அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/233-383
229. வித்தையில் மிகுத்த ராஜாங்கம் எவை? புத்தியில் மிகுத்த ராஜாங்கம் எவை? நீதியில் மிகுத்த ராஜாங்கம் எவை? கருணையில் மிகுத்த ராஜாங்கம் எவை?
தற்காலம் நம்மெ ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கமேயாம். கனந்தங்கிய பிரான்சு ராஜரிகம் அத்தகைய குணங்களை வகித்திருக்கவில்லையோ என்பாராயின் தற்காலம் புதுவையில் நிறைவேறிவரும் எலெக்ஷனில் உண்டாகும் துன்பங்களே போதுஞ் சான்றாம்.
அதன் காரணமோவென்னில் பிரான்சு ராஜாங்கத்தார் வித்தையிலும் புத்தியிலும் மிக்கோராயினும் அவர்களாளுகைக்கு உட்பட்டக் குடிகளுட் சிலர் அவன் பெரிய சாதி இவன் சின்னசாதி என்னும் பொறாமெ மிகுத்தோர் உள்ளபடியால் அவனை நியமிக்கப்படாது, இவனை நியமிக்கப்படாது, அவனை நியமித்தால் பெரியசாதியோர்களுக்கு சுகம் என்னும் பட்சபாதத்தால் எலெக்ஷன் காலங்களிலெல்லாங் அடிதடி சண்டைகளும் உயிர்ச்சேதங்களும் உண்டாவதுடன் வழக்குகளினாலுண்டாம் பொருட்சேதங்களையும் ஒருவருக்கொருவர்க்குண்டாம் முறுமுறுப்பையுங் காணலாம். வீதிவொழுங்குகள் வித்தாரமாயினும் நீதிவொழுங்கில் பிரன்சிராஜாங்கத்தார் சாதிபேதத்தோர் ஆசாரவனாச்சாரக் கிரித்தியங்களைப் பொதுவாய ராஜாங்க விஷயங்களிலும் பொதுவாய்க் கோவில்களிலுங் காட்டவிடாது தங்களுக்குள்ள சாதிபேதமற்றச் செயல்போல் தங்கள் ராஜாங்கத்தையும் நிறைவேற்றி வருவார்களாயின் சாதிபேதமுள்ளோர் வாக்கு இராஜாங்கத்திலும் கோவில்களிலும் பிரவேசியாது தங்கள் தங்கள் வீடுகளிலும் வாயல்களிலும் அடங்கிப்போம். இத்தகைய எலக்ஷன் கலகங்களும் நேரிடமாட்டா.
கனந்தங்கிய பிரிட்டிஷ் ராஜரீகமோ வீணர்களெண்ணம்போல் விடாது கல்விக்குத் தக்கவாறும் அந்தஸ்துக்குத் தக்கவாறுங் காரியக்காரர்களை நியமித்துக் காரியாதிகளை நடாத்திவருவதுடன் மெலியோர் எளியோர் கூட்டத்தில் தாங்களே பிரவேசித்து அவர்களது கஷ்டநிஷ்டூரங்களை அறிந்து வேணவுதவி புரிந்து வருகின்றார்கள். இத்தகையத் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்றச்செயலால் சகலசாதியோர்களையும் சகல சமயத்தோர்களையும் தங்களது ஆளுகைக்குள் அடக்கியாண்டுவருகின்றார்கள். அதனால் நீதியும் நெறியும் எங்குளதென்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
மற்றும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்க முதலியவைகளோ இத்தேசத்துள் புத்ததன்மம் நிறைந்திருந்த காலத்தில் வித்யாவிருத்திக் கியான விதரணர்களும், புத்திவிருத்திக்குரிய சமணமுனிவர்களும், ஈகைவிருத்திக்குரிய கனதனவான்களும், சன்மார்க்க விருத்திக்குரிய அறஹத்துக்களுமிருந்தபடியால் சகல சம்பத்தும் நிறைந்து சகல குடிகளும்சிறந்து கோன்களும் உயர்ந்து சுகசீவியத்திலிருந்தார்கள். அதன்பின்னர் அசத்தியர்களும் அசப்பியர்களும் துன்மார்க்கர்களும் வந்து இத்தேசத்துட் குடியேறி தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காக பொய் வேதங்களையும், பொய்ச்சாதிகளையும், பொய்மதங்களையும், பொய்போதங்களையும் உண்டு செய்து மதக்கடைகளைப் பரப்பி பின்னர் நாளுக்குநாள் பூர்வக்குடிகளுக்குள்ள வித்தையும் புத்தியும் அழிந்து, ஈகையுமொழிந்து சன்மார்க்கமும் மறைந்து இந்திரர் தேசம் இழிந்ததேசமாகிவிட்டது.
இதுவரையில் இத்தேசம் சுயப்பிரயோசன வஞ்சகர்பால் வயப்பட்டிருக்குமாயின் உள்ளதுங் கெட்டு உன்மத்த நிலை கொண்டிருக்குமென்பது சத்தியம். பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் ராஜரீகந்தோன்றி இத்தேசத்தோர் காணாத வித்தைகளையும், கேளாதபாஷைகளையும், அணையாத உடைகளையும், புசியாத உணவுகளையுங் கொணர்ந்து குழவிகளுக்கு அமுதூட்டுவது போலூட்டி நாளுக்குநாள் அனந்தமான வித்தைகளில் அதி விருத்திச் செய்துவரும் அனுபவங்களே பிரிட்டிஷ் வித்தையின் பிரபலத்தைக் காட்டும் அறிகுறியாகும். அவர்களது புத்தியின் பெருக்கமோ யாவராலும் சொல்லத் தரமன்று. நாட்டு சிறப்பும், நகர் சிறப்பும், ரத, கஜ, வசுவ சிறப்பும், பாதை சிறப்பும், நாகரீக சிறப்பும், பிரட்டீஷ் ராஜரீக புத்திவிருத்தியின் பூரணச் சான்றாகும்.
அவர்களது கருணையின் பெருக்கமோ அதனினும் சொல்லத்தரமன்று. சாதிபேதமென்னும் பொறாமெ நாற்றங்களற்று சமய பேதங்களென்னும் வஞ்சின நாற்றங்களற்று சிறியசாதியென்போனாயினும் பெரியசாதியொன்போனாயினும் ஏழையாயினுங் கனவானாயினும் பிணியாளனாயினும், சுகதேகியாகினும் அவனுக்கோர் ஆபத்து நேரிடுமாயின் தங்களுக்கு நேரிட்ட ஆபத்தைப் போலெண்ணி அவன் மேல்விழுந்து வாரியெடுத்து அவனது ஆபத்தைத் தீர்த்து வேண உதவிபுரிந்து ரட்சித்து வரும் செயல்களே பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையை விளக்குவதற்கோர் அறிகுறியென்னப்படும்.
இத்தகைய வித்தையும், புத்தியும், நீதியும் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தின்மீது விசுவாசம் வையாது, வீணர்கள் கூட்டுறவிலும், வஞ்சகர்கள் சம்பத்திலும் விசுவாசம் வைப்பது, ஆடுகள் கசாயிக்காரனை, நம்புவதுபோலும், பட்சிகள் வேடனைப் பின் செல்லுவதற்கும் ஒக்கும். ஆதலின், மிக்க விழிப்பிலும் விசாரிணையிலும் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியார் அளித்துவரும் சுகங்களுக்கு நன்றியறிந்த வந்தனம் நாள்தோரும் அளித்து வருவதுடன் பிரிட்டிஷ் ராஜ விசுவாசத்திலும் நிலைத்திருக்கும்படி வேண்டுகிறோம்.
- 5:16; செப்டம்பர் 27, 1911 -