அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/006-383


2. சுவாமியைத் தொழுவதில் சண்டைபிடிப்பவர்கள் சுயராச்சியங்கொண்டால் சும்மாயிருப்பரோ

திரிசிரபுரம் ஸ்ரீரங்கர்கோவில் உற்சவம் நடந்து ஆழ்வார்சுவாமிகளை ஊர்வலங்கொண்டு வருங்கால் வடகலை தென்கலை நாமம் போட்டுத் திரியும் பாப்பார்கள் பொறாமெயினால் சண்டையிட்டு சுவாமியென்றுக் கவனிக்காது ஆழ்வார் கழுத்திலிட்டிருந்த மாலையைப் பிடிங்கியும் அவரைக் கீழே தள்ளவும் ஆரம்பித்து போலீசாரால் பிடிபட்டு விசாரிணையிலிருக்கின்றார்கள். பாப்பார்கள் ஆழ்வார்மீது வைத்திருப்பது அதிபக்தியா. பொருளின்பேரில் வைத்திருப்பது நிதயுக்த்தியா. ஆராய்ச்சிச் செய்யுங்கால் இத்துடன் சுய அரசாட்சிக்குத் தலைவராக இருக்கும்படி தென்கலையாருக்குக் கொடுக்கலாமா, வடகலையாருக்குக் கொடுக்கலாமா, குருக்கு பூச்சுக்குக் கொடுக்கலாமா, நெடுக்குபூச்சுக்குக் கொடுக்கலாமா என்பதையும் ஆராய்ச்சி செய்துவைத்துக் கொள்ளுவோமானால் ஆழ்வாரைக் கீழேதள்ள ஆரம்பித்ததைப்போல் சுய அதிகாரம் பெற்றவர்களைத் தள்ளாமல் சுகம்பெற்று வாழ்வரோ இல்லை இல்லை .

- 1:13; செப்டம்பர் 11, 1907 -