அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/152-383
148. ஆரியசமாஜமும் டிப்பிரஸ் கிளாசும்
தற்காலம் வங்காளத்தில் ஏற்படுத்தியுள்ள ஆரியசமாஜத்தில் டிப்பிரஸ்கிளாசென்போர் ஆயிரம்பேர்வரையிற் சேர்ந்து விட்டதாகவும், இந்துக்களென்போருடன் சமரசமாக வீற்றிருக்கின்றார்களென்றும், அது முக்கியமான ஆனந்தச் செயலென்றும் சில பத்திராதிபர்கள் வரைந்துள்ளதைக் கண்டு மிக்க வியப்புற்றோம்.
அதாவது வங்காள நாடாகும் வட இந்தியாவில் சாதிபேதமுள்ளப் பொறாமெகுணத்தோர் விசேஷம் இல்லையென்பது சகலருக்கு தெரிந்த விஷயம். சிலருக்குள் அவ்விடம் சாதி வித்தியாசம் இருந்திருந்த போதிலும் சிட்டகாங்கிலுள்ள ஏழைக்குடிகள் யாவரும் ஒரேகட்டாகச் சேர்ந்து புத்ததர்மத்தை அநுசரித்துக்கொண்டு கல்வியிலுங் கைத்தொழிலிலும் மிகுத்து விட்டபடியால் சாதியில் உயர்ந்தவர்கள் என்பவர்கள் யாவரும் தங்களுக்குத் தாங்களே சாதிபேதமுள்ளோர் யாவரும் சுதேசியமென்னுங் கூட்டங்கள் கூடியதின்பேரில் சாதிபேதமில்லாதவர்கள் யாவரும் அவர்களைச் சேராது விலகி நின்றுவிட்டார்கள். அதை உணர்ந்த சிலர் தாங்கள் நூதனமாக ஏற்படுத்தியுள்ள ஆரிய சமாஜத்தில் டிப்பிரஸ்கிளாசென்னும் சாதிபேதமில்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டால் சுதேசியம் வலுவுபெறுமென்னும் நோக்கத்தினால் டிப்பிரஸ் கிளாசைச் சேர்த்துக்கொள்ளுகிறார்களன்றி அவர்களை ஈடேற்றி முன்னுக்குக் கொண்டுவருவார்கள் என்பது கனவிலும் நினைக்கக்கூடியதன்று.
காரணமோவென்னில், சாதிமூட்டைகளையும் சமயமூட்டைகளையும் விசேஷமாகக் கட்டிவைத்துக்கொண்டு சண்டை செய்பவர்கள் தற்காலம் சாதியும் விட்டோம் சமயமும் விட்டோமென்பாராயின் அச்சங்கத்தின் பெயர் பொது சீர்திருத்தப்பேராயிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றி ஆரியசமாஜமென எப்போது தோன்றியதோ அஃதை காரியசமாஜமென்றே கூறல் வேண்டும். இவர்களே வித்தியாவிருத்தியும், வியாபாரவிருத்தியுங்கெட்டிருக்கும்போது டிப்பிரஸ் கிளாசென்போரை என்ன விருத்திச் செய்யப் போகின்றார்கள். டிப்பிரஸ் கிளாசின் மீது இதுவரையிலுமில்லா பரிதாபம் இப்போது எங்கிருந்து தோன்றியது. தங்கள் சுயசாதியோருக்கே பிச்சைக் கொடுக்க வேண்டும் என்னும் பிடிவாதமுள்ளவர்களுக்கு டிப்பிரஸ்கிளாசுக்கு ஏதேனும் ஈய்ந்து காப்பாற்றுங் குணம் எழுமோ. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வித்தையும் விவசாயமும் அற்றவர்கள் டிப்பிரஸ்கிளாசைக் காப்பர்களோ ஒருக்காலுங் கார்க்கப்போகிறதில்லை.
யதார்த்தத்தில் டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்துவதாயின் சாதி ஆசாரத்தையும், சமய ஆசாரத்தையுமே சீவனாதாரமாகக் கொண்டு சீவிக்கும் தென்னிந்தியர்கள் யாவரையும் ஆரிய சமாஜத்தோராக்கிவிடுவார்களாயின் அன்றே வட இந்தியம் சீர்பட்டுப்போம். சாதிபேதம் வைத்துள்ளோர்களாகிய தங்களுக்குள் இருக்கும் பிரம சமாஜத்தோர்களையும், வேதாந்த சமாஜத்தோர்களையும், சைவ சமாஜத்தோர்களையும், வைணவ சமாஜத்தோர்களையும் தங்கள் ஆரிய சமாஜத்துள்சேர்த்து சீர்திருத்திக்கொள்ளாது டிப்பிரஸ்கிளாசை மட்டிலும் சேர்த்துக்கொள்ளுவதென்றால் யாது பயன். ஆரிய சமாஜமென்பதே ஆதாரமற்றதாயிருக்க டிப்பிரஸ்கிளாசுக்குமட்டிலும் என்ன அதாரஞ் செய்துவிடப்போகின்றார்கள். உள்ளதுங்கெட்டு அந்தரத்தில் அள்ளாட வேண்டியதேயாம். டிப்பிரஸ்கிளா சென்பவர்களோ சாதி பேதமற்றவர்கள். அவர்களையொத்த சாதிபேதமற்றக் கிறீஸ்துவசமாஜத்தை சேருவார்களாயின் பிரோட்டிஸ்டான்ட் பாதிரிகள் கருணையால் கல்வியுங் கைத்தொழிலுங் கற்று சீர்பெறுவார்கள். தங்களைப்போல் சாதிபேதமற்ற மகமதியர்களைச் சேருவார்களாயின் தற்காலம் அவர்கள் சீர்திருத்திவரும் செய்கைகளில் கிஞ்சித்து சீர்பெறுவார்கள். தங்களைப்போல் சதா சாதிபேதமற்ற பௌத்த சமாஜத்தைச் சேருவார்களாயின் களங்கமற்ற சிந்தை உடையவர்களாய் நன்முயற்சி, நல்லூக்கம், நற் கடைபிடியினின்று வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் பெருகி சுகச்சீர்பெற்று சகல சம்பத்தும் அநுபவிப்பார்களென்பது சத்தியம்.
இத்தகைய மூன்று சங்கங்களில் ஒன்றைச்சாரது ஆளுமற்று ஆதாரமுமற்ற ஆரியசமாஜத்திற் சேருவார்களாயின் தற்கால பிரிட்டிஷ் ஆட்சியில் சற்று சீர்பெற்றுவரும் சுகமுங்கெட்டு சுயவாட்சியிற் பிழைக்கும் சுவாதீனமுங் கெட்டு அவர்களால் சீர்கெடச் செய்திருப்போர்களை பொய்யாக அடிமைகளென்று கூறிவரும் வாக்கியத்தை மெய்யாகவே அடிமைகளென்று சொல்லும் அநுபவத்திற் கொண்டு வந்துவிடுவார்கள்.
- 4:9: ஆகஸ்டு 10, 1910 -