அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/084-383

80. தென்னிந்திய விவசாயக்கேடு

விவசாயமென்பது பூமியை உழுது பண்படுத்தி பயிர்செய்து சீவிப்பதேயாம்.

இத்தகைய மேழியாம் விவசாயஞ் செய்வோன் நஞ்சை, புஞ்சை என்னும், இருவகை பூமிகளுள் நஞ்சை பூமிகளை எக்காலத்து உழுது பண்படுத்த வேண்டும் என்றும், புஞ்சை பூமிகளை எக்காலத்து உழுது பயிர்செய்ய வேண்டியதென்றும் அநுபவவாயலாலும் கேழ்வியாலுமுயன்று செய்வதில் உழவுமாடுகள் எத்தனைக்குழி, எத்தனைக்காணி உழக்கூடியதென்றும், உழுது பண்படுத்துவோனாகும் பண்ணையாள் எத்தனை ஏக்கர், எத்தனைக்காணி திருத்துவானென்றும் ஆராய்ந்து உழவின் ஆளுக்கும், உழவின் மாட்டிற்கும் தக்க போஷிப்பைக் கொடுத்து விவசாயத்தை நோக்குவானாயின் பூமியும் பண்பட்டு தானியமும் விருத்தியடைந்து குடித்தனக்காரனும் சுகமுற்று குடிகளும் பசியற்று சுகசீவிகளாக வாழ்வதுடன் அரசாங்கமும் கவலையற்று ஆனந்திக்கும்.

இதுவே விவசாய வேளாளத் தொழிலென்னப்படும். பூமியின் பலனை அடைய வேண்டியவன் தனது உள்ளத்தை அன்பென்னும் நீரைப்பாய்த்து உழுது பண்படுத்தி ஈகையென்னும் விதையை விதைத்து அதன் பலனாம் நற்குணத்தை உழவுமாடுகளின் மீதும், பண்ணையாட்களின்மீதும் ஏழைக் குடிகளின் மீதும் அருளுவனேல் வேளாண்மெ ஓங்கி வேளாளன் என்னும் சிறப்புமடைவான்.

வேளாளனென்னும் பூமிதிருத்தி உண்போன் ஞானிகளாம் அந்தணர்களுக்கும், சம்மாரக் கர்த்தர்களாம் அரசர்களுக்கும், செட்டுச் செய்வோர்களாம் வாணிபர்களுக்கும் உபகாரியாதவின் அவனது உபகாரகுணமும், அன்பின் செயலுமே கொண்டு வானமும் பெய்து பூமியுங் குளிர்ந்து தானியமும் விருத்தி பெருமென்பது இயல்பாம். இத்தகைய அனுபவங்கொண்டே பூமியை உழுதுண்போனை வேளாளனென்று வகுத்திருக்கின்றார்கள்.

அன்பாங் குணமும், ஈகையாம் செயலுமற்று அவன் சின்னசாதி, நான் பெரியசாதி என்று கூறும் வேஷமிட்டுக்கொண்டு தங்களுக்குள்ள சாதிகர்வத்தால் பூமியை உழுது பண்படுத்தும் வேளாளர்களாம் எழியக்குடிகளை தாழ்ந்த சாதி, பறையர்களென்று வகுத்து, மிருகங்களிலும்

கேவலமாக அவர்களை நடத்தி, அரைவயிற்றுக் கஞ்சேனும் அவர்களுக்கு சரிவரக் கொடுக்காமல் க்ஷீணமடையச் செய்துவிட்டு, தங்களையும் தங்கள் குடும்பத்தோரையும் சுகமாகப் பாதுகாத்துக் கொள்ளுவோர்களின் பூமியின்மீது வானம் பெய்யுமோ, அவ்வகை பெய்யினும் சரிவர தானியம் விளையுமோ, விளையினும் வெட்டுக்கிளிக்கும் விழலுக்கு மின்றி தானியம் பெருகுமோ, ஒருக்காலும் பெருகாவாம். காரணம் பூமியானது குடியானவனுக்குப் பலனைத் தருவதுபோல் குடியானவன் பூமிக்கேதேனும் பலனை அளிக்கின்றானோ, மழையானது குடியானவனுக்குப் பலனை அளிப்பதுபோல குடியானவன் மழைக்கேதேனும் பிரிதிபலன் அளிக்கின்றானோ இல்லை.

மழைபெய்யாவிடில் குடியானவன் வானத்தை நோக்குவான், பண்ணையாட்களும் உழவுமாடுகளும் தங்கள் பசியால் குடியானவனை நோக்குவார்கள். இவ்விருவர்நோக்கில் குடியானவன் பண்ணையாட்களின் பசியையும், உழவுமாடுகளின் பசியையும் உணர்ந்து ஜீவகாருண்யமிகுத்து அவைகளின் பசியைத் தவிர்த்து ஆதரிப்பனேல் குடியானவன் வானத்தை நோக்குமுன் மழைபெய்யும். அங்ஙனமின்றி பத்து ஏழைக்குடிகளை இன்னும் நசித்து எலும்புந் தோலுமாக விடுத்து தாங்கள் மட்டிலும் சுகமடைய வேண்டுமென்னுங் குடியானவனுக்கு பூமி விளையுமோ, வானம் பெய்யுமோ, தானியமணிகள் நிலைக்குமோ, ஒருக்காலும் நிலைக்காவாம்.

பூர்வம் இத்தேசமெங்கும் சத்திய தன்மமாம் புத்ததன்மம் பெருகி ஜீவகாருண்யமும், அன்பும் நிலைத்திருந்தபடியால் மாதமும்மாரி பெய்யவும், பூமிகளெங்கும் செழிக்கவும், தானியவிருத்தி பெறவும், அப்பெருக்கத்தால் குடியானவன் தன் சுகத்தைப்பாராது பண்ணை ஆட்களின் மீதும், உழவுமாடுகளின்மீதும், ஏழைக்குடிகளின் மீதும் இதக்கமுற்று காப்பாற்றுஞ் செய்கையால் பூமியை உழுதுண்போர் யாவரும் ஈகையாளராம் வேளாளரென்று அழைக்கப்பெற்றார்கள்.

புத்ததன்மமாம் சத்தியதன்மம் மாறுபட்டு அசத்தியர்கள் செயலும், அசப்பியர்கள் செயலும், துன்மார்க்கர்கள் செயலும், வஞ்சகர்கள் செயலும் மென்மேலும் பெருகிவிட்டபடியால் வானம் பெய்யாது பூமியும் விளைவுகுன்றி தானியமும் அழிந்துபோகின்றது.

சுயப்பிரயோசனத்தை நாடும் சோம்பேரி மதஸ்தர்களும், சோம்பேரி சாமிகளும் அதிகரித்துவிட்டபடியால் பஞ்சமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

பஞ்சமானது மாறாமல் நாளுக்குநாள் விருத்தி பெற்று குடிகளை க்ஷீணமடையச்செய்வது காரணம் யாதென்பீரேல்:-

பத்து கள்ளர்கள் மத்தியில் ஓர் களவற்றோன் அணுகுவானாயின் தங்கள் கள்ளசமயத்திற்கு புற சமயத்தோனென்று விலக்கி விடுகின்றார்கள்.

பத்து கொலைஞர்கள் மத்தியில் ஓர்கொலையற்றோன் அணுகுவானாயின் தங்கள் கொலைசமயத்தோர்க்கு புறசமயத்தோனென்று விலக்கி விடுகின்றார்கள்.

பத்து பொய்யர்கள் மத்தியில் ஓர் பொய்யற்றோன் அணுகுவானாயின் தங்கள் பொய் சமயத்திற்குப் புறச்சமயத்தோனென்று அவனை விலக்கி விடுகின்றார்கள்.

பத்து கள்ளுக்குடியர்கள் மத்தியில் ஓர் குடியாதவன் அணுகுவானாயின் தாங்கள் கள்ளுருந்துஞ் சமயத்திற்குப் புறச்சமயத்தோனென்று அவனை விலக்கி விடுகின்றார்கள்.

பத்து விபச்சாரப்பிரியர்கள் மத்தியில் ஓர் விபச்சாரமற்றோன் அணுகுவானாயின் தங்கள் விபச்சார சமயத்திற்குப் புறச்சமயத்தோனென்று அவனை விலக்கிவிடுகின்றார்கள்.

இவ்வகையாய்ப் பஞ்சபாதகங்கள் மிகுத்து பஞ்சசீலங்கள் பாழடைந்து வருகிறபடியால் பஞ்சமானது மாறாமல் நிற்கின்றது.

எக்காலத்து பஞ்சபாதகங்கள் அகன்று பஞ்சசீலங்கள் பெருகுகின்றதோ அக்காலமே வஞ்சநெஞ்சர்களுங் குறைந்து பஞ்சமும் நீங்குமென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 3:15: செப்டம்பர் 22, 1909 -