அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/265-383
261. இந்திய விவசாய விருத்திக்கு இங்கிலீஷ் துரைமக்களையே இன்னும் அதிகப்படுத்தல் வேண்டும்
ஏன் என்பாராயின் பெரும் விவசாய பூமிகளை வைத்து ஆளுவோர் ஜமீன்தார்கள் என்றும், மிட்டாதாரர்கள் என்றும், மிராசுதாரர்கள் என்றும் சொல்லும்படியானவர்களேயாகும்.
இவர்களது நோக்கமும் செயலும் பூமியின் விருத்தியைக் கருதுவதே கிடையாது. இவர்களுடையப் பிள்ளைகளை யடுத்து அப்பா உங்களுக்கு நஞ்சைபூமிகள் எவ்வளவுண்டு புஞ்சைபூமிகள் எவ்வளவுண்டென்று உசாவினாலோ எல்லாம் நாராயணனுக்கே தெரியுமென்பார்கள். பூமிகளில் என்னென்ன தானியங்கள் விசேஷமாக விளையுமென்று கேட்டாலோ எல்லாம் குமாஸ்தா ரங்கையனுக்குத் தெரியும் என்பார்கள். தங்கள் பூமிகள் முழுவதிற்கும் என்ன வரியிறை செலுத்துகிறீர்கள் என்றாலோ, அவைகள் யாவும் நமது கணக்கன் சுப்பாபிள்ளைக்குத் தெரியும் என்பார்கள். இத்தகைய ஜமீன்தாரர், மிட்டாதாரர்களின் முழு நோக்கங்களோவெனில் நாள் முழுவதும் அவர்கள் பண்ணையில் வேலை செய்துவிட்டு முக்காலணா கூலி வாங்கிக்கொள்ளும் ஆண் ஆட்களும், அரையணா கூலி வாங்கிக்கொள்ளும் பெண் ஆட்களும் கிடைப்பார்களென்பதே பெருநோக்கம். அத்தகைய ஆட்களுக்குள் பாட்டனுக்கு ஐந்து ரூபாய் கடன் கொடுத்திருந்தால் அவனது பேரன் பிள்ளை பேரு வரையில் அதன் வட்டிக்கு வரிசைக் கிரமமாக வேலை வாங்கி வரும் கணக்குகளை மெத்த ஜாக்கிரதையில் வைத்திருப்பார்கள். அவர்கள் குடிசையிட்டு வாசஞ்செய்யும் பூமிகளும் அவர்களுக்கு சுயாதீனம் ஆகமாட்டாது. அவர்கள் மொண்டு குடிக்கும் சுத்தநீரை பண்ணையாட்கள் மொண்டு குடிக்கலாகாது. அவர்கள் வஸ்திரங்களை வெளுக்கும் வண்ணார்கள் தங்கள் பண்ணையாட்களின் வஸ்திரங்களை எடுத்து வெளுக்கலாகாது. தங்களுக்கு சவரஞ்செய்யும் அம்மட்டர்கள் தங்கள் பண்ணையாட்களுக்கு சவரஞ்செய்யலாகாது என்பதே பெருநோக்கமும், தங்களைப் பெரிய சாதிகளெனப் படாடம்பமடித்துக்கொண்டு பண்ணையாட்கள் யாவரையும் சீரழித்து வேலைவாங்குவதே அவர்களது பெருமுயற்சிகளாதலின், பூமியை உழுது சீர்திருத்தும் பண்ணையாட்கள் யாவரும் எஜமானர்களிடம் படும் உபத்திரவம் சகிக்கமுடியாது, பலதேசங்களுக்கும் போய்பிழைக்க வாரம்பித்துக் கொள்ளுகின்றார்கள். அதனால் பூமிகள் பாழடையவும், தானிய விருத்திக் குறையவும், பஞ்சம் பெருகவும், குடிகள் சிறுகவு மாகிவிடுகின்றது.
இதனை யுணர்ந்த பிரிட்டிஷ் துரைத்தனத்தார் விவசாய விஷயமாக வேண பண உதவியும், கருவிகளின் உதவியும் விதை முதல் உதவியுஞ் செய்துவந்தபோதிலும் பூமிகளுள்ளோர் அவைகளை நோக்காது, தானிய விருத்திகளையுங் கருதாது, பொய்யாகிய சாதி ஆசாரங்களையும், பொய்யாகிய மத ஆசாரங்களையும் மேலும் மேலும் பெருக்கி உழைப்பாளிகளை ஊரைவிட்டு ஓட்டி வருகின்றார்கள். இவைகளே விவசாயக் கேடுகளுக்கு மூலமாக விளங்குகிறபடியால் இவற்றை நீக்கி விவசாயத்தை விருத்திச் செய்வதற்கு ஆங்கில துரைமக்களையே விசேஷமாக அம்மேர்வையில் நியமித்தல் வேண்டும். மற்றப்படி இத்தேசத்தோர்களையே நம்பி விவசாயத்தை விட்டுவிடுவதாயின் இராஜாங்கத்தோர் செய்துவரும் பணவுதவிகள் யாவும் விழலுக்கிரைத்த நீர்போலாகிவிடும்.
ஆதலின் கருணை நிறைந்த இராஜாங்கத்தோர் விவசாயத்தில் எடுத்துள்ள முயற்சிகள் மென்மேலும் பெருகவேண்டுமாயின் ஒவ்வோர் விவசாய இலாக்காக்களிலும் உத்தியோகஸ்தர்களாக ஆங்கிலேய துரைமக்களையே நியமிப்பது உசிதமாகும். அதுவே விவசாய விருத்திக்கும் சுகமாகும்.
சீவகாருண்யமற்ற சுயப் பிரயோசன சோம்பேரிகளுடைய மேற் பார்வையில் விவசாயத்தை விட்டுவிடுவதாயின் சாதிநாற்றங்களும், சமய நாற்றங்களும் அவர்களைவிட்டகலாது. பண்ணையாட்களைப் பாழ்படுத்தி கோலுங் குடுவையும், எலும்புந் தோலுமாகக் கொல்லாமற் கொன்று நசித்து வருவார்கள். அதனால் விவசாயவிருத்தி குன்றிப்போம். தற்காலம் இத்தேசத்தோர் அனுபவம் யாதெனில், பிச்சை யிரந்துண்பவர்கள் யாவரையும் பெரியசாதி களென்றும், பூமியை உழுது உண்பவர்கள் யாவரையும் சிறியசாதிகளென்றும் வழங்கி வருகிறபடியால் வித்தியா விருத்திக்கும், விவசாய விருத்திக்கும் அச்செயல்களே கேடுபாடுகளை உண்டாக்குகின்றது. ஆதலின் விவசாய விருத்தியைக் கோறுங் கருணை தங்கிய இராஜாங்கத்தார் அதன் உத்தியோகங்களுக்குப் பெரும்பாலும் ஆங்கிலேயர்களையே நியமிப்பார்களென்று நம்புகிறோம்.
- 6:5; சூலை 10, 1912 -