அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/059-383

55. திருவாங்கூர் திவான் ம-அ-அ-ஸ்ரீ இராஜகோபாலச்சாரியார் சி.ஐ.இ. அவர்கள் சீர்திருத்தம்

பூர்வத்தில் சோழதேசமென்றும், மலையாளு வாசமென்றும், கொடுந்தமிழ் நாடென்றும் வழங்கப்பெற்ற திருவாங்கூர் தேசத்தில் பௌத்த மடங்கள் நிறைந்து சகல ஏழைகளுக்கும் புசிப்பளித்து பாதுகாக்கும் அன்னசத்திரங்கள் நிறைந்தும் விளங்கிவந்ததாக பெளத்த சரித்திரங்களால் தெரிகின்றது. அத்தகைய அன்னசத்திரங்களில் தற்காலம் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியானவர்கள் சேர்ந்துக் கொண்டு தங்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் புசித்துக் கொண்டு வேறொரு தொழிலுமின்றி சோம்பேரிகளாய்த் திரிவதைக் கண்ணாறக் கண்டதிவானவர்கள் சத்திரங்களில் வட்டிக்கும் அன்னத்தை தூரதேச வழிப்பிரயாணிகளுக்கு அளிக்க வேண்டுமேயன்றி உள்ளூரில் உக்கார்ந்து தின்னும் பிராமணர்களுக்கு சத்திரத்தின் அன்னம் அளிக்கப்படாதென திருவாங்கூர் கெஜட்டில் பிரசுரித்திருப்பதாக 28-5-09 சுதேசமித்திரனில் எம்.எஸ்.ஏ அவர்கள் விடுத்துள்ள கடிதத்தால் தெரிகின்றது. சகலரும் சத்திர சாதத்தைத் தின்று சோம்பேரிகளாகத் திரியாது சுருசுருப்பினின்று உழைத்து பாடுபட்டு முன்னேறுவதற்காய் திவானவர்கள் செய்துள்ள சீர்திருத்தமே மிக்க மேலானதாகும். ஆயினும் சிலர் முறுமுறுப்பார்கள் அதன் சுகம் பின்னால் விளங்கும்.

- 2:51; சூன் 2, 1909 -