அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/178-383
174. புங்கனூர் முநிசிபாலிட்டியும் சென்னை முநிசிபாலிட்டியும்
சென்னை முநிசிபாலிட்டியில் கமிஷனர்கள் கூடி சில சுகாதார விஷயங்களை ஆலோசிக்குங்கால் ஐரோப்பியர்கள் யாவரும் ஓர்புறமாகச் சேர்ந்துக்கொண்டு காரியாதிகளை முடிவுசெய்துவிட்டார்கள். சுதேசிகள் வாக்கு செல்லவில்லையென வீண்கூச்சலிட்டுத் திரிந்தார்கள்.
அத்தகையாக ஐரோப்பியர் ஏகவாக்காக கூடி முடிவுசெய்த சுகசெய்தி ஏழைகள் முதல் கனவான்கள் வரை சுகமடையவேண்டிய முடிவுகளை செய்தார்களன்றி சிறியசாதியோர் எச்சுகமும் அடையப்படாது பெரிய சாதியோர் சகல சுகமுமடையலாம் என்னும் பாரபட்சமும் வன்னெஞ்சமுங் கொண்ட முடிவை ஒன்றும் செய்யவில்லை. புங்கனூர் கமிஷனர்களின் முடிவை சென்னை சுதேச கமிஷனர்கள் நோக்குவார்களாயின் சென்னை ஐரோப்பியக் கமிஷனர்களின் முடிவு மிக்க மேலாயதென்றே விளங்கும்.
அதாவது புங்கனூரிலுள்ள லோக்கல் போர்ட் டிஸ்பென்சரியென்னும் வைத்தியசாலையைச் சில பாதிரிகள் கூடி தங்களிடங் கொடுத்துவிடும்படியாகவும் தாங்கள் அவற்றை சரிவர நடாத்திக்கொள்ளுவதாகவும் கேட்டார்களாம். அதற்கு அவ்வூர் முநிசிபல் கமிஷனர்கள் பாதிரிமார்களை என்ன நிபந்தனைக் கேட்டார்களாமென்னில், அந்த வைத்தியசாலையில் “பஞ்சம கிறீஸ்தவர்களை வேலைக்கு வைக்கப்படாது கிறீஸ்தவர்கள் போதனைகளை அவ்விடம் போதிக்கப்படாது, பணங்கள் ஏதேனும் வாங்கப்படாது” என்பதேயாம். இம்முடிவை சுதேசக் கமிஷனர்கள் ஏகவாக்காகக் கூறி முடிவுசெய்தார்களாம். அதனை வினவியப் பாதிரிகள் மனித குலத்தோரை மனிதர்களாக பாவிக்காத கூட்டத்தோரிடம் பேசுவதிலும் பயனில்லை, அவ்வைத்தியசாலையை ஒப்புக்கொள்ளுவதிலும் பயனில்லையென்று போய்விட்டார்களாம். இத்தகைய நீதியும் அன்புமற்ற கமிஷனர்கள் தற்காலம் அவ்வைத்தியசாலையில் பஞ்சமக் கிறீஸ்தவ வியாதியஸ்தர்க்கும் இடங் கொடுக்கமாட்டார்கள்போல் விளங்குகின்றது, அவ்வகைப் பஞ்சமரென்றழைக்கப்படும் கிறீஸ்தவ வியாதியஸ்தர்களை அவ்வூர் வைத்தியசாலையில் சேர்த்து அவர்கள் வியாதிகளைக் காருண்யமாய்ப் பார்த்து சுகப்படுத்தும் செயல்கள் சரிவர நடந்துவருமாயின் பஞ்சமக் கிறீஸ்தவ வேலைக்காரர்களை அவ்விடம் வைக்கப்படாதென்னும் நிபந்தனைக் கேழ்க்கமாட்டார்கள். பஞ்சமர்களென்போர் யாவரும் அடியோடு நாசமடைந்து போய்விட வேண்டும் தாங்கள் மட்டிலும் சுகம்பெற வேண்டுமென்னும் பொறாமெயுடையவர்களாதலின் தங்களிடமுள்ள பொறாமெயைப் பாதிரிகளிடம் பரக்க விளக்கிவிட்டார்கள்.
முநிசிபல் கமிஷனர் அதிகாரத்திலேயே பஞ்சமக் கிறீஸ்தவர்களைப் பரக்கடிக்கப் பார்க்கின்றவர்கள் சுயராட்சியங் கொடுத்துவிட்டால் பஞ்சமரென்றழைக்கப்பெற்றவர்கள் யாவரும் பாதாளஞ்சேரவேண்டியதேயாகும். இத்தகைய சட்டதிட்டங்களும் ஆட்டபாட்டங்களும் எதினால் உண்டாவதென்னில் யாரோ சிலர்கள் கூடி ஓர் பெயரைக் கொடுத்துவிடுவதும், அப்பெயரை ஓர் கூட்டத்தோர் ஏற்றுக்கொள்ளுவதுமாகியப் பேதைநிலையே மேற்கூறிய இழிந்த செயல்களுக்கும் தூற்றலுக்கும் ஆதாரமாய் இருக்கின்றது. வித்தையிலுங் கேவலம், புத்தியிலுங் கேவலம், உணவிலுங் கேவலம், உடுப்பிலுங்கேவலமுள்ளவர்களெல்லாம் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்தோர்களைப் பஞ்சமரென்றும், பறையரென்றுந் தூற்றிப் பாழ்படுத்தவும், பாழடையவுமுள்ளது. அப்பெயர்கள் யாவரால் வைக்கப்பட்டதென்று உணராக் குறைவேயாம்.
நீங்கள் என்ன விவேக மிகுதியால் உயர்ந்தசாதியானீர்கள், நாங்களென்ன விவேகக் குறைவால் தாழ்ந்த சாதி யானோமென்னும் விசாரிணை இல்லாது சத்துருக்களின் போதனைகளை மித்துருக்களின் போதனைபோல் எண்ணி நடப்பதினால் பஞ்சமரென்னும் பெயரை மட்டிலுமா கொடுப்பார்கள் இல்லை. பதங்குலைந்தவர்கள், பாழாய்ப் போனவர்கள் என்னும் பெரும் பெயர்களையுங் கொடுப்பார்கள். காரணந் தட்டிக்கேழ்க்கா நிலையாம். வைத்தியசாலையைப் பெற்றுக்கொள்ளும்படி சென்ற பாதிரிகள் எங்களிடம் பஞ்சமக் கிறீஸ்தவர்களுமில்லைப் பாப்பாரக் கிறீஸ்தவர்களுமில்லை எல்லோரும் சுதேசக் கிறீஸ்தவர்களே இருக்கின்றார்களென்று கூறி தங்கள் தன்மத்தை நடாத்தியிருப்பார்களாயின் பஞ்சமக் கிறீஸ்தவர்களென்னும் பெயரே பதிவின்றி பரந்திருக்கும். அங்ஙனங் கூறாது கிறிஸ்தவர்களுக்குள்ளும், பஞ்சமக் கிறீஸ்தவர்களுண்டென்னும் பாகுபாடை ஏற்றுக் கொள்ளுகிறபடியால் இத்தேசத்து விவேகமிகுத்தப் பூர்வ பௌத்தக் குடிகளைப் பஞ்சமர்களென்று இழிவு கூறுவது போதாது ஞான நெறிமிகுத்தக் கிறீஸ்துவையும் இழிவுக்கு உள்ளாக்கிவிடுகின்றார்கள். இந்துக்களுக்குள்ளாகப் பாப்பார இந்து, பஞ்சம் இந்துவென்னும் பெயர்கள் தற்காலப் பத்திரிகைகளில் வெளியாவது போல், பாதிரிகள் கூடி கிறீஸ்தவர்களுக்குள்ளும் பஞ்சமக் கிறீஸ்தவர்கள் பாப்பாரக் கிறீஸ்தவர்கள் என்னும் பேதத்தை நிலைக்கச் செய்கின்றார்கள் போலும். இத்தகைய பேதத்திற்குக் காரணம் பாதிரிகளாகவே இருப்பார்களாயின் கிறீஸ்துவின் போதனையாம் தன்னைப்போல் பிறரையும் நேசியுங்கோளென்னும் மொழியை மறந்தும் போதிப்பவர்களாகும். அவரது போதனையை மறந்தவர்களாயின் அக்கிறீஸ்துவையும் மறந்தவர்களென்றே கூறவரும். ஆதலின் பாதிரிகளே, இப்பேதங்களை அகற்றி ஆதரிப்பார்களென்று நம்புகிறோம்.
தற்கால சுதேசிகளுக்கு முநிசிபல் கமிஷனர் உத்தியோகங்களைக் கொடுப்பதினால் அவர்களுக்கு விரோதிகளாகியப் பூர்வ சுதேசிகளைத் தலையெடுக்கவிடாமல் நாசப்படுத்தவும் தாங்கள் மட்டிலும் சுகமடையவும் பார்த்துக்கொள்ளுகின்றார்கள். ஐரோப்பியர்களுக்கு முநிசிபல் கமிஷனர் உத்தியோகங் கொடுப்பதாயின் தங்களைப் போல் மற்றவர்களையும் மநுகுலத்தோரென்றெண்ணி சகல மக்களுக்கும் சமதையான சுகமளித்து வருகின்றார்கள். இவ்விருதிரத்தோர்களில் ஐரோப்பியர்களே பெருந்தொகையுள்ளவர்களாயிருந்து தேசத்தின் சகல காரியாதிகளையும் நடத்துவார்களாயின் சகல குடிகளும் சமரச சுகம்பெற்று விருத்தியடைவார்கள், தற்கால சுதேசிகள் அதிகரிப்பார்களாயின் பூர்வ சுதேசிகள் பாழடைவதுடன் தேசமும் சீரழிந்துபோமென்பது திண்ணம் திண்ணமேயாம்.
- 4:27; டிசம்பர் 14, 1910 -