அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/232-383

228. ஆனரெபில் பூபேந்திரனாத் பாஸு அவர்களின் விவாக மசோதா

கனந்தங்கிய பாஸு அவர்கள் கொண்டுவந்துள்ள விவாக (பில்) இந்திய தேச அநுபவத்தை ஒட்டியேகெண்டுவந்திருக்கின்றார். அதனை வெட்டிப் பேசுபவர் யாவரும் மனசாட்சிக்கு விரோதமாகவே பேசுகின்றார்கள். பகல் முழுவதும் வேதபுராண இதிகாசங்களை ஒட்டி சாதியாசாரம் சமயாசாரங்களிருக்கின்றது. சூரியன் மறைந்து இருளடைந்தவுடன் வேத புராண இதிகாசங்கள் யாவும் மறைந்து சாதியாசாரம் சமயாசாரம் யாவும் பரந்து பெண்ணென்றால் பெண்ணுதான், ஆணென்றால் ஆணுதானென ஒரு பெண்ணைத்தேடி ஆணும், ஓர் ஆணைத்தேடி ஓர் பெண்ணும் காந்தர்வ விவாகத்தைக் கட்டாயஞ்செய்தே வருகின்றார்கள்.

சூரியோதயமாகிய வெளிச்சம் உண்டாயவுடன் சாதியாசார சமயாசாரப் போர்வைகளை எடுத்துப் போர்த்துக்கொள்ளுகின்றார்கள். இந்தியாவின் பகல் வேஷக்காரரையும் இரவு வேஷக்காரரையும் நெடுநாளாகப் பார்த்துவந்த பாஸ் அவர்கள் இரவில் சகலசாதியோரிடத்தும் சமரசமாக வீற்றிருக்கும் நமது இந்தியர்கள், யாதொரு பயமுமின்றி பகலிலும் வீற்றிருப்பது நலமென்றெண்ணி இவ்விவாக மசோதாவைக் கொண்டுவந்திருக்கின்றார். அவருக்கு எதிரடையாக வேதப்புராணங்களைக்கொண்டு தடுப்போர் தங்கள் தங்களுரவின் முறையோர் அநுபவங்களைக் கண்டு பேசுவ தழகாம்.

அதாவது, கள்ளுக்கடையில் சாதியாசாரமுண்டா, சாராயக்கடையில் சாதியாசாரமுண்டா, தாசிவீட்டில் சாதியாசரமுண்டா, ரிப்ரெஷ்மென்ட் ரூம்களில் சாதியாசாரமுண்டா, இரவில் இஸ்திரீகளை வண்டிகளிலேற்றிக் கொண்டுபோம்போது சாதியாசாரமுண்டா, மற்றும் சகலசாதி இஸ்திரீகளுடன் போய் இரவில் வீற்றிருந்து விடியற்காலம் எழுந்தோடி வரும்போது சாதியாசாரமுண்டாவென்று கூர்ந்தாலோசிப்பவர்கள் கனந்தங்கிய பாஸு அவர்களின் (பில்லை) ஒருக்காலுந் தடுக்கவே மாட்டார்கள். இரவில் நடக்கும் செய்கைகள் யாவையும் நன்குணர்ந்தே இப்பில் வெளிவந்திருப்பதாக விளங்குகின்றது. அதனை மறுப்போர் சற்று நிதானிப்பார்களென்று நம்புகிறோம்.

இரவில் நடக்கும் சகலசாதி சம்மந்த காந்தர்வ விவாகம் பகலில் சகலசாதியிலும் பஹிரங்க விவாகமாக மாறுவது சிரேஷ்டச்செயலேயாம்.

- 5:15; செப்டம்பர் 20, 1911 -