அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/243-383
239. ஏழைகள் அழுதக்கண்ணீர் கூரியவாளுக்கு ஒக்கும்
தற்கால இந்தியதேசம் நீங்கலாக மற்றுமுள்ள தேசங்கள் எங்ஙணும் உள்ள மேன்மக்கள் தங்கள் தேசத்திலுள்ள மற்றுமுள்ள மக்களை கல்வி விருத்திசெய்து முன்னுக்குக் கொண்டுவரவேண்டுமென்றும் கைத்தொழில் விருத்திசெய்து முன்னுக்குக் கொண்டுவரவேண்டுமென்றும், வைத்திய சாலைகளை வைத்து ஆதரிக்க வேண்டுமென்றும், ஆதுலர் சாலைகளை வைத்து ரட்சிக்க வேண்டுமென்றும் தங்கள் தங்கள் சுயரார்ஜித சொத்துக்களை செலவிட்டு எழிய மக்களைத் தங்களைப்போல் சீருக்கும் செம்மெக்குங் கொண்டுவருவதுடன் மிருகசீவர்களின் மீதுங் கருணைவைத்து அவைகளையும் சுகசீவவாழ்க்கையில் பலுகிப் பெருகும்படி செய்துவருகின்றார்கள்.
ஈதல்லவோ மேன்மக்களது செய்கை, ஈதல்லவோ கருணைமிகுத்தோர் நோக்கும், ஈதல்லவோ தன்னைப்போல் பிறரை நேசிக்குந் தயாளம், ஈதல்லவோ மானுஷீகரென்னும் பெயர்பெற்றவர்களது தன்மம், ஈதல்லவோ விவேகமிகுத்தவர்களின் நற்செயல், ஈதல்லவோ தேசத்தை சிறப்புப்பெறச் செய்யும் மார்க்கம், ஈதல்லவோ மக்களை ஒற்றுமெயிலும் அன்பிலும் லயிக்கச் செய்யும் செய்கை. இத்தகைய கல்விவிருத்தி, கைத்தொழில் விருத்தி ஒற்றுமெய் விருத்தி, தேச்சீர்திருத்த விருத்தி, மக்கள் நாகரீகவிருத்தி, சுகாதார விருத்தி, இவைகளை நோக்காது பொய்யாகிய ஓர் சாதிக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு அதிற் பெரியசாதியென்றும் சொல்லிக் கொள்ளுவோன் கொலைஞனாயிருப்பினும், கள்ளனாயிருப்பினும் குடியனாயிருப்பினும், விபச்சாரியனாயிருப்பினும், பொய்யனாயிருப்பினும். யாதாமோர் தொழிலுமின்றி பிச்சையேற்று உண்பவனாயிருப்பினும் அவன் பெரியசாதி, பெரிய சாதியேயென்றும் சிறியசாதியோனெனத் தாழ்த்தப்பட்டவன் பொய்யற்றவனாயிருப்பினும், களவற்றவனாயிருப்பினும் கொலையற்றவனாயிருப்பினும், குடியற்றவனாயிருப்பினும், விபச்சாரமற்றவனாயிருப்பினும் தேகத்தை வருத்திக் கஷ்டப்பட்டு தன் பெண்சாதி பிள்ளைகளைப் போஷிக்கக் கூடியவனாயிருப்பினும், பூமியை உழுது பண்படுத்தி தானியவிருத்திசெய்து சகல சீவர்களுக்கும் உபகாரமுடையோனாயிருப்பினும் அவனை சிறியசாதி, சிறியசாதியே என்று கூறி அவனை மனங்குன்றி காணச்செய்வதுமன்றி, சுத்தநீரை மொண்டுகுடிக்கவிடாமல் வதைப்பதும், அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாது விகாரப்படுத்துவதும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாது அசுத்த நிலையடையச் செய்வதும், கல்வி விருத்தி செய்விக்கவிடாது தடுத்து அவிவேகிகளாக்கிவருவதும், சுத்தமான இடங்களில் வைத்திருந்தால் நாகரீகம் பெற்று முன்னுக்கு வந்துவிடுவார்களென்றெண்ணி அசுத்தமுள்ளப் புறம்பாய இடங்களில் ஒட்டியும், ஆறு கோடி மக்களை நசித்து நாசமடையச் செய்துவருவதே பெரியசாதி என்பவர்களின் பேரன்பும் கனவான்களென்பவர்களின் கண்ணோக்கமும் மேன்மக்களென்பவர்களின் ஆதரவும் இவைகளேயாம்.
உலகெங்குமில்லாதப் பொய்யாய சாதிக்கட்டுப்பாடு இக்கோமணத்திற்குச் சமதையாய இவ்விந்து தேசத்தில் மட்டும் தோன்றியதும், அன்னிய தேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறியுள்ளவர்கள் பெரியசாதிகளாகி விட்டதும், இத்தேசத்து விவேகமித்தப் பூர்வக்குடிகள் சிறியசாதிகளாகி விட்டதும் “பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் கேழ்ப்பாரில்லாமற் கீழ்ச்சாதியானா” னென்னும் முதுமொழிக்கிணங்கப் பலசாதிகளாக விளங்கும் இருபத்தியாறுகோடி மக்கள் சாதிபேதமென்னும் வஞ்சகச்செயலில் அல்லடைந்தும் அவதியுற்றும் ஆறுதலற்று கண்ணீர்த்ததும்ப நிற்கின்றார்கள்.
இத்தகைய ஆறுதலற்ற ஆறுகோடி மக்கள் முன்னிலையில் கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் இதுகாரும் வந்து தோன்றாமலிப்பார்களாயின் ஆடுகிடந்தவிடத்தில் ஒரு மயிரேனுங் கிடையா” தென்னும் பழமொழிபோல் அன்பும் சீவகருண்ணியமுமற்ற சத்துருக்கள் முன்னிலையில் சாதிபேதமற்ற ஆறுகோடி மக்களுள் ஆறுபேரேனும் மிகுந்திருப்பார்களோ இரார்களோவென்பதை சாதித்தலைவரது தற்காலத்தியக் கருணை அற்றச் செயலாலும் ஆறுகோடி மக்கள் அல்லலும் அவதியுமுற்று மனங்குன்றி நாணடைந்து கண்ணீர் விட்டழுங் கவலையாலுமேயாம்.
இத்தகைய கவலைகொண்டழுவோர் சதா ஏழைகளன்று. பூர்வம் இத்தேசத்து பௌத்தன்ம மேன்மக்களாயிருந்து கருணையற்ற சத்துருக்களால் தாழ்ந்து கண்கலங்கினிற்கின்றார்கள். அவர்களது கண் கலக்கமும் பழிபாவமும் வீண்போகாது, வீண்போகாது.
ஏழைகள் அழுங் கண்ணீர் கூரியவாளுக்கு ஒக்குமென்பதே.
- 5:27; டிசம்பர் 13, 1911 -