அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/058-383
54. சாதிபேதமற்ற திராவிட மஹாஜன சங்கம்
சாதிபேதமற்ற திராவிட மஹாஜன சபையார் இக்குலத்தோருள் கவர்ன்மெண்டாபீசு உத்தியோகஸ்தர்களிடத்திலும், மற்றுங் கம்பனி இரயில்வே, அவுஸ், ஆபீசு உத்தியோகஸ்தர்களிடத்திலும், கனதன வியாபாரிகளிடத்திலும், காண்டிராக்ட்டர்களிடத்திலும், சொந்த பூமிகள் வைத்துள்ள பட்டாதாரர்களிடத்திலும், அரண்மனை உத்தியோகஸ்தர்களிடத்திலும் ஆக இரண்டாயிரத்தி எழுநூற்றி பதின்மூன்று பெயர்களின் அதிகாரக் கையொப்பம் பெற்று இவ்வெழிய குலத்தோர் அறுபது லட்சக் குடிகளுக்கும் உள்ளக் குறைகளைத் தெள்ளற விளக்கி இவர்களுக்கென்று ஓர் பிரதிநிதியை அருளவேண்டும் என்று கோறி நமது கருணைதங்கிய கவர்னரவர்களுக்கு ஓர் விண்ணப்பம் அனுப்ப, அவரும் நமக்கு அன்பான மாறுத்திரங் கொடுத்துவிட்டு கவர்னர் ஜெனரல் அவர்களுக்கு அனுப்ப, அவர்களும் நமது இந்துதேச சக்கிரவர்த்தியார் அவர்களுக்கும், பார்லிமெண்டாருக்கும் அனுப்பி இக்குலத்தோருக்குள்ள உத்தியோகபீட சாதிபேத இடுக்கங்கள் சிலது நீங்கியுள்ளதுமன்றி இவ்வெழிய குலத்தோருக்காகும் மைனர் நியமனம் ஆறுபெயரிருக்க வேண்டும் என்று ஆக்கியாபித்தும் விட்டார்கள்.
இத்தியாதி சங்கதிகள் சகலரும் அறிய நிறைவேறிவருங்கால் இவைகளை நன்கு விசாரியாமலும், அந்த சங்காதிபர்களை நேரிற்கண்டு தெரிந்து கொள்ளாமலும் வீணே சில அன்பர்கள் கூட்டங்கள் கூடி சத்துருக்களால் வைத்துள்ள இழிவு பெயரை வைத்துக் கொண்டு அதற்கு மஹாஜன சபை என்னும் நாமகரணமிட்டு இராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்புவதாகக் கேழ்வியுற்று மிக்க விசனப்படுகின்றோம்.
காரணம் யாதென்பீரேல், இக்குலத்தோருக்கென்று முன்பே அனுப்பியுள்ள விண்ணப்பம் விசாரிணையில் இருக்குங்கால் இன்னொரு விண்ணப்பம் மற்றொரு கூட்டத்தோர் அனுப்புவதானால் அதனை ஏற்றுக் கொள்ளுவார்களா என்பதை ஊன்றி ஆலோசிக்கவேண்டியது.
ஆதலின் வீணே ஏழைக்குடிகளுக்குள் பிரிவினையை உண்டு படுத்துவதுடன் இராஜாங்கத்தோரும் தங்கள் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பும் வழியைத் தேடிக் கொள்ளாதிருக்க வேண்டுகிறோம்.
சாதிபேதமற்ற திராவிடமஹாஜன சபையோர் அனுப்பியுள்ள விண்ணப்பத்தினால் உண்டாயதும், உண்டாகப்போவதுமாகிய சுகப்பலன்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டியவர்கள்.
1908 வரும் நவம்பர் மீ 4உ நம்மெய் அரசாண்டு வரும் கருணைக்கடல் போன்ற இந்துதேச சக்கிரவர்த்தி என்னும் தலைத்தார்வேந்தனாம் ஏழாவது எர்வர்ட் பிரபு அவர்கள் இந்திய மன்னர்களுக்கும், பிரஜைகளுக்கும் அனுப்பியுள்ள அன்பார்ந்த செய்தியின் எட்டாவது, ஒன்பதாவது வசனங்களை நிதானிப்பதுடன் வாசித்துப் பார்ப்பார்களாயின் தெள்ளற விளங்கும்.
கருணைதங்கிய ராஜாங்கத்தோர் நன்னோக்கங்களையும், அன்னிய சாதியோர் குணாகுணங்களையும் இவ்வெழிய குலத்தோர்க்கு உண்டாயுள்ள இடுக்கண்களையும் நன்காரராய்ந்து செய்வதே உசித்தமாகும்.
அங்ஙனமின்றி வீணேகூட்டங்களியற்றி (ஆறு வரிகள் தெளிவில்லை).
- 2:50: மே 28, 1909 -