அம்புலிப் பயணம்/எதிர்காலத் திட்டங்கள்

20. எதிர்காலத் திட்டங்கள்

டுத்த இருபத்தைந்து ஆண்டுகள் வரையில் அமெரிக்கா புதிதாக நிலவுப் பயணம் எதையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இரஷ்யாவும் அம்புலிக்கு மனிதனை அனுப்பும் ஆராய்ச்சியை மேற்கொள்வதாக அறிவிக்கவில்லை. எனவே, இந்த நூற்றாண்டில் அம்புலியில் மனிதன் ஆராய்ச்சியும் அப்போலோ-17 இன் பயணத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளலாம். ஆயினும், இதுவரை அம்புலியில் இறங்கிய ஆறு அப்போலோ கலங்களும்[1] நிறுவி வந்துள்ள ஆறு ஆய்வு நிலையங்களும் தொடர்ந்து அறிவியல் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். ஆகவே, இன்னும் நீண்ட நாட்களுக்கு அம்புலி ஆய்வு இப்புவியில் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும். மேலும், அம்புலியினின்றும் இப்புவிக்குக் கொணரப்பெற்ற பொருள்களை ஆய்ந்து அறிவியல் உண்மைகளைக் காணும் பணியும் எளிதில் முடியும் என்று சொல்லுவதற்கில்லை. எனவே அம்புலிப் பயணம் நின்றுவிட்டாலும், அம்புலி பற்றிய புதுப்புதுச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் அமெரிக்கா புதுமையான இரு பெருந் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அவையாவன :

(1) விண்வெளி - ஆய்வகம் - (sky lab) : - இஃது ஆறு அறைகள் கொண்ட ஒரு வீடு போன்று பெரிதாக இருக்கும். இது விண்வெளியில் செலுத்தப்பெறும்.[2] இதில் மனிதர் எவரும் செல்லார். ஆனால், மறு நாள் அப்போலோ கலம், ஒன்றில் மூன்று விண்வெளி வீரர்கள் பறந்து சென்று பூமியை வலம் வந்து கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வுக் கூடத்தில் இணைவர். பின்னர் அவர்கள் ஆய்வகத்தில் நுழைந்து அங்கு அமைக்கப்பெற்றிருக்கும் கருவிகளைப் பயன்படுத்திச் சோதனைகள் நடத்துவர். 28 நாட்கள் கழித்துத் தம் கலத்தினுள் மீண்டும் புகுந்து பூமிக்குத் திரும்புவர், விண்வெளி ஆய்வகம் காலியாகப் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும். இரண்டு திங்கட்குப் பின்னர் இரண்டாவது விண்வெளி வீரர்கள் குழு புவியினின்றும் புறப்பட்டு ஆய்வகத்தை அடையும். அங்கு இவர்கள் 55 நாட்கள் தங்கி ஆய்வுகள் நடத்திப் பூமிக்குத் திரும்புவர். ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது குழு சென்று ஆய்வகத்தில் இன்னொரு 56 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். இஃது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வகம் பற்றிய திட்டம் ஆகும்.

மேற்கூறிய இத்திட்டம் புவி ஆய்வை மையமாகக் கொண்டது. நடப்பு ஆண்டில் (1973) எட்டுத் திங்கள் காலம் விண்வெளி ஆய்வகம் பூமியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கும். இந்த ஆய்வகம் திரட்டிய படங்களையும் செய்திகளையும் ஆய்ந்து பூமிபற்றிய சிறப்பான செய்திகளைத் தயாரிக்க இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த அறிவியலறிஞர்களை 'நாசா' என்ற விண்வெளி நிலையம் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுடைய ஆய்வு வேளாண்மை, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, சூழ் நிலைக்கேடு தடுப்பு, கனிவளம் காண்டல், வறட்சி, வெள்ளத் தடுப்பு, நிலப் படம் வரைதல் போன்ற பல்வேறு துறைகளுக்குப் பெரிதும் உதவும்.

இந்த ஆய்வகம் விண்வெளி ஆய்வுகள் நடத்தவும் பயன்படும். பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளதால் பூமியினின்றும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது இடையிலிருக்கும் வளிமண்டலம் அறிவியல் உண்மைகளைத் தடுத்து விடுகின்றது ; சில சமயம் திரித்தும் விடுகின்றது. வளிமண்டலத்தைக் கடந்து விண் வெளியில் சுழலும் ஆய்வகத்திலிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது இந்த இடையூறுகள் அகலும். ஆதலின், இந்த முறையில் புதிய செய்திகள் துல்லியமாகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகின்றது.

(2) விண்வெளி - ஓடம் (Space shuttle) : விண்வெளி ஆய்வகத் திட்டத்தை அடுத்த முயற்சி இதுபற்றியது. இஃது 1978இல் மேற்கொள்ளப் பெறும். விண்வெளியில் புவியைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வகம் அல்லது விண்வெளி அரங்கிற்குப் (Space plateform) பூமியிலிருந்து சென்றுவரப் பயன்படுவது விண்வெளி ஓடம். இது விண் வெளிக்குப் பறந்து சென்று, தனது பணி முடிந்த பின்னர், புவிக்குத் திரும்பி ஒரு சாதாரண விமானம் இறங்குவது போன்று பாதுகாப்பாக விமான தளத்தில் இறங்க வல்லது. இதே ஓடத்தை மீண்டும் மீண்டும் 100 முறை பயன்படுத்தலாம். இதனால் விண்வெளிப் பயணச் செலவு குறைகின்றது. 12 பயணிகளையும் 4 விமானிகளையும் கொண்டு செல்ல வல்ல இதில் எவரும் பயணம் செய்யலாம். அப்போலோ கலத்தை இயக்கிச் செல்லும் விண்வெளி விமானிகளுக்கு இருக்கவேண்டிய அளவு திறமை இந்த ஓடத்தை இயக்கும் விமானிகட்கு இருக்க வேண்டியதில்லை. இவர்களுடைய திறம், சோதனை விமானிகட்கும் (Test pilots) விண்வெளி விமானிகட்கும் (Astronauts) இடைப்பட்டதாக இருந்தால் போதும் என்று கணிக்கப்பெற்றுள்ளது. ஆயின், இவர்கள் கடற்பயணத் துறையில் நல்ல பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து விண்வெளி ஓடத்தைச் செலுத்துவது உகந்ததாக இருக்கும் என்று கருதுகின்றனர். இதனை விண்வெளிக்கு உந்திச் செல்லும் இராக்கெட்டுகள் இதன் வெளிப்புறமாக அமைக்கப் பெற்றிருக்கும். விண்வெளி ஓடம் மேலே சென்று பூமியைச் சுற்றத் தொடங்கியதும் இந்த இராக்கெட்டுகள் தாமாகக் கழன்று பூமியை வந்தடையும். இவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். பூமியின் சுற்றுவழியில் ஓடிவரும் ஓடம் அங்கு மிதந்து வரும் விண்வெளி ஆய்வகத்துடன் இணையும். அப்பொழுது ஓடத்தில் உள்ளவர்கள் ஆய்வகத்தினுள் நுழைந்து கொள்வர். பின்னர் இந்த ஓடம் பிரிந்து பூமியை நோக்கி வந்து விமான தளத்தில் பாதுகாப்பாக இறங்கும். இந்த ஓடத்தை மிதவைக் குடை (Parachute) வாயிலாகவும் கடலில் இறங்கச் செய்யலாம். இப்பொழுது மேற்கொள்ளப்பெறும் விண்வெளிப் பயணத்தில் ஒரு விண்வெளிக் கலத்தைப் பூமியைச் சுற்றி வலம்வருமாறு அனுப்ப ஓர் இராத்தல் எடைக்குச் சுமார் 600 முதல் 700 டாலர் (ஒரு டாலர் 7 ரூபாய்) வரை செலவாகிற தாகக் கணக்கிட்டுள்ளனர்; ஆனால், விண்வெளி ஓடத்தையும் அதனைச் செலுத்தும் இராக்கெட்டுகளையும் {Liquid Rockets) பன்முறை பயன் படுத்தலாமாதலின், இந்த முறையில் ஓர் இராத்தல் எடைக்குச் சுமார் 100 டாலருக்குக் குறைவாகவே செலவாகும் எனக் கணக்கிட்டுள்ளனர். 1980-வரை இந்தத் திட்டங்கள் செயற்பட்டு வரும்.

இந்தப் பத்தாண்டுக் காலத்தில் இப் புவியோரின் கருத்தினைக் கவரும் வேறொரு செய்தியும் உள்ளது, அஃதாவது, 1975 இல் அமெரிக்காவின் அப்போலோ கலமும் இரஷ்யாவின் சோயூஸ் கலமும் விண்ணிலே இணையப் போகின்றன. கோட்பாடுகளில் எதிர்முனையில் உள்ள இந்த இரு நாடுகளும் விண்வெளித் துறையை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் தனித்தனியே கண்டுவரும் முன்னேற்றங்களின் பரிமாற்றத்திற்கு இதனால் ஒருவழியும் தோன்றலாம். இந்தக் கூட்டு முயற்சியால் விண்வெளித்துறையிலுள்ள சில சிக்கல்களும் தீர்க்கப்பெறலாம். இதனால் அமெரிக்க விண்வெளி விமானிகள் தம் தகுதிகளுடன் இரஷ்யமொழி கற்கவேண்டிய நிலையும் தோன்றலாம்.


  1. இவற்றுள் மூன்று அம்புலியீன் வடபாதியிலும் மூன்று அதன் தென்பாதியிலுமாக அமைந்துள்ளன. இந்த ஆறில் இரண்டு மேற்பாதியிலும், நான்கு கீழ்ப்பாதியிலும் இருக்கும்.
  2. 1973 - ஏப்ரல் 30 ஆம் நாள்.