அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/038-383
34. காங்கிரஸ் : இவ்வருஷங் காங்கிரசுக்கு வந்திருந்த கனவான்களின் கருணைநிலை யிதேபோலும்
டிசம்பர் மாத விடுமுறைகாலத்தில் இச்சென்னையில் கூடிய காங்கிரஸ் கமிட்டிக்குப் பிரிதிநிதிகளாக வந்திருந்த பெரியோர்களில் சிலர் நெட்டாலிலுள்ள இந்தியர்களுக்கு அனந்த துன்பங்கள் நேரிட்டு நசிந்துவருவதுபோல் பரிந்து பேசிய விஷயங்கள் யாவும் ஆட்சரியமாய் இருக்கின்றது.
காரணம் - விவேகமிகுத்த ஞானவான்களின் நூற்களுக்கும், குடிகளை அடக்கியாளும் தர்மத்திற்கும் ஆதியாக நிற்பது அரசர்களின் செங்கோல் எனப்படும்.
திரிக்குறள்
அந்தணர் நூற்கும் அறத்திற்கு மாதியாய் / நின்றது மன்னவன் கோல்.
ஆதலின் நெட்டால் ராஜாங்கத்துள் குடியேறியுள்ள இந்துக்களும் தங்களது ஆளுகைக்குள் அடங்கி வாழவேண்டும் என்னும் எண்ணத்தினால் இந்துக்கள் ஒவ்வொருவரும் நெட்டால் இராஜாங்க அதிகாரப் புத்தகத்தில் பெருவிரல் குறிபதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் பிறப்பித்தார்கள்.
அவர்கள் சட்டத்திற்கடங்கி நாளுக்குநாள் தங்கள் குறைகளை விளக்கி சீர்படுத்திக்கொள்ள வேண்டியவர்கள் அவ்விடத்தில் வாழலாம். அவர்கள் சட்டத்திற்கு அடங்கிய வாழ்க்கையை விரும்பாதவர்கள் அவரவர்கள் சுயதேசம் போய் சேர்ந்துவிடுவதே நியாயமாகும்.
அங்ஙனமின்றி ஈட்டிமுனையென்று அறிந்தும் காலாலுதைத்து காயமுண்டாகி சீழ்கொண்டு குத்தலுண்டாய தென்று கூச்சலிடுவதுபோல் ஓர் இராஜாங்கத்தோர் இயற்றியுள்ள சட்டமாகும், பெருவிரல் குறிப்பை பதிவுசெய்யாது பலாத்காரமாய் எதிர்த்து நிற்பது என்னமதியாகும்.
இராஜநீதிக்கு ஒடுங்கி தங்களுக்கு வேண்டிய சுகங்களை அவ்விராஜாங்கத்தோரைக் கொண்டே சீர்திருத்திக் கொள்ளுவது சுகம்பெற வேண்டியவர்களுக்கு அழகாகும்.
ஈட்டியின் முனையை உதைத்ததுபோல் இராஜாங்கத்தை எதிர்த்துள்ளக் குடிகளின் கஷ்டத்திற்காய் காங்கிரஸ் பிரிதிநிதிகள் பரிந்து பேசுவது என்ன கருணையோ விளங்கவில்லை.
கண்ணுக்கெட்டாத நெட்டால் தேசத்தில் கவலைப்படுங் குடிகளுக்காகப் பரிந்து பேசுங் கனவான்கள் தங்கள் கண்களால் காணும் குடிகளின் கஷ்டங்களைப் பரிந்தெடுத்துப் பேசியிருப்பார்களாயின் இவர்களையே கருணைமிகுத்த கனவான்கள் என்று கூறத்தகும்.
அதாவது அறுபதுலட்சத்திற்கு மேற்பட்ட இத்தேசப் பூர்வத் தமிழ்குடிகளை தங்களுக்குத் தாங்களே பிராமணரென்று சொல்லித் திரியும் கூட்டத்தார், பறையர்கள் என்று தாழ்த்தி கிராமங்களில் சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமலும் அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் வெளுக்கவிடாமலும் தடுத்து அவர்கள் எங்கு சீவிக்கப்போனாலும் பலவகைத் தடைகளையும், இடுக்கங்களையும் உண்டுசெய்து பாழாக்கிவரும் பரிதாபத்தைப் பத்திரிகைகளின் மூலமாகவும், கண்களாலும் கண்டுவரும் கனவான்கள் இக்காங்கிரஸ் கூட்டத்தில் அவர்கள் குறைகளை விளக்கி ஈடேற்றினார்களில்லை.
இவ்வேழைக்குடிகளுக்குள்ள கஷ்டங்களைக் கண்ணாரக்கண்டும் கவலைப்படாதவர்கள், காணாத நெட்டால் இந்தியர்களின் மீது கவலைப்படுவது என்ன காருண்யம் என்று அவர்களே தெரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.
இந்தியாவில் நூதனமாகக் குடியேறியுள்ளக் குடிகள் புராதனக் குடிகளைப் பாழ்படுத்துவது பரிதாபமன்று. இராஜாங்க சட்டத்தை மீருகிறவர்களை தண்டிப்பதுமட்டிலும் பரிதாபம் போலும். இப்பரிதாபம் மறக்கருணையோ, அறக்கருணையோ என்பதைக் காங்கிரஸ் பிரதிநிதிகளே கண்டறிந்து இக் கூட்டத்திற்கு நாஷனல் காங்கிரசென்னும் பெயர் தகுமா என்பதை அதன் செயலினால் சீர்திருத்தல் வேண்டும். அதாவது பலசாதியோருக்குள்ள இடுக்கங்களை நீக்கி ஆதரிக்கும் கூட்டத்திற்கே நாஷனல் காங்கிரசென்று கூறலாம். அங்ஙனம் இல்லாதக் கூட்டம் ஒருக்காலும் நாஷனல் காங்கிரஸ் ஆகாது என்பது திண்ணம்.
சிலர் தங்களுக்குத்தாங்களே ஆறுதல் சொல்லிக்கொள்ளுவதும் உண்டு. அதாவது, காங்கிரஸ் கூட்டமானது இராஜாங்க சங்கதிகளைப் பேசக்கூடியது. ஆதலின் அவ்விடத்தில் சாதிசம்பந்த சங்கதிப் பேசலாகாது. உள்சீர்திருத்த சங்கமாகிய மகாஜனசபையில் அவற்றைப் பேசக்கூடும் என்பார்கள்.
உள்சீர்திருத்த சொற்பக் கூட்டத்தோரால் பெருங்குடிகளுக்கு நேரிட்டுவரும் கஷ்ட நிஷ்டூரங்களையும், இழிவையும், நீக்குதற்கியலாது.
இராஜாங்க சீர்திருத்தமே அவற்றை அடக்கி ஆளும். அதாவது, சாதிபேதமற்ற திராவிடர்கள் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் உதவியால் பி.ஏ., எம்.ஏ., முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றும், இராயபாதூர் முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றும், செருசதார், ரிஜிஸ்ட்டரார் முதலிய அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்றும், கனதன வியாபார சங்கங்களைப் பெற்றும் சுகசீவிகளாக வாழ்வார்களாயின் அவர்களைப் பார்க்க சகியாத பொறாமெயுள்ள சாதிபேதமுடையோர் அவர்கள் வீடுகளின் எதிரிலும், ஓர் புறங்களிலும் பிச்சையேற்பதுபோல் பறையன், பறையன் என்ற இழிவானப் பாட்டைப் பாடிக் கொண்டு திரிகிறதும் சிலர் கூத்து மேடைகளில் பறையன் வந்தான், பறைச்சி வந்தாள் என்று இழிவாக நடித்துக் காட்டுகிறதமாகிய அவதூறு, இழிவுகூறல் என்னும் செயல்களை அடக்கியாள்வதற்கு உள் சீர்திருத்த சங்கத்தோரால் இயலுமோ, ஒருக்காலுமாகா. இத்தகையக் காங்கிரஸ் கமிட்டியார்களே முயன்று பெருந்தொகைக் குடிகளுக்கு மற்றோர்களால் நேரிட்டுவரும் இழிவையும், அவதூறுகளையும் இராஜாங்கத்தோருக்கு விளக்கி அவற்றை அடக்கக்கூடிய சட்டங்களை ஏற்படுத்தி சாதிபேதமுள்ளோருக்கும், சாதிபேதமில்லாருக்குமுள்ள விரோத சிந்தைகளை அகற்றி ஒற்றுமெய் உண்டாக்கிக் கொண்ட பின்னர், அக்கூட்டத்திற்கு நாஷனல் காங்கிரசென்னும் பெயரை அளிப்பார்களாயின் பெரும் புகழையும் கீர்த்தியையும் பெருவார்கள். அங்ஙனமின்றி அறுபது லட்ஷத்திற்கு மேற்பட்டக் குடிகளை அர்த்தநாசஞ்செய்து அடியோடு துலைக்கும் வழியைத் தேடிக்கொண்டு நாங்களும் நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தார் என்று கூறுவது நியாயவிரோதமேயாம்.
- 2:30: சனவரி 6, 1909 -