அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/177-383
173. இந்துக்களினது மதம் சாதிக்கு சம்மந்த மில்லையாமே
ஈதோர் சமயப்புறட்டுபோலும். இந்துக்களது பிரம்மாவே சாதிகளை உண்டுசெய்துள்ளாரென்று மநுசாஸ்திரத்தில் எழுதிவைத்துக்கொண்டுள்ளது போதாது, கிருஷ்ணனும், சங்கராச்சாரியும், சாதியிருத்தல் வேண்டுமென்று அதற்காய சாதனங்களை வரைந்துமிருக்க, இந்துக்களது மதம் சாதிசம்மந்தத்திற்குட்படாததென்று சில பத்திரிகைகள் கொக்கரிப்பது தங்கள் சாஸ்திரங்களைத் தாங்களே உணரா படாடம்பம்போலும். இந்துக்களது மதத்திற்கு சாதி ஆதாரமும், அவர்களது சாதிக்கு மதம் ஆதாரமுமாய் இருப்பது உலகப் பிரசித்தமாயிருக்க, ஓர்பிடிசாதத்தால் முழுபூசுணைக்காயை மறைப்பதுபோல் இந்துக்களது மதத்திற்கு இந்து சாதி சம்மந்தமில்லையென்பது விந்தை மொழியேயாம்.
இந்து மதத்திற்கும் சாதிக்கும் சம்மந்தமில்லை என்பதாயின் பிராமணனென்று சொல்லிக்கொள்ளும் ஓர் சாதியான் தான் தொழூஉம் விஷ்ணு என்னும் சுவாமியை விட்டு கிறிஸ்து என்னும் சுவாமியைத் தொழுவானாயின் அவனை சாதியிற் புறம்பாக்கிவிடுவானேன். ஓர் பிராமணத்தி என்பவள் அன்னிய சாதியோனுடன் கலந்திருந்துவந்த போதினும் சேர்த்துக் கொள்ளுகின்றார்கள். அதேபிராமணத்தி வேறுமதம் சாருவாளாயின் அவளை சாதிக்கட்டுகட்டி புறம்பாக நீக்கிவிடுகின்றார்கள். சாதியாசாரத்திற்கு உட்பட்டவர்கள் தவிர ஏனைய சாதியோர்களை தங்கட் கோவில்களுக்குள் போகவிடாமல் தடுக்கின்றார்கள்.
இத்தகையச் செயல்களால் இந்துக்களது மதமே சாதிகளுக்கு ஆதாரமாய் இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகையில் இந்துக்களது மதம் சாதிகளுக்கு சம்மந்தமில்லையென்று கூறுவது சமயபுறட்டே என்று துணிந்து கூறியுள்ளோம்.
சென்ஸ்சும் டிப்பிரஸ் கிளாசும் என்று கூறியுள்ளவர்கள் தங்களுக்குள் பேதாபேதம் இராவிடின் சென்ஸசும், இந்துக்களுமென்று ஏன் கூறப்படாது. அங்ஙனங் கூறி தங்களது நியாயத்தை ஏன் நிலைப்படுத்தப்படாது. டிப்பிரஸ் கிளாசென்றே சாதி சம்மந்தத்தால் அப்புறப்படுத்திக் கூறிவருகின்றவர்கள் சகலரையும் இந்துக்களென்றுகூறவும் பொருந்துமோ. பிராமணர்களிலும் டிப்பிரஸ் கிளாசுகளிருக்கின்றது. க்ஷத்திரியர்களிலும் டிப்பிரஸ் கிளாசுகளிருக்கின்றது. வைசியர்களிலும் டிப்பிரஸ் கிளாசுகளிருக்கின்றது. அத்தகைய டிப்பிரஸ் கிளாசோர் யாவரையுஞ் சேர்க்காது தங்களால் தாழ்த்தி நசுங்குறச் செய்துள்ள ஆறுகோடி மக்களை மட்டிலும் டிப்பிரஸ்கிளாசென்று புறம்பாகக்கூறி இன்னுந் தாழ்த்திவருவது இதயசாட்சியாய் இருக்க சகல மக்களையும் இந்துக்களேயென்று கூறப்போமோ. சகலமக்களையும் இந்துக்களேயென்று அவரவர்கள் மனப்பூர்த்தியாகக் கூறுவதாயின் டிப்பிரஸ் கிளாசென்னும் ஓர்வகுப்புத் தோன்றுமோ.
இத்தகையப் பிரிவினைகள் யாவையும் தாங்களே பிரித்து, தாங்களே வரைந்து, தாங்களே மொழிந்துவருவது அநுபவக் காட்சியாயிருந்தும் சகலரையும் இந்துக்களாக பாவிக்கின்றோமேயன்றி வேறில்லை என்று கூறி சென்சஸ் கமிஷனவர்களின் நன்னோக்கத்தை மாறுபடச்செய்வது ஏழைகளின் ஈடேற்றத்தைக் கேடுபடச்செய்வதேயாம்.
பூர்வ பௌத்ததன்மத்தைச்சார்ந்த ஏழைமக்களை காலமெல்லாங் கேடுபடச்செய்து கவலைபெற வைத்தவர்கள் இன்னுஞ் செய்வதாயின் ஈடேற்றமடைவரோ.
உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று உற்சாகமிட்டுவந்த செயல்களையும், தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென நசித்துவந்த செயல்களையும் நாளுக்குநாள் கண்ணுற்றுவந்த பிரிட்டிஷ் ஆட்சியார் இன்னும் சகிப்பார்களோ, சாதி சம்மந்தத்திலும், மதசம்மந்தத்திலும் பிரவேசிப்பதில்லையென்று கூறியிருப்பினும் தனதாட்சிக்கு உட்பட்ட ஒரு மநுகுலத்தோரை மற்றொரு மநுகுலத்தோர் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி துன்பமடைய நசித்து நியாயமின்றி கெடுத்துவருவதை தடுத்து ஆட்கொள்ளாமல் விடுவரோ. ஒருக்காலும் விடமாட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சியோரின் அளவுபடா அன்பும், நீதிநெறி வழுவாச் செயலுமே ஏழைமக்களின் ஈடேற்ற வழியாகும்.
நாஷனல் காங்கிரஸ் கமிட்டியோர்களும், மகாஜன சபையோர்களும், டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப்போகின்றோம் என்னும் சங்கத்தோர்களும் யதார்த்த நல்லெண்ண முடையவர்களாயின் சென்ஸஸ் கமிஷனரவர்களின் நன்னோக்கத்திற்கு பின்னம் உண்டுசெய்யாதிருத்தல் வேண்டும். அங்ஙனமவரது ஆக்கத்தை நோக்க சகியாதவர்கள் தங்கடங்கள் சாதிப் பொய்மூட்டைகளையும், சமய சாக்கடை நீர்களையும் சமுத்திரத்திற் கரைத்துவிட்டு சகல மக்களையும் சகோதிரர்களென பாவிப்பார்களாயின் சகல துக்கங்களும் வழிந்து சதானந்தம் பெறுவர், சதானந்தம் பெறுவர்.
- 4:26; டிசம்பர் 7, 1910 -