அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/053-383
49. இந்தியர்களுக்குள் எக்சிகூட்டிவ் மெம்பர்
அதாவது இந்தியர்களில் ஒருவரை எக்சிகூட்டிவ் மெம்பரில் சேர்க்க வேண்டும் என்பது கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் அபிப்பிராயம். எக்சிகூட்டிவ் மெம்பர் என்பது யாதெனில் தற்கால கவர்னரவர்கள் ஆலோசினை சங்கத்தில் செக்கண்டகவர்னர், தர்ட்கவர்னர், போர்த் கவர்னர், என வழங்கி வரும் இஸ்தானத்திற்கு உரியவர்களின் பெயராம், எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் இப்பெயரும், இவர்கள் செய்யவேண்டிய செயலும் ஆலோசிக்க வேண்டிய மந்திரங்களும் இவ்விந்து தேசத்தில் வாசஞ் செய்யும் முப்பது பெயர் அல்லது முன்னூறுபெயருக்கு விளங்கக் கூடியதாயிருக்கு மாயின், முப்பது கோடி பெயருக்கு, எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் பெயரும், அவர்கள் செய்யவேண்டிய செயல்களும், அவர்கள் ஆலோசனையின் மந்திரவாதங்களும் இன்னது இனியதென்று விளங்காமலிருப்பதுடன் எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் சொல்லின் சப்தமும் அவர்கள் செவிகளுக்குள் நுழைந்திருக்கமாட்டாது.
இத்தேசத்தோர் செவிகளில் இடைவிடாது நுழைந்து வரும் சங்கதிகள் யாதெனில்.
நீ என்ன சாதி, அவனென்னசாதி நான் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி என்பவைகளேயாம்.
இத்தகைய சாதிபேத சப்தங்களே பெரும்பாலும் நிறைந்துள்ள இந்தியர்கள் ஒருவருக்கு எச்சிகூட்டிவ் மெம்பர் நியமனஞ் செய்வதானால் எந்த சாதியோரை ஏற்கலாகும். பிராமணரென்று சொல்லிக்கொள்ளும் படியானவர்களே பெரிய சாதிகளாகவும் வாசித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களுக்கே கொடுக்கலாம் என்று அவர்களை அடுத்த சாதிபேதம் உள்ளோர் கூறுவதாக வதந்தி,
அவ்வதந்தியை மகமதியர்களும், சாதிபேதமற்ற திராவிடர்களும், சுதேச கிறீஸ்தவர்களும், யூரேஷியர்களும், மற்றுமுள்ள சிற்றரசர்களும் ஒப்புக்கொள்ளப்போகிறதில்லை. பிராமணரென்பவர்களுள் ஒருவருக்கு எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலைக் கொடுப்பதானால் அவ்வகுப்பாருக்குள் தர்ம்மங்கள் எப்படி நடத்துகின்றார்களோ அதுபோலவே தங்கள் கர்ம்மங்களையும் நடாத்த ஆரம்பிப்பார்கள். அதாவது சாதிபேதம் வைத்துள்ள ஓர் மனிதனாயிருப்பினும் அவன் இரண்டு நாள் பசி பட்டிணியாற்றி கைத்து பிராமணரென்போர் வீட்டண்டை வந்து பசியின் குறையைக் கூறுவானாயின் அவனை கடிந்தே துறத்தி விடுவார்கள். அவர்களை ஒத்த பிராமணர்களுக்கே தானஞ்செய்துக் கொள்வது அவர்களுடைய சுவாபம்.
நாளது வரையில் அவர்கள் செய்துவரும் தன்ம கன்மாதிகளில் தங்கடங்கள் சுயசாதிகளுக்கே தர்மஞ்செய்துக் கொள்ளுவார்களன்றி ஏனய சாதியோர்களுக்கும் ஈவதே கிடையாது.
இத்தகைய சுயசாதியபிமான பிராமண வகுப்போரை இராஜாங்க ஆலோசனை சங்கத்தோருள் ஒருவராக சேர்ப்பதானால் சுயசாதியோரபிமானத்தையும் அவர்கள் சுகத்தையுங்கோறுவாரா, அன்றேல் ஏனைய சாதியோரை ஈடேற்ற முயலுவாரா என்பது சொல்லாமலே விளங்கும்.
பெரும்பாலும் எக்சிகூட்டிவ் மெம்பரில் நியமிக்கப்படுவோர் இந்து தேசத்தில் அரசாட்சி செய்து வரும் அரசருக்குள் ஒருவரையே தெரிந்தெடுப்பது பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கு மிக்க கனமாக விளங்கும்.
அவ்வரசனும் சாதிபேதம் சமயபேதங்களை ஒழித்தவராக இருப்பதுமன்றி குடிகளின் கேடுபாடுகளையும் படைகளின் பாகுபாடுகளையும் அமைச்சர்களின் ஆலோசனைகளையும் நன்காராய்ந்து ஏழைக்குடிகளை ஈடேற்றுங் குணமுடையவராயிருத்தல் வேண்டும்.
இத்தகைய பொது நலப்பிரிய அரசரிராவிடின் எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் வார்த்தையை எடுக்காமலே விட்டொழிவது அழகாகும்.
- 2:40; மார்ச் 17, 1909 -