அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/153-383

149. தங்களுக்குத்தாங்களே பிராமணரென சொல்லிக்கொள்ளுவோர் காப்பி ஓட்டல்களைக் கவனித்துப் பாருங்கள்

சுதேசிகளெனக் கூட்டமிட்டு சுதேசிகளை ஒற்றுமெக்குஞ் சீருக்குங் கொண்டு வரப்போகின்றோம் என்போரும் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரும் பிராமணரென்போர் வைத்துள்ளக் காப்பி ஓட்டல்களைக் கவனித்தார்கள் இல்லை போலும். யாவராயிருப்பினும் துட்டுகொடுத்தாலே காப்பிக் கொடுப்பார்களன்றி துட்டு கொடாமல் காப்பி கொடுக்கமாட்டார்கள். அவ்வகை துட்டு கொடுத்து தங்கள் தாகத்திற்குக் காப்பி கேட்கும், கிறிஸ்தவர்கள் பஞ்சமர்கள், மகமதியர்கள் இம்மூவகுப்பாருக்கும் அவ்விடத்தில் உள்ளே வரக்கூடாதென்று தங்கள் ஓட்டல் முகப்பில் பலகையில் எழுதித் தொங்க வைத்திருக்கின்றார்கள்.

மேற் குறித்துள்ள மூன்று வகுப்பாரும் காப்பி செய்வதிலும், காப்பி குடிப்பதிலும் மிக்க அநுபோகசாலிகள், தற்காலங் காப்பி வோட்டல் வைத்திருப்பார்களோ, தயிர் மோரில் தண்ணீர் கலப்பதற்கும் உப்பிடுவதற்கும் அநுபோகஸ்தர்களன்றி காப்பி செய்வதில் இவர்களுக்கு அத்தகைய அநுபோகங் கிடையாது. இக்காப்பி என்னும் நீருக்கு உரியவர்கள் ஆங்கிலேய துரைமக்களே. அவர்களிடங் காப்பி பானஞ் செய்து அநுபோகப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களும் பஞ்சமரென்பவர்களுமேயாகும். இத்தகையோரைத் தங்கள் ஓட்டலுக்கு வந்து காப்பி சாப்பிடுங்கோளென்று சொல்லி வருந்தினாலும் வரமாட்டார்கள். காரணம் காப்பிபானஞ் செய்யும் அநுபவம் இவர்களுக்குத் தெரியமாட்டாது என்பதேயாம். மேற்குறித்துள்ள மூவர்களும் அவர்களுடைய ஓட்டலுக்குப் போகவேண்டிய அவசியமுமில்லை, போகவுமாட்டார்கள்.

இஃதநுபவமாயிருக்க அம்மூவரையுஞ் சுட்டி தங்கள் காப்பி ஓட்டலுக்கு வரப்போகாதென்று பலகையில் எழுதிவைத்திருப்பதை ஆலோசிக்குங்கால் அவர்களுக்குள்ள பொறாமெ குணமும், அன்பற்றச் செயலும், காருண்யமில்லாமெயும், உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்துக் கொள்ளலாம். துட்டு பெற்றுக்கொண்டு காப்பி கொடுப்பதற்கில்லா கருணையற்ற போர்ட் போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு கிஞ்சித்து சுயராட்சியங் கொடுத்து விட்டால் ஊருக்குள் வைத்திருக்கும் குழாய் நீரையும் மொண்டு குடிக்கவிடாமல் ஒவ்வொரு குழாய்களின் அருகிலும் மேற்படி மூன்று வகுப்பார்களையும் வரப்படாதென்றே பலகைகள் அடித்துவிடுவார்கள்.

தற்போது கிறீஸ்தவர்கள், பஞ்சமர்கள், மகமதியர்களென்றுக் குறிப்பிட்டு காப்பி வோட்டல் பலகைகளில் எழுதிவைத்துள்ளவைகள் சாதிசம்மந்தச் செயலாயின் மற்றயக் குறவர், வில்லியர், சக்கிலியர், தோட்டிகளென்னும் நான்கு வகுப்போரும் வரலாமோ, வரக்கூடாதோ விளங்கவில்லை. அவர்களும் வரக்கூடாதாயின் அந்நான்கு வகுப்புப் பெயர்களையும் பலகைகளில் எழுதிவைத்திருத்தல் வேண்டும். அங்ஙனமிராது முற்கூறிய மூவர்களை மட்டிலும் குறிப்பிட்டு வரைந்துள்ளபடியால் யாம் கூறிவரும் பூர்வ விரோதம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளற விளங்குவதாகும்.

பத்தாயிரம் இருபதினாயிரம் ரூபாய் செலவிட்டுக் கட்டிடங்கள் கட்டி இங்கிலீஷ் ஓட்டல்களென்றும் ரயில்வே ரிப்ரெஷ்மெண்ட்ரூம்களென்றும் வகுத்திருக்கும் இடங்களில் கிறீஸ்தவர், பஞ்சமர், என்றழைக்கும் படியான வகுப்பார்களே சுயம்பாகிகளாக இருந்து பல பதார்த்தங்களையும் வட்டித்து வைத்துக்கொண்டிருக்க, அவர்களிடம் பிராமணர்களென்று சொல்லிக் கொள்ளுவோர் முதல் சகலசாதியோரும் யாதொரு களங்கமுமின்றி ஆனந்தமாகப் புசித்து வருவது அநுபவக்காட்சியாயிருக்க, நாளொன்றுக்கு நாலணா ஐந்தணா காப்பி விற்கும் கடைவீதி ஓட்டல்களில் மட்டும் கிறீஸ்தவர்கள், பஞ்சமர்கள் வரக்கூடாதென்றுப் பலகையடித்திருப்பது விரோதச் சிந்தையேயாம். கடைவீதிகளில் காப்பி ஓட்டல்கள் வைத்திருப்பவர்களே கலங்காதீர்கள், கலங்காதீர்கள். பெருத்த ஓட்டல்களிலும், பெருத்த ரிப்ரெஷ்மென்டு ரூம்களிலும் பதார்த்தங்களை பாகஞ்செய்து வைத்துக்கொண்டு நன்கு வாசித்த பிராமணர்களுக்கும் நன்கு வாசித்த மற்ற சாதியோர்களுக்கும் அறுசுவை பதார்த்தங்களையும் முச்சுவைக் காப்பிகளையும் ஈய்ந்து வருகின்றவர்களாகியக் கிறிஸ்தவர்களும், பஞ்சமர்களென்போரும் மறந்தும் உங்கள் காப்பிவோட்டல்களுக்கு வரமாட்டார்கள். அவர்கள் கையினால் செய்யுங் காப்பி பானங்களுக்கும் தங்கள் கையினாற்செய்யுங் காப்பி பானங்களுக்கும் உள்ள பேதம் அதன் மணத்தினாலேயே கண்டுக்கொள்ளும் அநுபவம் அவர்களுக்குண்டு.

- 4:10; ஆகஸ்டு 17, 1910 -