அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/007-383


3. இன்னோர் விசேஷம்

ஒருபட்சத்திற்குமுன் வெளிவந்த இலங்காதீவப் பத்திரிகைகளில் ஓர் பிராமணனென்போர் மகமதியர்மார்க்கத்தைத் தழுவியதாகக் கண்டோம். இவ்வாரத்துப் பத்திரிகையில் மகமதியர் பெருங்கூட்டங்கூடி அவருக்குச்சில பொருளுதவி செய்ததாகவுங் கேட்டு சந்தோஷிக்கின்றோம்.

கனவான்களே, மகம்மதியர்மார்க்கத்தில் ஓர் பிராமணன் அவாக்கொண்டு சேருகிறேனென்று சொன்னவுடன் அவர்களுள் சேர்த்து தங்கள் மார்க்க ஞானங்களையும் ஊட்டி பொருள் சேகரித்து மீட்டி ஆதரித்திருக்கின்றார்கள், அதுபோல் ஓர் மகமதியன் பிராமண மதத்தில் சேரவேண்டுமென்று அவாக்கொண்டு பிராமணர்களை வந்துக் கேட்பானாயின் அம்மகமதியனை பிராமணர்கள் சேர்த்து தங்கள் ஞானத்தையும் போதித்து பொருளையுஞ் சேதிப்பர்களோ இல்லை. தன் சுகத்தைப் பார்த்துக்கொண்டு எதிரி சுகத்தைப் பார்க்காத மார்க்கமும் மார்க்கமோ? சமயமும் சமயமாமோ? மதமும் மதமாமோ? அன்னோர் கடவுளுங் கடவுளாமோ?

மகமதியனான பிராமணனை தன் தாய் தந்தையரும் பெண்சாதி பிள்ளைகளும் சாதிகெட்டுவிட்டானென்று நீக்கியும் விடுகின்றார்கள். இவ்வகை நீக்கிவிட நேரிட்ட பிராமணன் யதார்த்த பிராமணனாவானா? அங்ஙனம் யதார்த்த பிராமணனாயின் மகமதியர் மார்க்கத்தைத் தழுவியவுடன் கெட்டுப்போவானா ஒருக்காலுங் கெடான்.

பொன்னைக் கொண்டுபோய் பித்தளையுடன் சேர்த்தாலும், இய்யத்துடன் சேர்த்தாலும் பொன்னைப் பொன்னாகவே பிறித்து எடுத்துக் கொள்ளலாம். பித்தளையை இரும்புடன் சேர்த்தாலும் இய்யத்துடன் சேர்த்தாலும் இரும்பையும் இய்யத்தையுங் கெடுத்து பித்தளை என்னும் பெயரும் கெடுவது திண்ணம்.

யதார்த்த பிராமணன் எங்கு சேர்ந்தாலும் சிறப்படைவதுடன் தான் சேர்ந்த இடமும் சிறப்பைப் பெரும்.

வேஷ பிராமணம் வேஷமாறியவிடத்துக் கெட்டுப்போவது வியப்பன்று, சகஜமேயாம்.

- 1:21; நவம்பர் 5, 1907 -