அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/083-383

79. திராவிடசபையோரால் நடந்துவருஞ் செயல்களும் அடைந்து வருஞ்சுகங்களும் நீலகிரியில் 1891 வருஷம் சபையோரால் காங்கிரஸ் கம்மிட்டியாருக்கு அநுப்பிய விண்ணப்ப பாயிர சுருக்கம்

கனந்தங்கிய காங்கிரஸ் கமிட்டியாரவர்களுக்கு மிக்கப் பணிதலான வந்தனத்தோடு அறிவிக்கும் விண்ணப்பமாவது:-

மநுமக்கள் தோற்றத்தில் கன்மத்தால் சாதியா, ஜென்மத்தால் சாதியா; அதாவது தொழிலால் சாதியா, பிறவியால் சாதியா என்பதும், திராவிடமெனுந் தமிழ்பாஷை வழங்கிய பெயரும், நான்குசாதிப்பெயருடன் உண்டான விஷயங்களும், பறையரெனும் பெயர் எக்காலத்து அனுஷ்டிக்கப்பட்ட தென்பதும்,

முத்துசாமி ஐயர், முத்துசாமி முதலி, முத்துசாமி நாயுடுவெனத் தங்கள் தங்கள் பெயர்களினீற்றில் இத்தொடர்மொழிகளை எக்காலத்துச் சேர்த்துக் கொண்டனர் என்பதும், ஆசார அனாசார துர்க்கிருத்தியங்கள் யாவரிடத்து நிறைந்துளது என்பதும், வேதம் ஆதியா அனாதியா, யாவர்க்கும் பொதுவாயுளதா, பட்சபாதம் உடையதா என்பதும், பறையரென்னும் பெயர் சகலருக்கும் பொருந்துமென்பதும், சாஸ்திராதார அநுபவ திருஷ்டாந்த தாட்டாந்தங்களுடன் வரைந்துக் கேட்டுக்கொள்ளுவது.

ஓர் யாசகத் தொழிலாளனைப் பத்து பெயர் சேர்ந்து இவன் மெத்த வாசித்தவன், மிகவும் யோக்கியதா பட்சமுடையவன், உயர்ந்த சாதியினன் என்று புகழ்ந்துகொண்டே வருவாராயின் அவன் செய்யும் பிக்ஷைத்தொழில் கேவலமாயிருப்பினும் பத்துப்பெயர் புகழ்ச்சி செய்வதனால் நாளுக்குநாள் அவன் விருத்தியடைந்து முன்னுக்கு வந்துவிடுவான்.

ஆனால் ஆசாரம் நல்லொழுக்கம், கீர்த்தி, கல்வி, கேள்விகளில் சிறந்த ஓர் மனிதனைப் பத்து பெயர் சேர்ந்து அவன் கேவலன், நீசன், அனாசாரமுடையவன், நீசசாதியான் எனத் தாழ்த்திக் கொண்டே வருவாராயின் அவன் தேகங்குன்றி நாணமடைந்து அறிவு மழுங்கி சீர்க்கேடனாய்த் தாழ்ந்து விடுவானேயன்றி முன்னுக்கு வரான். இஃதனுபவப் பிரத்தியட்சமாகையால் காங்கிரஸ் கமிட்டியார் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பெருங் குடிகளின்மீது கருணை பாவித்து கவர்ன்மெண்டாரைத் தாங்கள் கேட்டுவருங் குறைகளுடன் அடியிற் குறித்துள்ள பத்துக்குறைகளையும் விளக்கி ஆதரிக்கக் கோருகிறோம்.

அதாவது,

1. பறையரென்பதில் இழிவாகக் கூறி மனங் குன்றச்செய்வரேல் பழித்தல், அவதூறென்னும் இரண்டுகுற்றங்களுக்கு ஆளாகவேண்டிய தென்றும்,

2. இக்குலத்து ஏழைக்குடிகள் விருத்தியடையும் பொருட்டு கல்விசாலைகள் பிரத்தியேகமாக அமைத்து உபாத்தியாயர்களையும் இக்குலத்தோரில் நியமித்து மாணாக்கரின் சம்பளங்களையும் அரைபாகங் குறைக்கவேண்டியதென்றும்,

3. இக்குலத்தோரில் பிரவேச மெற்றிக்குலேஷன் பரிட்சையில் தேறிய மூன்று பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கவேண்டியதென்றும்.

4. இங்ஙனங் கல்வியில் தேறினோர்களில் ஒவ்வொருவரை இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கவர்ன்மெண்டாபீசுகளிலும் வைக்கவேண்டியதென்றும்,

5. இவர்கள் கல்வி நல்லொழுக்கத்துக்குத் தக்கபடி எவ்வகை உத்தியோகமுந் தடையின்றிக் கொடுக்கவேண்டியதென்றும்,

6. முநிசபில் சங்கத்திலும், கிராம சங்கத்திலும் இக்குலத்தோரின் கஷ்டநிஷ்டூரங்களை அறிந்து பேசுதற்குச் சகல டிஸ்டிரிகட்டுகளிலும் ஜில்லாக்களிலும் ஒருவர் பெருந்தொகையான வரி செலுத்தக்கூடாதவராயினும் கல்வி, நல்லொழுக்கத்தின்படி இவர்கள் யாரை நியமிப்பார்களோ அவரை அக்கிராசனாதிபதி ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டியதென்றும்,

7. ஜேயில் கோட் 464-வது சட்டடத்தில் பறையர்களைச் சகல தாழ்ந்த வேலையும் செய்விக்கலாமென்பதை எடுத்துவிடவேண்டியதென்றும்,

8. இத்தமிழ்நாட்டிலுள்ள சகல குளங்களிலும், கிணறுகளிலும் இவர்கள் தடையின்றி சலம் மொண்டுக்கொள்ள வேண்டியதென்றும்,

9.ஆங்கிலேய துரைமக்களிராது இந்துக்கள் உத்தியோகஞ்செய்யும் ஆபீசுகளிலும், கச்சேரிகளிலும் இக்குலத்தோர் உள்ளுக்கு வரப்போகாது, உட்காரப்போகாது என்று தடுக்குஞ் செய்கையை விடுத்து கஷ்டநிஷ்டூரங்களை உடனுக்குடன் விசாரித்து நீதியளித்தனுப்ப வேண்டியதென்றும்,

10. இவர்கள் வசிக்கும் கிராமங்களில் மணியகாரன், முனிசிப்பாக இக்குலத்தோருள் ஒவ்வொருவரை நியமிப்பதுடன் ஆங்கிலேய கலெக்டர் துரையவர்கள் கிராமங்களுக்கு வருங்கால் நேரில் இவர்களை விசாரித்து நீதியளிக்க வேண்டும் என்னும் பத்தாவது கோரிக்கையும் குறிப்பித்திருந்தோம்.

- 3:14; செப்டம்பர் 15, 1909 -

நீலகிரியில் 1891 வருஷம் நிலைநாட்டிய திராவிட சபையோரால் சென்னை மகாசபைக்கு பிரதிநிதியை அனுப்பி அனுகூலம் பெற்ற விஷயங்கள்

அதாவது,

1892 வருஷம் ஏப்ரல் மீ சென்னையிற்கூடிய மகாஜனசபைக்கு நீலகிரியிலுள்ள திராவிட சபையோர் ஓர் பிரதிநிதியை அனுப்பி இக்குலத்து ஏழைகளுக்கு மேலுமேலுங் கலாசாலைகள் வகுத்து இலவச கல்வி கற்பிப்பதுடன் கிராமங்களிலுள்ள விவசாய ஏழைகளுக்கு பூமிகளுங்கொடுத்து ஆதரிக்கவேண்டுமென்று கேட்டு, மகாஜன சபையாருள் இராஜா சர் சவலை இராமசுவாமி முதலியாரவர்கள் அவற்றை ஏற்கவும், எல்லூர் சங்கரம் ஐயரவர்கள் ஆமோதிக்கவும், திராவிடபிரதிநிதி க. அயோத்திதாஸ் பண்டிதரவர்கள். உதவி ஆமோதகராகவும் விளங்கியதன்பின், சபாநாயகர் ஆனரெபில் பி, அரங்கைய நாயுடுகாரவர்களும், காரியதரிசி எம். வீரராகவாச்சாரியர், பி.ஏ. அவர்களும் சங்கத்தோருக்கு விளக்கி பெருந்தொகையார் சம்மதப்படி, கிராமங்கபோரும் இக்குலத்து சிறுவர்களுக்குக் கலாசாலைகள் ஏற்படுத்தவும், இக்குலத்து விவசாயிகளுக்கு பூமிகள் கொடுத்து ஆதரிக்கவும் வேண்டுமென்று கருணை தங்கிய ராஜாங்கத்தோருக்கு (ரெக்கமெண்டு) செய்தார்கள். அதனைக்கண்ட கருணை வள்ளலர்களாம் கவர்ன்மெண்டார் கிராமமெங்கணும் இக்குலத்து ஏழை சிறுவர்களுக்குக் கலாசாலைகள் நியமிக்கலாமென்று உத்திரவளித்ததுடன் கவர்ன்மெண்டாரும், லோக்கல் பண்டு போர்டாரும், முநிசிபாலிட்டியாரும் அதற்கு உதவிபுரிய வேண்டுமென்று கவர்ன்மெண்டு ஆர்டர் வெளியிட்டதுடன் பூமிகளுங் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென்று உத்திரவளித்துவிட்டார்கள்.

அவ்வுத்திரவின்பேரில் பல கிராமங்களிலும் கலாசாலைகள் ஏற்படுத்தி அனந்தமாயிரம் ஏழைச் சிறுபிள்ளைகள் வாசித்துவருவதுடன் இக்குலத்து விவசாயிகளில் அனந்தம் பட்டாதாரர்களுந் தோன்றினார்கள்.

இஃது எச்சபையோரால் நடந்த சுகமென்பீரேல், திராவிட சபையோரால் நடாத்திய முயற்சியேயாம்.

திருவாங்கூரிலுள்ள இக்குலத்து ஏழைகளிச்சங்கதிகளை பத்திரிகைகள் வாயலாகவும் கேழ்வியாலும் உணர்ந்து தாங்களும் திராவிட ஜனக் கிளைச்சபையோரெனக் கூடி அவ்விடத்திய திவானவர்களுக்கு ஓர் விண்ணப்பமனுப்பி சில தருமகலாசாலைகள் வகுத்து தங்கள் சிறுவர்களை விருத்திசெய்ய வேண்டுமென்று கோரினார்கள். அதனைக் கண்ணுற்றதிவானவர்கள் அடியிற்குறித்துள்ள வினாக்களை வினவினார்.

திருவிதாங் கோட்டிலுள்ள திவான் ஆபீசிலிருந்து மேற்சொன்னபடி நாகர்க்கோவில் ஆதிதிராவிடஜனக்கிளை சபையாருக்கு அனுப்பிக் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு சென்னை ஆதி திராவிடஜன தலைமெய்ச்சபை யோரால் 1892 வருஷம் அக்டோபர் மீ கொடுத்த உத்திரவுகள்

1-வது வினா பறையர்கள் இவர்களுக்கு வக்கணை என்ன, அதன் உற்பத்தியென்ன?

விடை: முதலாவது வினாவில் பறையர்கள் என்னும் பெயர் பூர்வீக திராவிட சாதியோருக்கு வந்த வகை கல்வியற்ற அவிவேகிகளிற் சிலர் தங்கள் விரோதத்தினால் வைத்தப் பெயராகக் காண்கிறதேயன்றி தொழிலைப்பற்றி வந்ததாகக் காணவில்லை. அதாவது (பறை) என்னு மொழிப்பகுதியாகி, தோல் கருவியடித்து விவாகக் குறிப்பு, மரணக்குறிப்பை பறைகிறதும் நாவினாற் சொல்லென்னும் ஏவலைப் பறைகிறதுமாகி சொற்றிரிந்து பறை-பகுதி, அர் - விகுதியினால் வாய்பறை, தோற்பறை பறையுஞ் சகலதேச மனுக்களையும் பறையரென்று சொல்லும்படியான ஆதரவிருக்க திராவிடசாதியோர்களை மட்டும் பறையர்களென்கிற நோக்கங்கொண்டு கேட்டக்கேழ்விகளுக்கு உத்திரவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

வக்கணை என்பதற்கு சினேகமென்னும் பொருளைத்தரும். அதற்கு உற்பத்தி சத்துவநிலையேயாம்.

இதனை வினவியவர் கருத்து ஒவ்வொரு தேசபாஷைக்காரர்களும் தங்கடங்கள் பெயர்களினீற்றில் ஐயர், முதலி, பட்டர், ராவு, சாஸ்திரியென ஒவ்வொரு தொடர்மொழிகளை வைத்திருக்கின்றார்களே அதுபோல் தற்காலம் பறையரென்று வழங்கிவரும்படியானவர்களுக்கு ஏதேனும் தொடர்மொழிகள் உண்டாவென்று கேட்டிருப்பாரானால் இந்துதேசத்தின் ஓர்பாகத்தில் நான்கு சாதியோராய் விளங்கினோர்களில் திராவிடசாதியோராகிய தமிழ்பாஷைக் குடிகளை ஐந்துபாகமாகப் பிரித்து அதில் மலைகளைச் சார்ந்து வசிப்பவர்களுக்கு குறிஞ்சி நிலத்தாரென்றும், கடலைச்சார்ந்து வசிப்பவர்களுக்கு நெய்த நிலத்தாரென்றும், காடுசார்ந்து வசிப்பவர்களுக்கு முல்லை நிலத்தாரென்றும், படுநிலஞ்சார்ந்து வசிப்பவர்களுக்குப் பாலைநிலத்தாரென்றும், நாடுசார்ந்து வசிப்பவர்களுக்கு மருதநிலத்தாரென்றும் வழங்கிவந்தவர்களில் இவர்கள் மருதநில வாசிகளாகையால் தங்கள் பெயர்களினீற்றில் நாயனார், கீரனார், போகனார், புலிப்பாணியார், பாண்டியனார், அகத்தியனார், நத்தத்தனார், என ஒவ்வொருவர் பெயர்களினீற்றிலும் விகுதியாக நிற்குமேயன்றி பகுதியாக நிற்கமாட்டாது. மரியாதையோவென்றால் பெரியோர்களுக்கு தேவரீரென்றும், சிறியோர்களுக்கு சிறந்திரு அல்லது சுகநிதியென்றும் அமைவித்த நிச்சயமாகும். இவர்களுக்குள்ளுந் தற்காலத்தில் சிலர் பிள்ளை, ரெட்டி, பத்தர், ராவு பொன்னுத் தொடர்மொழிகளை சேர்த்துக்கொண்டுவருகின்றார்கள்.

2-வது வினா. சேரி என்பதற்குப் பொருள் என்ன?

- 3:15; செப்டம்பர் 22, 1909 -

விடை : சேரி என்பதற்குப் பொருள் பாடி. அதாவது - பத்து குடிகள் அல்லது அதற்கு மேற்பட்ட குடிகள் சேர்ந்து வாசஞ்செய்யுமிடத்திற்கு சேரி என்னும் பெயரைக் கொடுத்தார்கள். அஃது முல்லைநிலவாசிகளாகிய இடையர்கள் வசிக்கும் இடத்திற்கே இடைச்சேரியென்றும்,

ஆயர்பாடியென்றும் சகலசாஸ்திரங்களும் வழங்கிவந்ததேயன்றி பறைச்சேரியென்று எந்த சாஸ்திரங்களும் முறையிடவில்லை. தற்காலம் பெரியசாதிகளென்போர் வாசஞ் செய்யுமிடம் கூடுவான்சேரி, புதுச்சேரி, தலைச்சேரி முதலியவைகளேயாம்.

3 - வது வினா- இவர்களுடைய மதம் என்ன, அதை சம்மந்தித்த கன்மாதிகள் என்ன.

விடை: இவர்கள் துவிதபாவனையில், இந்திரரை தேவராகப் பூசித்தவர்கள் ஆகையால் இந்திய மதத்தினரானார்கள். இதன் கன்மாதியோவென்றால் மார்கழி, தைமாதங்களில் முன் பனிகால தானியங்களை அறுத்து புதுப்பானைகளில் பொங்கலிட்டு இந்திரனுக்குப் பூசைசெய்து, இக்குலத்தோரில் உள்ளொளி உணர்ந்து செவ்விய தண்மெயில் இருக்கும் அந்தணர்களை முந்தி புசிக்கச்செய்து, யாசகர்களுக்கிட்டு தாங்களும் புசித்து ஆனந்தித்து நிற்பதே இவர்களது கன்மாதியாகும்.

4 - வது வினா:- இவர்களை நடத்திவருகிற ஆசிரியன்மார்கள் யார்.

விடை : இவர்களுடைய ஆசிரியர்களில் ஞானாசிரியர்களென்றும், கன்மாசிரியர்களென்றும் இருவகையுண்டு. அதில் ஞானாசிரியர்களின் விவரம்: இக்குலத்தோர்களில் சிலர் சகலசாஸ்திரங்களையும் உணர்ந்து விவேக முதிர்ந்தபோது ஞானக்கூட்டங்களை ஏற்படுத்தி சகல தத்துவசாஸ்திரங்களையும் அமைத்து தென்காசிமடம், தென்பாண்டிமடம், பூதூர்மடம், கருவூர்மடம், திருப்புளிமடம் என்னும் பெயர்களிட்டு ஞானமார்க்கத்தைப் போதித்து வந்தார்கள்,

இவர்களின் பெயர்கள்:

அருமெயாகிய தவத்தை செய்பவராகையால் அருந்தவரென்றும், மேன்மெய்தங்கிய நிலமெயுடையவராகையால் மாதவரென்றும், உள்ளொளி உணர்ந்தவராகையால் அந்தணரென்றும், அறிவு முதிர்ந்தவராகையால் ஞானிகளென்றும், வேதமோதுவதினால் வேதியொன்றும், தன்னைப் பார்ப்போராகையால் பார்ப்பாரென்றும், சகல தோற்றமும் ஒடுக்கமுடையவர்களாதலால் சித்தர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

கன்மாசிரியர்கள் விவரம்: இக்குலத்தோர்களிற் சிலர் கணிதாதி சோதிடவிஷயங்களை நன்காராய்ந்து அரசர் முதல் வணிகர் வேளாளரென்ற முத்தொழிலாளருக்கும் விவாகபந்த அஷ்ட முகூர்த்தங்களையும் நியமித்து கிரியைகளை நடத்தி வருவதும், மரணசம்மந்தமான தன்மகன்மங்களையுஞ் செய்துவருகின்றார்கள். இவர்களின் பெயர்: ஈகையுடன் சகல தன்மகன்மங்களையும் செய்துவருகிறவர்களாகையால் வள்ளுவரென்றும், வருங்காரியம் போங்காரியங்களை அறிந்து ஓதவல்லவராகையால் சாக்கையரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

- 3:16; செப்டம்பர் 29, 1909 -

5-வது வினா - இவர்களை சம்மந்தித்த சாதிகள் யார்?

விடை : இவர்கள் பூர்வத்தில் ஆந்திரசாதி, மராஷ்டகசாதி, கன்னடசாதி என்ற மூன்று சாதிகளுடன் சம்மந்தித்திருந்தார்கள். தற்காலத்திலோ, சிங்களர், சீனர், பர்மியர், வங்காளர், ஆங்கிலேயர், பிரான்சியர், பார்சியர், ஆரியர்களாகிய சகலசாதிகளிடத்தும் சம்பந்தித்திருக்கின்றார்கள்.

6-வது வினா. - பூர்வத்தொழிலென்ன? தற்காலத் தொழிலென்ன?

விடை : பூர்வத்தில் இவர்கள் அந்தண, அரச, வணிக, வேளாளமென்ற நான்கு தொழில்களையுஞ் சரிவரத் செய்துவந்தார்கள். தற்காலத்தில் மேற்சொன்னபடி தொழில்களை சிலர் செய்துவந்தபோதிலும் பெரும்பாலும் வேளாளத்தொழிலும், ஆங்கிலேயர் அரண்மனைத்தொழிலும், செரஸதார், இஞ்சினியர், சர்ஜன், இனிஸ்பெக்ட்டர், மானேஜர், ரிஜிஸ்ட்ரார், எட்ரயிட்டர் முதலிய ராஜாங்கத் தொழிலுஞ் செய்துவருகின்றார்கள்.

7 - வது வினா. - பூனூல் உண்டா? ஆசிரியன்மாரின் விவரம் என்ன?

விடை: பூனூல் உண்டு. ஆசிரியன்மாரின் விவரம் நான்காவது விடையில் கூறி இருக்கின்றன.

8 - வது வினா. - ஜனன அடியாந்தரங்கள் என்ன?

விடை : பரதகண்ட பஞ்ச பூத அடியந்திரமும், திராவிடம் பரவச் செய்த அகஸ்திய கோத்திரமும், இந்திர பரம்பரையும், பாண்டிய வம்மிஷமுமாம். இதன் கன்மாதியோ நைடதத்திற் கூறியுள்ள செயல்களேயாம்.

9-வது வினா. - கலியாண சம்மந்தமான கன்மாதிகள் என்ன?

விடை : இவர்களின் கலியாண சம்மந்தம் பனிரண்டுமுதல் பதின்மூன்று வயசளவுள்ள மங்கை பருவப்பெண்ணை மணமகனுக்கு உரியோர் கேட்கவும், மணமகளுக்கு உரியோர் சம்மதப்பட்டு கொடுக்கும் பிரசாபத்தய மணமே பூர்வத்திலிருந்து நிறைவேறி தற்காலத்திலும் அனுஷ்டித்து வருகின்றார்கள்.

இதன் கன்மாதியோவென்றால் கன்ம குருக்களாகிய வள்ளுவர்களால் சுபதினம் வைத்து மாதிடையிலிங்க உருவகமாக தங்கத்தினால் ஒரு சின்னஞ்செய்து மஞ்சள் சரடு கோர்த்து பஞ்சகன்னிகைகளால் பந்தற்கால் அமைத்து, ஏழுசால்களை சப்த கன்னிகைகளாகவும், மேல் கும்பத்தை அகத்தியராகவும், கரகசித்திர வருணங்களை இந்திரராகவும், இந்திர ஆவாகன நவதானிய முளைகள் கட்டி, குடவிளக்குடன் அஷ்டமங்கள ஓசையால் ஓம் சப்தாக்கினி வளர்த்தி, கன்மகுருவானவர் தாலியை கரத்திலேந்தி அஷ்டமூர்த்த சாட்சியும் சபைசாட்சியும் இட்டு மணமகன் கரத்தில் கொடுக்க மணநாயகன் மணநாயகியின் கழுத்தில் கட்டிவிடுவதே இதன் கன்மாதியாம். இஸ்திரீயானவள் தன் புருஷனை இடைவிடாது இதயத்தில் வைத்துக்கொண்டிருக்கும் சாட்சிக்காக மார்பின் மத்தியில் தாவிக்கொண்டிருக்கின்றபடியால் (தாலி) என்னும் பெயரைப் பெற்றது.

- 3:17; அக்டோபர் 6, 1909 -

10-வது வினா. மரண சம்மந்தமான நடவடிக்கைகள் என்ன.

விடை : பூர்வத்தில் இவர்களில் யோகசாதனமாம் ஞானசாதனம் உடையோர்களை மட்டும் பூமியில் அரைவீடுகட்டி சமாதிசெய்து விடுவது வழக்கமாம். இதன் கன்மாதிரியோவென்றால் மரணமடைந்தவன் உச்சியிலிருக்குஞ் சோதியானது வெளிப்புறப்பட்டு விட்டபடியால் இறந்தவன் சிரசினருகே ஓர் தீபத்தை ஏற்றிவைத்து, பிறவிபந்தத்திற்கு ஆளானதினால் இருகாலின் பெருவிரலிலும் நிகௗபந்தக் கட்டிட்டு, மனைவியின் பதிவிரதா குணமறிய செந்நெற் பொரி வறுத்து தோஷமின்றி வெளுத்தபோது பத்தாவுக்கு அன்னமிட்ட கையினால் பொரியை ஆவாகனங்செய்து, இல்லறதருமத்தைக் காட்டும்படியான அக்கினியும், அரிசியும், அமுதமும், நீர்க்குடமும் மைந்தன்கையில் கொடுத்து, இடுகாடு வரையிலுங் கொண்டுபோய் பிரேதத்தைக் கொளுத்தி அக்கினியும், அரிசியும், பாலும், நீரும் உன்னைவிட்டு நீங்கவில்லையென்று உடைத்து இல்லுக்குத் திரும்பி சோதியைப்பெற்ற தேகம் போய்விட்டபடியால் தீபசோதியைத் தரிசித்துக் கொண்டு அவரவர்கள் வீட்டிற்குப்போய் சமாதியடைந்தானென்னும் புகழுக்குப் போகாமல் இறந்தானென்னும் இழிவுக்குப் போனபடியால் ஒவ்வொருவரும் இஸ்னானஞ் செய்து எட்டாநாள் மனைவியின் இதயத்தில் புருஷனை மறவாமல் ஊன்றிநிற்க ஓர் அடையாளமாகக் கட்டிவைத்திருந்த, பத்தா இறந்துபோனபடியால் அவனை மறந்துபோகவேணுமென்று கருதி குடும்ப ஸ்திரீகள் கூடி துக்கித்து கழுத்திற் கட்டியிருக்கும் தாலிசரடை அறுத்து நீரில் விடுவது பூர்வமுதல் நாளதுவரையில் நடந்தேறிவரும் மரணசம்மந்த கன்மாதியாம்.

11-வது வினா. எதுவரையில் விவாகம் நடந்தது; ருது சாந்தி கலியாணம், இரண்டாம் கலியாணம் எப்படி நடக்கிறது?

விடை : புருஷர்களுக்கு குமரபருவம் 22-வயதிலும், இஸ்திரீகளுக்கு மங்கைபருவம் 12-வயதிலும் மணஞ்செய்வது வழக்கமாம். மனைவி மரணமடைந்துபோய் இரண்டாவது விவாகம் செய்வதாயினும் விவாக விதிப்படியே செய்துவருகிறார்கள்.

ஒரு விவாகஞ்செய்த மனைவி இருப்பாளாயின் மறுவிவாவாகஞ்செய்வது வழக்கமில்லை. தற்காலம் பலதேசத்தோர் சேர்க்கையினால் ஒரு விவாக மனைவியிருக்க மறுவிவாகமுஞ் செய்துவருகிறார்கள்.

ருது சாந்தி கலியாணமோவென்றால் பெண் மங்கை பருவத்துக்கு வந்தாளென்பதை பந்துக்களுக்குத் தெரிவித்து பெண்ணையலங்கரித்து வாத்தியகோஷமுடன் ஆனந்தங் கொண்டாடினால் சீக்கிரத்தில் விவாகம் முடியுமென்று கோறி ருது பந்து சேர்க்கை நடக்கும் வழக்கமானது பூர்வமுதல் நாளதுவரையில் நடந்தேறிவருகின்றது.

- 3:20; அக்டோபர் 27, 1909 -

12 - வது வினா. பெண்களுடைய விவாக சம்மந்தத்தை தொந்தந்தீர்க்கிற விபரமென்ன, அப்படிப்பட்டவர்களை திரும்ப சேர்த்துவைக்கிற விபரம் என்ன?

விடை: புருஷனும், இஸ்திரீயும் அட்டமூர்த்த முன்னிலையிலும், சபையோர் முன்னிலையிலும் ஒருவரைவிட்டு ஒருவரைப் பிரியோமென சத்தியபூமணஞ் செய்துக்கொண்டவர்களாகையால் விவாகபந்த விலக்கமானது விபசாரதோஷம் புலப்படுமானால் பெரியோர்களைக்கொண்டு ரூபித்து அவளை நீக்கிவிடுவது பூர்வமுதல் நாளதுவரையில் நடந்தேறிவருகிற தொந்தந்தீர்க்கும் வழக்கமாம். திரும்ப சேர்க்கும் வழக்கமானது மனைவியானவள் விபசார தோஷமின்றி ஏதோசில மனத்தாங்கலால் ஒருவருக்கொருவர் நீங்கியிருப்பார்களானால் மணவரையிற் செய்த சத்திய பயமும், பெரியோர்களின் வாக்கும் இவர்களை மறுபடியுஞ் சேர்த்து விடச்செய்கிறது.

13 - வது வினா. சாதாரண விவாகம், புனர் விவாகம் இவைகள் எப்படி நடந்துவருகிறது. அதற்குண்டாயிருக்கும் அநுமதி என்ன, அது நடந்து வருகிறதா?

விடை : சாதாரண விவாகம் ஒன்பதாவது விடையிற் கூறியிருக்கின்றன. பத்தாவானவன் சிறுவயதில் இறந்துவிடுவானாயின் அவனை மறந்துவிடும்படி அவனால் கழுத்திற் கட்டிய ஓர் அடையாளத்தை அறுத்து எடுத்துவிடுகிறபடியால் அவள் மறுவிவாகத்துக்குரியவளாயிருக்கின்றாள். இதற்கு அநுமதி தமயந்தியின் இரண்டாவது சுயம்வர ஆதரவைக்கொண்டு நாளது வரையில் விதவா விவாகமாம் புனர்விவாகம் நடந்தேறிவருகிறது.

14 - வது வினா. ஒவ்வொரு சாதிக்கும் விதம்விதமானப் பெயர்கள் என்ன, அவர்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள்?

விடை : இந்தக் கேள்வியானது இவர்களைக் கேழ்க்கக்கூடியதல்ல, ஆரடா மானியம் விட்டதென்றால் நான்தான் விட்டுக்கொண்டேனென்னும் பழமொழிக்கிணங்க தங்கள் தங்கள் இஷ்டம்போல் ஒவ்வொரு சாதிப் பெயர்களை வைத்துக்கொண்டார்கள். தங்களாற் சொன்னப்பெயர்களை எதிரிகளால் அழைக்கப்பெற்று வருகிறது.

இதன் விவரம் திராவிடசாதியோராகிய தமிழ்பாஷைக்குடிகளில் துற்குணமும், துற்செய்கை உடையவர்களுக்கு சுரசம்பத்தோரென்றும் நற்செய்கையும், நற்குணமுமுடையவர்களுக்கு தெய்வசம்பத்தோரென்றும் பிரித்ததுபோல் மலையாள பாஷையில் துற்குணமும், துற்செயலுமுள்ளவர்களுக்கு தீயரென்றும், நற்குணமும், நற்செய்கையுமுடையவர்களுக்கு நியாயரென்றும் அவரவர்கள் குணத்திற்கும் செயலுக்கும் உள்ள பேதங்கண்டு எழுதிவைத்திருந்த பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதியென்று வழங்கிவருங் காரணமென்னவென்று உய்த்து நோக்குவாரானால் ஒவ்வொரு சாதிகளுக்கும் விதம்விதமானப் பெயர்கள் வந்தவகை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

15 - வது வினா. அவர்கள் தரிக்கிற வஸ்திரங்கள், ஆபரணங்கள் எவை?

விடை: மலைகளைச்சார்ந்த குறிஞ்சிநிலப் பொருள்களும், கடலைச்சார்ந்த நெய்தநிலப் பொருள்களும், காடுசார்ந்த முல்லைநிலப் பொருள்களும், நீரின்றி படும் பாலைநிலப் பொருள்களும், மருத நிலமாகிய நாட்டிற் கொண்டுவந்து

சகலரும் உபயோகிக்க வேண்டியிருக்கின்றபடியால் மருதநிலவாசிகளாகிய இவர்களுக்கு பட்டு, பருத்தி முதலிய ஆடைகளும்; அம்பர், வெள்ளி, நவமணி முதலிய ஆபரணங்களும் பூர்வமுதலணையப்பட்டு தற்காலத்திலும் உபயோகித்து வருகிறார்கள்.

- 3:21; நவம்பர் 3, 1909 -

16 - வது வினா. ஆகாரத்தை சம்மந்தித்த விவரமென்ன? அதை எப்படி புசித்துவருகிறார்கள்?

விடை : மருதநில தானியமாகிய சென்னெல், சிறுபயிறு, வாழை, பலா, மா, முதலிய ஆகாரங்கள் இவர்கள் சூத்திரத்தால் விளைகிறபடியால் பூர்வமுதல் நாளதுவரையில் அறுசுவை உண்டியோடும் புசித்துவருகின்றார்கள்.

17 - வது வினா. மத்தியபானங் குடிக்க அநுமதியுண்டா ? அவைகளை அதிகமாக உபயோகிக்கிறவர்கள் யார்?

விடை : பூர்வத்தில் இவர்கள் வம்மிஷத்தோர்களால் ஏற்படுத்தியுள்ள சகல சாஸ்திரங்களிலும் மதுவைப்பற்றியும், மது விற்போரைப்பற்றியும், அதைப் புசிப்போரைப்பற்றியும் இழிவாகக் கூறியிருக்கின்றபடியால் அவைகளைப் பானஞ்செய்ய அநுமதியில்லை. தற்காலம் இவர்களிற் சிலர் தங்கள் சம்பாதனைக்குத் தக்கதுபோல் புசித்துவந்தபோதிலும் பெரும்பாலும் உபயோகிப்பவர்கள் யாரென்று அறியவேண்டுமானால் ஆப்காரி இனிஸ்பெக்ட்டர் மூலமாகவும், இரட்டேயில் ஷாப் வியாபாரிகள் மூலமாகவும், புட்டி வியாபாரிகளாலும் எளிதாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

18 - வது வினா. பிரதான சாதிகள் எவை? அவைகளின் உட்பிரிவுகள் எவை?

விடை : அந்தந்த தேசத்தில் சாதிக்கும்படியான பார்வைக்காரர்களே அங்கு பிரதான சாதிகளானார்கள். அந்தந்த பாஷையில் வழுவினின்றதே உட்பிரிவாகும்.

19 - வது வினா. மேல் விபரத்தில் உட்படாத ஆசார விளக்கங்கள் என்ன?

1. விடை: தன் பாஷையில் வக்கணையுள்ளத் தொழிற்பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதியென்று ஏற்படுத்திக்கொண்டு சுதேச ஒற்றுமெயைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

2. விடை : சகல சீவசெந்துக்களும் மண்ணாகிய பிரம்மாபேரில் வாசஞ் செய்கிறபடியால் மநுக்கள் வாழும் பதியை இழிவு கூறக்கூடாது.

3. விடை : ஒவ்வொருவரின் சம்மதமே மதமாகையால் எம்மதத்தையும் தூஷிக்கக்கூடாது.

4. விடை : ஓதிவைப்பவனே ஆசானாகையால் தன்னவரன்னியரெனப் புறங்கூறக்கூடாது.

5. விடை : ஒவ்வொருவரையுஞ்சேர்த்துக்கொள்ளுவது பிரியசித்தமாகையால் பிராயசித்தம் உண்டாக்கிக்கொண்ட போது மற்றவர்களை இழிவுகூறக்கூடாது.

6. விடை : சகல தொழில்களும் ஜீவாதாரமாயிருக்கின்றபடியால் எத்தொழிலையும் இழிவுகூறக்கூடாது.

7. விடை : இகத்துக்கும், பரத்துக்கும் உள்ள சகல நன்மெகளும் மனுக்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்டிருக்க, அதில் சிலருக்குண்டு சிலருக்கில்லையென்று புறங்கூறக்கூடாது.

8. விடை : சகலமனிதர்களும் பஞ்ச பூதவடிவ சுக்கில சுரோணிக உற்பத்தியாகையால் நான் பெரிய உற்பத்தியென்று ஒருவனுஞ் சொல்லக் கூடாது.

9. விடை: புருஷனுக்கு வாலைவயதிலும், பெண்களுக்கு பேதை பெதும்பை வயதிலும் விவாகங்செய்யக்கூடாது.

10. விடை : மனுக்களாக அவதரித்தும் மரணத்திற்கு ஆளானால் மறுபிறவி உண்டென்று சகல ஞானசாஸ்திரிகளும் கூறுகிறபடியால் மரணத்திற்கு ஏதுவான விஷயங்களை செய்யக்கூடாது.

11. விடை : பெண்களுக்கு ருதுசாந்தியாகும் மங்கைப்பருவமாகாமல் விவாகஞ் செய்யக்கூடாது.

12. விடை: மணவரையில் சத்தியஞ்செய்து சேர்த்துக்கொண்ட பெண்ணை அவள் சத்தியம் மீறாமலிருக்க நீக்கக்கூடாது.

13. விடை : மங்கை பருவத்தில் விதவையானப் பெண்ணை மறுமணமில்லாமல் வீட்டில்வைக்கப்படாது.

14. விடை: தங்கடங்கட் பெயர்களினீற்றில் ஒவ்வொரு தொடர்மொழிகளை சேர்த்துக்கொண்டு மற்றவர்களை இழிவுகூறக்கூடாது.

15. விடை : ஒவ்வொரு தேசத்து மனிதர்களும் பூர்வத்தில் மிருகத்திற்கு சமானமாகவிருந்து விவேக முதிர்ந்தபோது நாகரீகத்திற்கு வந்தவர்களாயிருக்கின்றபடியால் சிலர்கள் சீலமாயிருக்கலாம் மற்றவர்கள் சீலத்துக்கு வரலாகாதென்று பொறாமெய்க்கொள்ளக் கூடாது.

16. விடை : ஒவ்வொரு தேசங்களில் விளையப்பட்ட பதார்த்தங்களே அத்தேசவாசிகளுக்கு ஆகாரங்களா இருக்கின்றபடியால் மற்றதேசத்தோர் ஆகாரங்களை இழிவுகூறக்கூடாது.

17. விடை: மனிதன் சுயபுத்தியோடுங்கூடி இருக்கின்றகாலத்திலும் தவருதலடைகிறபடியால் அறிவை மயக்கும் மதுபானங்களை புசிக்கக்கூடாது.

18. விடை : சகல தத்துவ சாஸ்திரங்களிலும் இஸ்திரீயின் கருப்பத்தில் கட்டுப்பட்டுப் பிறப்பது இழிவு. பிறந்துந் தன்னை அறியாமல் இறந்துவிடுவது பேரிழிவென்றுங் கூறியிருக்கின்றபடியால் பெண்களின் கருப்பத்திற் கட்டுபட்டு வெளிவந்த ஒவ்வொரு மனிதனும் நான்தான் பிரதமசாதியென்று சொல்லக்கூடாது.

மேற்கூறிய பதினெட்டு வினாக்களுக்கும் உட்படாத ஆசாரவிளக்கங்கள் இவைகளேயாம்.

PUNDIT, C. IYOTHEE THOSS,

A.D.J, SABHA.
MADRAS, NORTH BLACK TOWN, OCTOBER 1892.

- 3:23; நவம்பர் 17, 1909 -

கனந்தங்கிய திருவாங்கூர் திவான் ஆபீசார் கேட்டக்கேள்விகளுக்கு உத்திரவெழுதி அச்சிட்டுப் புத்தகங்களை திருவாங்கூர் திராவிடசபையோருக்கு அனுப்பி அவர்களால் வந்தனையுடன் திவான் ஆபீசோருக்கு அனுப்பியதின்பேரில் அவர்களுங் கண்டு சந்தோஷித்து இவ்வேழை சிறுவர்களுக்குப் போதுமான கலாசாலைகள் வகுத்து இலவசக்கல்வி கற்பிக்கும்படியான தயாள உத்திரவை அளித்தார்கள்.

அவ்விடமுள்ள சிறுவர்களுக்குக் கலாசாலைகள் ஏற்பட்ட பின்னர் சிலகாலஞ்சென்று கனந்தங்கிய ரிஜிஸ்டிரார் ஜெனரல் ஸ்ரீனிவாச ராகவையங்காரவர்கள் (Forty years report) பார்ட்டியியர்ஸ் ரிபோர்ட் என்னும் ஓர் புத்தகம் அச்சிட்டு கவர்ன்மென்டாருக்கு அநுப்பியுள்ளதில் இந்த பறையரென்னும் வகுப்பார் சீர்பெறவேண்டுமானால் ஒன்று துலுக்கர்களாகிவிட வேண்டியது. அல்லது கிறிஸ்தவர்களாகிவிடவேண்டியது என்று தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்ததைக் கண்ணுற்ற திராவிடர்கள் நமது கனந்தங்கிய சீனிவாசையங்காரவர்கள் மக்கான் அருகே பங்கியடித்திருக்குந் துலுக்கர்களையும், புறாவிட்டுத் திரியுந் துலுக்கர்களையும், சேரிகளில் ஓடேந்தித்திரியுங் கிறிஸ்தவர்களையுங் கண்ணுற்றுப்பாராமல் இத்தகைய ரிப்போர்ட்டு அநுப்பியது பிசகென்றும், அவர்கள் நசுங்குண்டுவருங்காரணங் கண்டறிந்து சீர்திருத்த வேண்டுமென்றும், சென்னையில் மத்தியிலுள்ள கிராமமாகும் ஆல்தோட்டத்தில் ஜலவசதியில்லா சுகக்கேடுகளையும், துர்நீர் போக்கில்லாப் பாதை கேடுகளையும், விளக்கியதின்பேரில் சில சுகாதார சீர்திருத்தங்கள் ஏற்பட்டது.

அதன்பின் 1898 வருஷம் ஜூன்மீ கனந்தங்கிய கர்னல் ஆல்காட் துரையவர்கள் அடையாற்றில் ஏற்படுத்தியிருந்த கலாசாலைவிஷயமாக சில

ஆலோசினைச்செய்து இப்போது சென்னை ராஜதானியிலும்), திருவாங்கூர் ராஜதானியிலும் சிறுவர்களுக்கு இலவசக்கல்வி நிறைவேறிவரும் முயற்சிக்கு மூலம் யாரென்று சென்னை மகா ஜனசபையோரை வினவிதெரிந்துகொண்டு அயோத்தி தாஸப்பண்டிதரைத்தருவித்து தனது அடையாற்றிலுள்ள கலாசாலையை எடுத்து நடத்திக்கொள்ளும் சொன்னார். அதற்குப் பண்டிதரவர்கள் தங்கள் கூட்டத்தார் எழியநிலையையும், அவர்கள் பேதத்தையும், பூர்வ சமயப்போக்கையும் விளக்கி அடையாற்றிலுள்ள கலாசாலையுடன் மற்றுஞ் சில கலாசாலைகளை வகுத்து சிறுவர்களை சீர்படுத்தவேண்டுமென்று கேட்டுக் கொண்டதின்பேரில் அமேரிக்காவினின்று கனந்தங்கிய மிஸ், சாரா.இ. பால்மரென்னும் லேடியைத் தருவித்தார். அவ்வம்மை ஆல்காட் தியாசபி சங்கத்தில் வந்திரங்கியவுடன் காரியதரிசியாரால் வாசித்த வாழ்த்துபத்திரம்.

To
Miss. SARAH.E. PALMER, F.T.S.
RESPECTED MADAM,

We come to greet you on your arrival at Madras as a committee of the Dravidian or so called Panchama Community, to contribute to whose highest welfare, you have come. Words fail us to express our gratitude for your self-denial and holy sympathy for our long oppressed and wronged race. We hope that this day will mark a new and bright epoch in our history, and you may feel assured that your name will be mentioned to our children as that of a true friend and a benefactress in ameliorating our miserable condition and reviving our old Buddhistic faith.

PUNDIT C. IYODHI DOSS.
Secretary,
12-12-98
No.7 MOBRAY'S ROAD, Royapettah,
- 3:24: நவம்பர் 24, 1909 -

கனந்தங்கிய எச்.இ. பால்மர் அம்மைக்கு வந்தனோபசார பத்திரம் வாசித்தவுடன் அவ்வம்மனும் மிக்க ஆனந்தமுடன் எழுந்து திராவிட சாக்கைய பௌத்தசங்கத்தோரை நோக்கி சகோதரர்களே நீங்கள் கோரியவிண்ணப்பம் ஏழை, என்னாற் கூடியக் கல்விவிருத்தி செய்துவைப்பேனென்று வாக்களித்தார்கள்.

அவ்வாக்கு பிசகாது பண்டிதரை அழைத்து வேளாளத் தேனாம் பேட்டையிலும், மற்றுமுள்ள இடங்களிலிருக்கும் சாதிபேதமற்ற திராவிடர்களை அழைத்து கலாசாலை அமைக்கும் விஷயங்களை எடுத்தோதும்படிச் செய்து அங்கோர் கலாசாலையும், மயிலாப்பூரில் ஓர் கலாசாலையும், கோடம்பாக்கத்தில் ஓர் கலாசாலையும் நிலைக்கச்செய்தார்கள்.

அம்மூன்று நூதன கலா சாலைகளின் கட்டிடங்களை சொந்தமாகவே கட்டி முடித்ததுமன்றி வாசிக்கும் பிள்ளைகளுக்கு சம்பளமில்லாமற் கற்பிப்பதுடன் நான்காவது வகுப்புப் பிள்ளைகள் வரையில் வாசிக்கக்கூடிய புத்தகங்களும், கடிதங்களும், சிலேட்டுகளும், பென்சல்களும் (கிண்டர்காட்டன்வர்க் கென்னும்) சித்திர வேலைகள் செய்யும் சாபyான்களும் இலவசமா கக்கொடுத்துக் கற்பித்து வந்தார்கள்.

அத்தகைய கற்பனா உபகாரம் போதாது மத்தியானத்தில் பொசிப்பில்லா ஏழை சிறுவர்களுக்கு சிறுதிண்டியாம் புசிப்புமளித்துவருவதுடன் அம்மை பால்மர் துரைசானியிருக்குமளவும் ஏழை சிறு பிள்ளைகளுக்கு வேண்டிய உடைகளுந் தைத்து உடுத்திவந்தார்கள்.

கர்னல் ஆல்காட் துரையவர்களின் கருணையாலும், அவரை அடுத்தோரின் பேருபகாரத்தாலும் கலாசாலை சம்பளமின்றி மேற்கூறிய உபகாரம் பெற்று வாசித்துவரும் பிள்ளைகளின் தொகை 700-க்கு மேலதாகும்.

ஏழை சிறுவர்களின் கலாசாலை விருத்திபெற்றுவருங்கால் பிள்ளைகளின் துற்பாக்கியம் கர்னல் ஆல்காட் துரை இறந்துவிட்டார். அதன்பின் கலாசாலைவிருத்தி ஏதேனும் மாறிப்போமென்றெண்ணிய பண்டிதரவர்கள் தியாசபி சங்கத்திற்குத் தலைவராகத் தோன்றியுள்ள கனந்தங்கிய ஆனிபீசென்டம்மையவர்களுக்கு ஓர் விண்ணப்பமெழுதி நேரிற்போய் கண்டு கலாசாலைகளை கர்னலவர்கள் ஆதரித்து வந்தது போல் தாங்களும் ஆதரிப்பதுடன் கைத்தொழிற்சாலையும் ஒன்றை வகுத்து சிறுவர்களை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

பண்டிதர் கேட்டுக்கொண்ட விண்ணப்பத்தின்படி பிரசிடென்ட் ஆனிபீசென்டம்மனால் கலாசாலைகள் நிறைவேறிவருகின்றது.

கனந்தங்கிய ஆனிபீசென்டம்மை அவர்களுக்கு பண்டிதரவர்கள் விண்ணப்பங்கொடுக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல் கர்னல் இறந்தவுடன் அவரது கலாசாலைகளை முநிசிபாலிட்டியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்னும் வதந்தி வெளிவந்தபடியால் அம்மனுக்கு விண்ணப்பமளிக்கவும், நேரில் கண்டு பேசவும் நேரிட்டு ஆனிபீசன்டம்மனுடைய ஆதரவில் நிலைக்கப்பெற்றிருக்கின்றது.

இத்தியாதி சிறுவர்களின் கல்வி விருத்தியும் திராவிடசங்கத்தோர் முயற்சியேயாம்.

- 3:25; டிசம்பர் 1, 1909 -