அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/247-383
243. விவசாயமும் கைத்தொழிலும் வீணேதானோ
யாதும் விளங்கவில்லை. கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் விவசாயத்திற்காய பூமிகளை விடுத்தும், நீர்வசதிக்காய இயந்திரங்களைக் கொடுத்தும், பூமியைப் பண்படுத்தும் வகை தெரிந்துள்ள துரைமக்களேயருகிருந்தும் தூரதேச விதைகளைத் தருவித்தும், அவைகளை விளைவிக்குங் காலங்களையும் எருவு முதலியவை கொடுக்குத் திட்டங்களையும் விவரித்தும், பயிறுகளை ஓங்கச் செய்தும் விவசாயிகளை தருவித்தும், விளைந்துள்ள பயிறுகளைக் காண்பித்தும், வேண உதவி செய்துமிருக்க தென்னிந்திய விவசாயக்குடிகள் சகலரும் அவைகளைச் சென்று பார்வையிடாமலும், அப்பயிறுகளைப்போல் தாங்களும் விளைவித்து பலனடையாமலும் மேலும் மேலும் பூமிகளைப் பாழடையலிடாமல் விருத்திக்குக் கொண்டுவராமல் தங்கள் தங்கள் சுயேச்சையிலிருக்கின்றார்களன்றி ராஜாங்கத்தார் செய்திருக்கும் பேரானந்த விவசாயவிருத்தியில் கண்ணோக்குவதையும் கவலை எடுப்பதையுங் காணோம். பலதேசங்களிலுள்ளப் பண்ணைத் தொழிலாளர்கள் தங்கள் தங்கள் முயற்சியினாலேயே பூமிகளை சீர்திருத்தி தானியங்களை விருத்திச் செய்து சகல தேசங்களுக்கும் அநுப்பிக்கொண்டு வருகின்றார்கள். தென்னிந்திய விவசாயிகளோ கருணைதங்கிய ராஜாங்கத்தோர் உதவிபெற்றும் விவசாயத்தை விருத்தி செய்யாமலும் அதன் பலன்களை வெளியிட்டு மற்ற விவசாயர்களை பலனடையச் செய்யாதிருப்பதை நோக்குங்கால் தற்காலம் பூமிகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலோர் பூர்வவிவசாயிகள் அல்லரென்பதேயாம். பூர்வவிவசாயிகளா யிருப்பார்களாயின் தங்கள் தங்கள் சுயமுயற்சியிலேயே விவசாயத்தை விருத்திச் செய்வார்கள். அத்தகைய விவசாயங்களுக்கு இராஜாங்க உதவியுங் கிட்டுமாயின் உள்ள பூமிகளை வெறுமனேவிடாது உழுது பயிர்செய்து தானியவிருத்திச் செய்து தாங்கள் சுகம்பெறுவதுடன் வெளிதேசங்களுக்குந் தானியங்களை அநுப்பி சுகம்பெறச் செய்வார்கள். பூர்வ விவசாயிகள் யாவரையும் பலவகை வஞ்சினத்தாலும் சூதினாலும், சாதிபேதமென்னும் பொறாமெய்ச் செயல்களாலும், ஊரை விட்டோட்டிவிட்டபடியாலும் மற்றுந் தங்கியிருப்பவர்களை இருக்க இடமில்லாமலும், குடிக்கக் கூழ் கிடைக்காமலும் சுத்தநீரை மொண்டு குட்டிக்கவிடாமலும், கோலுங் குடுவையுங் கொடுத்து எலும்புந் தோலுமாக மடியச் செய்துவிடுகின்றார்கள். இத்தேசத்துள் வன்னெஞ்சினர்களால் உண்டாக்கிக்கொண்ட பொய்யாய சாதிக் கட்டுப்பாட்டினால் உழைப்பாளிகளாகிய மக்கள் நசிந்து பாழடைந்ததுடன் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்த மேன்மக்கள் யாவரும் மிலேச்சர்களால் கீழ்மக்களெனத் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்துவிட்டபடியால் தேசத்தின் பூர்வக் கைத்தொழில்கள் பாழடைந்ததுடன் கருணைதங்கிய ராஜாங்கத்தார் கைத்தொழிற்சாலைகளை வகுத்து வேண உதவி புரிந்தும் அவைகளும் விருத்திபெறாமலே நசிந்துவருகின்றது.
இத்தகைய நசிவுகளுக்குக் கேடுபாடுகளுக்கும் மூலகாரணம் பூமியை உழுது பண்படுத்தும் உழைப்பாளிகளும், கைத்தொழில் உழைப்பாளிகளும் தாழ்ந்தசாதியெனத்தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்ததேயாம். அவனவன் சுயப்பிரயோசனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட பொய்யாய சாதிக்கட்டுப்பாட்டினால் விவசாயவிருத்திகளுங் கைத்தொழில்விருத்திகளுங் கெட்டு நாளுக்குநாள் தென்னிந்தியம் சீர்கேடடைந்துவருகின்றது.
இத்தகைய சீர்கேட்டை அறிந்த ராஜாங்கத்தோர் வேண சீர்திருத்தமும் பொருளுதவியுஞ் செய்துவந்த போதிலும் அங்கங்குப் பூர்வக்குடிகளாகிய உழைப்பாளிகளில்லாது வன்னெஞ்சர்ச் செயலால் விலகிநிற்பதே காரணமாகும். இத்தேசத்தியப் பூர்வக்குடிகளும் உழைப்பாளிகளும் நற்குண நற்செயலில் மேன்மக்களுமாக விளங்கினோர்களைக் கீழ்மக்களெனத் தாழ்த்தி அவர்களது சத்தியதன்மமார்க்கமாகிய புத்தன்மத்தையுங் மாறுபடச் செய்துவிட்டபடியால் தேசத்தின் சகல நன்மெகளுங் கெட்டு பாழடைந்து போய்விட்டது. கருணைதங்கிய ராஜாங்கத்தார் கைப்பொருளுதவியுங் கருவிகளின் உதவியும் விவசாயமும் வேண வரையிற் செய்து வந்த போதினும் கைத்தொழிலும் விருத்திபெறாமலே மயங்கிநிற்கின்றது.
உழைப்பாளிகள் ஊரிலுள்ள வரையில் கோதுமைப்பயிறுகளை எங்கும் விருத்தி செய்துவந்தபடியால் நகரங்களில் பெரும் இயந்திரங்களைப் பூட்டி நொய் மாவுகளை வேறுபடுத்தி உரொட்டிகள் சுடவும், மற்றும் பலகாரங்கள் செய்யவும் வேண புசிப்புகளுக்கு ஆதாரமாயிருந்தது. உழைப்பாளிகளைத் தாழ்ந்த சாதியெனத் தாழ்த்தியும் பலவகை இடுக்கங்கள் செய்தும் பாழ்படுத்திவிட்டபடியால் பூமிகளிலுழைத்துப் பாடுபடும் உழைப்பாளிகளுமற்று கோதுமைப்பயிற்றின் விளைவுகளுஞ்செற்று சீர்கேடடைந்து விட்டபடியால் அன்னியதேசத்தோர் விளைவிக்குங் கோதுமை மாவு எப்போது கப்பலை விட்டிறங்குமென எதிர்பார்த்திருக்கின்றார்கள். இத்தகைய விவசாயக்கேடுபாட்டிற்கும், கைத்தொழில் விருத்தி கேட்டிற்குக் காரணம் யாதெனில் சாதிபேதமென்னும் அநாச்சாரமாம் துன்னூற்களும் பொறாமே மிகுத்த துற்செயல்களுமேயாம்.
- 5:35; பிப்ரவரி 7, 1912 -