அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/245-383

241. ஹானரெபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்களுக்குப் பதில் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் ஹானரெபில் ஜஸ்டிஸ் சங்கரநாயரை நியமிப்பார்களென்று நம்புகிறோம்

தற்காலங் காலியாயுள்ள (எக்ஸிகூட்டிவ்) மெம்பர் நியமனமானது கனந்தங்கிய கவர்னரவர்களது அத்தியந்த ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்ததாகும்.

அத்தகைய சங்கத்திற் சேர்க்கவேண்டியவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியோரைப் போல் சாதிபேதமற்றவர்களும், தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதம் இல்லாதவர்களும், சீவகாருண்ணியம் உள்ளவர்களும், மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் மேன்மக்களும், அதிகப் பொருளாசையற்றவர்களும், நீதியின்பேரிற் கண்ணோக்கம் உள்ளவர்களும், எக்காலும் நன்னெறியில் நிற்பவர்களும், இராஜவிசுவாச மிகுத்தவர்களும், ஆலோசினையில் ஆழ்ந்த கருத்துள்ளவர்களும், செங்கோலை செங்கோலாக நடத்தும் சிரேஷ்ட குணமுள்ளவர்களுமா யிருத்தல் வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சியோர் செயலுக்கும் அவர்களது சிறந்த குணத்திற்கும் மாறுபட்டிருக்கின் இராஜாங்கத்தின் ஆலோசினைகளுக்கு அனந்தமாறுதல்களும் சங்கைகளும் தோன்றி, நேராய நீதிகள் சீர்கெடுவதுடன் சங்கத்தோர்களுக்கும் கவலைகளையுண்டுசெய்துவரும், ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் இந்த எக்சிகூட்டிவ் நியமனத்தைமட்டிலும் பிரிட்டிஷார் குணாகுணங்களையும் செயல்களையும் சற்றேறக்குறைய ஒத்து நடாத்தக்கூடிய உத்தமபுருஷராகும் ஜஸ்டிஸ் சங்கரநாயருக்குக் கொடுப்பதாயின் இராஜாங்கத்தோருடன் ஒத்துழைப்பதுடன் ஆங்கிலக்குடிகள், முஸ்லீம் குடிகள், கன்னடக் குடிகள், மராஷ்டகக்குடிகள், மலையாளக்குடிகள், திராவிடக் குடிகளாகிய சகலமக்களையும் பேதம்பாராது அவரவர்களுக்குள்ள கஷ்ட நட்டங்களையும் குறைகளையும் இராஜாங்கத்தோருக்கு விளக்கி பாரபட்சமின்றி சுகச்சீரளிப்பார். ஏனைய சாதித்தலைவர்களுக்கு ஈய்வதாயின் எத்தகைய விவேகமிகுத்தவனாயினும் அவனைத் தாழ்ந்தசாதியோனென்றும், எத்தகைய விவேகமில்லா பகுத்தறிவற்றவனாயினும் அவனை உயர்ந்த சாதியோனென்றும் வகுத்துக்கொண்டு இராஜாங்கக் காரியாதிகளிலும் சாதி அனாச்சாரம், சமய அனாச்சாரங்களை நுழைத்து நீதிநெறிகளைப் பாழாக்கி “பிள்ளையையுங் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல்” குடிகளையுந் தூண்டிவிட்டு இராஜாங்கத்தோருக்கும் மித்திரர்போல் அபிநயிப்பார்கள்.

ஆதலின் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் சாதிநாற்றம் பெருகியுள்ள இத்தேசத்தோர் மத்தியில் சாதிநாற்றமில்லாமலும், சமயநாற்றம் பெருகியுள்ள இத்தேசத்தோர் மத்தியில் சமயநாற்றமில்லாமலும் தங்களது செங்கோலை நடத்திவருவதுபோல் சாதிநாற்றம், சமயநாற்றம் அற்றவர்களையே தெரிந்தெடுத்து ராஜ அங்கத்தினர்களாக நியமிப்பதாயின் சகல குடிகளும் சுகச்சீர் பெற்றுப் பலுகிப் பெருகுவதுடன் இராஜாங்கமுங் கவலையற்ற ஆறுதலைப்பெறும்.

இதுவிஷயங்களை ஆய்ந்தே தற்காலங் காலியாயுள்ள எக்சிகூட்டிவ் மெம்பர் நியமனத்தை ஜஸ்டிஸ் சங்கரநாயரவர்களுக்கே அளிப்பார்களென்று எதிர்பார்க்கின்றோம். அங்ஙனம் அவரை நியமிக்காவிடின் சாதிபேதமென்னுங் கொறூரகுணமற்ற ஓர் பிரிட்டிஷ் துரைமகனையே நியமிப்பது மேலாம்.

- 5:31; சனவரி 10, 1912 -