அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/244-383
240. சென்னை ராஜதானி விவசாய விருத்திக் கெடுதி
பர்ம்மா , சைனா, ஜப்பான், அமேரிக்கா முதலியதேசங்களின் விவசாயவிருத்தி இராஜாங்கத்தோர் உதவியின்றி அந்தந்த தேசத்து வேளாளர்கள் தங்கள் தங்கள் முயற்சிகளால் பூமிகளை உழுது பண்படுத்தி தானியங்களை விளைவித்து தங்கள் தங்கள் தேசங்களுக்கு சுகமளிப்பதுடன் ஏனய தேசங்களுக்கும். தானியங்களை அநுப்பி அவ்விடமுள்ள மக்களுக்கும் சுகமளித்து வருவதுடன் வியாபார பெருக்கமும் அதிகரித்து வருகின்றது.
அத்தகைய விவசாய விருத்தியும் வியாபார விருத்தியும் பெருகி சுகச்சீர் பெருவதற்குக் காரணம் யாதெனில், அந்தந்த தேசங்களிலுள்ள வேளாளர்களாம் விவசாயத் தொழிலாளிகளே விடா முயற்சியினின்று முதலாளிகளாயுள்ளவர்கள் ஏழைகளுக்கு உதவி புரியவும், ஏழைகளாயுள்ளவர்கள் தங்களது விடாமுயற்சிகளால் பூமிகளை சீர்திருத்துங் கவலையும், நீர் பாய்ச்சுங் கவலையும், பண்படுத்துங்கவலையும், பயிறினை ஓங்கச் செய்யுங் கவலையிலுமிருந்து தாங்களும் சுகச்சீர் பெருவதுடன் முதலீவோர்களுக்கும் சுகமளித்து வருவது வழக்கமாகும்.
முதலீயும் வேளாளத் தொழிலாளர்களும் தானியமுதலை பெற்றுழைக்கும் வேளாளத் தொழிலாளர்களும் ஒற்றுழைத்து ஒருவருக்கொருவர் பேதமின்றிப் பல தானியங்களையும் பெருகச்செய்து வருவதினால் முதலீவோரும் முதலினைப் பெற்றுழைப்போரும் சுகசீவிகளாக வாழ்வதுடன் சகல தேசங்களுக்கும் படியளந்து போஷிக்கச் செய்துவருகின்றார்கள்.
தென்னிந்திய விவசாயிகளோவென்னில் தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப் பெயர்களாக மாற்றி அவன் சின்னசாதி, இவன் பெரியசாதி என்னுங் கொறூரச் செயல்களையே விருத்தி செய்துக்கொண்டதுமன்றி தங்கள் சுயப்பிரயோசனங்களை நாடி தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப் பெயர்களாக மாற்றியுள்ள சாதித் தலைவர்கள் மனுதன்ம சாஸ்திரமென்னுங் கட்டுக்கதையை ஏற்படுத்தி அதிற்றங்களுக்கான சீவனோபாயங்களை ஏற்படுத்திக் கொண்டதுமன்றி, “பயிரிடுந்தொழில் இழிந்ததொழிலென்றும்” வரைந்து வைத்திருக்கின்றார்கள். கீழ்ச்சாதி மேற்சாதியென்று அமைத்து வைத்துள்ள சாஸ்திரத்தை மெய்யென்று நம்பியுள்ள யாவரும் அதில் வரைந்துள்ளப் பயிரிடுந் தொழிலும் இழிந்த தொழிலென எண்ணி விவசாயத் தொழிலைவிட்டுப் பாழடைந்து போனார்கள்.
இத்தகைய பொய்வேஷமாம் சாதிக்கட்டுப்பாட்டை நம்பாமலும் அவர்களில் அடங்காமலுமிருந்த பௌத்த கூட்ட வேளாளத் தொழிலாளர் மட்டிலும் பூமியைப் பண்படுத்தி தானியவிருத்தி செய்துவந்தார்கள். பொய்சாதி வேஷக்காரர்களுக்கும், பொய்ச்சாதித் தலைவர்களுக்கும் அடங்காது பௌத்ததன்மத்தை நிலைநிறுத்தி வந்த விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரையும் தாழ்ந்த சாதிகளென நசிப்பதற்கு ஆரம்பித்துக் கொண்டதன் பேரில் வேளாளத்தொழிலாளர்களுக்கு முதல் ஈய்ந்து உதவும் வேளாளர்கள் யாவரும், சாதித் தலைவர்களுடன் கலந்துக்கொண்டு முதலீவோரென்னும் பெயரற்று தானியமுதலுள்ளவர்களும் தானியமுதலில்லாதவர்களும் தங்களை முதலியார் சாதியென்னும் நூதனசாதிப் பெயரைவகித்துக் கொண்டு சாதிபேதமில்லா வேளாளத் தொழிலாளர்களைத் தாழ்ந்த சாதியாகப் பிரிக்கவும் தங்களை மேலான சாதியென ஆரம்பித்துக்கொண்டதின் பேரில் பேதமின்றி தானிய முதலீவதும் அற்று பேதமின்றி தானிய முதலைப் பெறுவதும் அற்று விவசாய விருத்திக்கே கேடுண்டாயிற்று.
மனுதன்மசாஸ்திரத்தில் பயிரிடுந்தொழில் இழிந்த தொழிலென்று வரைந்துள்ள விவசாய விருத்திக்கு முதல் கேடும், வேளாளத் தொழிலாளருள் தானிய முதலீவோரெல்லாம் முதலியாரென்னும் வேறு சாதியாக பிரிந்துவிட்டது, விவசாய விருத்திக்கு இரண்டாங்கேடும், பூமியை உழுது பண்படுத்தி விடா முயற்சியில் தானியவிருத்திசெய்யும் உழைப்பாளிகள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து சுத்த நீரை மொண்டுகுடிக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும் பல வகையால் இழிவுகூறி நசித்துவந்த துன்பம் சகிக்கமுடியாது பூமித் தொழில்களைவிட்டு பலதேசங்களுக்குச் சென்று பிழைக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். இதுவே விவசாய விருத்திக்கு மூன்றாவது கேடாயிற்று.
- 5:30: சனவரி 3, 1912 -
இத்தகைய மூவகைக் கேடுகளுக்கும் உபபலமாக சோம்பேறிகளும், வஞ்சகர்களும், குடிக்கேடர்களும், பத்துக்குடிகள் நாசமடைந்தாலுமடையட்டுந் தங்களொருகுடிபிழைத்தால் போதுமென்னுங் கருணையற்ற லோபிகளுமானோர்களிற் சிலர் பூமிகளை சம்பாதித்துக்கொண்டார்கள்.
பூமிகளைக் கஷ்டமின்றி யெவ்வகையிற் சம்பாதித்துக்கொண்டார்களோ அதுபோல் தங்கள் பூமிகளை உழுது பண்படுத்துவதற்கும் நாளொன்றுக்கு முக்காலணாக் கூலி, வரணாக் கூலியாள் கிடைக்கவேண்டுமென்றும், அவ்வகை யாளுக்கு ஐந்து ரூபா கடன் கொடுத்துவிட்டால் தொகையைப் பெற்றவனது புத்திரன், பௌத்திரன் வரையில் அக்கடன் ஒழியாமலே கணக்கு சொல்லி வேலைவாங்கிக்கொண்டு வரவேண்டியதென்னுங் கோரிக்கையால் பூமியை நோக்கி நிற்கும் சில முதலாளிகளும் இருக்கின்றார்கள்.
அத்தகைய முதலாளிகளிடம் ஊழியஞ்செய்யும் வேளாளத் தொழிலாளர்கள் பசியாரக்குடிக்கக் கூழுமற்று கட்டத் துணியுமற்று எலும்புந்தோலுங் கோலுங் சூடுவையுமாயிருத்தல் வேண்டும். முதலாளிகள் பூமிகளில் இரவும் பகலும் உழைக்கவும் வேண்டும். இத்தகையவுழைப்பை சகிக்கலாகாது அன்னிய தேசங்களிலேனுஞ்சென்று பிழைக்கலாமென்று அனந்த உழைப்பாளிகள் இத்தேசத்தைவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் அனந்தம்பேர் இவர்களது சாதிபேத அனாச்சாரக் கெட்டுப்போனச் செய்கையின் கொறூத்தால் பசியாற அன்னங்கிடைக்காவிடினும் சுத்தநீரையேனு மொண்டு குடிக்கயிடங்கிடையாது. பாசிநீரையுந் தூசிநீரையு மருந்தி பலவகை நோய்களாற் பீடிக்கப்பட்டு நசிந்து போனார்கள். பூமியைப் பண்படுத்தி தானியவிருத்திச் செய்யும் உழைப்பாளிகள் ஊரைவிட்டகன்றும் புசிப்பில்லாமல் மடிந்தும் போனவர்கள் நீங்க மற்றுமிருப்பவர்களையும் தங்களுக்குள்ள சாதிபேதச் செயலால் தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்ற படியால் கருணைதங்கிய ராஜாங்கத்தோரால் பூமிகளின் விருத்தியைநாடி வேணப் பொருளுதவிச்செய்தும் விவசாயத்தொழில்கள் விருத்திப்பெறாது கேடுற்றே வருகின்றது. இத்தகைய விவசாய விருத்திக் கேடுகளுக்கெல்லாம் காரணம் சாதிபேதமற்ற யேழைக்குடிகளுக்கு நேரிட்டுவரும் இடுக்கங்களேயாம். இவ்வேழைக்குடிகளின் இடுக்கங்கள் நீங்கவும், விவசாயங்கள் விருத்திபெறவும் வேண்டுமாயின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் தங்களது நன்னோக்கங்களை சாதிபேதமற்ற யேழைக்குடிகளின் மீது வைத்து வயிறாறப் புசிப்பூட்டி பூமியையுழுது பண்படுத்தவிடுவார்களாயின் சத்துருக்களின் இடுக்கங்கள் நீங்கி ஆனந்தத்துடன் பூமியை யுழுது பண்படுத்தி வேணவரையிலும் விவசாயத்தை விருத்திச் செய்வார்கள். அங்ஙனமின்றி யேழைமக்கள் தங்களுக்குச் சத்துருக்களாயுள்ள சாதிபேதம் வைத்துள்ளவரை யெஜமானர்களாகப் பெற்றிருக்கும்வரையில் விவசாயம் விருத்திப்பெறாதென்பது திண்ணம் திண்ணமேயாம்.
- 5:31; சனவரி 10, 1912 -