அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/090-383

86. சௌத்தாபிரிக்காவிலும் சுதந்திரம் வேண்டுமாம்

இந்தியாவிலிருந்து சௌத்தாபிரிக்காவுக்குக் குடியேறியுள்ளவர்களுக்கு சமரசவாட்சி கேழ்பவர்கள் இந்தியப் பூர்வக்குடிகளாகிய திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அடியோடு தாழ்த்தி அலக்கழிக்கலாமோ. அன்னியதேசத்திற் சென்றிருக்குங் குடிகளுக்காக அதிகப் பிரயாசைப்படுகிறவர்கள் சுதேசத்திற் கஷ்டப்படும் பெருந்தொகைக் குடிகளுக்கு சமரச சுகம், சமரச வாட்சி, சமரச சேர்க்கை ஏன் கொடுக்கலாகாது. அன்னியதேசவாசிகளாகிய செளத்தாபிரிக்கரிடம் இந்தியாவிலிருந்து குடியேறியுள்ளவர்களுக்கு சமரச சுகங் கேட்கும் நீதிமான்கள் இந்தியாவிலுள்ள ஏழைக்குடிகளுக்கும் சமரச சுகத்தை அளிக்க வேண்டுமென்னும் முயற்சியை ஏனெடுக்கப்படாது.

இந்தியாவிலுள்ள ஏழைக் குடிகளின் கஷ்டநிஷ்டூரங்களை கவனியாது, சௌத்தாபிரிக்காவுக்கு குடியேறியுள்ள இந்தியர்க்கு சமரச சுகங் கேட்பது என்ன விந்தையோ விளங்கவில்லை. அன்னியதேசத்திற் குடியேறியுள்ளவர்களுக்கு மட்டிலும் சமரசசுகம் வேண்டும் சுதேச ஏழைக்குடிகள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கவேண்டும்போலும்.

அந்தோ, இத்தகையக் கொடூரச் சிந்தையங் காருண்யமற்றச் செயலுமுள்ளார் நீதிமக்களாமோ. இத்தேச சுதேசிகளும் பூர்வக் குடிகளுமானோர்களை அன்னியதேசங்களிலிருந்து இவ்விடம்வந்து குடியேறியுள்ளவர்கள் சுத்தசலம் மொண்டுகுடிக்கவிடாமலும், அம்பட்டர்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், கிராமபாதைகளில் நடக்கவிடாமலும், பொதுவாயுள்ள கலாசாலைகளில் வாசிக்கவிடாமலும், பொதுவாகியக் கைத்தொழிற்சாலைகளிற் சேரவிடாமலும், கருணைதங்கிய ராஜாங்க உத்தியோகங்களில் நுழையவிடாமலும், மிருகங்களிலுத்தாழ்ச்சியாய் நடாத்திவருகின்றார்கள். அதன் மூலகாரணமோ வெனில் தங்கள் பொய்மதங்களைப் பரவச் செய்து புத்த தன்மத்தை அழிப்பதற்காக பூர்வக்குடிகள் யாவரையும் சாதிபேதமென்னும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்திக்கொண்டு நீதியில்லாமல் நசித்து வருகின்றார்கள்.

இந்துதேசத்திலுள்ள சகலகுடிகளும் இதனையறிந்தும் இருக்கின்றார்கள். ஏழைக்குடிகளின் கஷ்டநஷ்டங்களை ஸ்பஷ்டமாகத் தெரிந்தும் அவர்கள்மீது பரிதாபஞ்கொள்ளாது செளத்தாபிரிக்காவுக்குச் சென்றுள்ள இந்தியர்களின் மீதுமட்டிலும் பரிந்துநிற்பது விந்தையென்றே கூறல்வேண்டும். அன்னிய தேசத்தோரிடம் சுதந்திரம் கேட்கப் பாடுபடுகிறவர்கள் சுதேசக் குடிகளுக்கு வேண்டிய சுகங்களை ஏன் கருதலாகாது. சாதிபேதம் வைத்துள்ள இத்தேசக்குடிகள் சாதிபேதமின்றி வாழ்ந்திருந்தப் பூர்வக் குடிகளை நாயினுங் கடையினராக நடாத்திவருகின்றார்களே. பெரியசாதி சென்று பெயர் வைத்துள்ளார்களில் குஷ்டரோகிகளாயினும், வைசூரிகண்டவர்களாயினும் அவர்களது பொதுவாகிய குளங்களில் குளிக்கலாம் நீரருந்தலாம். ஓர் சொரிபிடித்த நாயேனும் அவர்களது பொதுவாகிய குளத்தில் நீரருந்தலாம் பூர்வ ஏழைக்குடிகளையோ அந்நீரையும் அருந்தலாகாதென்று துரத்துகின்றார்கள்.

இத்தகைய நியாயதிபதிகள் ஒன்றுகூடிக்கொண்டுசெளத்தாபிரிக்கா விற்குச் சென்றுள்ள இந்தியக் குடிகளுக்காய் பாடுபடுகின்றார்களாம். ஆ! ஆ! சுதேசக்குடிகளை சுத்தசலம் மொண்டு குடிக்கவிடாமல் துரத்திவிட்டு புறதேச வாசிகளுக்குப் பாடுபடுகிறோமென்பது பழிக்கிடமேயாம்.

- 3:20; அக்டோபர் 27, 1909 -