அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/087-383

83. ஐரோப்பிய போலீசும் இந்திய போலீசும்

ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த பஞ்சாபி ஒருவன் ஓர் ஐரோப்பியரை சுட்டவிட்டபோது ஐரோப்பிய போலீஸ் உத்தியோகஸ்தர்கள் யாவரும் பஞ்சாபி ஒருவனை மட்டிலும் பிடித்துக்கொண்டு அவனை கைதியாக்கி கொலையின் குற்றத்தை ரூபித்துள்ளார்களன்றி அவனருகிலிருந்தவர்களையும், அவனது நேயர்களையும் பிடித்து உபத்திரவஞ்செய்தது கிடையாது.

நமது இந்து தேசத்திலுள்ள இந்திய போலீசு உத்தியோகஸ்தர்களோ என்றால் கொலைச்செய்தவன், கொலைச்செய்தவனுக்கு அருகினின்றவன், அருகினின்றவனை அடுத்துப்பார்த்தவன், அடுத்துப்பார்த்தவனை முடுத்துப்பார்த்தவன் யாவரையும் சேர்த்துக்கொண்டுபோய் கைதியாக்கி விசாரிணை நிறைவேறுங்கால் கொலைசெய்தவனின்னான் கொலைக்கு உதவியானோனின்னான் கொலைச்செய்யாதவன் இன்னானென்று ரூபிக்கப் பாங்கில்லாது கொலைச்செய்தவனே தப்பித்துக்கொள்ளுகின்றான்.

அவ்வகை தப்பித்துக் கொள்ளுவதினால் “அப்பியாசங் கூசாவித்தை” என்பது போல் மற்றும் கொலைக்குற்றங்களை மிக்க உச்சாகத்துடன் செய்யப் பார்க்கின்றார்கள்.

ஆதலின் இந்திய போலீசார் ஐரோப்பிய போலீசு உத்தியோகஸ்தர்களைப் போல் கொலைக் குற்றவாளியை மட்டிலும் நன்றாய் கண்டுபிடித்து குற்றத்தை ரூபித்து வருவார்களாயின் குற்றவாளி தெண்டனைக்கு உள்ளாவதுமன்றி போலீசாருக்கும் தக்கக் கீர்த்தியுண்டாகும்.

அங்ஙனமின்றி ஒரு குற்றவாளிக்குப் பத்துப் பனிரண்டு பெயரை சேர்த்துக் குற்றவாளிகளாக்குவதால் யதார்த்தக் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளுவதுடன் யாது குற்றங்களும் அறியாதவர்களுக்கு வீண்சிலவுகள் நேரிட்டு இந்தியப் போலீசு உத்தியோகஸ்தர்களுக்கும் நற்பெயர் கிடைக்காமற்போய்விடுகின்றது,

நற்பெயரும், கீர்த்தியும் பெறவேண்டிய போலீசு உத்தியோகஸ்தர்கள் ஐரோப்பிய போலீசு உத்தியோகஸ்தர்களின் நோக்கங்களையும், செயல்களையும் நன்குணர்ந்து தங்கள் உத்தியோகங்களை நடத்துவார்களாயின் இந்திய போலீசார் தங்கள் தேசத்தோரால் கொண்டாட்டப்படுவதுடன் உலகெங்குங் கொண்டாடப்படுவார்கள்.

- 3:18; அக்டோபர் 13, 1909 -