அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/179-383
175. பூர்வ திராவிட பௌத்தர்களும் சென்னை சென்செஸ் கமிஷனரும்
தற்காலம் எடுக்கும்படி ஆயத்தஞ்செய்யுங் குடிமதிப்பின் ஆலோசினையில் தொதுவர், குரும்பர், கோத்தர், மகமதியர், கிறீஸ்தவர், பாரசீகர், சீக்கர் இவர்களை வெவ்வேறாகப் பிரித்துக் கணக்கெடுப்பது போல் இந்துக்கள், இந்துக்களல்லாதவர்களாயிருப்போரையும் வேறாகப் பிரிப்பதாயின் ஏழைக்குடிகள் சகலரும் சுகமுற்று சீரடைவார்கள்.
இந்துக்களின் சாதி ஆசாரங்களுக்கு உட்படாதவர்களும், அவர்களால் தீண்டப்படாதவர்களென்று விலக்கியுள்ளவர்களும், சகல சுதந்திரங்களுக்கும் பிரவேசிக்கவிடாமல் இந்துக்களென்போரால் தடுக்கப்பட்டவர்களுமாகியக் கூட்டத்தோரைக் கனந்தங்கிய மிஸ்டர் கேய்டி சென்செஸ் கமிஷனரவர்கள் சரிவர வேறுப்படுத்தி அவர்களையும் மற்ற மனித வகுப்போர்களைப்போல் மனிதவகுப்பார்களாகச் செய்விப்பாரென்று எதிர்பார்க்கின்றோம்.
இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக் குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்களாகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தர்களுமேயாகும். ஆயிரத்தி சில்லரை வருடங்களுக்கு முன்பு இத்தேசத்தில் வந்துக்குடியேறிய ஆரியர்களின் வேஷப்பிராமண மதத்தினால் இவர்களுக்கும் அவர்களுக்கும் உண்டாயிருந்த சத்துருத்துவமே வேஷப் பிராமணர்களைப் பூர்வக்குடிகள் கண்டவுடன் வீதிக்குள் வரவிடாமல் அடித்துத் துரத்தி சாணச்சட்டியை உடைப்பதும் வேஷப் பிராமணர்களோ தங்களது மித்திரபேதங்களாலும் தங்களது வேஷசாதி வகுப்புகளினாலும் தாழ்ந்த சாதியென வகுத்து தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்றார்கள். சத்துருக்களாகிய இந்துக்களென்போரால் தாழ்ந்த சாதிகளாக வகுத்து இம்சித்துவந்தபோதினும் இன்னசாதியாரென்று அவர்களை ரூபிக்கப் பாங்கில்லாமல் சிலரோ சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றும், பஞ்சமரென்றும், வலங்கையரென்றும், சாம்பார்களென்றும், பலப்பெயர்களாக வழங்கிவருகின்றார்களன்றி நிலையான ஓர் பெயர்க் கிடையாது. காரணமோவென்னில் இவர்களுக்கு சாதியே கிடையாது ஆதலின் அதுபற்றி சாதியின் பெயரும் நிலையாகக் கிடையாது. இதுவன்றி சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் இப்பறையனென்னும் பெயர் ஆயிரத்தியைந்நூறு வருடங்களுக்கு பின்னரே தோன்றிய சாதிப்பெயரென்று சென்ற சென்செஸ் கமிஷனர் தன்னுடையக் குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையுந் தற்கால சென்செஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமெயாலும் பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பானப் பூர்வக்குடிகளிற் சிலர் பறையர்களென்றும், சிலர் வலங்கைமுகத்தாரென்றும், சிலர் பஞ்சமர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது சாதிபேதமற்ற திராவிடர்களென ஒரே பெயரால் குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களை சாதிபேதமற்ற திராவிடர்களடையவும் ஏதுவுண்டாகும். மதத்தைப்பற்றி எழுதுவதில் பூர்வத்திலிவர்கள் சாதிபேதமற்ற பௌத்தர்களாகவே நிலைத்து இந்துக்களென்போர் கோவில்களுக்குள் இவர்கள் போகாமலும் இந்துக்களென்போரும் இவர்களை உள்ளுக்கு வரவிடாமலும் மதசம்மத விரோதம் நிகழ்ந்தே வருகின்றது. ஆதலின் இத்தகைய செய்கைகளின் ஆதாரங்களைக் கொண்டும் இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும் இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும் பூர்வக்குடிகளை சாதிபேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து சாதிபேதமற்ற திராவிடர்களென்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம். இத்தேசத்தின் பூர்வக் குடிகள் கொலம்போசுக்குமுன்பு அமேரிக்கா தேசஞ்சென்று திராவிட பௌத்தர்களென்றும், சாக்கைய பெளத்தர்களென்றும் வழங்கிய விவரத்தை சீனர்கள் வரைந்துவைத்துள்ள அமெரிக்கா சரித்திரத்திலுங் கண்டுக்கொள்ளுவதன்றி இந்துக்களென்போர் அன்னியதேசம் போனாலும், சமுத்திர யாத்திரைச் செய்தாலும் சாதிக் கெட்டுப்போமென்னும் அவர்களாசாரத்திற்கு எதிரடையாகப் பூர்வ திராவிடர்கள் என்போர் சாதிபேதமில்லாமல் பல தேசங்களுக்குஞ் சென்றிருந்த அநுபவங்கொண்டே நாளதுவரையில் பிரிட்டிஷ் ஆங்கிலேய துரைமக்களுடன் பல தேசங்களுக்குங் களங்கமில்லாமற் சென்றுவருகின்றார்கள். இத்தகைய அதுபவங்களையும் சென்செஸ் கமிஷனரவர்கள் தெரிந்துக் கொள்ளுவாராக.
- 4:27; டிசம்பர் 14, 1910 -