அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/249-383
245. சென்னை சட்டசபை மெம்பர்களும் அவரவர்களது முயற்சிகளும்
தற்காலம் சட்டசபைக்கு அதிகமெம்பர்களை நியமித்துள்ளவற்றுள் சென்னை ராஜதானிக் குடிகளுக்கு என்ன சீரும் சிறப்புமுண்டாயுள்ள தென்பதை சற்று விசாரிப்பாம். கள்ளுக்கடை, சாராயக்கடைக்களைக் குறைக்க வேண்டுமென்றும் அதன் லாகிரியை அடக்கவேண்டுமென்றுங் கொண்டுவந்த சட்டம் மிக்க மேலாயதே. அதனுடன் சில்லரையில் விற்கும் சாராயக் கடைகளையும், ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் இடங்களில் வைத்துள்ளக் கள்ளுக் கடைகளையும், எடுத்துவிடும்படியான சட்டத்தைக் கொண்டுவருவார்களாயின் அதனினும் விசேஷமே. இத்தகைய ஜனசமூக சீர்திருத்தங்களில் பத்து பன்னிரண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகள் பீடிபிடிப்பதும், சிகரெட் பிடிப்பதும், சுருட்டு பிடிப்பதுமாகிய துற்பழக்கங்களை அகற்றுவதற்கும், வெறுமனே யாதொருத் தொழிலுமின்றி வீதியுலாவித் திரிவோரைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்கத் தொழில்களை ஈய்ந்து சீர்திருத்துஞ் சட்டங்களையும் கடைகளில் கலப்புள்ள தானியங்களையும், கலப்புள்ள நெய்களையும் முக்கியமாகக் கண்டுபிடித்து தெண்டிக்கவேண்டிய சட்டங்களையும், கடைக்காரர்கள் இருப்பில் தேய்ந்த நாணயங்களை வைத்திருக்கப்படாதென்னும் சட்டங்களையும், இரண்டு நாளய மூன்றுநாளய மூச்சுருண்டைகளை ஏழைகளுக்கு விற்று வஞ்சிக்கலாகா தென்னும் சட்டங்களையும், தானிய மண்டிக்கடைக்காரர்கள் அவரவர்கள் மனம்போனவாறு ரூபாயிற்கு நாலுபடி என்றும், நாலரைப்படி என்றும் விற்கும் தானியங்களை எவ்விதம் விற்கின்றார்களென்றுங் கண்டறிய வேண்டிய சட்டங்களையும், விவசாயஞ்செய்யுங் குடிகளுக்கு பன்னிரண்டு ஏக்கர் நிலமிருக்குமாயின் நாலு ஏக்கர் நிலத்தில் வேறுகடலை சாகுபடியும், மற்றைய எட்டு ஏக்கர் நிலங்களில் தானியங்களையே விளைவிக்கவேண்டுமென்னும் சட்டங்களையும் அவ்வகை விளைவிப்பதும் விளைவிக்காததுமாயக் குறைவு நிறைவுகளை அந்தந்த கிராமத்து கர்ணம் பார்க்கின்றார், முநிஷிப்பு பார்க்கின்றார் தாசில்தார் பார்க்கின்றாரென்றுவிட்டு விடாமல் அந்தந்த டிஸ்டிரிட்டு கலைக்ட்டர்களே நேரிற்சென்று நேரில் விசாரிக்க வேண்டும்மென்னும் சட்டங்களையும் நியமிக்கவேண்டிய முயற்சியிலிருக்க வேண்டியதே சட்டசபையோர் பேருபகாரமேயாகும். குடிகள் சீர்பெறவேண்டிய முக்கிய சீர்திருத்தங்களை நோக்காது கர்ணங்களுக்கு சம்பளம் அதிகப்படுத்துவதும், உபாத்திமார்களுக்கு சம்பளம் அதிகப்படுத்துவதும், டிஸ்டிரிக்ட் போர்டுகளுக்கு மெம்பர்களை நியமிப்பதும், முநிசிபாலிட்டிகளுக்கு பிரசிடெண்டுகளை நியமிப்பதுவுமாகிய சட்டங்களை நியமிப்பதினால் குடிகள் சீருக்கும் சுகம்பெறுவதற்கும் ஓராதாரம் உண்டாகமாட்டாது.
சீர்திருத்த சட்டங்களுக்கு ஆதாரமாகத் தோற்றும் பெரியோர்கள் குடிகளின் சுகத்தையும் சீரையுமே முக்கியமாகக் கவனித்தல் வேண்டும். அவற்றுள் முக்கியமாக கிராமக் குடிகளின் கேடுபாடுகளையே முக்கியமாய் ஆராய்ந்து கேடுகளையகற்றி சுகநிலை பெறச்செய்தல் வேண்டும். உழைப்பாளிகளாம் கிராமவாசிகளுக்குக் கேடுபாடுகளுண்டாயின் பூமியின் விருத்திக்குக் கேடுபாடுண்டாம். பூமியின்விருத்திக்குக் கேடுபாடுண்டாயின், தானிய விருத்திக்குக் கேடுபாடுண்டாம். தானிய விருத்திக்குக் கேடுபாடுண்டாயின் நகரமக்களும் நாட்டுமக்களும் பசிபட்டினியால் கேடுபாடடைவர். குடிகளது கேடுபாட்டை நிவர்த்திப்பதற்கு இராஜாங்கத்தோருக்குப் பெருமுயற்சியும் பணவிரயமுண்டாகநேரிடும். ஆதலின் சட்டசபை மெம்பர்கள் பெரும்பாலும் கிராமவாசிகளாகிய நாட்டுக்குடிகளின் சீர்திருத்தத்தையே முக்கியமாகக் கவனித்தல் வேண்டும். அதாவது நாட்டுகிராமங்களிலுள்ள முதலாளிகள் ஏழைக்குடிகளாகிய உழைப்பாளிகளுக்கு நாளொன்றுக்கு என்ன கூலி கொடுத்து வேலை வாங்குகின்றார்களென்றும் தேற விசாரிக்கச்செய்து காலை ஆறுமணிமுதல் மாலை ஐந்துமணிவரையில் பண்ணைவேலை செய்யும் பெரிய ஆண்பிள்ளைகளுக்கு இவ்வளவு கூலியென்றும், பெரிய பெண்பிள்ளைகளுக்கு இவ்வளவு கூலியென்றும், பண்ணைவேலை சிறியோர்களுக்கு இவ்வளவு கூலிகொடுத்து வேலைவாங்க வேண்டுமென்னும் சட்டத்தைப் பிறப்பித்தல் வேண்டும். சாதிபேதமில்லாத ஏழைக்குடிகளின்மீது தர்க்காஸ்து கொடுத்து அவர்களையே அப்பூமியை உழுது பயிர்செய்விக்கவிடாது சாதிபேதமுள்ளோர் வாங்கிக்கொள்ளுவதைக்கூடாதென்னும் சட்டத்திற் கொண்டுவரவேண்டியது. சாதிபேதமில்லா ஏழைக்குடிகள் பூமியில் மிக்க உழைப்பாளிகளும் தானியவிருத்தி செய்வதில் பூர்வ அப்பியாசிகளுமென்றுணர்ந்து 1892 ளு இவ்வேழைச் சிறுவர்களுக்குக்கு
கிராமங்கள் எங்ஙனம் கல்விசாலைகள் வைக்கவேண்டும் என்னும் சட்டம் பிறப்பித்தபோது இவர்கள் கேழ்க்குமிடங்களில் காலியாயுள்ள பூமிகளை இவர்களுக்குக் கொடுக்கவேண்டு மென்னும் சட்டமும் கருணை தங்கிய கவர்ன்மெண்டார் பிறப்பித்திருக்கின்றார்கள். அதேசட்டத்தை அநுசரித்து இவ்வேழைக்குடிகள் காலியாயயுள்ள பூமிகளுக்கு விண்ணப்பங் கொடுப்பார்களானால் அவ்விடமுள்ள உத்தியோகஸ்தர்கள் யாவரும் சாதிபேதமுள்ளவர்களேயாதலின் எங்கு இவர்கள் பூமிகளைப்பெற்று முன்னுக்கு வந்துவிடப்போகிறார் களென்னும் பொறாமெயினால் அது மேய்க்கால் பூமியென்றும் இதற்கு அண்டை பாத்தியம் வேறொருவன் இருக்கின்றானென்றுங்கெடுத்து ஏழைகள் விருத்திபெறவிடாமற் கெடுப்பதுடன் ஏழைகளுக்குத் தகுந்த கூலிகொடாமலும் வதைத்து வருகின்றபடியால் பலதேசங்களுக்குஞ்சென்று சீவிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். அதனால் பூமிகளை நன்குப் பண்படுத்தக்கூடிய உழைப்பாளிகள் குறைந்து சோம்பேறிகள் அதிகரித்துவிட்டபடியால் நீர்வசதிகளும், பூமிவிருத்திகளுங் கெட்டு தானியங் குன்றி ஏழைக்குடிகள் பசி பட்டினியால் மடிவதுடன் பலவகை வியாதிகளுந்தோன்றி தேசத்தைப் பாழ்படுத்தி வருகின்றது. இவற்றை நோக்கும் சென்னை சட்டசபை மெம்பர்கள் முக்கியமாக பூமியின் விருத்திகளையும் அதற்கு கேடுபாடுகளையுமே ஆலோசித்து அதற்குத் தக்க சட்டங்களை ஏற்படுத்துவார்களென்று எதிர் பார்க்கின்றோம்.
- 5:38; பிப்ரவரி 28, 1912 -