அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/225-383

221. இராஜாங்கத்தோர் கேள்விக்கு நாங்கள் யாவரும் இந்துக்களே என்று கூறியவர்கள் தங்கள் சுயப்பிரயோசனப் பண்டுகளில் பஞ்சமர்கள் சேரப்படாதென்பதென்னோ?

இந்துக்களென்போர் இவற்றை சற்று கவனிப்பார்களென்று நம்புகிறோம். அதாவது, இவ்வருடத்திய சென்சஸ் ஆரம்பத்தில் சென்சஸ் கமிஷனராக ஏற்பட்டுள்ள துரைமகன் இந்தியாவிலுள்ளவர்களின் சாதிப்பிரிவுகளையும் அவரவர்கள் குருக்கள் யாவரென்பதையுங் கண்டெழுதவேண்டுமென்று விடுத்திருந்த அறிக்கைப்பத்திரத்திற்கு எதிரடையாய சில விவேகிகள் தோன்றி இந்துக்கள் யாவரும் ஒற்றுமெயிலிருக்க, இந்த சென்சஸ்கமிஷனர் எங்களை வேறுபிரிக்கப்பார்க்கின்றார், அது நியாயவறிக்கையல்லவென வீண்கூச்சலிட்டு இந்து பத்திரிக்கைகள் யாவும் படாடம்பமிட்ட சங்கதி உலகறிந்த விஷயமேயாம்.

அங்ஙனமிருக்க தற்காலங் கூடும் (பண்டு) களில் பஞ்சமர்கள் தவிர மற்ற யாவர்களுஞ் சேரலாமென்று அச்சிட்டு வெளியிட்டுவரும் நோட்டீசுகளையும், பத்திரிகைகளையும் சென்சஸ் கமிஷனருக்கு எதிரடையாக எழுதிய விவேகிகள் பார்க்கவில்லை போலும். பார்த்தாலுமோ, தாங்களேதுக்களை ஒருமுகப்படுத்த ஆதாரமில்லை போலும்.

காரணம், பலபெயர்க்கூடி பலசாதிகளையுண்டுசெய்துக் கொண்டபடியால் ஒருவர் தோன்றி பலரை ஒருமுகப்படுத்தல் ஏது வாகாதென்பதே துணிபு. பொய்யாகியக் கட்டுக்கதைகளை முட்டுக்கொடுத்து சாதிப்பிரிவு, ஜமாத்துப்பிரிவென்று ஏற்படுத்திக்கொண்ட கோட்பாடுகள் யாவும் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களை நாடியே செய்துக் கொண்டவைகளாதலின் இராஜாங்க காரியாதிகள் யாவற்றிலும் இந்துக்களென்னும் பெருங் கூட்டத்தோரை இந்துக்களென்றே சொல்லிவிடுவதும், பணம் சம்பாதித்துக் கொண்டால் ஏழைக்குடிகள் தங்களைப்போல் முன்னுக்கு வந்துவிடுவார்களென்னும் பொறாமெயால் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் (பண்டு) களில் பஞ்சமர்கள் சேரப்படாதென நோட்டீசுகளைப் பிரசுரிக்கின்றார்கள்.

பணம் சேகரிக்குமிடத்தில் பஞ்சமன் சேரப்படாதென விளம்பரப் பத்திரம் வெளியிடும் விவேகிகள் இராஜாங்கத்தோர் அவரவர்களைப் பிரித்து கணக்கெடுக்க உத்தேசித்தபோது எவ்வகை சுதந்திரத்தைக்கொண்டு பஞ்சமர்கள் யாவரும் இந்துக்களென்றே கூறத் துணிந்தார்களென்பது விளங்கவில்லை. தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களை நாடுமிடங்களில் சாதியாசாரங் கிடையாது, பஞ்சமர்களென்போர் சுயப்பிரயோசனத்தை நாடுமிடங்களிலெல்லாம் சாதியாசாரத்தை உண்டு செய்து அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசித்துப் பாழடையச்செய்வது சாதித்தொழிலாதலின் இராஜாங்கத்தோர் பிரித்துக் கணக்கெடுக்கும் போது கூட்டாதென்று கூச்சலிட்டவர்கள் தங்கள் சுயப்பிரயோசன (பண்டு)களில் பஞ்சமர் சேரலாகாதென விளம்பரப்படுத்துகின்றார்கள்.

இத்தகைய வஞ்சகக்கூற்றை டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப் போகின்றோமென்னும் விவேகிகளும், அவர்கள் யதார்த்தத்தில் சீர்திருத்துவார்களென அவர்களைப் பின்பற்றிநிற்குங் கூட்டத்தோர்களும் இவற்றை சீர்தூக்கி ஆலோசிப்பார்களென நம்புகிறோம். அதாவது பஞ்சமர்களென்போர் தங்கள் பணங்களைக்கொண்டுபோய் (பண்டு) களில் சேர்த்து முன்னுக்கு வருவதை பொறுக்கா பொறாமெயுடையோர் தங்கள் சொந்தப்பணங்களைக்கொண்டு டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவரப் போகின்றார்களென்பது மெய்யாமோ.

ஒருக்காலும் மெய்யாகாவாம். பஞ்சமரென்போர் பணத்தைக்கொண்டே பஞ்சமர்களை முன்னுக்கு வர மனஞ்சகியாதவர்கள் தங்கள் சொந்தபணங்களைச் செலவுசெய்து பஞ்சமரென்போரை முன்னுக்குக்கொண்டுவரப் போகின்றோமென்பது முற்றிலும் பொய், பொய், பொய்யென்றே பொருந்தும், (பண்டு) களில் பஞ்சமர்களெனத் தள்ளிவிட்டு சென்சஸ் கணக்கில் இந்துக்களென சேர்த்துக்கொள்ள பார்க்கும் சுயப்பிரயோசனமுள்ளாரைச் சாராதிருப்பார்களென நம்புகிறோம். ஏழைக்குடிகள் பணம் சேர்க்க வேண்டுமாயின் கருணை தங்கிய கவர்ன்மெண்டார் ஏற்படுத்தியுள்ள (சேவிங்) பாங்கிகளில் சேர்த்துவருவது உத்தமமும் பாக்கியமுமாகும். கல்வியிலுங் கைத்தொழிலிலும் முன்னேற விருப்பமுள்ளவர்கள் டிப்பிரஸ் கிளாசெனக் கூறித்திரியும் (மிஷனை) நாடாது பிராட்டிஸ்டென்ட் கிறிஸ்டியன் மிஷனை நாடுவதே நலந்தரும். மதக்கடை பரப்பி சீவிப்பதைப்போல் டிப்பிரஸ்கிளாஸ் கடைகளைப் பரப்ப யோசிக்கின்றார்கள். ஏழைக்குடிகளவர்களை நாடாமலும், பல சாதி பண்டுகளை சாராமலும் ஜாக்கிரதையில் முன்னேறுவதே நலமாம்.

- 5:8; ஆகஸ்டு 2, 1911 -