில் தீவிபத்து ஏற்பட்டு மூன்று வீரர்கள் பலியான பிறகு இப்போது விண்வெளிக் கலத்தின் உட்புறச் சாதனங்களும் எளிதில் தீப்பற்றாத பொருளால் உருவாக்கப் பெறுகின்றன. எந்த நெருக்கடியிலும் பூமிக்குத் திரும்பிவிட அமைப்புகள் இருந்தன. சந்திர மண்டலத்தினின்றும் பூமிக்குத் திரும்ப ஏற்படும் காலதாமதம் ஒன்றுதான் பிரச்சினையாகக் குறிப்பிடக் கூடியது. 32 இலட்சம் கி. மீட்டர்களுக்குமேலல்லவா கடந்து பூமிக்குத் திரும்பிவர வேண்டும்? பூமியைச் சுற்றி வருவதற்கு மேற்கொள்ளப் பெற்ற பயணத்தில் ஓர் ஆபத்து நேரிட்டால் அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் திரும்பிவிட முடியும். ஆனால், அம்புலியைச் சுற்றி வரும் விண்வெளிக்கலம் பூமிக்குத் திரும்ப இரண்டு நாட்களுக்கு மேலாகும்.
இங்ஙனம் பேராபத்துகட்கெல்லாம் உட்பட்டுப் பல்லாயிரம் கோடி டாலர்களைச் செலவிட்டு அம்புலியை அடைய நினைக்கும் நோக்கம் என்ன ? அமெரிக்க மக்களின் சார்பில் அவர்களின் தலைவர் லிண்டன் பி. ஜான்ஸன் இதற்குத் தரும் விளக்கத்தைக் காண்போம்.
"விண்வெளியை வெற்றி கொள்வதில்தான் நவீன கால மனிதன் பெருமிதத்துடனும் பயனுள்ள வகையிலும் ஈடுபட முடியும் ; நாடுகளை வெற்றி கொள்வதில் அல்ல. இந்தப் போராட்டத்தில் மனித குலம் முழுவதுமே நேச நாடுகளைச் சேர்ந்தவர்களாகின்றனர். அவர்களின் ஒரே எதிரி பகைமை பாராட்டும் விண்வெளிச் சூழலே. இந்த எதிரியை வென்று வாகை சூடினல் அந்த வெற்றி உலகம் முழுவதற்கும் சொந்தமாகும் !"