அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/037-383
33. ஓர் இந்தியரை பிரிட்டிஷ் இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் ஓர் அங்கமாக சேர்த்தல்
தற்காலம் இவ்விந்து தேசத்தில் நிறைவேறிவரும் இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் ஓர் இந்தியரை நியமிக்க வேண்டும் என்கின்ற ஏற்பாட்டில் கருணை தங்கிய ராஜாங்கத்தார், எக்சிகூட்டிவ் மெம்பருக்காக இந்தியரை தெரிந்தெடுக்குங்கால், அவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரைப்போல் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமில்லாதவரும், தன்சாதி புறசாதி என்னும் பற்றில்லாதவரும், தன் மதம் புறமதமென்னும் பேதம் இல்லாதவரும், சகல சாதியோர் மீதும் அன்பு பாராட்டுபவரும் பொதுநன் மெய்க்கு உழைப்பவருமாயுள்ள ஒருவரைத் தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்று கோருகிறோம்.
அங்ஙனமின்றி இந்தியரொருவர் எம்.ஏ., எம்.எல்., தேர்ந்தவராயிருப்பினும், ஜர்ஜ் உத்தியோகம் செய்பவராயிருப்பினும், ஐ.பி.எஸ். பட்டம் பெற்றவராயிருப்பினும் சீர்மைக்குப் போயிருக்குங்கால் சாதிபேதமில்லை, சென்னைக்குவந்தவுடன் சாதிபேதம் உண்டு என்று சமயம் பாராட்டுகிறவர்களை சேர்த்துக் கொள்ளுவதினால் தங்கள் சாதி தங்கள் சமயத்தோருக்கு வேண்டியவர்களாயிருந்து தங்களுக்கு அப்புறப்பட்ட சாதியோருக்கும் சமயத்தோருக்கும் இடுக்கங்களை உண்டு செய்து விடுவதுடன் இராஜாங்கத்தோருக்கும் இடுக்கங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள்.
ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் மிக்க சீர்தூக்கி இந்நியமனத்தை முடிப்பார்கள் என்று நம்புகிறோம்.
- 2:29; டிசம்பர் 30, 1908 -